Published:Updated:

`அகல்விளக்கான உலகு, எண்ணெயான கடல், சுடரான சூரியன்...’ - சிலிர்க்கவைக்கும் திவ்ய பிரபந்தம்! #Margazhi2017

`அகல்விளக்கான உலகு, எண்ணெயான கடல், சுடரான சூரியன்...’ - சிலிர்க்கவைக்கும் திவ்ய பிரபந்தம்! #Margazhi2017
`அகல்விளக்கான உலகு, எண்ணெயான கடல், சுடரான சூரியன்...’ - சிலிர்க்கவைக்கும் திவ்ய பிரபந்தம்! #Margazhi2017

ஶ்ரீவைஷ்ணவர்களின் தமிழ் வேதமாகப் போற்றப்பெறும் சிறப்பினுக்கு உரிய நாலாயிர திவ்ய பிரபந்தம், பன்னிரண்டு ஆழ்வார்களின் 3,892 பாசுரங்களுடன் ஶ்ரீராமாநுஜரின் பக்தரான திருவரங்கத்து அமுதனார் இயற்றிய, 'இராமானுசர் நூற்றந்தாதி'யின் 108 பாசுரங்களும் சேர்த்து 4,000 பாடல்கள் இருப்பதால் நாலாயிர திவ்யபிரபந்தம் என்று போற்றப்படுகிறது. 12 ஆழ்வார்களும் 23 தலைப்புகளில் திருமாலையும், அவரது தலங்களையும் போற்றிப் பாடிய பாசுரங்களே இவை. பண்ணோடு கூடிய இந்த இனிய பாடல்கள் கேட்பவரை மெய்மறக்கச் செய்பவை. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் முதலாழ்வார்கள் எனப்படும் பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் இவர்களே திவ்விய பிரபந்த பாசுரங்களை இயற்றிப் பாடத் தொடங்கினர். பின்னர் முதலாழ்வார்களின் அடியொற்றி மற்ற ஆழ்வார்களும் பரந்தாமன் புகழ் பாடும் பாசுரங்களைப் பாடி வழிபட்டனர்.

தேனினும் இனிய சுவைமிக்க திவ்ய பிரபந்த பாசுரங்களை 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் தொகுத்து வழங்கினார். பின்னர் மணவாளமாமுனிகள் இராமானுசர் நூற்றந்தாதி பாடல்களையும் இணைத்து நான்காயிரம் பாடல்களாக்கி முழுமை செய்தார். இன்றும் இந்த இனிய தமிழ் வேதப்பாடல்களின் அழகுக்கு மயங்கியே பெருமாள் அதன் பின்னே செல்கிறார் என்பது உண்மை. ஆம், பெருமாளின் புறப்பாட்டின்போது முன்னே தமிழின் திவ்யபிரபந்தம் மட்டுமே ஓதப்படுகிறது. சம்ஸ்கிருத வேதங்கள் யாவும் பெருமாளைப் பின் தொடர்ந்து செல்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் பேசும் பெருமாள் பக்தர்களாலும் ஓதப்படும் திராவிட வேதம் இது என்பது பெருமைக்குரிய விஷயம். தமிழின் இனிமைக்கு இனிமை சேர்க்கும் இந்த ஆழ்வார்களின் அமுதப்பாடல்கள் தோன்றிய விதமே சுவாரஸ்யமானதுதான்.

அது 6-ஆம் நூற்றாண்டு. மாற்று இனத்தாரின் மாயையிலிருந்து மக்களை மீட்கவும், வைணவத்தின் பெருமையை எடுத்துக் கூறவும் மூன்று அவதாரங்கள் நிகழ்ந்தன. ஆம், பெருமாளின் பாஞ்சஜன்யம் என்ற திருச்சங்கின் அம்சமாக ஐப்பசி மாத, திருவோண நட்சத்திரத்தில், காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா தலத்தில் உள்ள பொய்கையில் பொற்றாமரை மலரில் பேரொளியாக அவதரித்தவரே பொய்கையாழ்வார். அடுத்த நாளே அவிட்ட நட்சத்திரத்தில் பெருமாளின் கதாயுதத்தின் அம்சமாக மாமல்லை தலத்து தடாகத்தில் நீலோற்பல மலரில் பேரொளியாக அவதரித்தவரே பேரொளி பூதத்தாழ்வார். மறுநாள் சதய நட்சத்திரத்தில் திருமாலின் வாளின் அம்சமாய் பெருமைமிகு மயிலையில் ஒரு கிணற்றில் செவ்வல்லி மலரில் பேரொளி வடிவமாகத் தோன்றியவரே பேயாழ்வார். இந்த மூவருமே திருமாலின் மீது மட்டற்ற பக்தி கொண்டு ஊர் ஊராகச் சுற்றி தரிசித்துக்கொண்டு வந்தனர். அப்போதுதான் திருக்கோவிலூரில் அந்தத் திருவிளையாடல் நடந்தது. மூவரின் பெருமையை உலகறியச் செய்யவும், தமிழிலும் வேதம் தோன்றவும் திருக்கோவிலூர் திரிவிக்ரமப் பெருமாள் நடத்திய நாடகம் அது.

