Published:Updated:

கேள்வி - பதில்

மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதா இயற்கை?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதா இயற்கை?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

? சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் இயற்கை எவ்வாறெல்லாம் சூறையாடப்படுகிறது, அதனால் ஏற்படப்போகும் விளைவுகள் என்னென்ன என்பது குறித்த படத்தொகுப்பைக் கண்டு அதிர்ந்துபோனேன்!

பல அன்பர்கள் இயற்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவிக்க, 'எதிர்காலத் தேவைகளின் பொருட்டு சில விஷயங்கள் அவசியமாகிவிடுகின்றன’ என்பது போன்ற கருத்துகளும் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவை, இயற்கை மனிதனுக்கு மட்டும்தான் சொந்தமானது என்று உரிமை கொண்டாடுவது போல் இருந்தன. இது சரிதானா?

கே.ஆனந்தலக்ஷ்மி, காரைக்குடி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலைகள், காடுகள், நதிகள், செடிகொடிகள், மரங்கள் அத்தனையும் இயற்கையின் படைப்பு. மனிதர்கள் முதலாக அத்தனை உயிரினங்களும் மகிழ்ச்சியாக வாழ இயற்கையின் படைப்பு ஒத்துழைக்கிறது. இயற்கையின் படைப்பை அழிக்காமல் வளர்த்து, உயிரினங்களின் தொடர் வாழ்க்கைக்கு பயன்படும்படி செய்யும் பொறுப்பு ஆறறிவு படைத்தவர்களுக்கு உண்டு. ஆனால், ஆறறிவின் சுயநலமானது இயற்கை தந்த பொதுச் சொத்துக்களை தனது முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறது.

? இப்படி பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுவது சரியா?

ஆதாரங்கள் பல உண்டு! மலைகள் குடையப்படுகின்றன, காடுகள் அழிக்கப்படுகின்றன, நதிகள் தடுக்கப்படுகின்றன, மரங்கள் வெட்டப்படுகின்றன, விலங்குகளோ உணவாக்கப்படுகின்றன. ஆறறிவு உயிரினம் தாவர உணவால் வாழ இயலும். ஆனாலும், அவர்களிடம் இருந்து விலங்கினங்கள் தப்புவதில்லை. விலங்கினத்துக்குப் பாதுகாப்பான காட்டை அழித்ததால், அவற்றுக்கு வாழ இடமில்லாமல் போய்விட்டது.  

அதுமட்டுமா? விலங்குகளை கூட்டில் அடைத்துவைத்து, குழந்தைகளின் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்துகின்றனர். தாங்கள் இளைப்பாற வசதியாக காட்டை அழித்து குடியேறி வாழ்கிறது மனித இனம். நதியின் நீரில் வாழும் உயிரினங்களுக்கும், அந்த நீர் பாயும் இடங்களில் வாழும் விலங்கினங்களுக்கும், பறவை இனங்களுக்கும் இடையூறை விளைவித்து, அவற்றின் ஒழுங்கை கட்டுப்படுத்தி, தனது வாழ்க்கைக்குப் பயன்படும்படி திருப்பிவிட்டிருக்கிறது ஆறாவது அறிவு. தனது பயன்பாட்டுக்காகவே இயற்கை வளங்கள் இருக்கின்றன என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருக்கிறது ஆறாவது அறிவுக்கு. மற்ற உயிரினங்களைப் போல் தானும் இயற்கையின் ஓர் உறுப்பு என்பது ஆறாவது அறிவுக்கு எட்டவில்லை.

கேள்வி - பதில்

யானையின் தந்தம், பாம்பு, மான், புலி ஆகியவற்றின் தோல், தவளையின் கால், புலி நகம், பசு, ஆடு, கோழி போன்ற பிராணிகள் வியாபாரப் பொருள்களாகிவிட்டன. அவை, ஆறாவது அறிவின் பசியாற்றும் பொருள்களாகவே திகழ்கின்றன. உழைத்து வாழ வேண்டிய இனம் அழித்து வாழக் கற்றுக் கொண்டிருக்கிறது. இயற்கையைச் சீரழிக்கும் உரிமையை யாரிடமிருந்து பெற்றது எனத் தெரியவில்லை?!

? அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயல்களைச் 'சீரழிவு’ என்று எப்படிச் சொல்ல முடியும்?

நதியின் ஓட்டத்தைத் தடுத்து பயிர் வளத்தைப் பெருக்கினாலும், பற்றாக்குறையைச் சந்தித்து வாட்டமுற்றுத் தவிக்கிறது. நிலத்தடி நீர் குறைந்து தனக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை உணராமல், தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபட்டு பொருளாதாரச் செழிப்பாக்க நினைக்கிறது. ஏரிகள் குடியிருப்புப் பகுதிகளாக மாறி வருவதும் நிலத்தடி நீர் குறையக் காரணமாகிறது. உணவுக்காகவே ஆடு, கோழி வளர்த்தல் பெரிய வியாபாரமாகிவிட்டது. இதையெல்லாம் சீரழிவு என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது?

பசியாற முனைந்து செயல்பட்டும் பசியும் பட்டினியும் தென்படவே செய்கின்றன. இயற்கை வளங்களை உறிஞ்சியும் மனிதனால் வெற்றி பெற இயலவில்லை. அதன் குறைபாட்டால் தனது வாழ்க்கையும் பாதிப்புக்கு உள்ளாவதை அவன் இன்னும் உணரவில்லை. 'ஐம்பெரும் பூதங்களும் இயற்கையின் சொத்து. மற்றவர்களுக்கு உரிமை இல்லை’ என்கிறது வேதம். பூத உடலும் இயற்கையின் சொத்து, ஆகையால் அதை புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும். அதாவது நில பூதத்தில் இணைக்க வேண்டும் அல்லது நெருப்பு பூதத்தில் மறையச் செய்ய வேண்டும்.  ஆனால் அதையும் விட்டுவைக்கவில்லை இந்த ஆறறிவு. பூத உடலையும் வியாபாரப் பொருளாகப் பயன்படுத்துகிறது. போகும் உயிரைப் பிடித்துவைக்க மனித சிந்தனைக்குத் தகுதியில்லை. பெரும் பிணிகள் சவால் விடும்போது, அதைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில், மக்கள் எதையும் ஆராயாமல் நம்பிவிடுகிறார்கள். நோய்வாய்ப்பட்டவன் சுமக்க முடியாத பொருளாதாரச் சுமையை

ஏற்க வேண்டியிருக்கிறது. இப்படி, எங்கும் வியாபாரம் எதிலும் வியாபாரம்!

இறையுருவங்களும் வியாபாரத்தில் இணைக்கப்பட்டுவிட்டன. ஆன்மிகத் தலைவர்களில் சிலரும், 'ஊரோடு ஒத்து வாழ வேண்டும்’ என்ற நீதியைக் கூறிக் கொண்டு, அந்தத் திரையின் மறைவில் வியாபார களத்துக்கு வந்துவிட்டார்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில், 'வீடு’ என்பதற்குப் பதிலாக 'வியாபாரம்’ என்ற மாற்றம் வந்துவிட்டது. துறவிகள் பலரும் தங்களின் சொற்பொழிவுகளின் மூலம் பொருளாதார நிறைவை எட்டுகிறார்கள்!

? இயற்கையை அழிப்பதாக நீங்கள் சொல்லும் மனித இனம்தான், சுற்றுச் சூழல் பாதுகாப்பையும் முன்னெடுத்துச் செல்கிறது. விலங்கினங்களைப் போற்றவும் பராமரிக்கவும் பல்வேறு அமைப்புகளையும் தந்துள்ளது. அப்படியிருக்க, உங்கள் கருத்தை எப்படி ஏற்பது?!

உங்களைப் போலவே உலகளாவிய மனித இனம், தாம் ஏற்படுத்தும் அழிவை நியாயப் படுத்தவும் கற்றுக்கொண்டுள்ளது. அதேநேரம், உணவுக்குப் பயன்படாத விலங்கினங்களை அழிவில் இருந்து காப்பாற்றும் ருத்ராட்சப் பூனையாகவும் செயல்படுகிறது. கூட்டில் அடைத்து சுதந்திரத்தைப் பறிப்பதை ஜீவகாருண்யமாக வெளிப்படுத்துகிறது! எனவே, கூர்ந்து சிந்திக்க வேண்டும்.

இன்றைக்கு நாம் சந்திக்கும் அத்தனை இடர்ப்பாடுகளுக்கும் காரணம் நமது சிந்தனைதான். அறத்துக்குப் புறம்பானவற்றை அறமாகச் சித்திரித்து, மக்களை ஏற்கவைத்து, யாரேனும் ஒருவனை நாட்டை வழிநடத்தும் ஒப்பற்ற தலைவனாக காட்டிக் கொள்கிறோம். அந்தத் தலைவனும் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறான். இப்படியொரு கபட நாடகம் முடிவுக்கு வர வேண்டும். அறம், அத்தனை பேரையும் வாழவைக்கும். அதைச் சீண்டினால் சமுதாயம் சீரழியும். மண், பொன் மற்றும் பெண் மீதான ஆசைகள் என்ன பாடுபடுத்தின என்பதை  ராமாயணமும் பாரதமும் அறிவுறுத்தியும் நாம் விழித்துக் கொள்ளவில்லை. அறத்துக்குப் புறம்பான செயல்பாடு, சமுதாயச் சீரழிவை எட்டவைக்கும் என்று சரகர் கூறுவார் (தஸ்யமூலமதர்ம:). வயது வந்த மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு, மனைவியோடு காட்டில் குடியேறுவான் அரசன். அங்கு விலங்கினங்களோடு கூடி வாழ்வான். அதேபோல், எல்லாம் துறந்து துறவியானவனும் குடிலில் செடிகொடிகளோடு இணைந்து வாழ்வான். இரண்டிலும் அவன் வாழ்க்கை மேன்மை பெறும். விலங்கினங்கள் அவனோடு சேர்ந்து வாழும்; அழிக்க மாட்டான். செடிகொடிகள் அவனுக்கு நிம்மதியளிக்கும்; வெட்ட மாட்டான். பிறப்பை நிறைவு செய்வான்.

ஆனால், புதுவாழ்க்கையை வரவேற்கும் புதிய தலைமுறையினர் எது அமைதி அளிக்கும் என்பதை அறியாமல், இயற்கை வளத்தை அழிப்பதை தனது உரிமையாக்கிக்கொண்டிருக்கிறது. தவம் செய்து பெற்ற மனிதப் பிறவியை சுவைத்து மகிழ நேரமில்லாமல், தாறுமாறான சிந்தனையில் தன்னையும் வருத்திக்கொண்டு

சமுதாயத்தின் சாயலையும் மாற்றி வருகிறது. பழைமை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதுதான் நமது முன்னேற்றத்துக்கு உதவும் நம்பிக்கையான கருவி. சமுதாயம் புதுமையைச் சந்திக்கலாம்; ஆனால் நமது உடலும் உள்ளமும் புதுமை பெறாது; அது என்றைக்கும் பழைமையானதுதான்!

இரண்டாவது கோணம்...

இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டும். நாம் வாழப்பிறந்தவர்கள். இயற்கை வளங்களை பயன்படுத்த நமக்கு உரிமை உண்டு. பெரிய மீன் சின்ன மீனை விழுங்கும். மானை சிங்கம் விழுங்கும். இப்படி, காட்டில் வாழும் விலங்கினம் ஒன்றை மற்றொன்று உணவாக ஏற்பது நியதி. அதுவும் அறம்தான். தவளையை பாம்பும், கரப்பானை பல்லியும் விழுங்கும். இப்படியே நாட்டிலும் ஓர் இனம் மற்றொரு இனத்தை உண்டு வாழ்வது உண்டு. இது, இயற்கை தந்த அறம். மனிதன் தாவரத்தை மட்டுமே உண்ண வேண்டும் என்று கட்டாயம் இல்லை; விலங்கினத்தையும் உண்ணலாம். விலங்கினங்கள் ஒன்றுக்கொன்று உணவாகச் செயல்பட்டு அழிவது உண்டு. எனவே, மனிதன் உண்பதால் மட்டுமே அவற்றுக்கு அழிவு நேரிடுகிறது என்பது தவறு.

