Published:Updated:

கோபுர கொலு!

கோடி புண்ணியம்...பூசை.ச.ஆட்சிலிங்கம்

வராத்திரியின்போது பலரும் தங்கள் வீடுகளில் கொலு வைப்பார்கள். இந்த கொலுவில் ஒவ்வொரு படிநிலையாக சகல ஜீவராசிகளின் உருவ பொம்மைகளும், ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள், மற்ற தெய்வங்களின் உருவ பொம்மைகளும் இடம் பெற்றிருக்கும். அனைத்துக்கும் மேலான இடத்தில் ஜகன்மாதாவாக அம்பிகை வீற்றிருப்பாள். ஜகன்மாதாவிடம் இருந்தே அனைத்து ஜீவன்கள், ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் மற்றும் உள்ள தெய்வங்கள் யாவரும் இயங்கும் சக்தியைப் பெறுகின்றனர் என்பதை உணர்ந்து அம்பிகையை வழிபடுவதே கொலுவின் தத்துவமாகும். 

நாம் வீடுகளில் வைக்கும் கொலுவானது நவராத்திரி நாட்களில் மட்டும்தான் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமையும். ஆனால், நிரந்தரமாக நம் கண்களுக்கு விருந்தாக அமைந்து, எண்ணங்களில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும் பிரமாண்ட கொலு மண்டபமாகத் திகழ்பவை கோபுரங்கள்தான்.

வானுயர நிமிர்ந்து நிற்கும் நெடிய கோபுரங்களுக்கு வனப்பூட்டுபவை அதிலுள்ள சுதைச் சிற்பங்கள் ஆகும். கோபுரத்தின் நீள அகல உயரங்களுக்கேற்ப சுதைச் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன. வடிவாலும் வனப்பாலும் கண்ணையும் கருத்தையும் கவரும் இவை புராண வரலாற்றையும், தலவரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டவை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோபுரங்களில் ஐந்து வகையான சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன. முதல் வகை சிற்பங்கள் அனைத்து கோபுரங்களுக்கும் பொதுவானதாகும். இவை துவார பாலகர்கள், கோபுரம்தாங்கிகள், கோடிப் பாளைகள், யாளிகள், மகாநாசிகள் முதலியனவாகும்.

கோபுர கொலு!

கோபுர நிலைத் துவாரங்களான அடுக்குகளின் இருபுறமும் வாயில்கள் அமைந்துள்ளன. இந்த வாயில்களின் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கீழ்த்தளத்திலுள்ள துவார பாலகர் களுக்குக் கைகள் அதிகமாக உள்ளன. மேலே செல்லச் செல்லக் குறைந்து உச்சித் துவாரத் திலுள்ள துவார பாலகர்களுக்கு இரண்டு கைகளே உள்ளன. இவர்களின் பக்கத்தில் அஷ்டமங்கலங்களை ஏந்திய அப்சரப் பெண்கள் நிற்கின்றனர். இவர்களை அடுத்து ஒவ்வொரு தளத்தையும் தன் தோளில் சுமந்து தாங்குவது போல் கோபுரத் தாங்கிகள் உள்ளனர். கோபுரங்களின் உச்சியில் இருபுறமும் மகா நாசிகள் எனப்படும் பிரபைகள் அமைந்துள்ளன. இவற்றில் வட்டவட்ட அடுக்குகளாக பூதங்கள், பூக்கள், அன்னங்கள், கந்தர்வக் குழந்தைகள் ஆகிய வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோபுரங்களின் முகப்பில் கஜலட்சுமியையும், அவளுடன் விநாயகர், சரஸ்வதி ஆகியோரையும் அமைக்கும் வழக்கம் உள்ளது.

இரண்டாவது வகைச் சிற்பங்கள் மகாபுராணத்திலும் தோத்திரங்களிலும் கூறப்பட்டுள்ள தெய்வ வடிவங்களாகும். இவ்வகையில் கோபுர அடுக்குகளின் மூலைகளில் அஷ்டதிக்பாலகர்கள், அஷ்டருத்திரர்கள், அஷ்ட வசுக்கள், அஷ்ட பைரவர்கள் ஆகியோர் அமைக்கப்பட்டுள்ளனர். கோபுரத்தின் தென்பகுதியின் நடுவில் தட்சிணாமூர்த்தி அமைக்கப்படுகிறார். மேலும், காமதகனம். கஜ சம்ஹாரம். திரிபுரமெரித்தல் முதலியவை தெற்கில் அமைக்கப்படுகின்றன.

மேற்குப் பக்கம் திருமாலின் லீலைகளும், திருமாலுக்குச் சிவபிரான் அருள்புரிந்த வரலாறுகளும் குறிக்கப்பட்டுள்ளன. வடக்குப் பக்கத்தில் பிரம்மதேவன் அவனது தேவியர், சிவன் காளியோடு ஆடியது, துர்கைக்கு அருள் புரிந்தது முதலியனவும் காணப்படுகின்றன.

கிழக்குப் பக்கத்தில் பெருமானின் அருளும் கோலங்களான கல்யாண சுந்தரர், இடபாரூடர், பஞ்ச மூர்த்திகள் முதலியன இடம் பெறுகின்றன.

மூன்றாம் வகைச் சிற்பங்கள் அந்தத் தலத்துக்குரிய வரலாறுகளைக் குறிக்கும் சிற்பங்கள் ஆகும். எடுத்துக்காட்டாக மயிலாப்பூர் கோபுரத்தில் அம்பிகை மயில் வடிவில் பூசித்தல், பிரம்மனுக்குக் காட்சியளித்தல் முதலிய சிற்பங்கள் உள்ளன.

