மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 2

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

"திருமாலிருஞ்சோலை, மாலிருங்குன்றம், சோலைமலை, அழகர்மலை என்றெல்லாம் பிற்காலத்தில் சமய இலக்கியங்களால் பெரிதும் போற்றிப் புகழப்பட்ட 'ரிஷபகிரி’ எனும் அந்த மலையின்மீது அழகை வாரியிறைத்திருந்தது இயற்கை. 

வடக்கே குடகு துவங்கி தெற்கே பொதிகை வரையிலும் நீண்டு கிடந்த மேற்திசை மலைத் தொடரின் சிதறலாக, மதுரை மாநகருக்கு இருபது கல் தொலைவில், வடக்கு திசையில் தனித்துக் கிடந்தன சில மலைகள். அவற்றில் ஒன்றுதான் 'இடப மலை’ எனப்படும் இந்த ரிஷபகிரி. பெயருக்கேற்ப, திமிலைச் சிலுப்பியபடி கன கம்பீரமாகப் படுத்துய்யும் சிவனாரின் வாகனம் போன்று நெடிது அமைந்திருந்தது அந்த மலை. அதன் திமிலாகவும் கொம்புகளாகவும் தெரிந்த சிகரங்களின்மீது, வானில் தாழ்ந்து தவழ்ந்த சில மேகப் பொதிகள் மழைமாரி பொழிந்த காட்சி, பிரதோஷ கால அபிஷேகத்தை நினைவூட்டுவதாக இருந்தது.

மேற்கில் சாய்ந்துகொண்டிருந்த சூரியனுக்கு, அவனது தேவியரில் உஷாவுக்கு உகந்த காலைச் சந்தியைக் காட்டிலும், பிரத்யுஷாவுக்கு உகந்த மாலைச் சந்தி வேளையே மிகப் பிடித்தமானது போலும்! எனவே, அந்த அந்திப்பொழுதை இன்னும் அழகாக்கும் விதமாக, தன் பொன் மஞ்சள் கிரணங்களை ரிஷபகிரியின் மீது வெகு ஆதூரத் துடன் வீசிக்கொண்டிருந்தான்.

மலையின் சுனைகளிலிருந்து பொங்கிப் பெருகிய நீர் ஆங்காங்கே பாறைச் சரிவுகளில் சரிந்து, சின்னதும் பெரிதுமான அருவிகளை உருவாக்கியிருக்க, அவற்றின் சாரலாலும், கோடை மழையின் தூறலாலும் தாவரங்களின் இலைகளில் படிந்துகொண்டிருந்த நீர்முத்துக்கள், சூரிய கிரணங்களை உள்வாங்கி, பல வண்ணங்களாகப் பிரதிபலித்து, பெரும் வர்ண ஜாலத்தையே நிகழ்த்திக் கொண்டிருந்தன.

சிவமகுடம் - 2

ஆயினும், இயற்கையின் இந்த எழில் தாண்டவம் சில நாழிகைப் பொழுதே நீடித்தது. 'போதும் உங்கள் அபிநயம்’ என்று சாடுவதுபோல், வேகவேகமாக அந்தப் பிராந்தியத்தில் இருளைக் கவிழ்க்கத் தொடங்கியது வானம்.

தனது குதிரையின் கடிவாளத்தை இறுகப் பற்றியபடியே நடந்து, ரிஷபகிரியின் தெற்கில் ஏறத் துவங்கினான் கோச்செங்கண்.

மெள்ளத் தென்கிழக்கில் சிறிது தொலைவு நகர்ந்து, மலையின் மறுபுறத்தைஞ் அதாவது, வடக்குப் பக்கம் முழுவதையும் எளிதில் பார்ப் பதற்குத் தோதான ஓரிடத்தை அடைந்ததும் சற்று நிதானித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

நெடுநெடுவென வளர்ந்த தேகம், முழங்கால்களைத் தொட் டுக் கிடந்த கரங்கள், முகத்தில் வலப்புறக் கண்ணுக்குக் கீழே தெரிந்த வீரத்தழும்புகள் யாவும், போரில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவன் அவன் என்பதற்குக் கட்டியம் கூறின. இருக்காதா பின்னே..? வீரம் செறிந்த சோழர் படைத்தலைவன் அல்லவா அந்தக் கோச்செங்கண்!

இடைக் கச்சையைச் சற்று தளர்த்தி, மீண்டும் இறுக்கிக் கட்டிக்கொண்டவன், தனது குதிரையைக் கவனித்தான். மலைப் பாதையில் வெகு தூரம் ஏறி வந்த களைப்பால் வாயில் நுரை தள்ளியவாறு நின்றிருந்த அதன் பிடரியை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்துவிட்டு, அங்கே மரத்துக்குப் பின்னால் மறைவான ஓரிடத்துக்கு இட்டுச்சென்று, மரக்கிளையோடு அதைப் பிணைத்தான். பின்னர், விடை பெறுவதன் சமிக்ஞையாக அதன் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு, அருகில் செங்குத்தாகத் திகழ்ந்த முகட்டில் விறுவிறுவென ஏறத் துவங்கினான். அதன் உச்சியை அடைந்து, ரிஷபகிரியின் மறுபக்கத்தைக் கண்டதும், கோச்செங்கணின் இருதயம் ஒருகணம் நின்று, பிறகு வேகவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது!

ஆமாம், தெற்குப்புறத்தில் காட்டிய எழிற் கோலத்துக்கு  நேரெதிரான ஓர் அதிபயங்கரக் காட்சியை வடக்குப்புறத்தில் அவனுக்குக் காட்டி யது ரிஷபகிரி. ஏழு கடல்களும் சங்கமித்தது போன்று மிகப்பெரும் படையணி அங்கு ஒன்று திரண்டிருந்ததைக் கண்டு விக்கித்துப் போனான் கோச்செங்கண். இந்த இடத்தில் பகைவரின் படை திரட்டப்பட்டிருக்கும் என்பதை எதிர்பார்த்தே வந்திருந்தான் என்றாலும், இத்தனை பிரமாண்ட மான படையை அவன் எதிர்பார்க்கவில்லை!

'சோழ மண்டலத்துக்கு ஒட்டுமொத்தமாக ஒரு முடிவு கட்டிவிடத் தீர்மானித்துவிட்டானா பாண்டியன்? இல்லையெனில், இத்தகையதொரு படைதிரட்டல் தேவையில்லையே..?!’

குழப்பத்தாலும் ஆதங்கத்தாலும் அவன் மனம் ஒருபுறம் தவித்தாலும், மறுபுறம் 'சோழர்களை பாண்டியன் எளிதாக எடைபோட்டுவிடவில்லை; நம்மை எதிர்க்க இத்தனை பெரும் படை அவனுக்குத் தேவைப்படுகிறது’ என்று எழுந்த எண்ணத்தால் பெருமிதம் கொண்டு விம்மவும் செய்தது.

'இன்னும் அருகில் நெருங்கினால்தான் உண்மை வீரியத்தை அறியமுடியும். அத்துடன், பாண்டி யனின் வியூகத் திட்டத்தைத் தெரிந்துகொள்வதும் அவசியம். தேவைப்பட்டால், எதிரியின் படையோடு ஒன்றுகலந்து, தகவல்களைத் திரட்ட வேண்டும்!’

இந்தத் திட்டத்துடன் முகட்டில் இருந்து இறங்க யத்தனித்தவனின் பார்வையில், அந்த முகட்டுக்கு நேர் கீழே, மலையின் அடிவாரத்தில் படைக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்த தரை மட்டத்தில் இருந்து சற்று உயரமான ஒரு திட்டின்மீது, காற்றில் பட்டொளி வீசிப் பறந்த மீனக்கொடி தென்பட்டது. நன்கு உற்று நோக்கிய போது, மலைச்சுவர் சற்று உள்ளடங்கியிருக்க, மேற்புறத்தில் பெரும் பாறைகள் ஒன்றுடன் ஒன்று சாய்ந்து திகழ்ந்ததால், அதன் கீழ் அந்தப் பெரும் திட்டு குகையாக அமைந்திருக்கும் என்பதையும் கணிக்க முடிந்தது. தவிரவும், அந்த இடத்தில் இருந்து படைகள் நிறுவப்பட்டிருந்த அந்தப் பெரும்பரப்பளவை வெகு சுலபமாகக் கவனிக்க முடியும் என்பதையும் கோச்செங்கண் யூகித்தபடி யால், அதுவே பாண்டியனின் தலைமைப் பாசறையாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தான்.

சிவமகுடம் - 2

அங்கு செல்வது என்பது உயிராபத்தை வலிய வரவழைக்கும் என்பதை உணர்ந்தே இருந்தா லும், அதைத் தவிர்த்து கோச்செங்கணுக்கு வேறு உபாயம் தெரியவில்லை. குகையின் முகப்பில் வெளிச்சமும் காவலும் அதிகம் காணப்பட்டதேயன்றி, பின்புறம் அவ்வளவாக இல்லை. பின்புறத்தில் குகைக்கு மலைச்சுவரே அரணாக இருந்ததாலும், எவரும் எளிதில் நெருங்கி விட முடியாதபடி முட்புதர்கள் அதிகம் இருந்த படியாலும், இருள் கவிந்து கிடந்ததாலும் அங்கு காவல் கண்காணிப்பை அதிகப்படுத்தாமல்

விட்டிருக்கக்கூடும் எனத் தோன்றியது. அப்படி, மிதமிஞ்சிய இருளும், ஓர் ஒழுங்கின்றி ஆங்காங்கே நீட்டிக்கொண்டிருந்த பாறைகளும் தனக்குச் சாதகமாக இருக்கும் என்று யோசித்தவனாக முகட்டில் இருந்து கீழே இறங்கியவன், மெள்ள பாசறைக் குகையை நோக்கி நகரவும் ஆரம்பித்தான்.

வானில் வெள்ளி முளைத்திருந்தது. அதுவும், மேற்குத் திக்கில் இரண்டு தாரைகளாக ஜொலித்த பல்குனி நட்சத்திரம், விளையப்போகும் பெரும் ஆபத்தை அவனுக்கு உணர்த்திக் கண்சிமிட்டுவதாகத் தோன்றியது. பல்குனி எனப்படும் பூரம், போருக்கான நட்சத்திரம். ஆனாலும், இன்னமும் போரைத் துவக்கவில்லை பாண்டியன். அடுத்து சில நாட்களில் வரும் ஜ்யேஷ்டா நட்சத்திரமும் போர் துவங்க மிக உகந்ததுதான். அன்று பாண்டியன் போர் முரசு முழங்க உத்தேசித்திருக்கலாம். ஆனால், சமணம் சார்ந்திருக்கும் பாண்டியனுக்கு இதிலெல்லாம்

சிவமகுடம் - 2

நம்பிக்கை இருக்குமா? சந்தேகம்தான்!

வான சாஸ்திரத்தில் கோச்செங்கணுக்குச் சற்று பரிச்சயம் உண்டென்பதால், இதுபோன்ற எண்ணத் தோற்றங்களை அவனால் தவிர்க்க இயலாததில் வியப்பில்லை. எனினும், ஜோதிடம் கணிக்க இது தருணம் அல்ல! ஆதலால், வலுக்கட்டாயமாக தன் சிந்தனையைத் திசை திருப்பி, இலக்கை அடைவதில் முனைந்தான். பாதை அல்லாத பாதையில், வெகு சிரமத்தோடு முட்புதர்களையும் மரக்கிளைகளையும் வாளால் வெட்டி அப்புறப்படுத்தியபடியும், அதேநேரம், சத்தத்தால் எதிரிகள் விழிப்படைந்துவிடாதபடியும் மெள்ள மெள்ள முன்னேறினான் கோச்செங்கண்.