? எது அறம் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். தேவையே இல்லாமல் இயற்கையைச் சூறையாடுவது தவறு இல்லையா?!

எதை தவறு என்கிறீர்கள்?! இனப்பெருக்கம் அளவு கடந்து போகும் நிலையில், காட்டை அழித்துக் குடியேற்றங்களை உருவாக்குவது தவறா? எனில், வேறு வழியென்ன?

அளவுக்கு அதிகமான மக்கள் பெருக்கத்துக்கு ஏற்ப, போதியளவு தாவர உணவு இல்லாத நிலையில் விலங்கினத்தை உண்டு வாழ்வது அறமாகும். எல்லோரும் தாவர உணவை ஏற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், ஏற்கெனவே தாவரபட்சிகளாக இருப்பவர்களுக்கு உணவு கிடைக்காமல் அவர்கள் மடிந்துபோக நேரிடும். ஆக, தாவர உணவை ஏற்பவர்களைக் காப்பாற்ற, விலங்கின உணவை ஏற்பவர்கள் உதவுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இனப்பெருக்கத்துக்கு இணையாகப் பெருகிவரும் விளைநிலப் பற்றாக்குறை, விலங்கின உணவை ஏற்கவைக்கிறது. காட்டில் வாழும் மனித இனம் விலங்கினங்களை உண்டு வாழ்கிறது. அப்படியிருக்க நாட்டில் வாழும் மனித இனம் விலங்கினங்களை ஏன் உண்ணக்கூடாது? உயிர் வாழ அதை ஏற்பது அறம்.

மனிதர்களில் சிலரும், மாடு, குரங்கு, யானை போன்ற விலங்கினங்களும் விலங்கின உணவை ஏற்கமாட்டார்கள். அவர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் உணவு கிடைப்பதற்கான, ஆறாம் அறிவின் ஆராய்ச்சி முடிவுதான் தடுப்பு அணைகள். அவை, வீணாகக் கடலில் சேரும் நதிநீரைச் சேமித்து பயிர்வளத்தைப் பெருகச் செய்யும். அது, மனித இன சேவையாக மாறுவதால் அது அறமா கும். விலங்குகளும் பறவைகளும் நீரில்லாத குறையை முன்னதாக அறிந்து, நீர் இருக்கும் இடத்தைத் தேடி, அங்கு குடிப்பெயர்ந்து, தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும். மனித இனத்துக்கு அது இயலாத காரியம். ஆகவே, அணைகள் அவசியம்தான்!

? மனிதனுக்கான சேவை  அற்புதமான சொல்லாடல்! எனில்,  பிராணிகளின் வாழ்வும் உரிமையும் உங்களுக்கு பெரிதில்லை அப்படித்தானே?

நீர்த் தேக்கங்கள் எல்லா உயிரினங்களுக்கும்தான் பயன்படும். அதேபோல், விலங்கினங்களின் கழிவுப் பொருள்களை வியாபாரப் பொருளாக மாற்றுவதும் ஆறாவது அறிவின் ஆற்றல்தான். உயிரிழந்த விலங்கினத்தின் தோலும், தந்தமும் பிறருக்குப் பயன்படுவதை எந்த

அறமும் தடுக்காது. அதேபோல், நீர் நிரம்பிய ஏரிகளில் எவரும் வீடுகட்டி குடியேறுவது இல்லை. பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் ஏரிப்பகுதியில், மனித நடமாட்டம் அதிகரித்துவிட்ட பிறகு, அங்கு குடியேறுவது தகும். எத்தனையோ நீராதாரங்கள் மறைந்தும் தோன்றியும் இருப்பது உண்டு. கரை புரண்டு ஓடிய சரஸ்வதி நதியை இன்று காணவில்லை; தேடுவதில் முனைந்திருக் கிறார்கள். பாலாறும் தேனாறும் பாலைவனமாகி பல வருடங்கள் ஓடிவிட்டன. கடல் உள்வாங்குவதும், கரையை விழுங்குவதும் உண்டு. எனவே, இயற்கை மாற்றங்களை மனிதனின் செயல்பாடாக சித்திரிக்கக் கூடாது.

இனப்பெருக்கம் எல்லையை மீறும்போது காட்டை அழித்து குடியேறுவது அறத்துக்குப் புறம்பானதல்ல. இயற்கை மனிதன் வாழ இடம் அளித்திருக்கிறது. அதில் அவனுக்குச் சுதந்திரம் உண்டு. எங்கு வேண்டுமானாலும் அவன் குடியேறலாம். அதுவும் அறம்தான். கிருத யுகத்தில் முழு அறம் இருக்கும். த்ரேதா யுகத்தில் முக்கால் பங்கும், த்வாபர யுகத்தில் அரை பங்கும், கலி யுகத்தில் கால் பங்கும் இருக்கும் என்று வியாசர் விளக்கமளிப்பார். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கலி யுகம். அதில், அறத்தை நான்கில் ஒரு பங்குதான் நடைமுறைப்படுத்த இயலும். அதில் தவறில்லை என்று ஆமோதிக்கிறார் யுகம் கண்ட வியாசர். அப்படியிருக்க, முழு அறத்தையும் அறிமுகம் செய்ய எண்ணும் தங்களின் முயற்சி காலத்துக்கு ஒவ்வாதது; கலியுக அறத்துக்குப் புறம்பானது.

? கலியுகத்தில் அறம் எவ்வாறு சீரழியும் என்பதை விளக்க வியாசர் அவ்வாறு கூறியுள்ளார். அதையும் உங்களுக்கு ஏற்ற கருத்தாக சித்திரித்து விட்டீர்களே?

கலி யுகத்தில் உணவுக் கட்டுப்பாடு இருக்காது, மனிதனில் பாகுபாடு இருக்காது. உயிர் வாழ உதவுவது எல்லாமே அறமாகி விடும். நெருக்கடி நிலையில் அறத்தை மீறி செயல்படுவது உண்டு. பிறந்தவர்கள் அத்தனைபேரும் மகிழ்ச்சியாக வாழ, காலத்துக்கு உகந்த வகையில் மாற்றத்தை ஏற்பதும் அறம்தான். சூழலுக்கு உகந்தபடி அறம் மாறுதலை ஏற்கும். காலுக்கு உகந்தபடி செருப்பு இருக்க வேண்டும்!

அன்று மனிதன் தன் கிராமத்தோடு மட்டுமே இணைந்திருந்தான். இன்றைக்கோ உலகத்துடன் இணையும் கட்டாயத்தில் இருக்கிறான். விண் வழியிலும், கடல் வழியாகவும் உலகின் விரும்பிய இடத்தை எட்டுகிறான். இந்த நிலையில், மலையைக் குடைந்து சாலைகள் அமைப்பதையும், காட்டைத் திருத்துவதையும் எந்த அறமும் தடுக்காது. உலகளாவிய தொடர்பில் கலாசாரக் கலப்படம் ஏற்படவே செய்யும். அவற்றைக் கையாண்டு சமுதாயத்தில் பல மாற்றங்களை ஏற்கவேண்டியது வரும். அதை அதர்மம் என்று வரையறுக்க இயலாது. மக்களுக்காகத்தான் அறம்; அறத்துக்காக மக்கள் இல்லை!

