மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ

அருட்களஞ்சியம்

குசலவர் வழிபட்ட குறுங்காலீஸ்வரர்! 

பூவிருந்தவல்லிக்குப் போகும் வழியில், சென்னையிலிருந்து ஆறாவது மைலில் நெடுஞ்சாலையை அடுத்து இடதுபுறம் அமைந்திருப்பதுதான் கோயம்பேடு என்கிற குசலபுரி க்ஷேத்திரம்.

ஊருக்குள் நுழைந்ததும் ரம்மியமான கிராமியச் சூழ்நிலை நம்மை வரவேற்கிறது. புராதனப் பெருமையும் சிற்ப எழிலும் குன்றாமல் தோற்றம் அளிக்கும் அக்கோயிலில், அன்னை பராசக்தி அறம் வளர்க்கும் செல்வியாக அருளாட்சி செலுத்துகிறாள். தெய்விக மணம் கமழும் அந்தச் சுற்றுப்புறத்தின் அமைப்பில் நம் சிந்தையைப் பறிகொடுக்கிறோம்.

இத்தலத்தின் மகிமையைக் கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது. இயற்கை வளம் கொழிக்கும் அந்தப் புனித பூமியிலே வாழ வேண்டும் எனத் திருவுள்ளம் கொண்டு, பரமேஸ்வரன் சுயம்பு லிங்கமாக இவ்விடத்தில் தோன்றி திருக்கோயில் கொண்டதாகவும், ராமனின் புதல்வர்களான குசலவர்கள், தங்கள் தந்தையென்று அறியாமலே அவருடன் போரிட்டதற்குப் பிராயச்சித்தமாக அந்தச் சிவலிங்கத்தை பூஜித்ததாகவும் கூறப்படுகிறது. வான்மீகி மாமுனிவரின் ஆச்ரமம் அங்குதான் இருந்ததாகவும், இளையபெருமாள், ராமச்சந்திரமூர்த்தியின் ஆணையின்படி கருவுற்ற நிலையிலிருந்த சீதாபிராட்டியை அருகிலிருந்த வனத்தில்தான் தனியே விட்டுவிட்டுச் சென்றதாக வும், தலபுராணமும் செவிவழி வந்த செய்தியும் கூறுகின்றன.

அருட்களஞ்சியம்

அருகில் கோயில் கொண்டுள்ள வைகுண்டவாசப் பெருமாளை வான்மீகி முனிவர் வழிபட்டு வந்தாரென்றும் நம்பப் படுகிறது. பெருமாள் கோயிலில் குசலவர்களுடன் வான்மீகி அமர்ந்திருப்பதுபோல் ஓர் உருவச்சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலின் தனிச் சிறப்பு  சிவலிங்கத்தின் வடிவமும், அது வடக்கு நோக்கியிருக்கும் நிலையும்தான். ஆவுடையாருக்கு மேல் லிங்கம் நாலு அங்குல உயரமே இருப்பதால் சுவாமிக்கு 'குறுங்காலீஸ்வரர்’ என்ற சிறப்புப் பெயரும், குசலவர்கள் வழிபட்டதால் 'குசலவபுரீசுவரர்’ என்ற திருநாமமும் வழங்கி வருகின்றன.

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் 'கோசை நகர் வாழவரும் ஈச’ என்று இங்குள்ள முருகனைத் துதித்துப் பாடியிருக்கிறார். இத்திருக் கோயிலின் சிறப்பை விளக்கும் வகையில் ஒரு பாடல் கர்ண பரம்பரையாகக் கூறப்படுகிறது.

வடக்குப் பார்த்த

சுவாமியுமில்லை

மடக்குபோல

லிங்கமுமில்லை

குறுங்காலீசுவரர் என்ற

பேருமில்லை

கோயம்பேடு என்ற

ஊருமில்லை.

சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில் மூன்றாவது குலோத்துங்க சோழனால் நன்கு பரிபாலிக்கப் பெற்று வந்திருக்கிறது என்பதைக் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம்.

அருட்களஞ்சியம்

முன் மண்டபமும் தர்மசம்வர்த்தினி அம்மனின் கோயிலும் விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த புக்கராயரின் ஆதரவில் நிர்மாணிக்கப்படதென்றும் தெரிகிறது.

இக்கோயிலில் சிற்பங்களும் சிலைகளும் கலையுணர்வோடு வடிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். முன் மண்டபத்தில் கம்பீரமாய் அமர்ந்து நம்மை வரவேற்கும் பிரணவ மந்திரத்தின் வடிவமாம் 'துயர் தீர்க்கும் துதிக்கையானை’ முதலில் குறிப்பிட வேண்டும்.

