Published:Updated:

‘பத்மபாதம் பணிவோம்!’

ஜய ஜய தேவி!ஸ்ரீப்ரத்யங்கிரா ஸ்வாமிகள்

ர்வ புவனங்களையும் படைத்துக் காப்பவள் அம்பிகை. அதனால்தான் அவளை 'ஆப் ப்ரம்மகீட ஜனனி’ எனப் போற்றுகிறது ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம். உயிரும் உருவும் தந்து ஜனனம் அளிக்கும் அம்பிகையே இந்த ஜகத்தை ஆளும் ஜகன்மாதா. எனவேதான் தாயுமானவ ஸ்வாமிகள்... 

பதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள்

மித்திரர்கள் பக்கமுண்டு எக்காலமும்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்தமாக

யமபடர் எனும் திமிரம் அணுகாக்

கதியுண்டு ஞான மாங்கதிருண்டு காய சித்தியும் உண்டு

கறையுண்ட மதியான மதிவதன அல்லியே

மதுசூதனன் தங்கையே வரைராஜனுக்கு

இரு கண்மணியாய் உதித்த மலைவளர்

காதலிப் பெண் உமையே  

 - என்று போற்றிப் பரவுகிறார்.

அம்பிகையே பிரம்ம ரூபத்தில் சிருஷ்டியைச் செய்கிறாள்; விஷ்ணு ரூபத்தில் பிரஜைகளைக் காப்பாற்றுகிறாள்; ருத்ர ரூபத்தில் உலக உயிர்களின் பாவங்களை சம்ஹாரம் செய்கிறாள். சிவபெருமானுக்கு ஆத்ம சக்தியாகவும், நாராயணமூர்த்திக்கு மகாலட்சுமியாகவும், பிரம்மனுக்கு வித்யா சக்தியாகவும் விளங்குகிறாள். இந்த முப்பெருந்தேவியருக்கும் மேலான ஓர் அம்பிகையாக அருள்பாலிப்பதும் அவளே!

துரீயாம்பிகை, பராசக்தி என ஞானநூல்கள் யாவும் போற்றும் அந்த நாயகியை, வேதம் அறிந்தவர்கள் க்ராம் தேவீ (சரஸ்வதி) என்றும், ஸ்ரீமஹாவிஷ்ணு 'ஹரே பத்னிம்’ (மகாலட்சுமி) என்றும், பகவான் சங்கரர் 'அத்ரி தனயாம்’ (பார்வதி) என்றும் அழைக்கிறார்கள்.

 ‘பத்மபாதம் பணிவோம்!’

அம்பிகை என்ற மந்திர வார்த்தைக்கு பஞ்சபூதங்களும் அடிபணியுமாம்! அவளுக்கு மிகப் பிடித்தமான விஷயம் என்ன தெரியுமா? தனது அடியார்களை உடனுக்குடன் காப்பாற்றுவதுதான்!

இந்தத் தகவலை விவரித்திருப்பது யார்? சாட்சாத் ஜகன்மாதாவே கூறியிருக்கிறாள். ஸ்ரீதேவி மஹாத்மியத்தில் தேவி அருளிய அமுத வார்த்தைகளே பக்தனுக்கு அபயம் அளிப்பதாகத் திகழ்கின்றன.

''பெரிய காட்டின் நடுவிலோ, காட்டுத் தீயின் இடையிலோ, தனிமையான இடத்தில் சிக்கிக்கொண்டபோதோ, திருடர்களால் சூழப்பட்டபோதோ, கோபம் கொண்ட அரசனால் அநியாயமாக சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்டபோதோ, மிகவும் கொடிய ஆழ்கடலில் புயலினால் தள்ளப்பட்டபோதோ, பெரிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டபோதோ, பலவிதமான துன்பங்களில் சிக்கித் தவிக்கும்போதோ, எவரும் வந்து காப்பாற்றமுடியாத இடத்தில் மாட்டிக் கொண்டபோதோ, 'தாயே, கருணாதேவியே! சரணம் அடைந்தவர்களைக் கைவிடாமல் காப்பாற்றுபவளே, என்னைக் காப்பாற்று’ என்று என்னைச் சரணம் அடைந்தால், நான்

அவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. இது சத்தியம்!' என்கிறாள் அம்பிகை.

பிரம்மாவிடம் படைக்கும் சக்தியாக, விஷ்ணுவிடம் காக்கும் சக்தியாக, ருத்ரனிடம் சம்ஹரிக்கும் சக்தியாக, சூரியனிடத்தில் ஒளி சக்தியாக, சந்திரனிடத்தில் மருத்துவ சக்தியாக, அக்னியிடத்தில் வெப்ப சக்தியாக, தண்ணீரில் குளுமை சக்தியாக, பரமசிவனிடம் குண்டலினி சக்தியாகத் திகழ்பவள் அம்பிகையே!

ஸ்ரீவியாசமுனிவர் ஒருமுறை ஸ்ரீநாரத மகரிஷியைச் சரணடைந்து, பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றியும், மும்மூர்த்தியரைப் பற்றியும், அவர்களில் யாரை பூஜிக்க வேண்டும் என்பது பற்றியும் மூன்று கேள்விகள் கேட்டார். அதற்கு நாரதர், ''இதில் சந்தேகம் என்ன? அம்பிகையான பராசக்தியே முதலில் பூஜிக்கப் பெறவேண்டும். அவளில் இருந்தே மும்மூர்த்தியரும் தோன்றினர். அவளே இந்தப் பிரபஞ்சத்தையும் தோற்றுவித்தாள். அம்பிகையின் சக்தியால்தான் மும்மூர்த்தியரும் செயல்புரிகின்றனர்; பிரபஞ்சமும் இயங்குகிறது. எனவே அம்பிகையைத்தான் முதலில் பூஜிக்க வேண்டும்'' என்றார். இந்தத் தகவலை தமது அத்யந்த சீடரான சூதமா முனிவருக்குக் கூறி, அவருக்கு ஆதிசக்தியின் பெருமையை உபதேசித்தாராம் வியாசர்.

