ஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்!எஸ்.கண்ணன்கோபாலன், படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்
'மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம்’ என்பது அகத்தியரின் அருள்மொழி. மனம் செம்மை பெறவேண்டும் என்றால், அதற்கு மகேஸ்வரனை வழிபடுவதைத் தவிர வேறு வழி இல்லை. அந்த மகேஸ்வரன் லிங்க வடிவில் அருள்புரியும் எத்தனையோ திருத்தலங்களை நாம் தரிசித்திருப்போம். ஆனால், ஒரு மலையே லிங்க வடிவில் அமைந்து, அதன் காரணமாகவே அந்த மலை மகாலிங்க மலை என்று சிறப்பிக்கப்பெற்றுள்ளது தெரியுமா? தென்காசிக்கு அருகில் உள்ள ஆய்க்குடியில் அமைந்திருக்கும், அகத்தியரின் திருவடிகள் பதிந்த இந்த மலை லிங்க வடிவில் இருப்பதுடன், மலையின் மேல் அமைந்திருக்கும் சிறிய குகையிலும் சிவலிங்க வடிவம் பிரதிஷ்டை செய்யப் பெற்றிருக்கிறது. மகாலிங்க மலையின் மேல் அருள்புரியும் சிவபெருமானை, கடந்த பௌர்ணமி அன்று தரிசிக்கச் சென்றபோது, நமக்குத் தெரிய வந்த செய்திகளும், நம்மை ஆட்கொண்ட சாந்தமும், நமக்கு வியப்பையும் பக்திப் பரவசத்தையும் ஏற்படுத்தின.
சித்தர்கள் உலவும் அந்த மகாலிங்க மலையின் அடிவாரத்தில், நாம் முதலில் வல்லபை கணபதியையும் சுப்பிரமணியரையும் தரிசித்தோம். இருவரின் சந்நிதிக்கு இடையில் மலைப் பாதை தொடங்குகிறது. பௌர்ணமி என்பதால், ஏராளமான பக்தர்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகத் திரண்டிருந்தனர். அந்தக் காலை வேளையிலேயே அன்னதானப் பணிகளும் தொடங்கியிருந்தன. பௌர்ணமி அன்று மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுவதாக அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்கமுடிந்தது.

நம் மனம் செம்மை பெறவேண்டும் என்பதற்காக, செம்மையாக அமைக்கப்பட்டு இருக்கும் படிகளில் ஏறி, மகாலிங்கப் பெருமானை தரிசிக்கச் செல்கிறோம். நானூறுக்கும் மேற்பட்ட படிகளைக் கொண்டிருக்கும் அந்தப் பாதையின் தொடக்கத்திலேயே, கல்லாலின் புடையமர்ந்த தட்சிணாமூர்த்தியின் ஒரே கல்லாலான திருவுருவத்தை தரிசிக்கலாம். சில நூறு படிகள் ஏறிச் சென்றதும், நமக்கு வலப்புறத்தில், 'பெண்கள் மட்டும் வழிபடும் ஔவையார் கோயில் செல்லும் வழி’ என்ற பெயர்ப் பலகை இருந்ததைக் கண்டு, ஔவையாருக்கும் இந்த மலைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்ற கேள்வியும், அவரை பெண்கள் மட்டுமே வழிபட வேண்டும் என்ற நிபந்தனை ஏன் என்ற கேள்வியும் நமக்குள் எழுந்தன.
விசாரித்ததில், நமக்குக் கிடைத்த தகவல்கள், ஒரு வள்ளலின் ஆழ்ந்த சிவபக்தியை நமக்கு உணர்த்துவதாக இருந்தது. அந்த வள்ளலைப் பற்றிப் பிறகு பார்ப்போம். அதற்கு முன், ஔவையாரின் கோயிலை தரிசித்துவிட விரும்பிய நாம், பெண்கள் மட்டுமே வழிபடக்கூடிய கோயில் என்பதால், நாம் அங்கே செல்லலாமா என்ற எண்ணத்துடன் தயங்கி நின்றோம். நம் தயக்கத்தைக் கண்ட ஒருவர், ''ஏன் தயங்கி நிற்கிறீர்கள்? விசேஷ நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால்தான் அப்படி ஓர் ஏற்பாடு. மற்ற நாட்களில் எல்லோருமே செல்லலாம்'' என்று சொல்லி அவருடன் நம்மையும் அழைத்துச் சென்றார்.

