Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்!

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ரு துறையின் பொறுப்பை ஏற்றவன் அதன் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான். முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் இடையூறுகளையும் விலக்குவான். அந்தத் துறையின் செழிப்பில் ஒரு பெருமிதம் இருக்கும். லக்னத்தில் இருந்து 7ம் வீட்டின் தலைவன், ஜாதகனின் தாம்பத்திய வாழ்க்கையை இறுதி செய்பவன். அவன், அதாவது 7க்கு உடையவன் ஜாதகனின் தாம்பத்தியத்தை வரையறுப்பான். புருஷ ஜாதகத்தில் பிறந்தவேளை லக்னம் அதிலிருந்து 7க்கு உடையவன், தனது சத்ருவின் வீட்டில் இருக்கும் நிலையோ, மெளட்யமோ (தனது தகுதி இழந்தநிலை) ஏற்பட்டு, இரண்டு பாப கிரகங்களுக்கு நடுவில் இருக்க நேர்ந்தால், அவனது தாம்பத்தியம் சிறக்காது என்கிறது  ஜோதிடம்.

சூரியனுக்கு சுக்கிரனும் சனியும் பகை; புதன் சமன்; மற்றவர்கள் நண்பர்கள். சந்திரனுக்கு சூரியனும் புதனும் நட்பு; மற்றவர்கள் சமன். செவ்வாய்க்கு குரு, சூரியன், சந்திரன் ஆகியோர் நண்பர்கள்; புதன் பகை; மற்றவர்கள் சமன். புதனுக்கு சூரியனும் சுக்கிரனும் நண்பர்கள்; சந்திரன் பகை; மற்றவர்கள் சமமானவர்கள். குருவுக்கு புதனும் சுக்கிரனும் பகை; சனி சமமானவன்; மற்றவர்கள் நண்பர்கள் (பந்துக்கள்). சுக்கிரனுக்கு புதனும் சனியும் நண்பர்கள்; செவ்வாயும் குருவும் சமமானவர்கள்; மற்றவர்கள் பகை. சனிக்கு சுக்கிரனும் புதனும் நட்பு; குரு சமானமானவர்; மற்றவர்கள் பகை (சத்ருக்கள்). பகை ஒத்துழைப்பு இல்லை, நட்பு ஒத்துழைப்பு உண்டு, சமமானவர் நடுநிலை வகிப்பார் என்ற நிலைப்பாட்டில் இருப்பார்கள் என்ற விளக்கமும் உண்டு.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சந்திரன், சூரியனிடம் 12 பாகை நெருக்கத்தில் தனது தகுதியை இழக்கிறான் (மௌட்யம்). அதேபோல் செவ்வாய் 12 பாகைகள், புதன்  13, குரு11, சுக்கிரன்9, சனி  15 பாகை நெருக்கத்திலும் மெளட்யம் பெற்றுவிடுகிறார்கள்.

உதாரணம்1: பிறந்தவேளை  லக்னம், 7க்கு சுக்கிரன் அதிபதி. அவன் சத்ரு க்ஷேத்ரத்தில் (பகை வீட்டில்) இருக்க வேண்டும். அல்லது சூரியனோடு 9 பாகையிலும் இருக்க வேண்டும். அதே வேளையில் இரு பாப கிரகங்களுக்கு இடையில் அமர்ந்திருக்க வேண்டும். இப்படியான சுக்கிரன் தாம்பத்திய சுகத்தை சுவைக்கவிட மாட்டான் என்கிறது ஜோதிடம்.

இரண்டு ராசிகளுக்கு நடுவில் இருந்தாலும், ஒரே ராசியில் இரண்டு பாபிகளுக்கு நடுவில் இருந்தாலும்  ஒன்றுதான்.

இங்கே 7க்கு உடையவன் பகை வீட்டில் இருப்பதால் ஒத்துழைப்பும் இல்லை; சுதந்திரமாகச் செயல்படவும் இயலாமல் போகிறது. அத்துடன் கிடுக்கிப்பிடி போல் இரண்டு பாப கிரகங்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு இருப்பதால், தனது சுதந்திரச் செயல்பாட்டை முற்றிலும் இழந்துவிடுகிறான். அவனுடைய ஒத்துழைப்பின் குறை, தாம்பத்திய சுகத்தை இழக்கவைக்கிறது. இங்கு புருஷனின் கர்மவினை செயல்படுகிறது. அதாவது, அவனுடைய பிறக்கும் வேளை, இப்படியான அமைப்பில் தென்படும்.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