கோயில்களையும், ஆன்மிகத்தையும், துறவிகளையும் முற்கால கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. ஆரம்ப காலத்தின் தனி வடிவை, இன்றைய துறவிகளில் எதிர்பார்ப்பது, தங்களின் அறியாமையே! காலத்தின் தாக்கம், எல்லாவற்றிலும்  மாற்றத்தைச் சந்திக்கவைக்கும். மாறுபாடுகளே வாழ்க்கை. மனித மனம் மாற்றங்களை விரும்பும். அவர்களும் வாழ வேண்டும். காலத்துக்கு உகந்த வகையில், தங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் வாழ இயலாது. நடை, உடை, பாவனை அத்தனையும் மாறிக்கொண்டுதான் இருக்கும். கிடைத்த இடத்தில் உணவை ஏற்று, சந்தர்ப்பம் இருக்கும் வேளையில் உண்ணுகிறோம். கிராமத்தில் சமைத்த உணவை வீட்டில் இருந்தபடி சாவகாசமாக உண்ணும் முறைகள், புது தலைமுறையினருக்கு தெரியாத ஒன்று. ஆக, நடை உடை, கலாசாரத்தில் முற்றிலும் மாறுபட்ட இன்றையச் சூழலை, பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய அறக் கோட்பாடு களுடன் இணைத்துப் பார்க்கும் சிந்தனை கேலிக்கூத்தாகும்.

? எனில், இயற்கைச் சூறையாடலும் உயிர்க் கொலைகளும்தான் தற்காலத் துக்கு ஏற்ற அறம் என்று சொல்ல வருகிறீர்களா?

உங்கள் கருத்துக்களும் வாதங்களும் யதார்த்தத்துக்குப் பொருந்தாதவை என்று சொல்லவருகிறோம். புதிய சமுதாயத்துடன் போட்டிப்போட இயலாதவர்கள், தாழ்வு மனப்பான்மையில் மண் மறைந்த அற நுணுக்கங்களைப் புதுப்பித்து, சமுதாயத்தைச் சாடுவது வீண் முயற்சி. இயற்கை உத்பாதங்களுக்கு மனிதன் காரணமாக மாட்டான். நிலநடுக்கம், சுனாமி, எரிமலை, பெருவெள்ளம், வறட்சி, புயல் ஆகியவற்றில் இருந்து உயிரினத்தைக் காப்பாற்ற முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு பாதுகாப்பு அளிக்கும் திறமை இன்று வளர்ந்திருக்கிறது. அதுதான் இன்றைய அறம். சுதந்திரமாகவும், விருப்பப்படியும் வாழும் தகுதியை இன்றுதான் மனித இனம் பெற்றிருக்கிறது.

அறம் செழித்திருந்த காலத்தில் சுதந்திரம் பறிக்கப்பட்டு, விருப்பம் இல்லாத வாழ்க்கையை ஏற்றார்கள். நமது விருப்பத்துக்கு உகந்தபடி வீட்டை அமைத்துக்கொள்வோம். எல்லோரது விருப்பத்துக்கும் உகந்தவாறு நாட்டை அமைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் எந்த அறமும் தடுக்கவில்லை. அறம் என்றால் என்ன? எல்லோரும் இணைந்து வாழ்ந்து மகிழ்ச்சியுற எது பயன்படுகிறதோ, அதுவே அறம். எனவே, சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக அமைதிபெற்ற சமுதாயத்தை, அறத்தை ஊதிக் கெடுக்காமல் இருப்பதும் சேவையாகும்.

மூன்றாவது கோணம்...

ஆட்டு மந்தையில், முன் செல்லும் ஆட்டின் வழியையே மற்ற ஆடுகளும் பின்பற்றும். முன்னால் செல்வது பள்ளத்தில் விழுந்தால், அதைத் தொடர்ந்து மற்றவையும் பள்ளத்தில் விழுந்து விடும்! இதை 'கட்டரிகா ப்ரவாஹ ந்யாயம்’  என்று பண்டைய சிந்தனையாளர்கள் கணித்து இருக்கிறார்கள். தனி மனிதனின் சிந்தனை, பெரும்பாலும் அவனது சுயநலத்தில் தோய்ந்துதான் உருப்பெறும். மறுபக்கத்தைப் பார்க்காமல், தன் பக்கத்தின் பாதுகாப்பில் மட்டும் முனையும்; பொதுநலன் மறக்கப்பட்டுவிடும். அவர்களது சிந்தனை எல்லோராலும் ஏற்கப்படமாட்டாது.