ஒரு சிறிய குகையே ஔவையார் கோயிலாகத் திகழ்கிறது. உள்ளே ஔவையாரின் உருவச் சிலை எதுவும் இல்லை. ஒரு சில பானைகள், மணைப் பலகைகள் மற்றும் சில பூஜை சாமான்கள்தான் இருந்தன. எதிரில் இருந்த மரத்தில் துணியாலான தொட்டில்கள் கட்டப்பட்டு இருந்தன. குழந்தை வரம் வேண்டி, பெண்கள் கட்டிய தொட்டில்களாம் அவை! இந்தக் கோயிலுக்கு சாதாரண நாட்களில் யாரும் வருவதில்லை. தை, மாசி, ஆடி ஆகிய மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஏராளமான பெண்கள் வந்து, ஔவையாரை வழிபட்டுச் செல்வார்களாம். தமிழ் மூதாட்டியை மனதால் தியானித்து படியேற்றத்தைத் தொடர்ந்தோம்.நானூறு படிகளைக் கடந்த நிலையில், இரண்டு பாறைகள் மேற்புறத்தில் மட்டும் இணைந்திருக்க, கீழே ஒரு ஆள் மட்டும் செல்லும் அளவிலான குறுகலான வழியில் பக்தர்கள் ஒவ்வொருவராகச் சென்று கொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டிருந்தாலும் அடித்துப்பிடித்து முன்னால் செல்லத் துடிக்காமல், பொறுமையாக, வரிசையாகச் சென்றனர். நாமும் காத்திருந்து, அந்த வழியாக உள்ளே சென்றோம்.

உள்ளே சென்றதும், நமக்கு வலப்புறத்தில் ஐயன் மகாலிங்கப் பெருமானை தரிசிக்கலாம். ஒரு மலைக் குகைதான் ஐயனின் சந்நிதி. கேதார்நாத் மற்றும் அமர்நாத் கோயில்களில் இருப்பதைப் போலவே அமைந்திருக்கும் அந்தக் குகையிலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அருளாட்சி செலுத்தி வரும் ஐயன் மகாலிங்கப் பெருமானை அகத்தியர் பொதிகைக்குச் செல்லும் வழியில் தரிசித்ததாகச் சொல்கிறார்கள். இன்றைக்கும் இரவு வேளைகளில் சித்தர் பெருமக்கள் இங்கே அருவமாக வந்து மகாலிங்கப் பெருமானை வழிபடுவதாக அங்கிருந்த பக்தர்கள் பேசிக்கொண்டார்கள். குகைக்கு மேலாக, கல்லால மரம் போலவே தோற்றம் தரும் பகுதியில் ஐயனின் கயிலைக் காட்சி சுதைச் சிற்பமாக சமீபகாலத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மகாலிங்கப் பெருமானைத் தரிசித்துவிட்டு, அவருக்கு எதிரில் உள்ள படிகளின் வழியாகக் கீழே இறங்குகிறோம். சில படிகள் இறங்கியதும், ஓலைக் கொட்டகையில் வனதேவதை காட்சி தருகிறாள். வனத்தின் வளங்களைப் பாதுகாக்கும் அவளுடைய சந்நிதிக்குப் பக்கமாக நந்தியுடன் கூடிய சுந்தரமகாலிங்கப் பெருமானின் சந்நிதி அமைந்திருக்கிறது. இந்தச் சந்நிதி பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
வனதேவதையையும் சுந்தரமகாலிங்கப் பெருமானையும் தரிசித்துவிட்டு, ஒற்றையடிப் பாதை வழியாக சில அடிகள் நடந்தால், நாம் முதலில் ஏறிச் சென்ற படிக்கட்டுப் பாதையை அடைந்து, கீழே இறங்கலாம்.

நாம் மேலே செல்லும்போது நூற்றுக்கணக்கில் இருந்த பக்தர்களின் கூட்டம், இறங்கி வருகையில் படிகளே தெரியாதபடி ஆயிரக்கணக்காகப் பெருகி விட்டது. அவர்களுக்கிடையில் தட்டுத் தடுமாறி ஒருவழியாகக் கீழே இறங்கி வந்தோம். இத்தனைக்கும் இடையில் நம்மை வியப்படையச் செய்தது, கூட்டம்கூட்டமாக அங்கிருந்த மயில்கள்தான்! திரண்டு வந்த பக்தர்களின் ஆரவாரங்களைக் கண்டு அவை அஞ்சி ஒதுங்குவதாகவே தெரியவில்லை. மாறாக, தலை உயர்த்தி அவை பார்த்த பார்வையானது, 'மகாலிங்கப் பெருமானின் திருவடி நிழலில் இருக்கும் எங்களுக்கு யாராலும் எந்தக் குறையும் வந்துவிடாது’ என்று சொல்லா மல் சொல்வதுபோல் இருந்தது!
கீழே வந்த நாம், அங்கிருந்த அலுவலகத்தில் குணசேகரன் என்பவரைச் சந்தித்தோம். அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருந்த அவர், மகாலிங்க மலை பற்றிய விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''நான் 1979ம் ஆண்டு ஆய்க்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். தினமும் ஆய்க்குடி முருகனை தரிசிப்பது வழக்கம். ஒருநாள், உடன் வேலை செய்யும் ஒருவர் என்னை ஒரு பெரியவரிடம் அழைத்துச் சென்றார். குழந்தைவேல் என்ற அந்தப் பெரியவருக்குச் சித்தர்களிடமும் சித்தர் பாடல்களிலும் பெரிதும் ஈடுபாடு உண்டு. அவர்தான் என்னை இந்த மலைக்கு அழைத்து வந்தார். அப்போது சரியான பாதை வசதி இல்லாததால், பக்தர்கள் அவ்வளவாக வருவதில்லை. நானும் அவரும் தான் ஏகாந்தமாக வந்து ஐயனை தரிசிப்போம்.