அந்த மனைவியானவள் தகுதி இழப்பு, சண்டை சச்சரவு, மனநிலையில் பாகுபாடு, அசடு அல்லது இழப்பு என இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் தாம்பத்திய சுகம் சூன்யமாகிவிடும். அவள் இறக்க நேரிடும் என்ற கட்டாயம் இல்லை. ஏனெனில், இறப்பை அவளுடைய  ஜாதகமே நிர்ணயம் செய்யவேண்டும். புருஷனின் ஜாதகம் அதைச் சொல்லாது. புருஷ ஜாதகத்தின் கர்மவினையானது அவனுக்குப் பலனளிக்கும். அந்தப் பலனில் ஏற்படும் மாறுபாட்டுக்கு இணங்க, மனைவி அதில் இணைகிறாள். மனைவியின் காரணமாக அவனுக்குக் கெடுதல் என்கிற கோட்பாட்டில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. எனவே, அந்தந்த ஜாதகத்தின் கர்மவினை ஆராயப்பட்டால், முடிவு சுலபமாகிவிடும்.

வரப்போகும் மனைவிக்கான ஜாதகத்தின் ஆராய்ச்சியில், இவனது கர்மவினை தெளிவாகப் புலப்படாது. ஆண் வீட்டார் வரப்போகும் மனைவியின் ஜாதகத்தை அலசி ஆராய்வதும், பெண் வீட்டார் வரப்போகும் கணவனின் ஜாதகத்தை அலசி ஆராய்வதும் உண்டு. இரு தரப்புமே தங்கள் ஜாதகத்தின் குறைநிறைகளைக் கவனிக்கமாட்டார்கள். தேர்தலுக்கு நிற்க விரும்புபவன், எந்தக் கட்சியில் நின்றால் வெற்றி கிடைக்கும் என்று ஆராய்வான். தனது தகுதியைப் பற்றிக் கவலைப்படமாட்டான்! இப்படி, தவறான கோணத்தில் தேர்வு செய்து, திருமணத்தில் இணைந்து, அடுத்தடுத்து இன்னல்களை ஏற்பவர்களும் உண்டு. விவாகரத்தில் இணைந்து துயரத்தை வரவழைத்துக் கொள்பவர்களும் உண்டு. ஆகவே, அவரவர் விருப்பப்படி செயல்பட்டு, இன்னல்களை இரட்டிப்பாக்கும் முயற்சியில் பிரபலங்கள் ஈடுபடக்கூடாது. அவர்களது மகிழ்ச்சியான தாம்பத்யத்துக்கு வழிகாட்டியாக மாறவேண்டும். தமக்கு வேலை வாய்ப்பு அளித்த ஜோதிடத்தையும், அதற்கு ஒத்துழைத்த பொது மக்களையும் எண்ணி, உள்ளதை உள்ளபடி விளக்கும் பாங்கு ஜோதிடம் சொல்லும் பிரபலங்களிடம் தென்பட வேண்டும். குறிப்பிட்ட மொழியின் மீதுள்ள பகையின் காரணமாக, அதில் இருக்கும் விளக்கங்களை உதாசீனப்படுத்திவிட்டு, தனது விளக்கங்களை ஜோதிட விளக்கமாகப் பிரகடனப்படுத்தி மக்களுக்குத் தவறாக வழிகாட்டக்கூடாது.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

அடிப்படை ஜோதிடத்தில் போதுமான அறிவு பெறாதவர்கள், சூழலையையும் மக்களின் நிலையையும் பயன்படுத்தி, தவறான வழிகாட்டியாக மாறிவிடுகிறார்கள். வியக்கத்தக்க விஞ்ஞான அறிவை உள்ளடக்கியது சாஸ்திரம். அதை முறையாகக் கையாண்டால், மக்கள் சேவை சிறக்கும்.

உதாரணம்2:  பிறந்த லக்னத்துக்கு இரண்டிலும் ஏழிலும் பாப கிரகங்கள் இருக்கவேண்டும். அவர்கள் இருவரையும் பாப கிரகங்கள் பார்க்க வேண்டும். இந்த அமைப்பு புருஷ ஜாதகத்தில் இருந்தால், தாம்பத்திய சுகம் இழக்கப்படும் என்கிறது ஜோதிடம். 7ல் பாப கிரகம் இருந்தால் மனைவியிடம் இருந்து கிடைக்கவேண்டிய மகிழ்ச்சியைக் குறைக்கும். 2ல் (குடும்பம்) இருந்தால், அவளோடு இணைத இன்பத்தையும் சூன்யமாக்கும். அதேநேரம், இவ்விருவரிலும் பாப கிரகங்களின் முழுப்பார்வை படும்போது குறை இறுதிசெய்யப்படுகிறது.

இங்கு லக்னாதிபதி செவ்வாய் 7ல் இருக்கிறான். அவனை சனி பார்க்கிறான். இரண்டில் சூரியன். அவனை 8ம் பார்வையாக செவ்வாய் பார்க்கிறான். இங்கு தாம்பந்திய சுகம் சூன்யமாகிவிடுகிறது. இங்கு, பிரபலமான செவ்வாய் தோஷம் தலைதூக்காது. லக்னாதிபதி இருந்த வீடு செழிக்கும். ஆனால் அவன் பாப கிரகமாக இருப்பதால், அவனது இருப்பை நல்லது செய்ய இடமளிக்காமல் செய்துவிடுகிறது, சனியின் பார்வை. இரண்டில் இருக்கும் பாபியை மற்றொரு பாபியான செவ்வாய் பார்ப்பதால், குடும்ப வாழ்க்கையிலும் நெருடலை ஏற்படுத்திவிடுகிறது. இங்கும் புருஷனின் கர்மவினையின் விளையாட்டுதான் கெடுதலுக்குக் காரணம்.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

உதாரணம்3: லக்னத்தில் இருந்து 7லும் 8லும் பாப கிரகங்கள் இருக்க வேண்டும். அவர்களை பாப கிரகங்கள் பார்க்கவேண்டும். இந்த அமைப்பும் தாம்பத்தியத்தை சூன்யமாக்கிவிடும் என்கிறது ஜோதிடம். 7ம் வீடு மனைவியின் அன்பை வரையறுக்கும். அதில் பாப கிரகம் நெருடலைத் தோற்றுவிக்கிறது. 8ல் இருக்கும் பாப கிரகம் ஏழாம் பார்வையாக இரண்டைப் பார்ப்பதால், குடும்ப நலத்தைச் சூறையாடுகிறது.மனைவியின் இணைப்புதான் குடும்பம். இருவரையும் பாப கிரகம் பார்ப்பதால், ஒட்டுமொத்த குடும்ப சூழலும் பறிபோகிறது.

இங்கு 7ல் சூரியன்பாப கிரகம். லக்னத்தில் இருக்கும் சந்திரன் நீசம் பெற்றவன்; பாப கிரகமாக மாறி, 7ஐ முழுப் பார்வையாகப்  பார்க்கிறான். 8ல் சனி பாப கிரகம்; அவனை இரண்டில் இருக்கும் செவ்வாய் பார்க்கிறான். இந்த அமைப்பு அவனது தாம்பத்யத்தை இழக்க வைக்கிறது. இங்கு 7யும் குடும்பத்தையும் பாப கிரகம் பார்க்கிறது. 7 மற்றும் 8ல் பாப கிரகம் வீற்றிருக்கிறது. இந்த அமைப்பு கெடுதலை நடைமுறைப்படுத்திவிடுகிறது.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

உதாரணம்4: லக்னத்தில் இருந்து 7ல் சந்திரனும் சனியும் அமைந்தால் தாம்பத்தியம் இழக்கப்பட்டுவிடும் என்கிறது ஜோதிடம். லக்னம் கன்னி, 7ல் அதாவது மீனத்தில் சந்திரனும் சனியும் சேர்ந்து இருக்கிறார்கள். இருவரும் லக்னத்தை 7ம் பார்வையாகப் பார்க்கிறார்கள். 7ல் இருக்கும் குறை, பார்வை வாயிலாக லக்னத்தையும் பாதித்துவிடுகிறது. சனி பாப கிரகம். சந்திரன் பாபியோடு இணையும்போது அவனும் பாபியாக மாறிவிடுகிறான் (சந்திரனின் சேர்க்கையில் சனி (பாப கிரகம்) சுபனாக மாறமாட்டான்). தற்போது இரண்டு பாபிகள் 7ல் இருக்கிறார்கள். இருவரும் தங்களது பார்வையால் லக்னத்தின் தரத்தை மாற்றி விடுகிறார்கள்.

சனி 6க்கு உடையவன். சந்திரன் 11க்கு உடையவன். கன்னி லக்னத்துக்கு சந்திரன் (அவன் சுப கிரகமானாலும்) இடையூறு செய்பவனாக மாறுவான். அத்துடன் சனியின் (பாபி, வெப்பகிரகம்) சேர்க்கை, அந்த ஏழாவது பாவத்தை  தாம்பத்தியத்தை நிலைகுலையச் செய்கிறது. அதை திடப்படுத்த, அவ்விருவரும் லக்னத்தை முழுப்பார்வையில் திசை திருப்புகிறார்கள். முடிவு, ஜாதகனின் தாம்பத்திய சுகம் முற்றிலும் மாறிவிட்டது. இங்கும் புருஷனின் கர்மவினை ஆராயப்படுகிறது. அவனது கர்மவினை, பிறக்கும் வேளையில் இப்படியான அமைப்பை ஏற்படுத்திவிடுகிறது (புத்தி:கர்மானுசஹிணி).

