Published:Updated:

சித்தமெல்லாம் சித்தமல்லி - 7!

நிவேதிதா

சித்தமல்லி என்னும் சித்தர்பூமியில் அருளாட்சி புரியத் திருவுள்ளம் கொண்ட, மகான் ஸ்ரீராகவேந்திரர் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடநாத பெருமாள், பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களும் அதிசயங்களும் எண்ணற்றவை.

ஆயினும், அதற்கெல்லாம் முன்னோடியாக, அவர் தனக்கென உகந்து கோயில் கொள்ளப்போகும் திருக்கோயிலில், முதலில் கோசாலையை ஏற்படுத்தத் திருவுள்ளம் கொண்டுவிட்டார். அதற்கென அவர் ஓர் அற்புதத்தையும், தம்மைச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக உபாசனை செய்த மகான் ராகவேந்திரர் மூலமாகவே நிகழ்த்தினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த அற்புதம்... தம்முடைய பக்தை பத்மாவின் கனவில் தோன்றிய ராகவேந்திரர், தம்மால் அடையாளம் காட்டப்பட்ட சித்தமல்லி திருவேங்கடநாதர் ஆலயத்தில் இருந்து ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் அருகில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் சிவாலயத்துக்குச் சுத்தமான பசும்பால் அனுப்பவேண்டும் என்று உத்தரவு இட்டார். மேலும், ஒரு பசுவையும் அந்தக் கனவில் காட்டினார். பத்மா வழக்கம்போலவே அந்தச் செய்தியை சுந்தரநாராயணனிடம் தெரிவித்து, உரிய ஏற்பாடு செய்யச் சொன்னார். மேலும், தன் கனவில் ராகவேந்திரர் காட்டிய அடையாளங்களுடன் ஏதேனும் பசு தேடி வந்தால், உரிய பணம் கொடுத்து அந்தப் பசுவை விலைக்கு வாங்கும்படியும் கூறிவிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சித்தமெல்லாம் சித்தமல்லி - 7!

அப்போது சுந்தரநாராயணன் வீட்டில் இருந்தது ஒரே ஒரு பசு மட்டும்தான். வைத்தீஸ்வரன்கோவில் ஆலயத்துக்குப் பிரதோஷத்துக்கு பிரதோஷம் பால் கொடுக்க வேண்டும் என்றால், குறைந்தது ஐந்து பசுக்களாவது வேண்டுமே என்று திகைத்த   சுந்தரநாராயணன், பாரத்தை ராகவேந்திரர்மேல் போட்டுவிட்டு வயலுக்குச் சென்றுவிட்டார்.

வயலில் அறுவடை நடந்துகொண்டிருந்ததைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சுந்தர நாராயணனைப் பார்த்தபடியே ஒரு பசு நிதானமாக நடந்து வந்து, அவர் முன்னால் நின்றது. அந்தப் பசுவை விரட்டிவிட்டுத் தன் வேலையைக் கவனித்தார் சுந்தரநாராயணன். அடுத்த நாள் அவர் வயலுக்குச் சென்றபோது, அந்தப் பசு அங்கே குவிக்கப் பட்டு இருந்த வைக்கோல்மீது படுத்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் அவர் அந்த மாட்டை உற்றுப் பார்த்தார். பத்மா மாமி சொன்ன அடையாளங்களுடன் அந்தப் பசு இருப்பது அப்போதுதான் அவருக்கு உறைத்தது. அந்தப் பசு சினையாக இருந்தது. விசாரித்தபோது, பக்கத்தில் இருந்த குண்ணம் என்ற ஊரைச் சேர்ந்தவரின் பசு அது என்று தெரியவந்தது. உடனே சுந்தரநாராயணன் அவரிடம் பேசி, அந்தப் பசுவை விலைக்கு வாங்கி அதற்கு பத்மாவதி தாயாரின் பெயரான பத்மா என்ற பெயர் சூட்டினார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 7!

இப்போது அவரிடம் இரண்டு பசுக்கள். இரண்டு பசுக்கள் மட்டுமே இருந்தால், அது கோசாலை ஆகிவிடுமா என்ன? நிறைய பசுக்கள் இருந்தால்தானே கோசாலைக்கு அழகு?! அதற்கும் மகான் ராகவேந்திரர் தன்னுடைய அருளாடலை நிகழ்த்தினார். சென்னையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான பரிமளம் என்பவரது கனவிலும், திரிபுரசுந்தரி என்பவரது கனவிலும் தோன்றி, சித்தமல்லி திருவேங்கடநாதர் ஆலயத்தின் கோசாலைக்கு பசு வாங்கிக் கொடுக்கும்படி உத்தரவு தந்தார். அவர்களும் அப்படியே வாங்கித் தர, சுந்தர நாராயணனிடம் இப்போது நான்கு பசுக்கள் சேர்ந்துவிட்டன. 'இனி கவலை இல்லை. ராகவேந்திரர் சொன்னபடியே வைத்தீஸ்வரன்கோவில் ஆலயத்துக்கு பிரதோஷம் தோறும் பால் கொடுத்து விடலாம்’ என்று சந்தோஷப் பட்டுக்கொண்டார். அவருடைய சந்தோஷத்தை மேலும் அதிகரிப்பதுபோல், அவருடைய நண்பரும் ஸ்டேட் பாங்க்கில் பணிபுரிபவருமான சீனிவாசன் என்பவரும் ஒரு பசுவை வாங்கி, கோசாலைக்கு அர்ப்பணித்தார். அடுத்த சில வாரங்களுக்குள், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் குமார் என்னும் அன்பர், தன் தாயின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு பசுவை வாங்கி, அதற்கு ராஜலக்ஷ்மி என்று பெயர் சூட்டி கோசாலைக்கு தானம் செய்தார். சுந்தர நாராயணனுக்குச் சந்தோஷம் தாளவில்லை.

