Published:Updated:

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் ஸ்ரீபத்ம சக்கரம்!

திருவே அருள்வாய்!ரா.வளன்

கேசவன் என்ற பெயருக்கு மூத்தவன் என்று பொருள். அதிலும் ஆதிகேசவன் என்றால் அனைத்துக்கும் முதல்வன் என்று அர்த்தம். பெருமாளே அனைத்தையும் படைத்து காத்து அழித்தும் உலகை ரட்சிக்கிறான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. மகிமை பொருந்திய இந்தத் திருநாமத்துடன் பெருமாள் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் நிறைய உண்டு. அவற்றில் ஒன்று செளந்தர்யபுரம். 

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சியில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில், வந்தவாசிக்கு அருகில் அமைந்துள்ளது, செளந்தர்யபுரம். எம்பெருமானும் தாயாரும் செளந்தர்ய கோலத்தில் அருளும் தலம் ஆதலால், செளந்தர்யபுரம் என்பது, மிகப்பொருத்தமான திருப்பெயர்தான் இந்த ஊருக்கு!

இந்தத் திருக்கோயில் சுமார் 500 வருடங்களுக்குமுன் ஸ்ரீஅகோபில மடத்தின் ஆறாம் பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீமத் ஷஷ்ட பராங்குச யதீந்த்ர மஹாதேசிகனால் திருப்ரதிஷ்டை செய்யப்பட்டதாம். இடையில் சுமார் 40 ஆண்டுகாலம் நித்யபூஜைகளும் நடைபெறாமல் திகழ்ந்த இத்திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து, 2012ம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தேறியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் ஸ்ரீபத்ம சக்கரம்!

தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் எனும் நான்குவித புருஷார்த்தங்களை அளிக்கும் இந்த புண்ணிய திருத்தலத்தின் நாயகனாம் ஸ்ரீஆதிகேசவனைத் தரிசிக்கும் அன்பர் கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லலாம். நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு... அவ்வளவு சாந்நித்தியம், அவனது திருக்கோலம்!

அம்புஜவல்லீ தாயார்!

இங்கு உறையும் ஸ்ரீஅம்புஜவல்லி தாயாரும் கருணைக்கடலாகத் திகழ்கிறாள். 'பத்மப்ரியே பத்மினி பத்மஹஸ்தே...’ என்று ஸ்ரீசூக்தம் விவரிக்கிறது. தாமரையில் அமர்வதும், அதை கையில் ஏந்துவதும் தாயாருக்கு மிகப் பிடித்தமானதாம். ஆகவேதான் அவளை பத்மஜா, அம்புஜா, நீரஜா, கமலா, செங்கமலத் தாயார் என்று தாமரையுடன் தொடர்புடைய பல திருநாமங்களுடன் பல திவ்யதேசங்களில் அழைக்கிறோம். இந்த க்ஷேத்திரத்தில் அம்புஜவல்லீ என்ற திருநாமத்துடன்,  தபோ கோலத்தில் முதிர்ந்த ஞானத்துடன் பக்தர்களை அனுக்கிரஹிக்கும் பார்வையுடன், ஸ்ரீபத்ம சக்ரத்துடன் அருளாட்சி செய்கிறாள். உற்சவ தாயார் ஸ்ரீராஜலக்ஷ்மி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள். ஒருமுறை இந்தத் தலத்துக்கு வந்து இந்தத் தாயாரைத் தரிசித்து வழிபட்டால், நம்முடனேயே நம் இல்லத்துக்கு வந்து அங்கே லக்ஷ்மி கடாட்சம் பெருகச் செய்வாள் என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

இளம் கோதையாய் ஆண்டாள்!

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் பகவான் அரவணைப்பு என்னும் நிழலில், மோட்சம் என்னும் ஆனந்தக் கடலில் மூழ்கி பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டும் என்கிற நன்னோக்கில், பூமி பிராட்டியே இம்மண்ணில் அவதரித்தாள். அவளே... ஆண்டவனையே ஆண்டதால், 'ஆண்டாள்’ எனும் திருநாமம் பெற்றாள். இவளின் புகழைப் பாட பல திருக்கோயில்கள் உண்டு என்றாலும், அவளை பெரியாழ்வார் வளர்த்த இளம் கோதையாய் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

கருடாழ்வாரும் ஆஞ்சநேயரும்

மேற்கு நோக்கிய பெருமாளை ஸேவித்தவாறு நின்ற கோலத்தில் தனிச் சந்நிதியில் அருள்கிறார் கருடாழ்வார். ஸ்ரீநிகமாந்த தேசிகனின் கருட தண்டகத்தைப் பாராயணம் செய்து இவரைத் தரிசித்து வழிபட, விஷப்பூச்சிகளின் தொல்லைகள் விலகும்.

அதேபோல், இங்குள்ள பெருமாளை மீட்ட ஸ்ரீசுந்தரவரத ஆஞ்சநேயரும் வரப்பிரசாதி யானவர். 2012ம் ஆண்டுவாக்கில் இங்குள்ள பெருமாள் உட்பட உற்ஸவ விக்கிரகங்கள் திருடுபோய் விட்டனவாம். இந்த அனுமனை ஆலயத்தில் எழுந்தருளச் செய்த இரண்டு நாட்களில், தெய்வச் சிலைகள் மீண்டும் கிடைத்தனவாம்!

இவரை மனதில் நினைத்தாலே புத்தி பலம், புகழ், தைரியம், பயமின்மை, ஆரோக்கியம், மனோபலம், வாக்கில் வசீகரணம் ஆகியவை கிடைக்கும் என்பது பக்த கோடிகளின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளது.  

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் ஸ்ரீபத்ம சக்கரம்!

இந்த தெய்வங்களோடு நம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவேதாந்த தேசிகன், ஸ்ரீஆதிவண் சடகோபன் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.

ராகு  கேது (சர்ப்பங்கள்)

இங்கு பிராகாரத்தில், கிழக்கு நோக்கிய திருமுகத்தோடு இரண்டு நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் நடுவே அழகிய கண்ணனையும் சேவிக்கலாம். இந்த நாகங்களுக்கு அவரவர் கரங்களினாலே, அபிஷேகம் செய்து ராகு கேதுவின் ப்ரீதிக்கு ஆட்பட்டு பல நன்மைகளை நாம் அடைய முடியும்.

அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீபத்ம சக்கரம்

இந்தத் தலத்தின் மற்றொரு விசேஷ அம்சம் ஸ்ரீபத்ம சக்கரம். திருமகளின் பரிபூரண அருட்கடாட்சத்தை அள்ளித்தருவது ஸ்ரீபத்ம சக்கரம். பகவான் சக்ர ரூபீயாக கும்பகோணத்தில் எப்படி ஸ்ரீசக்ரபாணியாக வீற்றிருக்கிறாரோ, அதைப்போல், ஸ்ரீஅம்புஜவல்லி தாயாரும், வேறு எங்குமே காண்பதற்கரிய அபூர்வமாக இந்தத் தலத்தில் ஸ்ரீபத்ம சக்ர ரூபியாய் அவதரித்துள்ளார்.

மத்தியில் மேரு பர்வதத்தைக் குறிக்கும் வகையில் ஓர் கர்ணிகையும், அதை ஒட்டினாற்போல் இரு வளையங்களும் திகழ... அதைச் சுற்றி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருளும் அஷ்டலட்சுமிகளான  ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைர்ய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி ஆகியோர் நித்ய வாசம் புரிய, அவர்களின் மத்தியில் அம்புஜவல்லீயுடன் சேர்ந்து நவசக்தியாக நம்மை காத்தருளுகின்றனர்.

மேலும், ஸ்ரக்தரா விருத்தத்தைக் குறிக்கும் வகையில் 44 இதழ்களை கொண்டுள்ளது இந்த சக்கரம். அதேபோல் நான்கு வேதங்களுக்கு சமமாக நாற்புறமும் நான்கு தீ ஜ்வாலைகளையும், அந்த ஜ்வாலைகளில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்,  ஸ்ரீவராஹர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரையும் கொண்டு திகழ்கிறது.

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் ஸ்ரீபத்ம சக்கரம்!

ஸ்ரீபத்ம சக்கரத்தை சேவிப்பதனால் ஏற்படும் பலன்கள்...

இந்த சக்கரம் ஸ்ரீமஹாலட்சுமியின் அம்சமாக இருப்பதால், தாயாரின் மூலமாக எவ்வித பலன்கள் கிடைக்குமோ, அதில் எள்ளளவும் குறையாத பலன் நிச்சய மாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவை மட்டுமில்லாமல், இச்சக்கரத்தில் அஷ்டலட்சுமிகளும் எட்டு இதழ்களில் வீற்றிருப்பதால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

** கடன் தொல்லைகள் அகலும்.

**  நினைத்த காரியங்கள் கைகூடும்.

**  திருமண தடைகள் நீங்கும்.

** ஸத் சந்தான பிராப்திகள் ஏற்படும்.

**  தன தான்ய அபிவிருத்தி உண்டாகும்.

**  வியாபாரத்தில் ஏற்றங்கள் ஏற்பட்டு, எதிர்பார்த்த முன்னேற்றங்கள் ஏற்படுவது திண்ணம்.

**  பய நிவிர்த்தி ஆகும்.

** வித்யா அபிவிருத்தி போன்ற பற்பல பலன்கள் நிச்சயம் கிடைக்கப் பெறும்.

அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் ஸ்ரீபத்ம சக்கரம்!

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினங் களில் ஸ்ரீபத்ம சக்கரத்துக்கு பாலபிஷேகமும் அன்னதானமும் நடைபெறும். தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது (அக்.25 வரை)நாமும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட்டு, நம் வாழ்வில் வளம் பெருக வரம் பெற்று வருவோம்.

ஸ்ரீபத்மசக்கரத்தில் அஷ்டலட்சுமிகளும் எட்டு இதழ்களில் வீற்றிருப்பதால், இதை வழிபடுவதன் மூலம் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.