Published:Updated:

அத்தி மரத்தில் தொட்டில் கட்டி...

எல்லைச்சாமி!ம.மாரிமுத்து

அத்தி மரத்தில் தொட்டில் கட்டி...

எல்லைச்சாமி!ம.மாரிமுத்து

Published:Updated:

தேனியில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில், குரங்கணி - கொட்டக்குடி ஆற்றங்கரையில் உள்ள அந்தக் கோயிலை அடைந்தபோது, பொழுதுசாயத் துவங்கி இருந்தது. 

மாலைக் காற்றின் தீண்டலால் கோயிலின் அத்திமரத்தில் ஊசலாடும் பிள்ளைத் தொட்டில்களும், அந்த மரத்தடியில் அருளும் வனப்பேச்சி, நாகம்மாள் மற்றும் சங்கிலிக் கருப்பசாமி தெய்வங்களை பக்தி முணுமுணுப்போடு மெய்ம்மறந்து வணங்கி நிற்கும் பக்தர்களுமாகத் திகழ்ந்த அந்தச் சூழல், நகர்ப்புறவாசிகளுக்குப் புது அனுபவம்!

தெய்வச்சிலைகளை வணங்கியபடியே வலம் வந்தபோது, ஓரிடத்தில் நடுகல் ஒன்று கவனத்தை ஈர்த்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பல்லாயிரம் வருடம் தொன்மையான நமது வரலாறும், நம் முன்னோரின் வாழ்வியலும் பெரிதும் எழுதிவைக்கப்படவில்லை. என்றாலும், நாடோடிப் பாடல்களிலும், தாலாட்டுப் பாடல் களிலும் அவர்களது வாழ்க்கை விரிந்துகிடக்கும். அவை போக, இது போன்ற நடுகற்கள் சொல்லும் வீரக்கதைகளும் ஏராளம் உண்டு. இந்தக் கோயிலில் இருக்கும் நடுகல்லும் ஒரு வீரனின் கதையைச் சுமந்திருப்பதை, அங்கிருந்த ஒரு பெரியவர் சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார். அந்தக் கதை இதுதான்...

அத்தி மரத்தில் தொட்டில் கட்டி...

பன்னெடுங்காலத்துக்கு முன், மதுரைக்கு அருகில் கொட்டக்குடி எனும் இடத்துக்கு குளத்தில் தண்ணீர் எடுக்கவந்தாளாம் பெண்ணொருத்தி. அவளின் போதாத காலம், அங்கே வேட்டைக்கு வந்த பூஞ்சையாத்து மன்னனின் கண்ணில் பட்டாள். அவளைத் தன் வசம் ஒப்படைக்கவேண்டும் என்று அவளுடைய உறவுகளுக்குத் தகவல் அனுப்பிவைத்தானாம் மன்னன். ஆனால், ஒரு குழந்தைக்குத் தகப்பனான மன்னனுக்குப் பெண் கொடுக்க உறவுகள் ஒப்பவில்லை. எனவே, அவளைச் சேர்ந்த கூட்டம் இரவோடு இரவாக ஊரை காலி செய்து, மேற்குத்தொடர்ச்சி மலை நோக்கிப் பயணப்பட்டது.

ஆண்டிப்பட்டி கணவாயை நெருங்கும் தருணத்தில், அந்தக் கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் பெரியவர்களுக்குத் தெரியாமல் நழுவினார்கள். நேரே அரண்மனைக்குச் சென்று, மன்னருடைய வாரிசைக் கொன்றுபோட்டுவிட்டு, விரைந்து வந்து கூட்டத்துடன் சேர்ந்துகொண்டார்கள். பயணம் தொடர்ந்தது. இளைஞர்களில் ஒருவன் மட்டும் அவ்வப்போது, 'சீக்கிரம் நடங்க... மெதுவாக நடந்தால் ஆபத்து’ என்று துரிதப்படுத்திக்கொண்டே இருந்தான். கூட்டத்துக்குச் சந்தேகம் வந்து அவனை விசாரித்தபோது, உண்மையைப் போட்டு உடைத்துவிட்டான்.