ஆனால், அவ்வப்போது சில கஷ்டங்களையும் சங்கடங்களையும் அனுபவித்தால்தானே மனித மனம் பக்குவப்படும்?!

சில மாதங்களில், பசுக்கள் தந்துகொண்டிருந்த பாலின் அளவு குறையவே, இன்னும் இரண்டு பசுக்களை வாங்கினால்தான் சரியாக இருக்கும் என்று சுந்தரநாராயணன் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், பக்கத்தில் இருந்த மணல்மேடு என்ற ஊரில் இருந்து வந்த ஒரு மாட்டுத் தரகர், ஓர் உயர் ஜாதிப் பசு விலைக்கு வந்திருப்பதாகச் சொல்லி, சுந்தரநாராயணனை அழைத்துச் சென்றார். அவருடன் சென்று சுந்தரநாராயணன் அந்தப் பசுவைப் பார்த்தார். அது ஓர் உயர்ஜாதி சிந்திப் பசு. பசு அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. விலையை விசாரித்தார். தரகர் சொன்ன விலையைக் கேட்டதும், சுந்தர நாராயணன் ஆடிப்போய் சற்றே பின்வாங்கினார். தரகர் சொன்ன விலை 65,000 ரூபாய். சுந்தரநாராயணன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொல்லியும், அந்தத் தரகர் விடுவதாக இல்லை. அவரே பசுவின் விலையில் 10,000 ரூபாய் குறைத்து, தன் கையில் இருந்தே 101 ரூபாய் முன்பணமாகக் கொடுத்து சுந்தரநாராயணனுக்கு விற்றதுடன், அவர் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் ஒரு வண்டியில் பசுவை ஏற்றி, சித்தமல்லிக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.

அத்துடனாவது அந்தத் தரகர் சும்மா இருந்தாரா என்றால், அதுதான் இல்லை. சுந்தரநாராயணனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த இன்னொரு கிராமத்துக்குச் சென்றார். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் விற்பதற்குத் தயாராக வைத்திருந்த பசுவையும் 29,000 ரூபாய்க்கு விலை பேசி, சுந்தரநாராயணனை வாங்கும்படி செய்துவிட்டார். ஆக, சுந்தரநாராயணன் இப்போது 84,000 ரூபாய்க்குக் கடனாளி!

சித்தமெல்லாம் சித்தமல்லி - 7!

தன் பக்தனை மேலும் தவிக்கவிடாமல், ராகவேந்திரர் ஓர் அருளாடல் புரிந்தார். தன் தாயின் நினைவாக ஒரு பசுவை கோதானம் செய்திருந்த குமார் என்பவரின் உறவினரிடம் இருந்து அடுத்த நாளே கோயில் திருப்பணிக்காக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வந்து சேர்ந்தது. பெருமாளின் அருள்திறனையும் ராகவேந்திரரின் அனுக்கிரஹத் தையும் எண்ணி பூரித்துப் போனார் சுந்தரநாராயணன்.

ஒருநாள், அவர் மதியவேளையில் பசுக்களுக்கு தீவனம் கொடுத்துக்கொண்டிருந்தார். இன்னும் இரண்டு பசுக்களுக்கு மட்டுமே தீவனம் கொடுக்கவேண்டி இருந்தது. அவற்றின் முன் தீவனத் தொட்டிகளை வைத்து, தீவனத்தை ஊட்ட முயற்சித்தார். அவற்றில் ஒரு பசு, ஸ்ரீராகவேந்திரரால் கனவில் அடையாளம் காட்டப்பட்ட பசுவாகும். ஆனால்,  ஏனோ தெரியவில்லை, அடமாக அந்த இரண்டு பசுக்களும் உணவை ஏற்க வாயைத் திறக்கவே இல்லை. சுந்தர நாராயணனுக்கோ கொள்ளைப் பசி! அவருக்குள் ஓர் ஓரத்தில் மறைந்திருந்த மூர்க்கம் தலைதூக்கியது. அந்த ஆவேசத்தில் அந்தப் பசுக்களைப் பார்த்து, ''ஏன் இப்படி என் பிராணனை வாங்குகிறீர்கள்?'' என்று கோபத்துடன் அடிக்கப் பார்த்தார்.

அப்போது, அவர் மனக்கண்ணில் தோன்றியது ஒரு விசித்திரக் காட்சி! அது...

சித்தம் சிலிர்க்கும்    

படங்கள்: க.சதீஷ்குமார்

வயலில் அறுவடை பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த சுந்தரநாராயணனைப் பார்த்தபடியே ஒரு பசு நிதானமாக நடந்து வந்து, அவர் முன்னால் நின்றது...