Published:Updated:

நாரதர் உலா

மாமாங்கத்துக்கு தயாராகிவிட்டதா கும்பகோணம்..?

''மழையில் நனைந்து வருகிறேன். சூடாக ஒரு டிகிரி காபி தயார் செய்து வையும்!'' என்று நாரதரிடம் இருந்து எஸ்.எம்.எஸ்! 

நாரதர் உலா

அடுத்த சில மணி நேரத்துக்கெல்லாம் நம் அறைக்குள் பிரவேசித்த நாரதரிடம், ''என்ன நாரதரே, என்றைக்கும் இல்லாத புதுப் பழக்கமாக இன்றைக்கு டிகிரி காபி கேட்கிறீரே, என்ன விசேஷம்?'' என்று கேட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''மகாமகம் நெருங்கிவிட்டதே... கும்பகோணம் பக்கம் போய் ஏற்பாடுகள் எல்லாம் எப்படி இருக்கின்றன என்று பார்த்து வரப் போனேன்'' என்றார்.

சரிதான், கும்பகோணத்தில் குடித்த டிகிரி காபியின் மணமும் சுவையும் இன்னும் மறக்கவில்லைபோலும் நாரதருக்கு என்று நினைத்துக்கொண்டோம்.

''தென்னிந்தியாவின் கும்பமேளா என்று பிரசித்தி பெற்றது ஆயிற்றே கும்பகோணம் மகாமகம்! ஆனால், அதற்கு இன்னும் நாள் இருக்கிறதே, சுவாமி! பிப்ரவரி 22ம் தேதிதானே கும்பமேளா?'  

''நன்றாகக் கேட்டீர் போங்கள்! பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கே நடைபெறும் மகாமகத் திருவிழாவை தரிசிக்க தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும், ஏன்ஞ் வெளிநாடுகளில் இருந்தும்கூட லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். திருவிழாவுக்கான ஏற்பாடுகள் இத்தனை நேரம் ஆரம்பித்து, பரபரப்பாக நடந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், அங்கே நான் பார்த்த வரையில் ஏற்பாடுகள் ரொம்ப மந்தம்தான்!''

நாரதர் உலா

''கும்பகோணத்தைச் சீரமைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியிருப்பதாகக் கேள்விப்பட்டோமே?''

''நிதி ஒதுக்கிவிட்டால் மட்டும் காரியம் நடந்துவிடுமா? லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் மகாமகத் திருவிழா நடைபெறப் போகும் புராதனமான நகரத்தில் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டாமா? மகாமக ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவ்வளவாக அனுபவம் இல்லாத புதியவர்கள் என்று சொல்கிறார்கள்.''

''மகாமகம் என்றாலே மகாமகக் குளம்தானே? அந்தக் குளத்தைப் போய்ப் பார்த்தீரா?'

''அதைத்தான் முதலில் பார்த்தேன். எந்த ஊரில் பாவம் செய்தவர்களாக இருந்தாலும், கும்பகோணம் மகாமக குளத்தில் ஸ்நானம் செய்தால் நீங்கிவிடும். இந்தக் குளத்தை வைத்துதான் இந்தப் பிரமாண்ட திருவிழாவே நடைபெறப் போகிறது. கும்பகோணத்தில் மகாமகக் குளம் தவிர, ஆயி குளம், பைராகி குளம், பச்சையப்பன் குளம், பொற்றாமரைக் குளம், விலங்குகார குளம், சே குளம், ரெட்டி குளம், வராகி குளம், செக்காங்கண்ணி குளம் என நாற்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் ஒரு காலத்தில் இருந்தன. இப்போது ஏழே  ஏழு குளங்கள்தான் இருக்கின்றன...'

'மற்ற குளங்கள் என்ன ஆயின சுவாமி?'

'தெரியாத மாதிரி கேளும்! உம்ம சகோதர பத்திரிகை ஜூனியர் விகடன் கழுகாரைக் கேட்டுப் பாரும்; கதை கதையாகச் சொல்வார்' என்ற நாரதர்,

'பல குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், இன்னும் பல குளங்கள் குப்பைகள் கொட்டப்படும் இடமாகப் பயன்படுத்தப்பட்டும், இருந்த தடயமே தெரியாமல் போய்விட்டன. இருக்கும் குளங்களின் கதியும் என்ன ஆகுமோ தெரியவில்லை. குளங்களுக்கு நீர் வரும் பாதையும், உபரி நீர் வெளியேறும் பாதையும் ஆக்கிரமிப்புகளால் நாசமாகிக் கிடக்கின்றன'' என்றார்.

''நீர் சொல்வதைப் பார்த்தால், குளங்களைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை போலிருக்கிறதே?''

நாரதர் உலா

''அதெல்லாம், சீரமைக்கும் பணிகள் தொடங்கியதாகப் பேர் பண்ணியாகிவிட்டது! ஆனால், அதற்கான ஒப்பந்தம் பெற்றவர்களை அரசு நிர்வாகம் கவனிப்பதாகத் தெரியவில்லை. மகாமகக் குளத்தின் புனிதத் தன்மை கெடாமல் பராமரிக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத் துறையினரிடம் இருக்கிறது. ஆனால், இன்றளவும் தெருவோரக் கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கி வந்து, அங்கங்கே உள்ள குளங்களின் படிகளில்தான் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். இதனால் குளங்கள் மாசுபடுகின்றன. மகாமகம் நடைபெறப்போகும் குளம்கூட இன்னும் தூர் வாரிச் சுத்தம் செய்யப்படாமல்தான் இருக்கிறது.''

''மகாமகக் குளத்துக்கே இந்த கதியா? அடப் பாவமே!''

''வருமானவரித் துறை அலுவலகத்துக்கு அருகில் உள்ள சே குளத்தின் பராமரிப்பும் சரியில்லை. அந்தக் குளத்தின் தடுப்புச் சுவர் கட்டிய சில தினங்களிலேயே இடிந்து விழுந்துவிட்டதாம். இரவோடு இரவாக அதை மீண்டும் கட்டி முடித்திருக்கிறார்கள். இதுபோன்ற அசிரத்தையான நடவடிக்கைகளால், ஆர்வமுள்ள உபயதாரர்கள்கூட மகாமகப் பணிகளுக்கு நிதியுதவி அளிக்க யோசிக்கிறார்களாம்.''

''குளங்களை வெட்டி, அந்த மண்ணைக் கொண்டுதான் கும்பகோணம் நகரத்தில் திரும்பிய திசைகளில் எல்லாம் கோயில்கள் கட்டியதாகச் சொல்வார்கள். அப்படிக் கோயில் கட்டப் பயன்பட்ட குளங்களுக்கே இந்தக் கதியா?'' என்றோம்.

நாரதர் உலா

''குளங்கள்தான் என்றில்லை; படித்துறைகளும் பாவப்பட்டவைதான்! மகாமகக் குளத்தில் நீராடுவதற்கு முன், காவிரியில் சங்கல்பம் செய்துகொண்டு ஸ்நானம் செய்யவேண்டும் என்பது மரபு. ஆனால், கும்பகோணம் நகரில் உள்ள இறைச்சிக் கடைக்காரர்கள், இறைச்சிக் கழிவுகளை ஆற்றங்கரையில் கொண்டு வந்து கொட்டிவிட்டுப் போகிறார்கள். காவிரியில் ஸ்நானம் செய்வதற்காக 3 கி.மீ. தூரத்துக்குள் முப்பதுக்கும் மேற்பட்ட படித்துறைகள் இருக்கின்றன. அவற்றில், குறிப்பாக பக்தர்கள் அதிகம் நீராடும் பகவத் படித்துறை, மேலக்காவிரி பகுதியில் அமைந்திருக்கும் தோப்பு படித்துறை, வடகரை படித்துறை ஆகிய படித்துறைகள் மிகவும் சிதிலம் அடைந்திருக்கின்றன. ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பே காவிரி படித்துறைகளைச் சீரமைக்குமாறு மக்கள் போராடிப் பார்த்தும், அரசு கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன், பகவத் படித்துறை மண்டபத்தில் இருந்த காரையினால் ஆன சிலை ஒன்று இடிந்து விழுந்து, ஒருவர் இறந்தேபோனார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!''