? இதில், சுய நலம் எங்கிருந்து வந்தது?  நிகழும் மாற்றங்கள் ஒட்டுமொத்த உலகுக்குமானது; தனியொருவனுக்காக அல்ல என்பதை நீங்கள் உணரவில்லையா?

மனம் போன போக்கில் போகிறவன் உண்மையை அறிய மாட்டான். உங்கள் மதிப்பீடும் அப்படித்தான். வயிற்றின் கொள்ளளவு எவ்வளவோ அவ்வளவுதான் உனக்குள்ள உரிமை. அதற்கு அதிகமான சேமிப்பு திருட்டில் அடங்கும். பிறருக்கு கிடைக்கவிடாமல் செய்துவிட்டது உனது சேமிப்பு. அது தவறு. அதற்கு தண்டனையுண்டு என்கிறது ஸனாதனம்(யாவத்த்ரியேத ஜடரம் தாவத் ஸ்வத்வம் ஹிதேஹினாம். அதிகம் யோபிமன்யே தஸஸ்தேனோ தண்டமர்ஹதி).

இயற்கையின் கண்ணோட்டத்தில், ஆறறிவு பெற்ற இனம் பெறாத இனம் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது.  விலங்கினங் களின் அறத்தை மனிதன் பின்பற்றக் கூடாது. இயற்கை, உழைத்துப் பிழைக்க அனுமதி அளித்திருக்கிறது; அழித்துப் பிழைக்க அனுமதி அளிக்கவில்லை. விலங்கினங்கள் பசியாற, அவற்றுக்கு அழித்துப் பிழைக்க அனுமதி உண்டு. மற்ற உயிரனங்களைவிட அதிக சுதந்திரத்தைச் சுவைக்க மனிதனுக்கு அனுமதி இல்லை. விரிந்து பரந்து கிடக்கும் விளை நிலத்தைப் பயன்படுத்தாமல், இயற்கையின் சொத்தை (விலங்கினங்களை) களவாடிப் பசியாறுவது தவறு என்று சொல்லும் அறம். உயிரினங்களின் உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை.

? நீங்கள் சொல்வதை ஏற்றால் மனித இனம் உயிர்வாழ்வதே கடினமாகி விடுமே?

உயிர்வாழ்தல் குறித்து எவ்வளவு உரிமையோடு கேள்வி எழுப்புகிறீர்கள். அதே உரிமை மற்ற உயிரினத்துக்கும் உண்டு அல்லவா?

நதிக்கரைகளில் இருக்கும் உயிரினங்களுக்கு நீர் கிடைக்க விடாமல் செய்து தடுப்பணைகள் கட்டி தவிக்கவைக்கிறோம். அணையைத் திறந்துவிட்டால்தான் அவற்றுக்குத் தண்ணீர் (இதனால், மனிதரிலும் ஒருதரப்பு பயனை அனுபவிக்க, மற்றொரு தரப்பு பாதிப்புக்குள்ளாவது வேறு விஷயம்). இது சுயநலம். இயற்கை அளித்த நீரை தங்களின் வருங்காலத்துக்காகச் சேமித்து வைத்து, நிகழ்காலத்தில் உயிர் வாழத் துடிக்கும் ஜீவராசிகளுக்குத் தீங்கு இழைப்பது தவறு.

இயற்கையின் சொத்து பொதுநலனுக்குப் பயன்பட வேண்டும்; சுயநலம் விழுங்குவதை அனுமதிக்கக் கூடாது. விலங்குகளின் நடமாட்டம் உலக இயக்கத்துக்குத் தேவை. காடு விலங்கினங்களைப் பாதுகாக்கும். விலங்கினங்கள் காட்டைக் காப்பாற்றும். இவை இரண்டும் சுற்றுச் சூழலை மனித வாழ்க்கைக்கு உகந்ததாக மாற்றி, ஆறு பருவ காலங்களை உருவாக்கி உதவும். பேசாத உயிரினங்கள், பேசும் உயிரினங் களுக்கு உதவி செய்யும் வகையில், பொது நலனைப் பேணிக் காக்கின்றன.

