Published:Updated:

ஞானிகள், யோகிகள் வணங்கிப் போற்றிய ஞானமலை குமரன் தரிசனம்! காடு, மலை தாண்ட, கடவுளைத்தேடி..! பரவசப் பயணம் - 5

ஞானிகள், யோகிகள் வணங்கிப் போற்றிய ஞானமலை குமரன் தரிசனம்! காடு, மலை தாண்ட, கடவுளைத்தேடி..! பரவசப் பயணம் - 5
ஞானிகள், யோகிகள் வணங்கிப் போற்றிய ஞானமலை குமரன் தரிசனம்! காடு, மலை தாண்ட, கடவுளைத்தேடி..! பரவசப் பயணம் - 5

ஞானிகள், யோகிகள் வணங்கிப் போற்றிய ஞானமலை குமரன் தரிசனம்! காடு, மலை தாண்ட, கடவுளைத்தேடி..! பரவசப் பயணம் - 5

ல்லாப் பறவைகளும் மரத்தில் கூடு கட்டுகின்றன. ஆனால், ராஜாளி மட்டும் மலையில் வாழ்கின்றது. உயர்ந்த லட்சியங்கள்தாம் நம்மை உயர்ந்த மனிதர்களாக மாற்றும். நாம் பிறப்பெடுத்ததன் லட்சியமே வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றிக்கொள்வதற்காகத்தான். சிறப்பான வாழக்கையைப் பெறுவதற்கு நமக்கு இறையருள் தேவை. இறைவனைத் தேடி, இன்னருள் பெறுவதற்கு யாத்திரைகள் பெரும் உதவி செய்கின்றன. இயற்கையின் மேன்மையையும், இயற்கையைப் போற்றிப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்தவும், வலியுறுத்தவுமே மலைகளிலும், அடர்ந்த வனங்களிலும் கடவுளர்களின் கோயில்கள் அமைந்திருக்கின்றன.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் மாட்சியையும், இறைவனின் ஆட்சியையும் இயற்கையில் உணர்ந்துகொள்கிறோம். பஞ்சபூதங்களின்றி மனிதர்களே இல்லை என்ற உணர்வினைக் கண்டுகொள்கிறோம். இறைவனைத் தேடி இறையருள் பெற நாம் மேற்கொண்ட யாத்திரையின்போதுதான் நாம் ஞானமலையை தரிசித்தோம். இதுவரை ஞானமலையின் சிறப்பம்சங்களையும், அதிசயங்களையும் தரிசித்த நாம், இந்த நிறைவு அத்தியாயத்திலும் இன்னும் பல அதிசயங்களைக் காணவிருக்கிறோம்.

நாங்கள் மலையில் ஏறிக்கொண்டிருந்தபோதே, வானில் மேகங்கள் சூழ்ந்துகொண்டது. எங்கே மழை வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் நாம் வேகமாக ஏறத் தொடங்கினோம். ஆனால், மழை வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கட்டியம் கூறிச் சொல்வதுபோல், குரங்குகள் அன்னநடை போட்டபடி திரிந்துகொண்டிருந்தன. குரங்குகளை நமக்குச் சுட்டிக்காட்டிய அன்பர், ''மழை வரும் என்றால் இந்தக் குரங்குகள் முதலில் எங்காவது போய் ஒதுங்கிக்கொள்ளும். எனவே, நாம் பொறுமையாகவே செல்லலாம்'' என்று கூறினார்.

கோயிலின் பின்புறத்திலும் ஒரு கோயில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட அந்தக் கோயில் சிதிலமடைந்துவிடவே, தற்போது திருப்பணிகள் செய்து வருகிறார்கள் என்றும், அடுத்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாகவும் அங்கிருந்தவர்கள் கூறினார்கள். புதிதாகக் கட்டப்பட்டு வரும் கோயிலைக் கடந்து சென்ற நாம், முதலில் கண்டது பாலை சித்தர் என்னும் ஞானவெளி சித்தரின் ஜீவசமாதியை.

அருணகிரிநாதரின் குருவான பாலை சித்தர், பல அற்புத ஆற்றல்கள் கொண்ட மகாஞானி. மக்களின் குறைகளைத் தீர்த்த ஞானப்பொக்கிஷம். இவரின் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் இப்போது ஞானகிரீஸ்வரர் ஆலயமாக அமைந்துள்ளது. ஞானப்பூங்கோதை, ஞான கணபதி, ஞான சுப்பிரமணியர், நவகிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் இங்கு இருக்கின்றன. இவற்றையெல்லாம் தரிசித்து, மனதுக்குள் அந்த அற்புதச் சித்தரை எண்ணி சிறிது நேரம் அங்கேயே தியானம் செய்தோம். தியானத்தின் நிறைவில் மனம் நிர்மலமாகி, ஒரு பரவச உணர்வு நம்மை ஆட்கொண்டது.

