Published:Updated:

திருமகள் இருப்பிடம்!

திருமகள் இருப்பிடம்!

வாழ்வியலின் அடிப்படைச் செய்திகளை எளிதில் நினைவு கொள்ளும் வகையில் தொகுத்துக் கூற எழுந்தவை சதக நூல்களாகும். எடுத்துக்காட்டாக நாம் எப்படி நீராடுவது, அமர்ந்து உண்பது, இன்ன பருவத்தில் இன்னது செய்ய வேண்டுமென்பது, உண்ணத்தக்கது எது, உண்ணத்தகாதது எது...என்பனவெல்லாம் இந்நூலில் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன. 

திருமகள் இருப்பிடம்!

இவ்வகையில், எந்தெந்த இடங்களில் மகாலட்சுமி வாழ்கிறாள் என்றும் பட்டியலிடப்பட்டுக் கூறப்பட்டுள்ளது. குமரேச சதகத்தில் திருமகளின் இருப்பிடங்களைக் கூறும் பாடலை இங்கே காணலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடவா ரணத்திலும் கங்கா சலத்திலும்

             கமலா சனந்தன் னிலும்

காகுத்தன் மார்பினும் கொற்றவ ரிடத்திலும்

             காலியின் கூட்டத்திலும்

நடமாடு பரியிலும் பொய்வார்த்தை சொல்லாத

             நல்லோ ரிடந்தன் னிலும்

நல்லசுப லட்சண மிகுந்தமனை தன்னிலும்

             ரணசுத்த வீரர்பா லும்

அடர்கே தனத்திலும் சுயம்வரந் தன்னிலும்

             அருந்துளசி வில்வத்தி லும்

அலர்தரு கடப்பமலர் தனிலும்இர தத்திலும்

             அதிககுண மான ரூப

மடவா ரிடத்திலும் குடிகொண்டு திருமாது

             மாறா(து) இருப்பள் அன் றோ

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

              மலைமேவு குமரே சனே.

பொருள்: வலிய அழகிய யானைகளிலும் கங்கை நீரிலும், தாமரை ஆசனத்திலும், திருமாலின் மார்பிலும், மன்னவர்களிடத்திலும், பசுவின் பின்புறத்திலும் நன்கு முற்றி வளர்ந்து காற்றில் நடனமாடும் நெற் பயிர் விளைவிலும், பொய்பேசாத சான்றோர்களிடத்திலும், நல்ல சுபம் பொருந்திய மங்கலம் நிறைந்த வீடுகளிலும், வீரர்களின் தோளிலும், அரசனின் கொடியிலும், பெண்கள் தங்கள் மனதுக்கு உகந்த மணாளனைத் தெரிந்து எடுக்கும் சுயம்வர மண்டபத்திலும், துளசி, வில்வம் ஆகியவற்றிலும், மலர்கள் பூத்துக் குலுங்கும் கடம்ப மரங்களிலும், பழங்களின் சுவையிலும், தேர்களிலும், அதிஅழகும் குணமும் நிறைந்த பெண்களிடத்திலும் திருமகளாகிய மகாலட்சுமி நீங்காது இருப்பாள். (மயில் ஏறி விளையாடும் குகனே, புல்வயல் எனும் தலத்திலுள்ள மலைமீது குடியிருக்கும் குமரேசனே!)

இந்த இடங்களை நாம் புனிதமாகப் போற்றிக் கொண்டாட வேண்டும். அதனால் திருமகள் அருள் நம்மை விட்டு நீங்காது நிலையாக இருக்கும்.