அகத்தியரும் எண்ணற்ற சித்தர்களும் இன்றைக்கும் அருவமாக வந்து வழிபடும் மகாலிங்கப் பெருமானை அனைவரும் வந்து தரிசிக்க வேண்டும் என்று விரும்பிய நாங்கள், தொடர்ந்து முயற்சி எடுத்து, திருப்பணிகளைத் தொடங்கினோம். 1991ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தோம். அன்று முதல் பக்தர்கள் இந்த மகாலிங்க மலைக்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களுக்கு அன்னதானம் வழங்க அன்னதான மண்டபமும் கட்டி இருக்கிறோம்'' என்றவர், அருகிலிருந்த பெரியவர் குழந்தைவேல் ஐயாவைக் காட்டி, ''இவர்தான் மகாலிங்க மலை யின் இன்றைய நிலைக்குக் காரணம்'' என்றார்.
தொடர்ந்து இன்னும் சிலரிடம் பேசியதில், ஆய்க்குடி மகாலிங்க மலையின் புராதனச் சிறப்பை நம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது.
வடதிசையில் இருந்து தென்திசைக்குச் சிவபெருமானால் அனுப்பப்பட்ட அகத்திய முனிவர், பொதிகை மலைக்குச் செல்லும் வழியில், இந்த மலையில் சுயம்புலிங்கமாகத் தோன்றி இருந்த சிவபெருமானை வழிபட்டு விட்டுச் சென்றதாகச் சொல்கிறார்கள். அதேபோல், இதுபோன்ற பகுதிகளில் சித்தர்கள் ஏகாந்தமாக சிவபெருமானை பூஜிப்பார்கள் என்பதால், சித்தர் பெருமக்கள் அருவமாக இங்கே வந்து சிவபெருமானை வழிபடுகிறார்கள் என்பதும் உண்மையாகத்தான் இருக்கும்.

வரலாற்றுக் காலம் என்று எடுத்துக் கொண்டால், ஆய்க்குடி என்ற இந்தப் பகுதியை சங்க காலத்தில் 'ஆய்’ என்ற ஆய் அண்டிரன் என்பவன் ஆட்சி செய்து வந்ததாகவும், அவன் தினமும் இந்த மலையில் சுயம்புவாகத் தோன்றிய மகாலிங்கப் பெருமானை வழிபட்டு வந்ததாகவும் சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து அறிய முடிகிறது. இவனுடைய சிவபக்தியைப் போற்றும் ஒரு பாடல் 'சிறுபாணாற்றுப்படை’ என்ற சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது.
'நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வர்க் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்’ (96 - 99)
ஒருமுறை, ஒரு நீல நாகத்தினால் தனக்குக் கிடைக்கப்பெற்ற உயர்தரமான ஆடையை சிவபெருமானே அணியத்தக்கவர் என்று கருதி, அந்த ஆடையை மகாலிங்கமலை சிவபெருமானுக்கு மகிழ்ச்சியுடன் அர்ப்பணித்தவன் ஆய் என்று போற்றுகிறது அந்தப் பாடல்.
ஔவையாரும் இந்த மன்னனின் வள்ளல் குணத்தையும் சிவபக்தியையும் பெரிதும் பாராட்டியிருக்கிறார். ஆய் மன்னனைச் சந்திக்க வந்தபோது, ஔவையார் தங்கி பூஜை செய்த அந்தக் குகைதான் ஔவையார் கோயில் என்று பெண்களால் வழிபடப்பெறுகிறது.

வடதிசையில் சிவபெருமான் அருளாட்சி செலுத்தும் கயிலைக்கு நிகராக, ஆய் என்னும் வள்ளல் பெருமகன் ஆட்சி செய்யும் இந்த ஆய்க்குடி மகாலிங்க மலையில் சுயம்புவாகச் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என்றும் போற்றுகிறது ஒரு சங்க இலக்கியப் பாடல்.
முடமோசியார் என்னும் அந்தப் புலவர்,
'வடதிசைக்கண் இமயம் நிற்பதுபோல
இத் தென்றிசைக்கண் இவ் வாய்குடி
நில்லாதாயின் இவ்வுலகம்
கீழ்மேலதாகி அழிந்துபடும்’ என்று புகழ்ந்து பாடி இருக்கிறார்.
அந்த அளவுக்கு மகாலிங்கப் பெருமானின் பரிபூரண அருள் நிலைபெற்றிருப்பதும், மலையே மகாலிங்கமாய் தரிசனம் தருவதுமாகிய மகாலிங்க மலைக்கு ஒருமுறை சென்று மகாலிங்கப் பெருமானை தரிசித்து வந்தால், மனமும் செம்மையாகும்; வாழ்வும் சிறப்பாகும்!