அமைதியான சூழலில் மனமும் ஒடுங்கியிருக்க, நாம் நடையைத் தொடர்ந்தோம். எல்லாம் அவன் செயல் என்ற சரணாகதி நிலையில் ஆன்மா அடங்கி இருந்ததை அனுபவத்தில் நம்மால் உணரமுடிந்தது. மூச்சு விடும் சத்தம் கூட கேட்கும்படியான அமைதி அங்கே நிலவியது. எல்லாம் சித்தர் அருள் என்று எண்ணியபடி பின்புறம் இருந்த முருகப்பெருமானின் திருவடி பதிந்திருக்கும் ‘ஞானமலை முருகன் திருவடிப்பூங்கோயிலை' அடைந்தோம். அழகிய விசாலமான மண்டபத்தின் நடுவில், அருணகிரிநாதருக்குக் காட்சி தந்தபோது பதிந்த அழகன் முருகனின் பாதங்களை நாம் தரிசித்தோம்.

திருவண்ணாமலையில் கம்பத்து இளையவராக காட்சி தந்து அருணகிரிநாதரை ஆட்கொண்ட முருகப்பெருமான், ஞானமலையில் இரண்டாவது முறையாக ‘குறமகள் தழுவிய குமரனாக' காட்சி தந்தார். அவர் காட்சி தந்தபோது பதிந்த அவரது காலடித்தடங்கள் கண்டதும் மெய்சிலிர்த்துப்போனோம். பரவச நிலையில் அந்தத் திருவடிகளை விழுந்து வணங்கினோம். 'எத்தனையோ ஞானியர்களும், யோகியர்களும் வணங்கி ஏத்திய இந்த அற்புத மலரடிகளை இந்தச் சாதாரண அடியேனுக்கும் காணச் செய்தனையோ எங்கள் குமரா' என்று மனம் நெகிழ்ந்தவர்களாக அங்கும் சற்று நேரம் தியானம் செய்தோம்.

அந்த மண்டபத்தில் இருந்தபடியே கீழே தெரிந்த இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டி ருந்தோம். 'போதும், போதும் இத்தனை அற்புதமான இன்பங்கள் போதும்' என்று மனம் பரவசத்தில் லயித்திருக்க, அங்கேயே இருந்துவிட முடியாதா என்று எண்ணி ஏங்கச் செய்தது. ஆனால், நாம் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் அறிந்து இன்புறவேண்டுமே என்ற எண்ணமும், நமக்கான நம் கடமைகளும் நம் மனதைத் திருப்ப, நாம் அங்கிருந்து புறப்பட்டோம்.

வரும் வழியில் முருகப்பெருமான் திருக்கோயிலின் பக்கவாட்டில் மலையின் ஒருபக்கம் இறங்கினால் தாமரை மலர்கள் பூத்திருக்கும் ஞானச் சுனை அமைந்திருப்பதைக் காணலாம். இதுவே முருகப்பெருமானின் அபிஷேக நீராக முன்னர் இருந்துள்ளது. இப்போது பச்சை நிறத்தில் பாசிப் படர்ந்து இருக்கிறது. இந்தச் சுனையின் அருகே மேல்புறமாக காளிங்கராயன் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. "சகல லோகச் சக்கரவர்த்தி வென்று மண்கொண்ட சம்புவராயரின் (கி.பி 1322 - 1340) 18-ம் ஆட்சியாண்டில் சம்புவராயப் பழரையர் மகன் காளிங்கராயன் என்பவன் இங்கு ஞானமலை மேல் உள்ள கோயிலுக்குச் செல்லப் படிகளை அமைத்தான்' என்று அந்தக் கல்வெட்டு வரலாற்றுத் தகவலைச் சொல்கிறது.

மனம் நிறைய எதிர்பார்ப்புடன் சென்ற நமக்கு, ஞானமலையில் கிடைத்த ஆன்மிக அனுபவங்கள் ஏற்படுத்திய பரவச உணர்வை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அருணகிரிநாதருக்கு அருளிய அழகன் முருகன், 'குறமகள் தழுவிய குமர'னாகக் கோயில் கொண்டிருக்கும் ஞானமலையை தரிசித்துக் கிளம்பிய நாம், மலையடிவாரத்தை அடைந்ததும் மறுபடியும் மலையுச்சியைப் பார்த்து, அங்கிருக்கும் முருகப் பெருமானிடம், 'எல்லோருக்கும் எல்லா வளங்களையும் தந்தருள்வாய் முருகா' என்று பிரார்த்தித்தோம். மலைகள் மௌனமாக நம் கோரிக்கையை ஏற்று ஆசீர்வதிப்பதுபோல் மௌனமாகக் காட்சி தந்தது.

ஒருமுறை உண்டால் மட்டும் பசி இல்லாமல் போய்விடுமா என்ன? எத்தனை முறை உண்டாலும் மீண்டும் மீண்டும் பசிப்பதைப் போலத்தான் இறைவனைத் தேடும் முயற்சியும். எனவே, யாத்திரை என்பதும் திரும்பத் திரும்பத் தொடரவேண்டிய ஒன்றுதானே? எங்கெல்லாம் மனம் இறைவனோடு சங்கமிக்கிறதோ, எங்கெல்லாம் மனம் இறையுணர்வில் பரவசம் அடைகிறதோ அங்கெல்லாம் யாத்திரையைத் தொடரவேண்டும் என்ற எண்ணத்தில் நாமும் நம் அடுத்த யாத்திரையைத் தொடர்கிறோம்...

யாத்திரை தொடர்கிறது ...

அடுத்த கட்டுரைக்கு