Published:Updated:

நவராத்திரி நைவேத்தியங்கள்!

நவராத்திரி நைவேத்தியங்கள்!

வராத்திரி என்றாலே நினைவுக்கு வருவது கொலுவும் நைவேத்தியங்களும்தான். 

நவராத்திரி நைவேத்தியங்கள்!

இந்த நவராத்திரி தினங்களில் வீட்டுக்கு பெண்கள், குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு எப்படி பூ, பழம், துணிமணிகளை வழங்குவது புண்ணியமோ, அதேபோல நைவேத்தியங்களை வழங்குவதும் மகா புண்ணியம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தானத்தில் உயர்ந்தது அன்னதானம். பசித்தவர்க்கு உணவிடும் வழக்கத்தை, நவராத்திரி விழாக்களின் நியதியாக்கி, அறம் செழிக்க வழிவகுத்து வைத்துள்ளன ஞானநூல்கள். அந்த வகையில், நவராத்திரி முதல்நாள் துவங்கி, முறையே வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், கதம்ப சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், பாயசம், அக்கார அடிசில் ஆகியவற்றை நிவேதனமாகப் படைத்து, ஏழைகளுக்கும் விநியோகிக்க வேண்டும் என்பது நியதி.

இவற்றோடு, கூடுதலாக சில வித்தியாசமான நைவேத்தியங்களைப் படைத்து வீட்டுக்கு வருபவர்களை ஆச்சரியப்படுத்துவோமே! அப்படி சில வித்தியாசமான நைவேத்தியங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் திருமதி. ராஜேஸ்வரி ஆனந்த். (புகைப்படங்களும் அவரே!)

1.மிளகு சீரக இடியாப்பம் 

தேவையான பொருட்கள்: அரிசி மாவு/இடியாப்ப மாவு  முக்கால் கப், மிளகு  இரண்டு மேஜைக்கரண்டி , சீரகம்  இரண்டு தேக்கரண்டி, துருவிய தேங்காய்  கால் கப், நெய்  ஒரு மேஜைக்கரண்டி, உப்பு  தேவையான அளவு, முந்திரி பருப்பு  பத்து, கறிவேப்பிலை  ஒரு கொத்து. 

நவராத்திரி நைவேத்தியங்கள்!

செய்முறை: இடியாப்பம் செய்வதற்கு மாவு பிசைய தண்ணீர் சேர்க்கும் முன்பு, அந்தத் தண்ணீரில் சில சொட்டு நல்லெண்ணெய், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின் அந்த நீரை அரிசி மாவில் சேர்த்து, மாவாக பிசைந்து இடியாப்பம் செய்துகொள்ளவும். மிளகு சீரகத்தைக் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். இதில் மிளகு சீரகத்தூள், துருவிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கிவிடவும்.  ஆறிய இடியாப்பங்களை நன்றாக உதிர்த்து அதில் இந்தக் கலவையையும் தேவைப்பட்டால் சிறிது உப்பையும் சேர்த்து நன்கு கலந்து பின் பரிமாறவும்.

2.தினை பணியாரம்

தேவையான பொருட்கள்: தினை அரிசி  அரை கப் , அரிசி மாவு  மூன்று மேஜைக்கரண்டி, கோதுமை மாவு  மூன்று மேஜைக்கரண்டி, வெல்லம்  கால் கப், துருவிய தேங்காய்  கால் கப், சோடா உப்பு  ஒரு சிட்டிகை, உப்பு  ஒரு சிட்டிகை, நெய்/நல்லெண்ணெய்  தேவைக்கேற்ப. 

நவராத்திரி நைவேத்தியங்கள்!

செய்முறை: தினை அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைக்கவும். இதில் வெல்லம், அரிசி மாவு, கோதுமை மாவு, தேங்காய், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து, மாவில் சோடா உப்பு சேர்த்து, பணியார சட்டியில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, பணியாரங்களை இரண்டு பக்கமும் திருப்பி நன்கு வேகவிட்டு எடுக்கவும். இந்த மாவில் பாதி வாழைப்பழத்தை சேர்த்து மசித்துப் பணியாரம் செய்தால், மேலும் மிருதுவாக இருக்கும்.

