Published:Updated:

குழந்தை வரம் அருளும் கிருஷ்ணர்!

கிருஷ்ண... கிருஷ்ணா!ம.மாரிமுத்து

திருநெல்வேலியிலிருந்து பத்தமடை வழியாக பாபநாசம் செல்லும் சாலையில், நெல்லையில் இருந்து சுமார் 27 கி.மீ தூரத்திலிருக்கும், 'மேலச்செவல்’ எனும் அழகிய கிராமத்தை நாம் அடைந்தபோது, காலை நேர சூரிய ஒளி பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பனி விலகத் தொடங்கியிருந்தது. 

அந்த ஊரில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோயிலில் நுழைந்தபோது, அப்படி ஓர் ஏகாந்த அமைதி. இறைவனை மனநிறைவுடன் நாம் தரிசித்துக் கொண்டிருந்த நேரத்தில், கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர்.

நாம் சென்றது ஒரு சனிக்கிழமை என்பதால், நவநீதகிருஷ்ணன் விசேஷ அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'நவநீதகிருஷ்ணன் குழந்தை வடிவில், தன் இரு கைகளிலும் வெண்ணெய் வைத்திருக்கும் காட்சியை இந்தக் கோயிலில் தரிசிப்பது மிகவும் விசேஷம்'' என்று அங்கிருந்த பக்தர்கள் பேசிக் கொண்டார்கள். நாம் அந்தக் கோயில் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பி அங்கிருந்த கோயில் குருக்களான ஸ்ரீநிவாசராகவ பட்டாச்சார்யாரிடம் பேசினோம். அவர் சொன்ன வரலாறு...

குழந்தை வரம் அருளும் கிருஷ்ணர்!

முற்காலத்தில் அப்பாஜி என்ற அந்தணச் சிறுவன் பெற்றோர்களை இழந்து அநாதையாக இந்த ஊரில் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தான். அப்படி ஒருநாள் ஆடு மாடுகளை மேய்க்கச் சென்றபோது, சோர்வின் காரணமாக ஒரு மரத்தடியில் படுத்து உறங்கினான். உச்சி வெயில் அவன் முகத்தில் பட்டதுகூடத் தெரியாமல் அவன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவன் முகத்தில் வெயில் படாமல் இருக்க ஒரு நாகம் படம் விரித்து நிழல் தந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த மற்றொரு சிறுவன், அப்பாஜி எழுந்ததும் அவனிடம் நடந்த சம்பவத்தைக் கூறி, ''இதனால் உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. உனக்கு அரசாங்கத்தில் உயர்ந்த ஸ்தானம் கிடைக்கும்'' என்று சொன்னான்.

அதைக் கேட்ட அப்பாஜி, ''நானோ படிப்பறிவு இல்லாத அநாதை. எனக்கு எப்படி அந்த வாய்ப்பு கிடைக்கும்? ஒருவேளை நீ சொன்னபடி நடந்துவிட்டால், நீ கேட்பதை நான் கொடுக்கிறேன்'' என்று கூறினான். அதன் பின்னர் அந்தச் சிறுவன் சென்றுவிட்டான். தனக்கு அப்படி நல்வாக்கு சொன்னது இறைவன்தான் என்பது அப்போது அப்பாஜிக்குத் தெரியவில்லை.

காலங்கள் சென்றன. அப்பாஜிக்கு மன்னரின் அறிமுகம் கிடைத்தது. அப்பாஜியும் தன்னுடைய புத்திக் கூர்மையால் மன்னரின் அபிமானம் பெற்று, அமைச்சரின் நிலைக்கு உயர்ந்தார். அந்த அப்பாஜிதான் பிற்காலத்தில் திம்மராஜன் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

வாழ்க்கையில் நல்ல அந்தஸ்துக்கு வந்த பிறகும் அப்பாஜிக்கு ஒரு மனக்குறை இருந்துகொண்டே இருந்தது. தனக்கு நல்வாக்கு சொன்ன அந்தச் சிறுவனை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்பதுதான் அந்தக் குறை.

குழந்தை வரம் அருளும் கிருஷ்ணர்!

ஒருநாள் இரவு அவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது கனவில், தாமிரபரணிக் கரையில் மாடுகள் சூழ சிறுவனாகக் காட்சி தந்தார் திருமால். அப்போதுதான் தனக்கு நல்வாக்கு சொன்னது திருமால்தான் என்று தெளிவு பெற்ற அப்பாஜி, எந்த தாமிரபரணிக்கரையில் திருமால் சிறுவனாகக் காட்சி தந்தாரோ, அந்த இடத்திலேயே கண்ணனுக்கு ஒரு கோயில் கட்டினார். அந்தக் கோயில்தான் மேலச்செவல் நவநீதகிருஷ்ணன் கோயில்.

கோயிலின் அமைப்பு:

மேலச்செவலில் உள்ள தொன்மை வாய்ந்த கோயில் களில் இதுவும் ஒன்று. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் கருவறை விமானத்தின் மேல் உள்ள கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்கு கண் பொருத்தும் திருக்காட்சியும், ராமபிரான் ஒரே அம்பினால் ஏழு மரங்களைத் துளைத்த காட்சியும் சுதைச் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கின்றன. கிருஷ்ணர் கோயில் விமானத்தில் சிவபக்தரான கண்ணப்ப நாயனாரின் வடிவம் இடம் பெற்றிருப்பது சமய ஒற்றுமைக்குச் சான்றாகும்.

குழந்தை வரம் அருளும் கிருஷ்ணர்!

இறைவன்: ஸ்ரீநவநீதகிருஷ்ணன்

தாயார்: ஸ்ரீதேவி  மற்றும் பூமிதேவி

விமானம்: ராய விமானம்

விசேஷ நாட்கள்: கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாதம் கருட சேவை, ராமநவமி, ஏகாதசி.

வேண்டுதல் நிறைவேற:

இங்கு அருள் புரியும் நவநீதகிருஷ்ணன் மிகச் சிறந்த வரப்பிரசாதி ஆவார். குழந்தை வரம் வேண்டுவோர் தொடர்ந்து ஐந்து பவுர்ணமி தினங்களில், இந்தத் தலத்துக்கு வந்து விரதம் இருந்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். கோயிலுக்கு வருவதற்கு வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் இந்தக் கோயிலில் அருள்புரியும் நவநீதகிருஷ்ணனை ரோஹிணி நட்சத்திரத்தன்று மானசிகமாக பிரார்த்தனை செய்துகொண்டு, வீட்டில் நவநீதகிருஷ்ணன் படத்தின் முன்பாக அமர்ந்து கிருஷ்ணாஷ்டக ஸ்லோகத்தைப் பாராயணம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

குழந்தை வரம் அருளும் கிருஷ்ணர்!

இங்கே சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்காகவும் வம்ச விருத்திக்காகவும் தம்பதியராக வந்து நாக பிரதிஷ்டை செய்து பிரார்த்தித்துக் கொள்கின்றனர்.

படங்கள்: எல்.ராஜேந்திரன்