பழம்பெரும் கலை நோக்கோடு உருவாக்கப் பெற்ற நடராஜப் பெருமானின் விக்கிரகம் ஒன்றும் சுவாமி சந்நிதிக்கு கிழக்குப் புறத்தில், தெற்கு நோக்கி ஆனந்த நடம் புரிந்துகொண்டு கண்கவர் கோலத்துடன் காட்சி தருகிறது.

அதையடுத்து, மேற்கு திக்கை நோக்கி சூர்ய பகவானின் சிலாரூபம் அழகுற மிளிர்கிறது. வடக்குப் பார்த்த சந்நிதியாதலால், லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில் 'வியாக்கியான தட்சிணாமூர்த்தி’ ஞானாசிரியராக அருள் தவம் புரிகிறார். சோமாஸ்கந்தரும் ஆறுமுகப் பெருமகனாரும் நெஞ்சையள்ளுகிறார்கள்.

குசலவபுரீசுவரர் உறையும் கோயிலாதலால் மண்டபத்திலுள்ள சிற்பத் தூண்களில் ராமாயண காவியத்தில் இருக்கும் பல காட்சிகள் உருவகப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். மண்டபத்துக்குள் நுழையும்போது, குசலவர்கள் அசுவமேதக் குதிரையைப் பிடித்து நிறுத்துவது போன்ற சிற்பத் தூண் நம் சிந்தையைக் கவருகிறது.

அருட்களஞ்சியம்

இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே நவீனமும் கலைநயமும் கொண்ட நவக்கிரகம்தான். அழகான கற்பீடத்தின் மீது தாமரை மலர் ஆசனத்தில் சூரியபகவானின் ஏழு பரிகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேர் பாய்ந்து ஓடும் பாவத்தில் அமைக்கப்பட்டிக்க, அதைச் சுற்றிலும் கீழே மற்ற கிரகங்கள் தத்தம் வாகனங்களுடன் காட்சித் தர, பீடத்தைச் சுற்றிலும் ராசிச் சக்கரங்கள் செதுக்கப் பட்டிருப்பது, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.  

** 1965 ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் இருந்து...

அகலிகை வரலாறு

விச்வாமித்திரன் ராம  லட்சுமணர்களை அழைத்துக்கொண்டு ஜனக மஹாராஜாவின் விதேக நாட்டை அடைந்தான். அந்த நாட்டின் தலைநகரான மிதிலையின் கோட்டை மதிலுக்கு வெளியே தங்கினபோது, இவர்கள் ஒரு வெற்றிடத்திலே மேடாக உயர்ந்து தோன்றிய கருங்கல் ஒன்றைக் கண்டார்கள்.

ராமன் அந்த வழியாகச் சென்றதுதான் தாமஸம், திடீரென்று  என்ன இந்திர ஜாலம்! அங்கே அந்தக் கல் இல்லை; தேஜோமயமான ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள். ராமன் பாத துளி பட்டுத்தான் கருங்கல் அந்தப் பெண்ணுருவம் ஆகிவிட்டதாம்.

அருட்களஞ்சியம்

'அவள் யாரோ?' என்ற வினா ராமன் உள்ளத்தில் எழுந்துதானே இருக்க வேண்டும்? ஆனால், அத்தகைய கேள்வி ஒன்றும் வாயிலிருந்து வெளிப்படவில்லை. எனினும், அந்த வினாவை எதிர்பார்த்து அவள் இன்னாளென்று அறிவிக்கிறான் முனிவன்.

'மாயிரு விசும்பிற் கங்கை

மண்மிசை இழித்தோன் மைந்த!

மேயின உவகை யோடு

மின்னென ஒதுங்கி நின்றாள்,

தீவினை நயந்து செய்த

தேவர்கோன் தனக்குச் செங்கண்

ஆயிரம் அளித்தோன் பன்னி

அகலிகை ஆகும்’ என்றான்.

''இதோ உவகையும் நாணமும் ஒருங்கே பூத்த மின்னற் கொடி போல் ஒதுங்கி நிற்கிறாளே; இவள்தான் உலகப் பிரசித்தரான கௌதம மஹரிஷியின் பத்தினி; அகலிகை என்று பெயர்' என்கிறான் விச்வாமித்திரன்.

'தீவினை நயந்து செய்த தேவர்கோன்’ என்பது கவனிக்கத்தக்கது. தேவராஜாவே அகலிகையைக் காட்டிலும் பெருங் குற்றவாளி என்பது இப்போதே வற்புறுத்தப்படுகிறது.