ஒருநாள் இரவு...

மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. கனத்த இருள் வேறு. கால் கடுக்க நடந்து வந்ததில் சோர்ந்து போயிருந்தார் பொய்கையாழ்வார். இனியும் நடக்க முடியாது என்ற நிலையில் திருக்கோவிலூரை அடைந்த அவர், அங்கிருந்த மிருகண்டு முனிவருடைய ஆசிரமத்திலிருந்த மிகச் சிறிய அறையில் தங்கினார். திரிவிக்ரமப் பெருமாள் கோயிலின் எதிரே அந்த ஆசிரமம் இருந்தது. சிறிது நேரத்தில் தெற்கிலிருந்து வந்த பூதத்தாழ்வாரும் அந்த அறைக்குள் நுழைந்தார். 'ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்' என்ற அளவில் இருந்த அறையில் இருவரும் அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அங்கு சோர்வாக வந்து சேர்ந்தார் பேயாழ்வார். மூவருமே நெருங்கி நின்றபடி இருந்தனர். பசியும், சோர்வும் அவர்களை அழுத்த, வெளியே கடும் மழை வெளுத்துக்கொண்டிருந்தது. களைப்பை நீக்க எண்ணி, பேசினாலே பசி தீரும் பெருமாளின் பெருமைகளைப் பேசியபடி பொழுது போக்கினர். தமது புகழினைத் தாமே கேட்க விரும்பிய திரிவிக்ரமப் பெருமாள், அந்த மூவருக்குமிடையே புகுந்தார். பெருமாளும் வந்ததால் இடம் நெருக்கடியானது. மூவருக்கும் இடம் போதவில்லை என்ற நிலையில் யார் தங்களை நெருக்குவது என்ற கேள்வி மூவரிடமும் எழுந்தது. விளக்கேற்றி பார்க்க அப்போது வசதியில்லை. அதனால் ஒன்றும் பாதகம் இல்லை என்று நினைத்து, மூவரும் கூடி அழகிய பாசுரங்களால் ஞான விளக்கை ஏற்றத் தொடங்கினார்கள். ஆம், அப்போதுதான் திவ்யப்பிரபந்தத்தின் முதல் பாசுரம் உருவானது. பொய்கையாழ்வார் தம்முள் நெருங்கி நிற்பவர் பெருமாளே என்று உணர்ந்து பாடினார்.

'வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று.'

என்று, அணையும் அகல்விளக்கு ஏற்றாமல் பரந்த இந்த அகிலத்தையே அகல்விளக்காகவும், உலகை வளைத்துள்ள கடல்நீரையே நெய்யாகவும் வார்த்தார். இந்த விளக்கின் விளிம்பிலே தோன்றும் சூரியனை அதிலேற்றும் சுடராக்கி மகிழ்ந்து வழிபட்டார் பொய்கையாழ்வார். அப்போது பெருமாள் அந்தப் பாடலுக்கு மகிழ்ந்து 'உம்' கொட்டும் ஒலி கேட்டது. பொய்கையாழ்வார் முடித்ததும், பூதத்தாழ்வார் தொடங்கினார் ...
 

'அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்'


 

தூய அன்பே விளக்காகவும், ஆண்டவன் மீது கொண்ட விருப்பமே நெய்யாகவும், இறைவன் மீதான சிந்தனையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றித் துதித்தார் பூதத்தாழ்வார். இந்தப் பாடலைக் கேட்டும் திருமால் மகிழ்ந்து பாராட்டினார். பூதத்தாழ்வார் முடித்ததும் பேயாழ்வார் தொடங்கினார் ...

'திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக் கிளரும்

பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்

என்ஆழி வண்ணன்பால் இன்று'
 

இருவரும் ஏற்றிய ஒளிவிளக்கின் உதவியால் ஆழிவண்ணனான திருமாலைக் கண்டேன் என்று பேயாழ்வார் பாடி முடித்ததும், அங்கு பேரொளி பாய்ந்தது. சங்கு, சக்கரம், கதை, தாமரை ஏந்தி நெடியமால், காணுதற்கு அரிய கரியமால் மூவருக்கும் காட்சி தந்தார். ஆறாத அன்பால் தம்மை பாடிய மூவரையும் ஆசீர்வதித்தார். அந்த மூன்று பேருமே 'முதலாழ்வார்கள்' என்று போற்றப்பட்டார்கள். அவர்கள் பாடிய இந்த மூன்று பாடல்களே நாலாயிர திவ்யபிரபந்தத்தின் தொடக்கப் பாடலாகவும் ஆனது. கேட்பவர்களைப் பரவசப்படுத்தும் தமிழமுதம் இப்படித்தான் திருமாலின் அருளால் மூவராலும் உருவானது. மார்கழியின் சிறப்புக்கு மேலும் பெருமை சேர்க்கும் இந்தத் தமிழ் வேதப் பாடல்களைப் பாடி பகவானின் அனுகிரகத்தினைப் பெறுவோம்.