திருக்கடையூரில் அபிராமி, அபிராமி பட்டருக்காகக் காதுத் தோட்டை வீசி நிலவாகப் பிரகாசிக்கச் செய்ததைக் குறிக்கும் சுதைச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அபிராமி (நிலவு போன்று உயரத்தில் பிரகாசிக்கும்) தோடு, மன்னன், மந்திரி, அபிராமிபட்டர், சேவகர்கள் ஆகியோருடைய சிற்பங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

நான்காம் வகையில் அமைந்தவை அடியவர்களின் பெருமைகளை விவரிக்கும் காட்சிகளாகும். குறிப்பாக திருஞானசம்பந்தர் முத்துப் பல்லக்கில் பவனிவருதல், சமணர் மற்றும் பௌத்தர்களுடன் வாதிடுதல், அனல் வாதம் புனல்வாதம் செய்தல் முதலியனவும்;

கோபுர கொலு!

அப்பர் வாழ்வில் நடைபெற்ற கல் தெப்பமாக மிதத்தல், எதிர்த்து வந்த யானையை வெருட்டுதல், அப்பூதி அடிகளின் மாண்ட பாலகனை உயிர்ப்பித்தல் முதலியனவும்; சுந்தரரின் திருமண சமயத்தில் இறைவன் வல்வழக்கிடுதல், சுந்தரர் முதலைவாய்ப் பிள்ளையை மீட்பது முதலியனவும்; மாணிக்கவாசகர் ஊமைப் பெண்ணைப் பேசவைத்தல், நடராசர் கேட்கத் திருவாசகம் கூறுதல், அதை நடராசர் ஏட்டில் எழுதிக்கொள்ளுதல் முதலியனவும் இடம் பெற்றுள்ளன.

ஐந்தாம் வகையில் இடம் பெறுவது துணைச் சிற்பங்களான கோடி பூதங்கள், இடபங்கள், கொடிப் பாளைகள், சிம்மங்கள் முதலியனவாகும். கோபுரங்கள் யாவும் சிற்பக் கலைஞர்களின் கற்பனை வளத்துக்கும் கலைத்திறனுக்கும் சான்றாக விளங்கி வருகின்றன.

கோபுர கொலு!

ராஜகோபுரம் பிரபஞ்சத்தின் வடிவமென்பதாலும், உலக விருத்திக்குக் காமம் அடிப்படை என்பதாலும் அதில் காம விகாரங்களை வெளிப்படுத்தும் மிதுன சிற்பங்களும் பிற்காலத்தில் இடம்பெற்றுவிட்டன. இவை உலகின் கீழ்மட்ட ஆசைகள் என்பதால், அடி நிலையில் மட்டுமே அமைக்கப்படும்.  காலப்போக்கில் அவற்றைக் குறைத்துவிட்டனர்.

ராஜகோபுரம்...15 வகை

மயமதம் எனும் நூலில் பதினைந்து வகையான ராஜ கோபுரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் பெயர்கள்:

1.ஸ்ரீகரகம், 2.ரதிகாந்தம், 3.காந்தவிஜயம், 4.விஜய விசாலகம், 5.விசாலாலயம், 6.விப்ரதீகாந்தம் 7.ஸ்ரீகாந்தம், 8.ஸ்ரீகேசம், 9.கேசவிசாலகம், 10.சுவஸ்திகம், 11.திசாசுவஸ்திகம், 12.மர்தசம், 13.மாத்ர காண்டகம், 14.ஸ்ரீவிசாலம் 15.சதுர்முகம் என்பதாகும். சதுர்முக கோபுரத்தைத் திருவானைக்காவில் காணலாம்.

தென்னகத்தில் அதிகமான கோபுரங்களைக் கொண்ட சிவாலயம், மதுரை மீனாட்சியம்மன்  கோயிலாகும். இதன் வெளி மதிலில் நான்கு திசைகளையும் நோக்கியவாறு மிகப்பெரிய நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவற்றில் கிழக்கு கோபுரம் இந்திர விமானமென்றும், மேற்குக்  கோபுரம் வருண விமானமென்றும் பழைய நூல்களில் குறிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கோபுரத்தை மொட்டைக் கோபுரமென்றே அழைக்கின்றனர்.

தெற்குக் கோபுரம் கட்டட வரலாற்றில் தனிச்சிறப்பு பெற்றதாகும். இது நெளிவாக உள்வளைவுடன் அமைந்திருக்கிறது. இவ்வகைக் கோபுரங்களைப் பெண்கோபுரங்கள் என்பர்.

இவற்றைக் கடந்து உள்ளே சென்றதும் கிழக்கில், சுவாமிக்கும் அம்பிகைக்கும் தனித்தனியே கோபுரங்கள் உள்ளன. இதில் அம்மன் கோபுரம் சித்திரக் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.  இதே மதிலில் மேற்கில் சுவாமிக்கும் அம்பிகைக்கும் தனித்தனி மேலைக் கோபுரங்கள் உள்ளன.  இதையடுத்து உள்ளே சென்றால் சுவாமி சந்நிதி உள்கோபுரம் உள்ளது. இதுபோன்று மீனாட்சியம்மனுக்கும் தனியே சந்நிதி கோபுரம் அமைந்துள்ளது. சுவாமி சந்நிதிக்கு மட்டும் உள்மதிலில் கிழக்கு மேற்குடன் தெற்கிலும், வடக்கிலும் கோபுரங்கள் அமைந்துள்ளன. தெற்கு கோபுரம் மீனாட்சி கோயிலுக்குச் செல்ல வசதியாக இடைக்கட்டில் இருப்பதால் இடைக்கட்டு கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.