மஹரிஷியின் மகத்தான சாப சக்தியைச் சொல்லி, அவருடைய பத்தினி என்று அறிவிப்பதற்கு முன்னமே, அவளை விடுவித்த ராமனுடைய மகத்தான அனுக்ரக சக்தியையும் மறைவாகப் பாராட்டுவதுபோல், ''வானத்திலுள்ள கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்து பூமியை வளமுறச் செய்த பகீரத பரம்பரையில் வந்தவனே!' என்கிறான் முனிவன்.

'மாயிரு விசும்பிற் கங்கை

மண்மிசை இழித்தோன் மைந்த!’

தொடர்ந்து அகலிகை வரலாற்றையும், அவள் சாபம் பெற்ற கதையையும் ராமனுக்கு விவரிக்கிறான் விசுவாமித்திரன்

மெல்லியலாளை நோக்கி,

விலைமகள் அனைய நீயும்

கல் இயல் ஆதி!’ என்றான்

கருங்கலாய்மருங்கு வீழ்வாள்.

'காமப் புதுமண மது’ என்று உணர்ந்த பின்னும் 'தக்கது அன்று’ என்று பகுத்தறியும் விவேகத்தையும், சித்த சக்தியையும் இழந்து தாழ்ந்து கிடந்ததால், அகலிகையைக் கல்லாகும்படி சபித்துவிட்டாராம் கௌதம மகரிஷி. இப்படிக் கல்லாக்கிய சுடு சொல்லைக் காட்டிலும், 'விலைமகள் அனைய நீயும்’ என்ற ஏச்சாகிய சுடு சொல் அவளை எவ்வளவு அதிகமாய்ச் சுட்டிருக்கவேண்டும்!

கல்லாய் விழுவதற்கு முன் 'இந்தச் சாபத்திற்கு ஒரு முடிவை அனுக்ரஹிக்க வேணும்’ என்று அவள் வேண்டிக்கொள்ள, கௌதமர் சாப விமோசனம் அருளினாராம்.

பின்னர், தேவர்கள் வேண்ட, தேவேந்திரன் சாபத்தையும் ஒருவாறு போக்கிவைத்தார் கௌதமர். இப்படிக் கதை சொல்லும் விச்வாமித்திரன், ''அந்த அழகிய அகலிகைதான் கல்லாய்க் கிடந்தாள்!' என்று கதையை முடிக்கிறான்.

'மைவண்ணத்(து) அரக்கி போரில்,

மழைவண்ணத்(து) அண்ண லே! உன்

கைவண்ணம் அங்குக் கண்டேன்;

கால்வண்ணம் இங்குக் கண்டேன்’

நல்லவளுக்கு வந்த துரதிர்ஷ்டமும் விசேஷ நல்லதிர்ஷ்டம் ஆகிவிட்டதாம். தாடகை வதத்தில் துஷ்ட நிக்ரகமாகிய 'கை வண்ணம்’ கண்டவர், அகலிகையின் சாப விமோசனத்திலே சிஷ்ட பரிபாலனமாகிய 'கால் வண்ணம்’ கண்டாராம்.

எனவே 'இனித் தீயோர் அழிவர்; நல்லோர் நலம் பெறுவர்; உலகம் உய்ந்து போகும்’ என்றெல்லாம் நம்பிக்கைகள் எழுகின்றன முனிவன் உள்ளத்திலே அலை அலையாக. தொலைதூரத்திலே நடைபெற இருக்கும் ராவண வதத்தைக்கூட விச்வாமித்திரன் இப்போதே நடந்துவிட்டது போல் கனவு கண்டு குதூகலப்படுவது போலத் தோன்றுகிறது.

அகலிகை கதை பிரசித்தமானது; சங்க காலத்திலும் பிரசித்தமாகத் தமிழ்நாட்டில் வழங்கி வந்தது. பழைய தமிழர்களுக்கிடையே வழங்கி வந்தபடி இக்கதையை மாற்றி அமைக்கும் கம்பன், அகலிகையை 'நெஞ்சினால் பிழைப்பிலாள்’ ஆக்குகிறான்; தேவ ராஜாவைத் 'தீவினை நயந்து செய்த தேவர்கோன்’ ஆக்குகிறான். இத்தகைய மாறுதலால், ஆண்மகனது வஞ்சனையே பெண்மையின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ற கொள்கையை உய்த்துணர வைக்கிறான் கம்பன்.

**  24.9.44, 1.10.44 ஆனந்த விகடன் இதழில் இருந்து...