3.தேங்காய் பாயசம்

தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய்  முக்கால் கப், பச்சரிசி  மூன்று மேஜைக்கரண்டி, வெல்லம்   முக்கால் கப், ஏலக்காய் இரண்டு, முந்திரி  பத்து, நெய்  ஒரு மேஜைக்கரண்டி.

நவராத்திரி நைவேத்தியங்கள்!

செய்முறை: அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் துருவிய தேங்காய், ஊறவைத்த அரிசி, கால் கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின் அரைத்த விழுதை இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சுமார் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். இடையில் அவ்வப்போது கிளறிவிடவும். இதனிடையே வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்து வடிகட்டிக் கொள்ளவும். வெல்லம் கரைந்தால் போதும், பாகு பதம் வேண்டாம். இதனை அரிசி தேங்காயுடன் சேர்த்து, குறைந்த தீயில் கலந்து இறக்கி விடவும். பரிமாறும் முன் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் சேர்க்கவும். அரிசி அளவைப் பொறுத்து பாயசம் கெட்டியாகும். தேவைப்பட்டால் காய்ச்சிய பால் சேர்க்கலாம்.

4.சாமை உப்புமா கொழுக்கட்டை 

தேவையான பொருட்கள்:  சாமை  அரை கப், பாசி பருப்பு  ஒரு மேஜைக்கரண்டி, மிளகு  அரை தேக்கரண்டி, சீரகம்  அரை தேக்கரண்டி, துருவிய தேங்காய்/தேங்காய் பல்  இரண்டு மேஜைக்கரண்டி, எண்ணெய், உப்பு  தேவைக் கேற்ப. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தேவைக்கேற்ப.

நவராத்திரி நைவேத்தியங்கள்!

செய்முறை: மிக்ஸியில் பாசி பருப்பு, மிளகு, ஜீரகம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க வேண்டிய பொருட்களைச் சேர்த்து தாளித்து, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதில் பொடித்த பருப்பு, சாமை, துருவிய தேங்காய், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் வற்றும்வரை மூடிவைத்து பின் இறக்கவும். ஆறியபின், உருண்டைகளாக பிடித்து, இட்லித்தட்டில் வைத்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

5.கோதுமை கேசரி்

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு  அரை கப், சர்க்கரை  அரை கப், தண்ணீர்  அரை கப், நெய்  கால் கப், ஏலக்காய்  ஒன்று, முந்திரி, பாதாம் தலா ஐந்து, உப்பு  ஒரு சிட்டிகை. 

நவராத்திரி நைவேத்தியங்கள்!

செய்முறை: வாணலியில் நெய்விட்டு, உடைத்த முந்திரி, பாதாம் சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும். அதில் கோதுமை மாவு சேர்த்து சிறு தீயில் கிளறவும். மாவு சிவந்து, வாசனை வந்தவுடன், தண்ணீர், உப்பு சேர்த்து கிளறவும். தண்ணீர் ஊற்றிக் கிளறும்பொதே விரைவாக வெந்துவிடும். வெந்தவுடன், சர்க்கரையைச் சேர்க்கவும். பின் குறைந்த தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும். ஐந்து நிமிடங்களில் நெய் பிரிந்து, பளபளப்பாக திரண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.உப்பு சேர்ப்பது திகட்டாமல் இருப்பதற்காக.

6.ஜவ்வரிசி வடை

தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி  ஒரு கப், உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு)  இரண்டு, வேர்கடலை (தோல் நீக்கியது)  கால் கப், பச்சை மிளகாய்  இரண்டு, கொத்தமல்லி இலை  ஒரு பிடி, எலுமிச்சை சாறு  இரண்டு தேக்கரண்டி, அரிசி மாவு  ஒரு மேஜைக்கரண்டி, உப்பு  தேவையான அளவு, எண்ணெய்  பொரிக்கத் தேவையான அளவு.

நவராத்திரி நைவேத்தியங்கள்!

செய்முறை: ஜவ்வரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக் கிழங்கை வேகவைத்து, மசித்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வறுத்து, கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். ஊறிய ஜவ்வரிசியை, தண்ணீரில்லாமல் நன்கு வடித்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, பொடியாக அரிந்த பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு, அரிசி மாவு, உப்பு சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ளவும். இதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயை காயவைத்து, வடைகளாக தட்டி, இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். 

7.ராஜ்மா சுண்டல்

தேவையான பொருட்கள்: ராஜ்மா  அரை கப் (சிவப்பு நிற ராஜ்மாவை வாங்கவும். கறுப்பு ராஜ்மா வேக அதிகம் நேரம் எடுக்கும்), உப்பு  தேவையான அளவு.  அரைக்க: துருவிய தேங்காய்  கால் கப், பச்சை மிளகாய்  மூன்று, இஞ்சி  ஒரு இன்ச் துண்டு. தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

நவராத்திரி நைவேத்தியங்கள்!

செய்முறை: ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை மாற்றி, உப்பு சேர்த்து, குக்கரில் மூன்று விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்துக்கொள்ளவும். வேகவைத்த ராஜ்மாவை தண்ணீருடன் சேர்த்து, அதில் அரைத்த தேங்காய் கலவையையும் போட்டு, தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கிக்கொள்ளலாம்.

8.கருப்பு உளுந்து / கொள்ளு சுண்டல்

தேவையான பொருட்கள்: கறுப்பு உளுந்து  அரை கப் (கறுப்பு உளுந்து ஊறிய பின், இருமடங்காகும்). துருவிய தேங்காய்  மூன்று மேஜைக்கரண்டி, பெருங்காயம்  ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு  தேவையான அளவு. வறுத்து பொடி செய்ய: கடலை பருப்பு  ஒரு தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு  ஒரு தேக்கரண்டி, தனியா  ஒரு தேக்கரண்டி, சிவப்பு மிளகாய்  நான்கு. தாளிக்க: கடுகு, பொடியாக நறுக்கிய இஞ்சி  ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை. .

நவராத்திரி நைவேத்தியங்கள்!

செய்முறை: கறுப்பு உளுந்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரை மாற்றி, உப்பு, பெருங்காயம், போதுமான அளவு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரை வேக வைக்கவும். தண்ணீரை வடித்து, வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்தபின், வெந்த உளுந்தை சேர்க்கவும். இத்துடன் அரைத்த பொடியையும் சேர்த்து, இரண்டு  நிமிடங்கள் வதக்கிய பின், துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும். கறுப்பு உளுந்துக்கு பதில் கொள்ளைச் சேர்க்கலாம். கொள்ளு வேகவைத்த தண்ணீரை ரசத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

9.புளி அவல்

தேவையான பொருட்கள்:  கெட்டி அவல்  ஒரு கப், புளி   பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள்  கால் தேக்கரண்டி, உப்பு  தேவையான அளவு, நல்லெண்ணெய்  ஒரு தேக்கரண்டி. தாளிக்க: நல்லெண்ணெய்  ஒரு மேஜைக்கரண்டி, கடுகு  சிறிது,  உளுத்தம் பருப்பு  ஒரு தேக்கரண்டி, கடலை பருப்பு  ஒரு மேஜைக்கரண்டி, வேர்க்கடலை  இரண்டு மேஜைக்கரண்டி, சிவப்பு மிளகாய்  நான்கு, பெருங்காயம்  கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை  ஒரு கொத்து. 

நவராத்திரி நைவேத்தியங்கள்!

செய்முறை: சூடான நீரில், புளியை  ஊறவைத்து புளிக் கரைசல் எடுத்து வைத்துக் கொள்ளவும். அவலை நன்கு அலசி, அதில் புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கால் மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளிக்கவும். ஊறிய அவலை அதில் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி, நன்கு சமன்படுத்தி மூடி வைத்து, குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கலாம். இறக்கும்போது சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

 தொகுப்பு: இ.ராஜவிபீஷிகா