Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 14

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 14

சத்தியப்பிரியன், ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

22.தெய்வத்தை  பெற்றேனோ  தேவகியைப்  போலே! 

தேவகியைப் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை. கம்சனின் சகோதரி. வசுதேவரின் மனைவி. இருவருக்கும் பிறக்கப் போகும் எட்டாவது குழந்தை கம்சனின் யமன் என்று கேள்விப்படும் கம்சன் அவர்களைக் கொல்ல முயற்சிக்கிறான். தேவகி பிறக்கும் குழந்தைகளை கம்சனிடம் கொடுத்துவிடுவதாக வாக்குறுதி அளித்ததால், கம்சன் அவர்களை மதுராவில் சிறையில் அடைக்கிறான். ரோகிணியின் கருவும் தேவகியின் கருவும் மாற்றப்பட சங்கர்ஷணர் கோகுலத்திலும் கிருஷ்ணர் மதுராவிலும் பிறக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணர் பிறக்கும்போது தெய்வாம்சங்களுடன் சதுர்புஜமும் சங்கு சக்கர கதாயுதபாணியாக பிறக்கிறார். திகைத்துப் போன தேவகி கிருஷ்ணரை பார்த்து 'நீ யார்?'' என்று கேட்கிறார். அப்போது கிருஷ்ணர் தான் தெய்வம் என்பதை அறிவிக்கிறார்.

முன்பொருமுறை சுவாயம்புவ மனுவின் காலத்தில் அதாவது கிருதயுகத்தில் கிருதபா ப்ருச்னி ஆகியோரின் புதல்வனாக நாராயணன் அவதரிக்கிறார். ஹரி என்று அவருக்கு பெயர். அந்த தம்பதியர் இருவரும் அடுத்து வரும் இரண்டு யுகங்களிலும் நாராயணனே தமக்கு புதல்வராகப் பிறக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றனர். எனவே த்ரேதாயுகத்தில் அதிதி  காச்யபர் தம்பதிக்கு வாமனனாகவும் அடுத்து துவாபரயுகத்தில் தேவகி வசுதேவருக்கு கிருஷ்ணனாகவும் அவதரித்ததைக் கூறுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி என்று கூறுகிறார் பெரியாழ்வார். திருப்பாற்கடலில் தோன்றிய அமுதங்கள் இரண்டு. ஒன்று வெளியமுதாகிய அமிர்தம். அது தேவர்களுக்காகத் தோன்றியது. இறைவனின் திருமேனியில் நின்று இலகும் உள்ளமுதாகத் தோன்றியவள் திருமகள். அவளைப் போன்றவள் தேவகிப் பிராட்டியார் என்பதை இன்னொரு இடத்தில் 'திருவின் வடிவொக்கும் தேவகி’ என்பார் பெரியாழ்வார். அதையே இங்கே மறைப்பொருளாகக் குறிப்பதற்கு 'சீதக்கடல் அமுது’ என்று சொல்லி நிறுத்தாமல் 'சீதக்கடல் உள்ளமுது’ என்றார் போலும். இதனை சாதிக்கும் விதத்தில் மற்றொரு பாசுரத்தில் திருவின் வடிவொக்கும் தேவகி என்று நேரிடையாகவே தேவகி இலக்குமியைப் போன்றவள் என்கிறார்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 14

எம்பெருமான்  தேவகி மணிவயிற்றினில் வந்துதிப்பதற்கு தேவகி எவ்வளவு பேறு பெற்றிருக்க வேண்டும்? அப்படி ஒரு பாக்கியம் பெறாத நான் இந்தத் திருக்கோளூரில் இருப்பதற்கு தகுதியில்லாதவள் என்று அந்தப் பெண்பிள்ளை கிளம்புகிறாள். 

23. ஆழிமறை  என்றேனோ  வசுதேவரைப்  போலே! 