மலைகளிலும், ஆற்று நீரிலும் பல உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை இடம்பெயரச் செய்து தீங்கு விளைவிப்பது அதர்மம். எலியும், பூனையும், நாயும், நரியும், பாம்பும், பல்லியும் பல நச்சுப் பொருள்களை அழித்து மனித சுகாதாரத்துக்கு மறைமுகமாக உதவுகின்றன. புழு பூச்சிகளும் தங்களின் செயல்பாட்டால், தங்களையும் அறியாமல் பொதுநலனில் இணையும்.

காட்டு மரங்களை நம்பி பல உயிரினங்கள் வாழ்கின்றன. பகலில் தென்படும் காகங்கள் அத்தனையும் இரவில் மரத்தில் தங்கும். மரத்தின் இலைகளும், பூக்களும், காய்கனிகளும் பல உயிரினங்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. இவை அத்தனையையும் மறந்து, மரத்தை வெட்டி வீழ்த்துபவன், சுயநலத்தைப் பேணிக் காப்பவன். சுயநலத்தோடு நெடிது வாழ இயலாது. பொது நலன்தான் அவசரகாலத்தில் அடைக்கலம் தரும்.

பிறர் சுதந்திரத்துக்கு இடையூறு செய்யாமல், பொது நலக் கண்ணோட்டத்துடன் தனது சுதந்திரத்தைப் பயன்படுத்துவதே ஆறறிவின் இலக்கணம். மனித இயல்பை மறந்து, விலங்கின இயல்பை வரவழைத்துக்கொள்ளக்கூடாது. 'தன்னைப் போல் மற்ற உயிரினங்களையும் நினைப்பவனே ஆறறிவு பெற்றவன்’ என்கிறது ஸனாதனம் (ஆத்மவத் ஸர்வபூதானி ய:பச்யதி ஸபச்யதி). புது சிந்தனைகள், சுயநலத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதற்கு உகந்த வகையில், தான் செய்யும் செயலுக்கு விளக்கவுரை அளித்து மக்களை திசை திருப்புவது தொடரக்கூடாது. அப்படித் தொடர்ந்தால், தொலைவில் நிகழவேண்டிய பிரளயத்தை (உலகத்தின் அழிவை) முன்னதாகவே வரவழைத்து அழிய நேரிடும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை:

மனித நடமாட்டம் இருக்கும் இடத்தில் எந்த விலங்கினமும் தலைகாட்டாது. அவை, தனது தற்காப்புக்காகவே மனிதனை எதிர்க்கும். பாம்பு யாரையும் கடிக்காது; ஓசை கேட்டால் ஓடிவிடும். எங்கே நம்மை மாய்த்துவிடுவானோ என்கிற பயத்தில்தான் நம்மைச் சீண்டும். ஆனால் ஆறறிவு படைத்த மனிதனோ வலுக்கட்டாயமாக காட்டில் நுழைத்து, விலங்கினங் களை அழித்து உணவாக ஏற்று, வியாபாரத்தையும் பெருக்குகிறான். தனது சுயநலம் ஈடேற மலையைப் பிளக்கிறான், ஆற்று வெள்ளத்தைத் தடுக்கிறான், மரங்களை வெட்டிச் சாய்க்கிறான். இது தவறு. இயற்கைப் படைப்புகள் பொது நலனுக்குப் பயன்பட வேண்டும்; சுயநலனில் ஒதுங்கக்கூடாது. பொதுச் சொத்தை ஓர் இனம் மட்டுமே பங்கு போட்டுக் கொள்ளக்கூடாது.

புதுச் சிந்தனைகள் முன்னேற்றம் என்ற போர்வை யில், பல உயிரினங்களைத் தவிக்கவிட்டு, சுயநலத்தை அனுபவிக்கக்கூடாது.  அனைத்து உயிரினங்களையும் வாழவிட்டு, தானும் முன்னேறும் வழியைச் சிந்திக்கவேண்டும். இப்படிச் செயல்படுபவனே மனிதன் என்பது ஸனாதனத்தின் கணிப்பு.

பதில்கள் தொடரும்...