Published:Updated:

ஞான சரஸ்வதியின் பதினாறு திருநாமங்கள்!

ஞான சரஸ்வதியின் பதினாறு திருநாமங்கள்!

• கும்பகோணம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் வீணை ஏந்தியபடி அருளும் கலைவாணி, தன் நாயகனைப் போன்றே நான்கு முகங்களுடன் தரிசனம் தருகிறாள். 

•  மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், சுவாமி சந்நிதிக்கு அடுத்துள்ள பிராகாரத்தில் சரஸ்வதிக்குத் தனிச் சந்நிதி உள்ளது. சரஸ்வதி பூஜையன்று, இந்தச் சந்நிதிக்குள் ஏராளமான வீணைக் கலைஞர்கள் அமர்ந்து, வீணையை இசைத்து வழிபடுகின்றனர்.

•  சென்னை, தியாகராயநகர் தபால் நிலையத் துக்கு அருகில் உள்ள அனுக்கிரக விநாயகர் கோயிலில், பளிங்கால் ஆன சரஸ்வதிதேவி சிலை உள்ளது. சிலை வட இந்தியப் பாணியில் இருந்தாலும், பூஜை வழிபாடெல்லாம் தமிழ் சம்பிரதாயப்படிதான். பாஸ்போர்ட்டுக்கு மனு செய்பவர்கள் இந்த சரஸ்வதியை வழிபட்டுவிட்டுத்தான் தபால் மூலம் அனுப்புவார்கள். அவ்வாறு செய்தால், பாஸ்போர்ட் விரைவில் கிடைக்கும் என்று நம்பிகை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

•  காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சோபனப்படிக்குக் கீழே சரஸ்வதியின் திருஉருவம் அமைந்துள்ளது.

ஞான சரஸ்வதியின் பதினாறு திருநாமங்கள்!

•  கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில், பரவூர் என்ற இடத்தில் (எர்ணாகுளத்திலிருந்து 25 கி.மீ) வெண்தாமரை பூத்துக் குலுங்கும் சதுர வடிவமான ஒரு குளத்தின் மையத்தில் உள்ளது கோம்பிகா எனும் சரஸ்வதி கோயில். தட்சிண மூகாம்பிகை என்றும் இதை அழைக்கிறார்கள்.

•  பாலக்காடு அருகில் உள்ள கொடுத்திரப்புன்னி ஆதிகேசவப் பெருமாள் கோயிலில், சரஸ்வதி பூஜையன்று 'நவமி விளக்குத் திருவிழா’ கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கோயில் முழுக்க விளக்குகள் ஏற்றப்பட்டு, யானைகள் ஊர்வலம் செல்வது கண்கொள்ளாக் காட்சி!

•  திருச்சி அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில், பிரம்மனைப் போலவே சரஸ்வதிக்கும் தனிச் சந்நிதி உள்ளது. ஞான சரஸ்வதியான இவள் வீணை இல்லாமல், கையில் ஓலைச் சுவடியோடும் ஜபமாலையோடும் காட்சியளிக்கிறாள்.

• வேலூர் கிருஷ்ணகிரி பாதையில் உள்ள வாணியம்பாடியில், ஆலயத்தின் முகப்பிலேயே சிவபார்வதியை கலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சந்நிதியில் வீணை ஏந்திய வாணி அருள்கிறாள்.

•  காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில், எட்டுக் கரங்கள் கொண்ட சரஸ்வதியைக் காணலாம். இந்தத் தேவியை சியாமளா என்று அழைப்பர்.

•  சியாமா, சியாமளா, மந்திரிநாயகி, மந்திரிணி, சுகப்ரியா, சசிவேசாணி, பிரதாநேசி, கதம்பேசி, கதம்பவாசினி, சதாமதா, சங்கீதயோகினி, வீணாவதி, வைணிகி, முத்திரணி, பிரியகப்ரியா, நிபப்ரியா எனப் பதினாறு திருநாமங்களால் சரஸ்வதியை அழைக்கிறது லலிதோபாக்யானம்.

•  பாரதி, சாரதாதேவி, ஹம்சவாகினி, ஜகநி, புத்திதாத்ரி, வாணீஸ்வரி, வரதாயினி, க்ஷக்ரகண்டி, புவனேஸ்வரி, கௌமாரி, பிரம்மசாரிணி ஆகியவை சரஸ்வதிக்கு வேறு பெயர்கள்.

•  பொதுவாக, சரஸ்வதியின் வாகனமாக அன்னப் பறவை திகழ்கிறது. ஆனால், மும்பை மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மயில் மீது அமர்ந்திருக்கும் சரஸ்வதியைக் காணலாம்.

கே.என்.மகாலிங்கம்