Published:Updated:

அழுக்குக் கொட்டிலில் பிறந்த அகிலத்து நாயகன் இயேசு கிறிஸ்து! #Christmas

அழுக்குக் கொட்டிலில் பிறந்த அகிலத்து நாயகன் இயேசு கிறிஸ்து! #Christmas
அழுக்குக் கொட்டிலில் பிறந்த அகிலத்து நாயகன் இயேசு கிறிஸ்து! #Christmas

விண்ணகத்திலிருந்து மண்ணகம் வந்த தேவகுமாரன் இயேசு கிறிஸ்து, தனது ரத்தத்தை ஒப்புக்கொடுத்து பாவிகளை மீட்டெடுக்க வந்தார். பாவங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக்கிடந்த மக்களை நல்வழிப்படுத்த தேவன் இயேசு, மேய்ப்பனாக வந்தார். ஆம், 2017 ஆண்டுகளுக்கு முன்பு தூய மரியாளின் மகனாகப் பிறந்தார். 

கன்னி மரியாளுக்கு ஜோசப்புடன் திருமணம் முடிக்கப் பேசியிருந்த வேளையில் இறைத்தூதர் கபிரியேல், மரியாளின் முன்பு தோன்றி 'ஆண்டவர் கிருபையால் உனக்கு ஒரு மகன் பிறப்பார், அவருக்கு `இயேசு' என்று பெயரிடுவாய்' என்று ஆசீர்வதித்தார். கன்னியான மரியாள் தேவகிருபையை எண்ணித் தொழுதாள். `திருமணம் செய்யாத தனக்கு மகன் பிறந்தால் அது அபத்தமாகுமே' என்று எண்ணி  அழுதாள். ஒரு கண்ணில் ஆனந்தச் சாரலும், மறுகண்ணில் அழுகையின் தூறலுமாக நின்ற மரியாளின் நிலையறிந்து அங்கு வந்த இறைத்தூதர் அவரைத் தேற்றினார். 

ஆண்டவரின் விருப்பப்படியே மரியாள் கர்ப்பவதி ஆனாள். ஆண்டவரின் சித்தத்தைப் புரிந்துகொண்ட ஜோசப் பெருமகனார் மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டார். மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக, அவரவர் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பினால் நாசரேத் நகரிலிருந்து ஜோசப்பும் மரியாளும் தங்களது சொந்த ஊரை நோக்கிச் சென்றனர். 

அவர்கள் செல்லும் வழியில் பெத்லகேம் நகரில் ஒரு மாட்டுத்தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தார். அகிலத்துக்கே நாயகரான நம் இயேசு கிறிஸ்து ஓர் அழுக்குக் கொட்டிலில் பிறந்தார். கருணையே வடிவான கர்த்தர் காரிருளில் பிறந்தார். நிரைகள் (ஆடுகள்) எல்லாம் கூடி குறைகள் இல்லாத அந்த கோமகனைத் தொழுதன. வானத்து நட்சத்திரங்கள் எல்லாம் பூமியில் பிறந்த அந்தச் சூரியனை வணங்கின. காலம்காலமாக இருண்டு கிடந்த பூமியை, ஒளிவீசி மலரச்செய்ய ஒரு யுக சூரியன் குழந்தையாக பிறந்தது. ஆண்டவரின் திருக்குமாரனை ஏந்திய கன்னி மரியாள் பெரிதும் மகிழ்ந்தாள்.

இப்படித்தான் இயேசு கிறிஸ்துவின் ஜனனம் நடந்ததாக வேதாகமம் சொல்கிறது.  ஆனால் உண்மையில் இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார். நித்திய ஜீவனுடன் உலவிக் கொண்டிருக்கிறார். எல்லையில்லா பெருங்கருணை கொண்ட அந்த தேவன் நமக்காக ஜீவிக்கிறார். நமக்காக மரித்த கர்த்தர், நமக்காகவே உயிர்த்தெழுந்தார். 

உயிர்த்தெழுந்த அந்தப் பரிசுத்த ஆவி, நம்மோடு எப்போதும் துணையாக இருந்து வருகிறது. இதைக்கொண்டாடவே `கிறிஸ்துமஸ்' என்னும் விழா உருவானது. என்றோ பிறந்த வரலாற்றை நினைவுக் கூறவல்ல இந்த திருவிழா. எப்போதுமே நம்முடன் தேவன் இருக்கிறார் என்பதை நினைவு படுத்தவே தேவனின் இந்தப் பிறந்த நாளை சிறப்பிக்கிறோம். 

எங்கே இரண்டு மூன்று பேர் கூடி கர்த்தரை அழைக்கிறார்களோ, அங்கெல்லாம் இயேசுகிறிஸ்து தோன்றுகிறார். எங்கெல்லாம் ஏழைகளுக்கு இரங்கும் நல்ல இதயம் உதவுகிறதோ, அங்கெல்லாம் இயேசு பிறக்கிறார். எங்கே அடுத்தவர் துன்பத்துக்காக கண்கள் அழுகிறதோ அங்கெல்லாம் அவர் அவதரிக்கிறார். எங்கே பாவங்களை மன்னித்து எல்லோரையும் நேசிக்கும் மனிதர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஜனிக்கிறார். 

ஆதரவற்ற உயிர்களை எவர் ஒருவர் அரவணைத்துக் காக்கிறாரோ அங்கெல்லாம் இறைமகன் தோன்றி ஆசீர்வதிக்கிறார். எந்தவித பேதமும் இல்லாமல், எல்லோரையும் விரும்பும் எளியவர்க்கு எளியவரான கர்த்தர், எங்கும் எப்போதும் நிறைந்து நம்மைக் காக்கிறார். விசுவாசம் எங்கே நிலைத்திருக்கிறதோ அங்கே கட்டாயம் அவர் பிறக்கிறார். எங்கே கவலைகள் பெருகி கண்ணீர் வழிகிறதோ அங்கே தேவகுமாரனை நோக்கிக் குரல் கொடுங்கள். 

தேவமைந்தன் கட்டாயம் வருவார். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் டிசம்பர் 25 மட்டுமல்ல, எப்போதுமே நமக்காகப் புதிதாகப் பிறக்கிறார் புனித மைந்தர் கர்த்தர். பாவிகளை ரட்சிக்க, புனிதர்களைப் பாதுகாக்க நம்முள் எப்போதும் வசிக்கிறார். மண்ணகத்து உயிர்களுக்கெல்லாம் மாசற்ற தேவனாக தோன்றிய இயேசுவின் இந்த அவதார நாளில் தேவனின் மகிமைகளைப் பாடி அவரது பாதுகாப்பில் எப்போதும் இருப்போம். ஆமென்.