அவன் சொன்னதுபோலவே ஆபத்தும் வந்துசேர்ந்தது. தனது படைகளுடன் அரசன் அந்தக் கூட்டத்தை வளைக்க வந்துகொண்டிருப்பதாகத் தகவல் வந்தது. அப்போது, இளைஞர்களில் ஒருவன் முன்னே வந்து, 'நீங்கள் எல்லோரும் இந்த மலையின் பின்புறம் மறைவான பகுதிக்குச் சென்று பதுங்கிக் கொள்ளுங்கள். வருபவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றபடி, காவலுக்குத் தயாரானான். கூட்டம் மலைக்குள் பதுங்கியது.

அத்தி மரத்தில் தொட்டில் கட்டி...

சொன்னபடியே அந்த வீரன் தங்களைத் தேடி வந்த படைகளை தீரத்துடன் எதிர்த்தான். சுற்றிச் சுழன்று போரிட்டு, அத்தனை பேரையும் கொன்றொழித்தான். அந்த வீரனின் பெயர்  கருதலைமுடையார்.

சண்டையின் நிலை என்ன ஆனது என்பதை அறிய விரும்பிய கூட்டத்தினரில் சிலர், அவன் இருக்கும் பகுதிக்கு வந்தனர். உக்கிரமான போரில் அத்தனை படைகளும் அவனால் அழிக்கப் பட்டிருந் ததைக் கண்டு அதிர்ந்தனர். பின்னர் சுதாரித்து, 'சரி, நாம் புறப்படுவோம்' என கருதலைமுடையாரைத் தங்களுடன் அழைத்தபோது, ''நீங்கள் புறப்படுங்கள். நான் நரபலி வாங்கிப் பழகிவிட்டேன். இனி, என்னால் உங்களுடன் தங்க முடியாது'' என்று மறுத்துவிட்டான்.  பின்னாளில், அந்த இடத்தில் கருதலைமுடையாருக்கு நடுகல் நாட்டி வழிபட ஆரம்பித்தார்களாம். அத்துடன், தங்களின் குலதெய்வமான கற்குடை ஐயனாரின் பிடிமண் கொண்டு வந்து, அவருக்கும் இங்கே சந்நிதி அமைத்துக் கோயில் நிர்மாணித்தார்களாம். எந்த ஊரில் இருந்து அவர்கள் தப்பித்து வந்தார்களோ, அதன் பெயரையே, அதாவது கொட்டக்குடி என்ற பெயரையே இந்தப் பகுதிக்கும் வைத்தார்களாம்.

அத்தி மரத்தில் தொட்டில் கட்டி...

வழிபாடு தொடங்கிய காலத்தில், வாரத்துக்கு ஒருமுறை நடக்கும் உச்சிக் கால பூஜைக்கு மலைப் பகுதியில் இருக்கும் மக்களை வரவழைக்க கொம்பு வாத்தியம் முழங்குவது வழக்கமாம். அதையொட்டியே இந்தக் கோயிலுக்கு, 'கொம்பு தூக்கி ஐயனார் கோயில்’ என்ற  பெயர் நிலைத்துவிட்டதாம்.

இந்தக் கோயிலில் கொடுக்கும் எலுமிச்சையை வெட்டி, உப்பு கற்பூரம் கலந்து சாறு பிழிந்து வீட்டில் தெளித்தால், துஷ்ட சக்திகள் விலகிவிடும் என்பது நம்பிக்கை. கோயிலின் அத்தி மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால், குழந்தை பாக்கியம் நிச்சயம் என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

அத்தி மரத்தில் தொட்டில் கட்டி...

அந்த நம்பிக்கைக்குச் சாட்சியாகத் திகழ்கின்றன அத்திமரத்துத் பிரார்த்தனைத் தொட்டில்கள்!

படங்கள்: வீ.சக்திஅருணகிரி

இங்கு வந்து பச்சரிசி, வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்துப் படையலிட்டு வணங்கிச் சென்றால், குடும்ப வழக்குகள் முதலான பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

எப்படிச் செல்வது

தேனியிலிருந்து போடிநாயக்கனூர் சென்றால், அங்கிருந்து குரங்கணிக்கு பேருந்து வசதிகள் உள்ளன. குரங்கணியில் இறங்கி, சிறிது தூரம் போடிநாயக்கனூர் பாதையில் நடந்து வந்து, அருகிலிருக்கும் பள்ளத்தாக்குப்பகுதியில் இறங்கினால், கொட்டக்குடி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கோயிலை அடையலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism