கேரளத்து சோற்றானிக்கரை பகவதி, லட்சக்கணக்கான பக்தர்களைத்தன் வசம் ஈர்த்து, அவர்களின் இன்னல்களைக் களைந்து, இடர் தரும் நோய்களைக் குணப்படுத்தி அருள்பாலிப்பவள்.

மலையாளத்தில் 'சோற்றானிக்கரா’ என்று வழங்கப்பட்ட இத்தலம் ஆங்கிலேயர்களால் 'சோட்டானிக்கரா’ என மழலை மலையாளச் சொல்லாக மாறியது. பாசம் ஊடாடும் நெகிழ்ச்சியான வரலாறு ஒன்று, அன்னையின் ஆலயம் சோற்றானிக்கராவில் அமைந்ததன் பின்னணியில் வழங்கப்பட்டு வருகிறது.

முன்பொரு காலம் இருள் நிறை காடாக இருந்த இப்பிரதேசத்தில், கண்ணப்பன் எனும் வேடன், தன் ஒரே மகளுடன் குடிசையில் வசித்து வந்தான். தான் வணங்கி வந்த தேவிக்கு தினம் ஒரு பசுவை பலி கொடுப்பது அவன் வழக்கம். அதற்காக இரவு வேளைகளில் தூரத்து கிராமங்களில் இருந்து பசுக்களைக் களவாடி வருவான். ஒருநாள், இரண்டு பசுக்களை களவாடி வந்தபோது, வழி தவறி வந்த ஒரு கன்றுக்குட்டி தன் குடிசைக்கருகில் நிற்பதைக் கண்டான். அதையும் கொட்டிலில் கட்டி வைத்தான். அந்தக் கன்று அவனுடைய மகளுக்கு மிகவும் செல்லமாயிற்று. தாயற்ற அப்பெண் அக்கன்றின் மீது உயிரையே வைத்தாள். அன்புடன் நேசித்து, வளர்த்தாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புண்ணிய பூமி

ஒருநாள், பசுமாடு கிடைக்காமல் திண்டாடிய வேடன், கன்றுக்குட்டியைப் பலி கொடுக்க தீர்மானித்தான். மகள் தடுத்தாள்; மன்றாடினாள். தந்தை மசியவில்லை. 'அப்படியானால் முதலில் என்னைக் கொன்று விட்டுப் பிறகு கன்றைக் கொல்லுங்கள்'  என்று கழுத்தை நீட்டினாள் மகள். அடுத்த கணம், கண்ணப்பனின் கையிலிருந்த கத்தி நழுவிக் கீழே விழுந்தது.

'தந்தையே, உலகில் அனைவரும் தெய்வத்துக்குப் பலி கொடுத்தா புண்ணியம் சம்பாதிக்கிறார்கள்? இல்லையே! தான தர்மங்கள் செய்தும் புண்ணியம் சம்பாதிக்கலாமே! நீங்கள் ஏன் அப்படி நடந்து கொள்ளக்கூடாது?' என்று கேட்டாள் மகள்.

தந்தையின் மனம் மாறியது. பலி தரும் வழக்கத்தை நிறுத்தினான். இருவரும் இணைந்து அந்தக்

புண்ணிய பூமி

கன்றுக்குட்டியைக் கண்ணை இமை காப்பதுபோல் காத்து வந்தார்கள். விதிவசத்தால் மகள் இறந்த பிறகும், கண்ணப்பன் அதன்மீது இரட்டிப்பு பாசத்தைப் பொழிந்து வளர்த்தான். கன்று பசுவானது.

ஓர் இரவு, கண்ணப்பன் ஒரு கனவு கண்டான். மாட்டுக் கொட்டிலில் பசு படுத்திருக் கிறது. அதன் அருகில் ஓர் ஆண் நிற்கிறான். சுற்றி நிற்கும் முனிவர்கள் அவனுக்குப் பூஜை செய்கிறார்கள். உடனே விழித்துக்கொண்ட வேடன், கொட்டிலுக்கு விரைந்தான். அங்கு யாருமே இல்லை. பசுவும் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. இவனும் போய்ப் படுத்துக் கொண்டுவிட்டான்.

மறுநாள் காலை, கண்ணப்பன் பசுவுக்குத் தீவனம் வைக்கச் சென்றபோது, அங்கே கட்டியிருந்த பசுவைக் காணாது திடுக்கிட்டான். பசுவுக்குப் பதிலாக, அது எந்த நிலையில் அமர்ந்திருந்ததோ, அதே நிலையில் ஒரு கல் கிடந்தது. கனவில் பூஜை செய்யப்பட்ட ஆண் நின்ற இடத்திலும் ஒரு  கல் துண்டு இருந்தது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பெருங்கூச்சல் எழுப்பினான். அருகிலிருந்தவர்களெல்லாம் ஓடி வந்தனர். அவர்களுடன் பராசரர் என்னும் துறவி ஒருவரும் வந்தார். அவரிடம், முதல் நாள் இரவு தான் கண்ட கனவையும், அதிகாலையில் கண்ட காட்சியையும் கண்ணீருக்கிடையே விவரித்தான் கண்ணப்பன். முனிவர் அவனை அமைதிப்படுத்திப் பேசினார்...

'கண்ணப்பா, நீ கொடுத்து வைத்தவன். அந்தப் பசு வேறு யாருமல்ல; மகாலட்சுமியேதான். உனக்குக் காட்சி தந்த புருஷரோ மகாவிஷ்ணு ஆவார். உனது மாட்டுக் கொட்டிலில் பகவானும் பகவதியும் எழுந்தருளத் திருவுளம் கொண்டதால், இந்த வனப்பிரதேசத்தில் உன்னைவிடப் புண்ணியம் செய்தவர் யாருமில்லை. இன்றிலிருந்து லட்சுமிநாராயண மூர்த்தியை நீங்கள் அனைவரும் வழிபடுங்கள். உங்களுக்குச் சகல நன்மை களும் கிடைக்கும்.'' என்றார்.

அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் லட்சுமி நாராயண மூர்த்தியை பூஜை செய்து வந்தனர். கண்ணப்பனின் காலம் முடிந்தது. அதன்பின்,ஸ்ரீலட்சுமி நாராயண மூர்த்தி விக்ரஹம் ஆராதனையின்றி அங்கேயே இருந்தது.

புண்ணிய பூமி

ஆண்டுகள் பல கழிந்தன.  காட்டுக்குள் ஒரு நாள், ஒரு பெண் புல் வெட்டும் கத்தியை ஒரு பாறையில் தேய்க்க, அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. பயந்து போன அவள் கூச்சல் போட்டு ஊரைக் கூட்டினாள். 'காளிகுளத்துக்கணியார்’ என்னும் பிரபல ஜோதிடர் ஒருவர் அழைத்துவரப்பட்டார். அவர் வந்து, அங்கு பராசக்தியின் பேரொளி பரவியிருப்பதை அறிந்து, அந்தக் கற்சிலை பகவதிதான் என்றும், அதை சரஸ்வதி, லட்சுமி, துர்காவாக வழிபட வேண்டும் என்றும், அருகிலுள்ள சிறிய கல் மகா விஷ்ணுவினுடையது என்றும் கூறினார். அன்னை தன்னை ஜோதி வடிவில் வெளிப்படுத்திக் காட்டியருளியதால் அது 'சோதி ஆன கரை’ ஆயிற்று. பின்னர், சோற்றானிக்கரையாக மருவிற்று. அங்கு ஒரு கோயில் எழும்பியது.

மேற்கில் பிரதான கோபுர வாயில். ஆலயத்தில் நுழைந்ததுமே, 'அம்மே நாராயணா, தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரே நாராயணா’ என்னும் பக்தியில் நனைந்த கோஷங்கள் நம் செவிகளில் புகுந்து உள்ளத்தை நிரப்புகின்றன.

பகவதியின் கருவறை கிழக்கு நோக்கியிருக்கிறது. தங்கக் கலசத்திலும், விலை மதிக்க முடியாத அணிகளின் அலங்காரத்திலும் கோடி சூரியப் பிரகாசத்துடன் அருளொளியை வாரி வழங்கும் அன்னை, இங்கு லட்சுமி நாராயணத் தத்துவமாக எழுந்தருளியிருக்கிறாள். மூலஸ்தான சிலா வடிவம் உருவ அமைப்புடன் கூடியது அல்ல. சிவப்பு வெட்டுக்கல் பகவதியாகவும், அதன் வலப்புறம் உள்ள சிறிய கருங்கல் மகாவிஷ்ணுவாகவும் ஆராதிக்கப்பட்டு வருகின்றன.அங்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் வெளியே செல்வதில்லை. விக்ரஹங்களைச் சுற்றியுள்ள மணலில் மறைந்து, ஒன்றரை மைல் தூரம் வடக்கே உள்ள ஒணக்கூர் தீர்த்தக் குளத்தில் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

புண்ணிய பூமி

தேவிக்குக் காலையில் வெள்ளாடையும், மத்தியானம் சிவப்பாடையும், மாலையில் நீல நிற ஆடையும் அணியப்படுவதி லிருந்து சரஸ்வதி, லட்சுமி, துர்காவாக இங்கு பகவதி ஆராதிக்கப்படுவது விளங்கும்.உட்பிராகாரத்தில் வடகிழக்கில் மேற்கே பார்த்தவாறு தர்மசாஸ்தா திருச்சந்நிதி. இவர் சந்நிதிக்கு முன் பேய் பிசாசு பிடித்தவர்கள் ஆடுகிறார்கள். பல சேஷ்டைகளை அவரே அடக்கிவிடுகிறார். அதற்கு அடையாளமாக சந்நிதிக்கு முன்னுள்ள தூண் ஒன்றில் ஆணிகள் அடிக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