முன்னோர்கள்  சொன்னார்கள்!

உதாரணம்5: நீசமான கிரகம், பகை வீட்டில் அமைந்த கிரகம், மௌட்யம் பெற்ற கிரகம் ஆகியவை 2, 7, 8ல் அமைந்தால் தாம்பத்திய சுகம் இழக்கப்படும் என்கிறது ஜோதிடம். கிரகங்களின் தகுதி இழப்பு நீசத்தில் தென்படும். உச்சத்தில் இருக்கும் கிரகம், தனது 7வது வீட்டில் நீசம் பெற்றுவிடும். அந்த நீசம் பெற்ற கிரகம், லக்னத்தில் இருந்து 2 அல்லது 7 அல்லது 8ல் இருக்கவேண்டும். இந்த மூன்றில் ஒன்று சத்ரு கிரகமாக அமைந்திருக்க வேண்டும். அல்லது சூரியனோடு நெருக்கம் பெற்று, அதனால் தகுதி இழந்த கிரகமானது (மெளட்யம்) இந்த மூன்று இடங்களில் (2,7,8) ஒன்றில் இருக்க வேண்டும்.

நீசம், சத்ரு கிரகம், மௌட்யம் எனப்படும் தகுதி இழந்த கிரகம் இந்த மூன்றில் (2,7,8) இணைந்திருக்க வேண்டும். அந்த மூன்று கிரகங்கள், இந்த மூன்று இடத்தில் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்திருக்கலாம். இந்த மூன்றும் தகுதி இழப்புக்கு ஒத்துழைப்பு அளிப்பதால், மூன்று இடங்களில் (2,7,8) எங்கு வேண்டுமானலும் இருக்கலாம். அதேபோல், 2, 7 மற்றும் 8ல் அமர்ந்த கிரகம் பாப கிரகமாக இருக்கவேண்டும். அந்த கிரகத்துக்கு நீசமான நிலையோ, சத்ரு க்ஷேத்ரமாகவோ, அல்லது மௌட்யம் பெற்ற நிலையோ இருக்க வேண்டும். இங்கு பாபக்ரஹத்தின் தரம் (மௌட்யம், நீசம், சத்ருஷேத்ரம்) தாம்பத்தியத்தை இழக்கவைக்கிறது.

இதில் ஒன்று நீசம் பெற்றது (2,7,8) மூன்றில் ஒன்றில் இருக்க வேண்டும். அதுபோல் மௌட்யத்தை, சத்ரு க்ஷேத்ரத்தை அடைந்தவர்களும் மூன்றில் ஒன்றில் இருக்க வேண்டும் என்கிறது ஜோதிடம்.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

2, 7, 8 இவற்றில் பாப கிரகங்கள் மெளட்யமோ, சத்ரு க்ஷேத்ர ஸ்திதியோ, நீசமோ பெற்று அமர்ந்திருக்க வேண்டும். நீசத்திலும் மௌட்யத்திலும் தன் தகுதியை இழந்துவிடும். தகுதி இருந்தும் பகை வீட்டில் அமர்ந்ததால் சுதந்திரம் பறிக்கப்பட்டு செயலற்றுவிடும். 2,7,8 ஆகிய வீடுகளில் பாபிகள் இருந்தால் போதாது; அவர்களது தகுதி இழப்பும் இருக்க வேண்டும் என்கிறது ஜோதிடம். அந்த இழப்பும் மௌட்யம், பகை வீடு, நீசம் இதில் ஒன்றில் இருக்க வேண்டும் என்கிறது.

7  தாம்பத்தியம், 8  ஆயுள், 2  குடும்பம் இந்த மூன்றையும் தகுதி இழந்த பாப கிரகம் செயலற்றதாக்கிவிடுவதால், தாம்பத்திய சுகம் சூன்யமாகிவிடும். தாம்பத்தியம் சூன்யமாவதற்கு ஏழும், ஏழின் இரண்டும், ஏழின் எட்டும் அதாவது லக்னத்தின் இரண்டும் காரணமாகி விடுவதால், இந்த அமைப்பு சுகத்தை அளிப்பதில் தவறிவிடுகிறது!

தொடரும்...