பரம பவித்திரமான காலம் அது. ஆவணி மாதம். தேவர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும், அப்சரசுகளும், தேவ ரிஷிகளும் முனிவர்களும், யோகிகளும் மனதில் நிம்மதியும் சந்தோஷமுமாக இருந்த நேரத்தில், த்வாபரயுகத்தில் ஸ்ரீமுக வருடத்தில் கிருஷ்ண பட்சத்தில் அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய சுப வேளையில் மதுரையில் உள்ள சிறைச்சாலையில் ஸ்ரீகிருஷ்ணர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்தார்.       கண்ணன் நீலமணியைப் போல ஒளி வீசினான். புரளும் சிகை. பவளம் போன்ற உதடுகள். தாமரை மலர் போன்ற கண்கள். ஆண்டாள் பாடினாளே, 'கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்’ என்று அப்படி ஒரு செந்தாமரைக் கண்கள். கள்ளச் சிரிப்பு. சிறு குழந்தையாக இருந்தாலும் நான்கு புஜங்கள். அவற்றில் திவ்ய ஆயுதங்களான கதை சங்கு சக்கரம் தாமரை மலர். திருமார்பில் மருவாக ஸ்ரீவத்ஸம். பட்டுப் பீதாம்பரம். கழுத்தில் கௌஸ்துப மாலை. வைர மணிமுடி. காதில் மின்னும் குண்டலங்கள். அலங்கார புருஷனாக கண்ணன் அவதரிக்கிறான்.

வசுதேவருக்கு வைத்த கண்ணை எடுக்க மனமில்லை. இருப்பினும் எந்த அவதார புருஷன் மூலமாக கம்ச வதம் நடைபெற வேண்டுமோ அது இந்தக் கோலத்தில் நடைபெறாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பதைப்பு எழவே வசுதேவர் 'பரந்தாமா நீரே மூவுலகையும் காத்து ரட்சிக்கும் நாராயணன் என்று அறிவேன். ஆயினும் நீர் இந்தக் கோலம் காட்டியிருப்பது இப்போது உசிதமல்ல. எனவே உன் நான்கு தோள்களையும் உன் சங்கு சக்கரங்களையும் மறைத்துக் கொள் ' என்று வேண்டினார். எனவே கண்ணன் தனது திருத் தோள்களில் இருந்த சுதர்சனம் என்ற ஆழியையும் சங்கினையும் மறைத்து ஒரு மானிடக் குழந்தை வடிவைப் பெறுகிறார். எம்பெருமானின் ஆழியை மறைக்குமாறு சொல்லி எம்பெருமானும் கேட்டார் அல்லவா? அந்த பாக்கியம் தனக்கு இல்லாமல் போனதால்தான் அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் கிளம்புவதாக திருக்கோளூர் பெண்பிள்ளை கூறுகிறாள்.

24. ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே! 

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாக ஒழித்து வளர்ந்தவன் கண்ணன். தேவகிக்கு கண்ணன் மகனாகப் பிறந்தானேயன்றி அவனுடைய பிள்ளைப் பருவ லீலைகள் முழுவதையும் அனுபவித்தவள் யசோதை மட்டும்தான். இந்த ஆதங்கம் தேவகிக்கு மிகவும் அதிகம். கிருஷ்ணன் கம்சனை வதம் செய்து பெற்றோரை சிறையிலிருந்து மீட்க வரும்போது தேவகியின் வேண்டுகோளை ஏற்று பிறந்த கணத்திலிருந்து அந்த கணம் வரையில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்ணன் தேவகிக்கு காட்சிப் படுத்தி கொடுத்தான் என்கிறது பாகவத புராணம்.

தாய் பாவத்தில் கண்ணனின் சேஷ்டிதங்களை ஆழ்வார்கள் அனுபவிக்கும் அழகே அழகுதான். ஆழ்வார்கள் தங்களை யசோதையாகவே பாவித்து கண்ணனைக் கொண்டாடினார்கள். அந்த அளவுக்குப் பெருமை கொண்ட யசோதையாக மாறாத நான் எதற்காக இந்த திருக்கோளூரில் இருக்கவேண்டும் என்று கேட்டவளாக அந்தப் பெண்பிள்ளை திருக்கோளூரில் இருந்து வெளியேறுகிறாள். 

25. அனுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே! 

ஸ்ரீராமன் தென்கடலின் முனையில் சுக்ரீவ படைகளுடன் நிற்கின்றான். சீதாபிராட்டியை சிறைப்படுத்திய ராவணன் அவளை தென்கடலுக்கு அப்பால் உள்ள இலங்கையில் அசோக வனத்தில் வைத்துள்ளான். கடலைக் கடந்து போனால்தான் இலங்கையை அடைய முடியும்.

எனவே இராமன் கடலின் நடுவில் பாலம் ஒன்று கட்டும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு உற்ற துணை வானரங்கள்தாம். அந்த வானரங்கள் பெரும்பாறைகளைக் கொண்டு வந்து போடுகின்றன. 

அப்பது ஒரு அணிலானது அங்கு நடக்கும் பணிகளை மேற்பார்வையிட்டது. எவ்வளவுக்கெவ்வளவு வேகமாக வேலை நடக்க வேண்டுமோ அவ்வளவுக்கவ்வளவு வேகமாக முடிந்தால்தான் பாலம் கட்டி முடிக்கப் பெறும். இந்தக் குரங்குகள்  பெரிய பெரிய கற்களாகக் கொண்டு போடுகின்றனவே தவிர பூச்சு வேலை எதுவும் நடக்கவில்லையே என்று வருத்தப்படுகிறது. உடனே மற்ற அணில்களை அழைத்தது. 'என்ன செய்வீர்களோ தெரியாது. அந்த வானரங்கள் கொண்டு போடும் பாறைகளுக்கு இடையில் மணல் பூச்சு செய்ய வேண்டியது நமது பொறுப்பு' என்கிறது.

உடனே அணில்கள் பெரும்படையுடன் ஒன்று கூடின. வானரங்கள் பாறைகளைக் கொண்டு கடலில் போட்டதும் இந்தச் சின்னஞ்சிறு அணில்கள் நீரில் நனைந்து பின்னர் மணலில் புரளும். ஒட்டிக் கொண்ட மணலை இரண்டு பாறைகளின் இடுக்கில் உதிர்த்துவிட்டு வரும். இவ்வாறு குரங்குகள் பாறைகளை தூக்கிக் கொண்டு பெருயாத்திரை செய்தால் அணில்கள் தங்கள் உடலில் மணலை ஒட்டிக் கொண்டு பின்னால் சிறிய யாத்திரை  அனுயாத்திரை செய்தன.

இதனை தொண்டரடிப் பொடியாழ்வார் தனது பாசுரத்தில் மிக அழகாக பாடுகிறார். 

குரங்குகள் மலையை தூக்கக் குளித்துத்தாம் புரண்டிட் டோடி

தரங்கநீ ரடைக்க லுற்ற சலமிலா அணிலம் போலேன்

மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்

அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே னயர்க்கின் றேனே. 

பகவத் கைங்கரியம் ஸ்ரீவைஷ்ணவத்தில் மிக உயர்ந்த விஷயம். அணில்களும் குரங்குகளும் எம்பெருமான் ஸ்ரீராமனுக்கு கைங்கரியம் செய்ததைப் போன்று எதுவும் செய்யாமல் மரம் போன்ற மனதுடன் இருப்பதாக தொண்டரடிப் பொடியாழ்வார் வருந்திப் பாடுகிறார். 

அணில் செய்த கைங்கரியம் மிகச் சிறியதுதான். இருப்பினும் அந்தக் கைங்கரியம் செய்யும் பாக்கியம் கூட கிட்டாத தான் திருக்கோளூரில் இருக்கத் தகுதி இல்லாதவள் என்பதால் கிளம்புவதாக அந்தப் பெண் பிள்ளை கூறுகிறாள்.