ஆலயத்தின் வெளித் தென் பிராகாரத்தில் ஒரு பவழமல்லி மரமும், அதைச் சுற்றி ஒரு மேடையும், அதன்மீது சிம்மத்தின் கற்சிலை மூன்று இருப்பதையும் காணலாம். அந்த இடம்தான் முன்பு கண்ணப்பனின் மாட்டுக் கொட்டிலாக இருந்தது. அதனால் அந்த இடத்தைப் பகவதியின் மூலஸ்தானமாகக் கருதி ஆராதித்து வருகிறார்கள்.

மூல சந்நிதியில் நிலவும் மாபெரும் சக்தியானது, பைசாசங்களையெல்லாம் தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைத்து, மெள்ள மெள்ள, விரட்டியடிக்கும் அதிசயத்தைக் கண்ணால் காண முடிகிறது. சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், பேய் பிசாசு பிடித்தவர்கள், பில்லி, சூனியம் முதலிய உபத்திரவங்களுக்கு ஆளான வர்களை எல்லாம் இந்த ஆலயத்தில் காணலாம்.

பகவதி ஆலயத்திலிருந்து சற்று தூரத்தில் கீழ்க்காவு பத்ரகாளி கோயில் இருக்கிறது. பத்ரகாளி, பகவதியை நோக்கியவாறு அமர்ந்திருக்கிறாள். பகவதி தரிசனம் முடிந்ததும், மக்கள் நேரே கீழ்க்காவு காளி கோயிலுக்குச் சென்று தரிசித்துவிட்டு வருகிறார்கள்.

தினமும் பகவதி சந்நிதி திறந்த பிறகுதான் கீழ்க்காவு சந்நிதி திறக்கப்படுகிறது. இரவு பகவதி சந்நிதி மூடிய பிறகு, இங்கு குருதி தர்ப்பணம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதன் பிறகே நடை அடைக்கப்படுகிறது. முன்பு இங்கு ஆடு, கோழி பலியிடப்பட்டு வந்ததற்கு அடையாளமாகக் காலையில் குருதி பூஜையும், இரவில் குருதி சமர்ப்பணமும் நடைபெற்று வருகின்றன.

குருதி என்றால் நிஜமான ரத்தம் இல்லை. குருதிக்கு அடையாளமாக ஆரத்தியைக் கரைத்து வைத்துக் கொள்கிறார் கள். காலையில் அதை நைவேத்தியமாகப் படைத்து பூஜிக்கிறார்கள். இரவிலோ அதைப் பெரிய பாத்திரங்களில் நிரப்பி, பூஜை முடிந்ததும் ஒவ்வொரு பாத்திரத்திலும் இருக்கும் ஆரத்தி தந்திரியின் கையாலேயே வாரி இறைக்கப் படுகிறது. அங்கு உலவும் பைசாசங்களுக்கு அது ஆகாரமாக அளிக்கப்படுவதாக ஐதீகம்.

இந்தக் குருதி ஆரத்தியை எடுத்துச் சென்று, வீட்டின் நான்கு மூலைகளிலும் சிறிது பள்ளம் தோண்டி, அதில் விட்டு வைத்தால், அந்தக் குடும்பத்தாருக்கு எந்தவிதமான உபாதைகளோ உபத்திரவமோ ஏற்படாது என்கிறார்கள்.

படங்கள்: பொன்.காசிராஜன்

அபிஷேக தீர்த்தம் வெளியே செல்வதில்லை. விக்ரஹங்களைச் சுற்றியுள்ள மணலில் மறைந்து, ஒன்றரை மைல் தூரம் வடக்கே உள்ள ஒணக்கூர் தீர்த்தக் குளத்தில் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

புண்ணிய பூமி

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர்   :  சோற்றானிக்கரை

தலம் அமைந்திருக்கும் மாநிலம் : கேரளா

அன்னையின் திருநாமம் : பகவதி

எப்படிப் போவது?   : சென்னையில் இருந்து எர்ணாகுளம் வரை ரயில், கார். அங்கிருந்து பேருந்து, ஆட்டோ, கார்.

எங்கே தங்குவது? : எர்ணா

குளத்தில் வசதியான தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் நிறைய உள்ளன.

தரிசன நேரம்: காலை 4.00 முதல் பகல் 12.30 மணி வரை; மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை.