Published:Updated:

ஆலயம் தேடுவோம்

அன்னையுமான அமிர்தநாராயணர்!எஸ்.கண்ணன்கோபாலன்

பிரசித்தி பெற்ற திருக்கடவூர் அமிர்தகடேசர் ஆலயம் அனைவருக்கும் தெரியும். அதற்கு அருகிலேயே அமைந்திருக்கின்றது அமிர்தநாராயண பெருமாள் அன்னையுமாகி அருள்புரியும் திருத்தலம். இங்கு அருள்புரியும் அமிர்தநாராயண பெருமாள் யாருக்காக அன்னையுமானார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அமரத்துவத்துடன் இருக்க விரும்பிய இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் உரிய வழியைக் காட்டி அருளும்படி பகவான் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள். அவருடைய ஆலோசனையின்படி பாற்கடல் கடைந்ததும் முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது, அதை சிவபெருமான் ஏற்றுக்கொண்டது, பின்னர் அமிர்தம் வெளிவந்தது இவையெல்லாம்  நமக்குத் தெரியும். ஆனால், அப்படித் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற அமிர்தம் தேவர்களால் உடனே அருந்தப்பட்டதா என்றால், அதுதான் இல்லை. அந்த அமிர்த கலசம் எங்கோ சென்று மறைந்து விட்டது.

பாடுபட்டுப் பெற்ற அமிர்த கலசம் மறைந்து விட்டதால், தேவர்கள் கலங்கி நின்றனர். அப்போது அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது: ''அமிர்தத்தை அருந்துவதற்கு முன்பாக, விநாயகரை வழிபட மறந்ததால் விநாயகர்தான் அமிர்த கலசத்தை மறைத்து வைத்து விட்டார். எனவே, நீங்கள் முதலில் விநாயகரை வழிபட்டு அமிர்த கலசத்தைத் திரும்பப் பெறுங்கள். அதன் பின்னர், சிவபூஜை செய்து அமிர்தத்தை அருந்துங்கள்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆலயம் தேடுவோம்

தேவர்களும் அப்படியே விநாயகரை பூஜித்து அமிர்த கலசத்தைப் பெற்றனர். அப்படி அமிர்த கலசத்தை மறைத்து வைத்திருந்த பிள்ளையார் கள்ளவாரண பிள்ளையார் என்ற பெயருடன் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அருள்புரிகின்றார். பின்னர் சிவபூஜை செய்யவேண்டுமே! ஆனால், அம்பிகை இல்லாமல் எப்படி சிவபூஜை செய்வது என்று நினைத்த தேவர்கள், மகாவிஷ்ணுவை பிரார்த்தித்தனர். மகாவிஷ்ணு தம்முடைய ஆபரணங்களைக் கழற்றி வைத்து அம்பிகையை தியானித்தார். அவருடைய ஆபரணங்களில் இருந்து பேரெழிலுடன் அம்பிகை சுயம்புவாகத் தோன்றினாள். அபிராமி என்னும் திருப்பெயரும் கொண்டாள். தேவர்கள், அன்னை அபிராமியுடன் அமிர்தகடேஸ்வரரை பூஜித்து அமிர்தம் அருந்தினர்.

மகாவிஷ்ணுவின் ஆபரணங் களில் இருந்து தோன்றியதால் அபிராமிக்கு திருமால் அன்னையுமானார். பின்னர், தேவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி மகாவிஷ்ணு அமிர்தவல்லித் தாயாருடன் அமிர்தநாராயணர் என்னும் திருப்பெயர் கொண்டு இத்தலத்தில் கோயில் கொண்டார். பெருமாள் அன்னையுமான பெருமை மட்டுமல்லாமல், இன்னும் இன்னும் எத்தனையோ சிறப்புக்களைப் பெற்றிருக்கும் ஆலயம் அது. அந்தச் சிறப்பு களைப் பின்னர் பார்ப்போம். அதற்குமுன் அந்த ஆலயத்தை தரிசித்து விடலாமா?

எங்கே தரிசிப்பது? ஆலயம் இருந்ததற்கான தடயங்கள் தான் இருக்கிறது. தவிர, ஆலயம் என்று சொல்ல முடியாதபடி மிகவும் சிதிலம் அடைந்திருக்கிறது ஆலயம். பார்க்கப் பார்க்க மனம் பதறிக் கலங்குகிறது. ஆலயத்தின் இந்த அவல நிலைக்கு யார் காரணம்? மனிதர்களின் அலட்சியமல்லாமல் வேறு எது காரணமாக இருக்கமுடியும்? மனிதர்களின் அலட்சியம்தான் காரணமே தவிர, இறைவனின் திருவுள்ளம் காரணமல்ல.

சிதிலம் அடைந்திருக்கும் ஆலயத்துக்குள் செல்கி றோம். கருவறை என்று சொல்லமுடியாதபடி இருக்கும் சந்நிதியில் தேவி பூமிதேவி சமேதராக பெருமாள் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். அமிர்தவல்லித் தாயாரின் சந்நிதி சிதிலமடைந்த நிலையில், தாயாரும் பெருமாளின் சந்நிதியிலேயே காட்சி தருகின்றார்.

ஆலயம் தேடுவோம்

ஒருகாலத்தில், பிராகாரம் இருந்தது என்று சொல்லும் படியான இடத்தில் பெரிய திருவடியான கருடாழ்வார் வெட்டவெளியிலேயே பல ஆண்டுகளாகக் காட்சி தந்துகொண்டு இருந்தார். தற்போது பாலாலயம் செய்யப்பட்டு இருப்பதால், கருடாழ்வாரை உள்ளே எடுத்து வைத்திருக்கிறார்கள். சிறிய திருவடியான ஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தராக பெருமாளை சேவித்தபடி காட்சி தருகிறார்.

ஊர்ப் பெரியவரிடம் பேசியபோது இந்தக் கோயிலின் சிறப்புகளாகப் பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

''தேவர்களாக வேஷம் போட்டு அமிர்தம் பெற்றதால் சபிக்கப்பட்ட ராகு, கேது ஆகியோரின் சாபம் நீங்கியது இந்தத் தலத்தில்தான். அதன் காரணமாக இந்தக் கோயிலில் ராகு, கேது பிரதிஷ்டை செய்யப் பெற்று இருக்கின்றனர். சிரஞ்சீவித்துவம் பெற்ற மார்க்கண்டேயர் இந்தக் கோயிலில்தான் இருந்த இடத்தில் இருந்தபடியே 108 திவ்யதேச பெருமாள்களையும் தரிசித்தார். இந்தத் தலத்தில் தான் குபேரன் அகத்தியரிடம் பெற்ற சாபத்துக்கு விமோசனம் கிடைத்தது. இங்கு உள்ள அமிர்தநாராயண பெருமாளை ராமாநுஜர் வந்து வழிபட்டிருக்கிறார்'' என்றார்.

கோயில் அர்ச்சகரிடம் பேசினோம். ''உத்திரம், மூலம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும், ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளிலும், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் இவரை வழிபடுவது மிகவும் சிறப்பு'' என்றார்.

பெருமாளுக்குத் தொடர்ந்து 48 தினங்கள் அர்ச்சனை செய்து வழிபட, திருமணத் தடைகள் விலகி திருமணம் நடைபெறுவதாகவும், தொழிலில் இருந்து வரும் பிற்போக்கான நிலை மாறி வியாபாரம் அபிவிருத்தி அடைவதாகவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

ஆலயம் தேடுவோம்

பிரசித்தி பெற்ற திருக்கடவூர் தலத்தில் ஒருகாலத்தில் மிகுந்த சாந்நித்தியத்துடன் வரப்பிரசாதியாகத் திகழ்ந்த அமிர்தநாராயண பெருமாள் திருக்கோயில், அதன் பொலிவை முழுமையாக இழந்து காணப்படும் இன்றைய நிலையைக் கண்டு வருந்தியபடி வெளியில் வந்தபோது, ஓர் அறிவிப்புப் பலகையைக் கண்டோம். அதில் தமிழக அரசின் சார்பில் ஒரு கால பூஜைக்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் இருந்த உதவி ஆணையரின் அலுவலகத் தொலைபேசியில் உதவி ஆணையரைத் தொடர்பு கொண்டோம். அங்கிருந்தவர், உதவி ஆணையர் அலுவலகத்தில் இல்லை என்றும், வந்தவுடன் பேசச் சொல்வதாகவும் தெரிவித்தார். சற்றைக்கெல்லாம் உதவி ஆணையரே நம்மைத் தொடர்பு கொண்டார். அவரிடம் ஆலயம் முழுவதும் சிதிலம் அடைந்திருப்பது பற்றி வருத்தத்துடன் கேட்ட நாம், ஆலயத் திருப்பணிகள் தொடங்குவது பற்றி கேட்டோம்.

''இப்போதுதான் சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி கிடைத்து திருப்பணிகளைத் தொடங்கி உள்ளோம். முதல் கட்டமாக பாலாலயம் செய்திருக்கிறோம். விரைவிலேயே உபயதாரர்கள் உதவியுடன் திருப்பணிகள் தொடங்கப்பட்டுவிடும்'' என்று தெரிவித்தார்.

ஆலயம் தேடுவோம்

அம்பிகை அபிராமிக்கு அன்னையாகி, தேவர்களுக் கெல்லாம் அமிர்தம் வழங்கிய அமிர்தநாராயண பெருமாள் ஆலயம் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே சிதிலம் அடைந்து இருப்பது? விரைவிலேயே புதுப் பொலிவுடனும் பரிபூரண சாந்நித்தியத்துடனும் திகழவேண்டாமா? மணியாய், மணியின் ஒளியாய், அணியாய், அணிக்கு அழகாய், நல்லன எல்லாம் அருளும் அம்பிகை அபிராமிக்கு அன்னையான அமிர்த நாராயண பெருமாள் திருக்கோயில் மீண்டும் புதுப் பொலிவு பெற நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாமே! அதனால், அமிர்தநாராயண பெருமாள், அமிர்தவல்லித் தாயார் ஆகியோரின் அருள் மட்டுமல்லாது, அவர்தம் மகளாக அவதரித்த அன்னை அபிராமியின் திருவருளையும் சேர்த்துப் பெற்று சிறப்புடன் வாழலாம் என்பதில் சந்தேகம் என்ன?

படங்கள்: ச.சந்திரமௌலி

எங்கே இருக்கிறது?  எபடிச் செல்வது?

பிரசித்தி பெற்ற திருக்கடவூர் திருத்தலத்தில் அருள்மிகு அபிராமி சமேத அமிர்கடேஸ்வரர் திருக் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. பல பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

'உத்திரம், மூலம்,

திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும், ஏகாதசி, அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளிலும், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களிலும் இவரை வழிபடுவது மிகவும் சிறப்பு!’