Published:Updated:

கலகல கடைசி பக்கம்

தெனாலி

ம்பிக்கையோடு ஒரு காரியத்தைப் பண்ணினோம்னா அது வெற்றியாதான் முடியும்னு சொல்வாங்க. நம்பிக்கைன்னா கால் நம்பிக்கை, அரை நம்பிக்கையெல்லாம் கிடையாது. முழு நம்பிக்கை. நூறு சதவிகித நம்பிக்கை!

ஒரு ஆறு. ஆற்றின் இந்தக் கரையில ஒரு கிராமம். அந்தக் கரையில ஒரு காடு. அந்தக் காட்டுல முனிவர் ஒருத்தர் தங்கி தியானம், தவம்னு பண்ணிட்டிருந்தார். கிராமத்துல இருந்த பால்காரன் ஒருத்தன் தினமும் ஒரு சொம்பு பாலை எடுத்துட்டுப் போய் அந்த முனிவருக்குக் கொடுக்குறது வழக்கம். ஏதோ அந்தப் பெரியவருக்குத் தன்னாலான உபகாரம்னு அவன் நினைச்சிருக்கலாம்.

ஒருநாள், அவன் வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு. “என்னப்பா, வழக்கமா காலையில சீக்கிரமே வந்துடு வியே… இன்னிக்கு ஏன் லேட்டு?”னு கேட்டார் முனிவர்.

“ஆத்துல எப்பவும் முழங்கால் அளவுதான் சாமி, தண்ணி ஓடும். விறுவிறுன்னு ஆத்துல இறங்கி நடந்து வந்துடுவேன். இன்னிக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுச்சுங்களா… அதான், சுத்திக்கிட்டு வர நேரமாயிடுச்சு!”ன்னான் பால்காரன்.

கலகல கடைசி பக்கம்

“அட, என்னப்பா நீ! கடவுள் இருக்கும்போது கவலை எதுக்கு? உனக்குப் பிடிச்ச சாமி பேரைச் சொல்லிக்கிட்டே நடந்து வந்தின்னா வெள்ளத்து மேலேயே நடந்து ஆத்தைக் கடந்திருக்கலாமே?”ன்னு சொல்லி நமுட்டுச் சிரிப்பு சிரிச்சார் முனிவர்.

“அப்படிங்களா சாமி, எனக்கு இந்த விஷயம் இத்தினி நாள் தெரியாம போச்சே!”ன்னான் பால்காரன் அப்பாவியா. அடுத்த நாள், அதற்கடுத்த நாள்னு காலையில இன்னும் சீக்கிரமாவே பாலைக் கொண்டு வந்து முனிவருக்குக் கொடுக்க ஆரம்பிச்சான்.

“என்னப்பா, வெள்ளமெல்லாம் குறைஞ்சிடுச்சா?”ன்னு யதார்த்தமா கேட்டார் முனிவர்.

“இல்லீங்க. அதுபாட்டுல அடிச்சுப் பொரண்டுக்கிட்டுதான் இருக்கு!”ன்னான் பால்காரன்.

“பின்னே எப்படிப்பா இப்பெல்லாம் சீக்கிரமா வரே?”ன்னு ஆச்சரியமா கேட்டார் முனிவர்.

“என்ன சாமி இப்படிக் கேக்கறீங்க? நீங்கதானே சொன்னீங்க, சாமி பேரைச் சொல்லிக்கிட்டே நடந்தா, வெள்ளத்து மேலேயே நடந்து வரலாம்னு. அப்படித்தான் வந்தேன்!”னான் பால்காரன்.

அவன் ஏதோ விளையாடறான்னு நினைச்ச முனிவர், “அப்படியா! வா, வந்து எனக்கு வெள்ளத்து மேல நடந்து காட்டு!”ன்னார்.

என்ன ஆச்சரியம்..! ஏதோ முணுமுணுத்துக்கிட்டே ஆத்துல இறங்கினான் பால்காரன். உள்ளே மூழ்கவே இல்லை. அப்படியே தண்ணி மேல நடந்து அந்தக் கரைக்குப் போயிட்டான்.

முனிவர் தானும் இதை ட்ரை பண்ணிப் பார்ப்போம்னு சாமி பேரைச் சொல்லிக்கிட்டே ஆத்துல இறங்கினார். அவ்வளவுதான்… ஆத்து வெள்ளம் அவரை அடிச்சுக்கிட்டுப் போயிடுச்சு!

ஏன்..? அவருக்கே தான் சொன்னதுல முழு நம்பிக்கை இல்லை. ஆனா, பால்காரனோ முனிவர் சொன்னா சரியாதான் இருக்கும்னு முழு நம்பிக்கையோட இறங்கினான்.

நம்பிக்கை எந்த அளவுக்கு உறுதியா இருக்கணும்னு விளக்கறதுக்காக ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன உபமானக் கதை இது. இதுல இருக்கிற கருத்தை மட்டும் எடுத்துக்குங்க. மத்தபடி, நாளைக்கே போய் ஆத்துலேயோ குளத்துலேயோ நீங்கபாட்டுக்கு இறங்கிவெச்சு, விஷப்பரீட்சையெல்லாம் பண்ணாதீங்க. என்ன..!