''கடவுளே..! உயிரிழப்பு ஏற்பட்டுமா அரசு அலட்சியமாக இருக்கிறது?''

''இன்னும் கேளும். கும்பகோணம் நகரத்தைச் சுற்றிலும் ஏழு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எப்போதோ தெரிவித்தாராம். ஆனால், அதற்கான ஆரம்பகட்டப் பணிகள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள் உள்ளூர் மக்கள். மகாமகத்துக்கு வருகை தரும் பக்தர்கள் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள எல்லா கோயில்களுக்கும் செல்ல விரும்புவார்கள். அப்படிக் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வரும் பக்தர்கள் போவதற்கும் வருவதற்குமான பாதைகள் பற்றியும் இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்களாம். இதை முன்கூட்டியே திட்டமிட்டுத் தெரிவித்தால்தான் பக்தர்களுக்கும், அவர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்பும் அமைப்பினருக்கும் வசதியாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.''

''பிரமாண்டமான அளவில் நடைபெற உள்ள இந்தத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளைத் திட்டமிட, மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் எதுவும் நடத்தவில்லையா?''

''ஆலோசனைக் கூட்டம் என்னவோ மாதம் தவறாமல் சம்பிரதாயமாக நடக்கத்தான் செய்கிறது. ஆனால், மகாமகத்துக்காகத் திட்டமிடப்பட்டு இருந்த பணிகளில் பெரும்பாலானவை கைவிடப்பட்டுவிட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள். உயர்மட்ட பாலங்கள், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றங்கரையில் பூங்கா, நான்கு வழிச்சாலை, உள்வட்டச் சாலை போன்ற பணிகளுக்கான எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவே இல்லையாம்!'

நாரதர் உலா

''அதுசரி, இவர்கள் நடவடிக்கை எடுப்பதற்குள்ளாக மகாமகத் திருவிழாவே முடிந்துவிடும்போல் இருக்கிறதே! நகரத்துக்குள் சாலை வசதிகளாவது நன்றாக இருக்கிறதா?''

''வெளியூர்களில் இருந்து நகரத்துக்குள் வரும் சாலைகள் எதுவும் அகலப்படுத்தப்படவே இல்லை. பேருந்து நிலையத்தில் இருந்து வரும் மிக முக்கியச் சாலையான 60 அடி சாலையின் நடுவில் அதிக அளவில் மின்கம்பங்களை அமைத்து, அதை மிகக் குறுகிய சாலையாக மாற்றிவிட்டார்கள். அந்தச் சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருக்கின்றன. ஆத்திர அவசரத்துக்கு ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத நிலை. இந்தச் சாலையின் வழியாகத்தான் மகாமகத்துக்கு உட்பட்ட கோயில்களில் இருந்து ஸ்வாமிகள் தீர்த்தவாரிக்குச் செல்லவேண்டும். ஹூம்ஞ் எப்படித்தான் சமாளிக்கப் போகிறார்களோ?'' என்ற நாரதர்,

''பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகத்துக்கான ஏற்பாடுகள் சம்பந்தமாக அங்கே நான் கண்ட மகா மகா குறைகளையெல்லாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றால், இன்னும் பன்னிரண்டு இதழ்களுக்கு நீர் தொடராகவே போடலாம். என்ன, தயாரா?' என்று கண்சிமிட்டினார்.

நாம் 'ஐயோஞ்' என்று பதறவும், 'பயப்படாதீர்! அடுத்த இதழில் சுருக்கமாகச் சொல்லி முடித்துவிடுகிறேன்' என்றவர், அடுத்த விநாடி அந்தர்தியானமானார்.

படங்கள்: க.சதீஷ்குமார்