சரி, அவளின் கருணைக் கடாட்சத்தைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கலியுகத்தில் பிறந்திருக்கும் நாம் மிகவும் புண்ணியம் செய்தவர்கள். காரணம், நாம் அம்பிகையின் திருநாமங்களை ஜபம் செய்தாலே போதும்; அவளுடைய பரி பூரணமான அருட்கடாட்சத்தைப் பெற்றுவிடலாம்.

நாயகி, நான்முகி, நாராயணி, கைநளின பஞ்ச

சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதிநச்சு

வாய் அகிமாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று

ஆய கியாதியுடையாள் சரணம்  அரண் நமக்கே!!

என்று அபிராமிபட்டர் அருளிய பாடலை தியானித்தால் போதும்; சகல நன்மைகளும் கைகூடும்.

அம்பிகைக்கு எட்டு ஆத்ம குணங்கள் உண்டு. அவை:

தயை: சகல ஜீவன்களிடமும் இரக்கம்.

சாந்தி: தீமை செய்பவர்களிடமும் இரக்கம் கொண்டு அவர்களை மன்னித்தல்.

அநஸூயை: பொறாமை இல்லாமை.

சௌசம்: உடல், மனம், வாக்கு ஆகிய மூன்றிலும் தூய்மையாக இருப்பது.

அநாயாசம்: மற்ற உயிரினங்களுக்கு எந்த வகையிலும் சிரமம் கொடுக்காமல் இருப்பது.

மங்களரூபிணி: சமய ஆசாரங்களைக் கடைப்பிடித்து, தூய்மையுடன் இருப்பது.

அகார்ப்பண்யம்: எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தைரியமாக இருப்பது; முடிந்தவரை சத்காரியங்களைச் செய்துகொண்டிருப்பது.

அஸ்ப்ருஹா: பிறர் பொருளில் ஆசையின்மை.

இந்த எட்டு குணங்களுடன் நாம் வாழும்போதுதான் நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும். இந்த எட்டு குணங்களையும் பெற்று நாம் சிறப்புற வாழவேண்டுமானால் அதற்கு அஷ்ட ஆத்ம குணங்களின் இருப்பிடமான அம்பிகையைச் சரணடைவதைத் தவிர, வேறு வழி இல்லை. தன்னை ஆத்மார்த்தமாக வழிபடும் பக்தனுக்கு, இந்த குணங்களை தந்து, அவனை உயர்நிலைக்கு இட்டுச் சென்று சந்தோஷம் அளிப்பதே அம்பிகையின் அருள்திறம்.

தேவியின் திருவருளைப் பெற உகந்த மற்றொரு மார்க்கம், வீட்டுப்பெண்களை ஆதிசக்தியாகவே கருதி போற்றுவது.

 ‘பத்மபாதம் பணிவோம்!’

பராசக்தியாகிய அம்பிகையே பெண்கள் வடிவில் ஒவ்வொரு இல்லத்திலும் ஆட்சி செய்கிறாள். பெண்கள் அனைவரும் சக்தியின் வடிவங்கள் என்பதை, 'தவ தேவீ பேதா: ஸ்த்ரிய: ஸமஸ்தா: ஸகல ஜகத்’ என்ற வேதமந்திரம் உறுதிப்படுத்துகிறது. ஆகவே, குலமங்கையரைப் போற்றுவதால், பராசக்தியின் திருவருளைக் குறையின்றிப் பெறலாம்.

பராசக்தியிடம் அத்தனை சக்தி இருந்தாலும், தமது சக்தியை அடக்கி ஒடுக்கிக்கொண்டு, 'ஸதி’ என்ற பெயருடன் மஹா பதிவிரதையாக ஸ்ரீபரமேஸ்வரனின் சாந்தத்தில் தமது மன நிறை வைப் பெறுகிறாள். அதனால்தான் அம்பிகைக்கு சிவசக்தி ரூபிணி என்ற பெயரும் வந்தது.இதுபோன்று, குலபத்தினிகளும் தமது கணவன் மூலமாகவே அனைத்துக் காரியங்களையும் செய்து வந்தால், குடும்பத்தில் நலம் பெருகும்.

சத்குணம் பெற்றவன் எதைக் கண்டாலும் அது அம்பிகையின் வடிவம் என்பான். அந்த நிலைக்குப் பிரமானந்தம் என்று பெயர்.பெற்ற தாயைப் போற்றும் அன்பர்கள், தங்களது மனைவியையும் போற்ற வேண்டும் இதனால் சாந்த குணமும் அநுசரணை பண்ணும் குணமும் உண்டாகும். மனச் சாந்தி உண்டாகும்.  

யாதேவி ஸர்வ பூதேஷு

சாந்தி ரூபேண ஸம்ஸ்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை

நமஸ்தஸ்யை நமோ நமஹ

என்று ஸ்ரீதேவி மஹாத்மியத்தில் அருளப் பெற்றுள்ளது. நாமும் தாயைப் போற்றுவோம்; பெண்மையைப் போற்றுவோம்; அதன் மூலம் பராசக்தியை மகிழ்விப்போம். அவளின் பத்மபாதம் பணிந்து பெரும்பேறு பெறுவோம்.

பராசக்தியே பெண்கள் வடிவில் ஒவ்வொரு இல்லத்திலும் ஆட்சி செய்கிறாள். எனவே, குலமங்கையரைப் போற்றுவதால், பராசக்தியின் திருவருளைக் குறையின்றிப் பெறலாம்!