பாசறைக் குகை இருக்கும் இடத்தை நெருங்க நெருங்க படைகளின் இரைச்சலும், யானைகளின் பிளிறல் சத்தமும், குதிரைகளின் கனைப்பொலியும் அதிகமாயின. குகையின் விதானமாகத் திகழ்ந்த பாறைகளின் பின்னால், தான் பதுங்க உத்தேசித்திருந்த இடத்தை அவன் சமீபித்தபோது, நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.

அனுதினமும் அவன் வணங்கும் தில்லை அம்பலவாணரின் அனுக்கிரகத்தால், அதுவரை யிலும் எதிரிகளின் கண்களில் சிக்கிக் கொள்ளும் படியான சூழலோ, வேறெந்த பெரிய தடைகளோ ஏற்படவில்லை. தொடர்ந்த சூழலும் அவனுக்குச் சாதகமாகவே இருந்தது. இடப்புறத்தில் இருந்து பாறையை ஒட்டி, கிளை தாழ்த்தி நின்றிருந்தது ஓர் ஆலமரம். நீண்டு தொங்கிய அதன் விழுது ஒன்றைப் பற்றியபடி பாறையோடு பாறையாக ஊர்ந்து, உச்சிக்கு நகர்ந்தான். அங்கிருந்து பார்த்த போது, நீள் சதுரமாக வெகு தொலைவு வரை பரவிக்கிடந்த பாண்டியரின் படைபலத்தை முன்பைக் காட்டிலும் துல்லியமாக உணர முடிந்தது.

உச்சியில் படபடக்கும் கயற்கொடியுடன் ஆறேழுபாசறைக் கூடாரங்கள் மையமாக அமைந்திருக்க, சுற்றிலும் வட்டமாக அந்தக் கூடாரத்துக்கான படைவீரர்கள் இருந்தார்கள். இப்படியான அமைப்பில் ஆயிரக்கணக்கில் கூடாரங்கள்; பல்லாயிரக்கணக்கில் படையணிகள்!

தலைமைப் பாசறையான குகைக்கு நெருக்கத்தில் இருந்த படையணிகளே அரைக் காத தூரம் வரையிலும் பரவியிருந்தன. இவர்களே *மூலப்படையினர் என்பதை எளிதாக யூகிக்க முடிந்தது. அதைத் தாண்டி கருவிப் படையினரும், தற்கருவிப் படையினரும் திரட்டப்பட்டிருந் தார்கள். வெகு தொலைவில் நீள் சதுரத்தின் வடக்கு முனையில் ஒரு சிறு பகுதியினரின் நிசப்தத்தைக் காண்கையில், அது பகைப்படையாக இருக்கக்கூடும் என்று கணிக்கமுடிந்தது.

கனகச்சிதமாகப் படைகளை அணிவகுத்திருக் கிறான் பாண்டியன். இந்த நீள் சதுரத்தைச் சூழ்நிலைக்கேற்ப எப்படியான வியூகமாகவும் சடுதியில் அமைத்துக்கொள்ள முடியும் என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்தது கோச்செங்கணுக்கு. அதேவேளையில், குகைக்குள் சிலர் உரையாடும் சலசலப்புச் சத்தம் கேட்கவே, பாறைகளின் இடுக்கு அருகே சென்று காதை ஒற்றினான். படை யெடுப்பு குறித்த மந்திராலோசனை நடக்கிறது என்பதை ஒருவாறு யூகிக்க முடிந்ததே தவிர, அவர்களின் குரல் ஒலி தெளிவாகக் காதில் விழவில்லை.

சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவன், இடை யில் தண்ணீர் சேமிக்க வைத்திருந்த மூங்கில் கணுவை எடுத்தான். நீர் இல்லாத அதன் வாயை மூடியிருந்த தக்கையைப் பிடுங்கி எறிந்து விட்டு, தலைகீழாகக் கவிழ்த்து, குறுவாளால் அதில் துளையிட்டான். இப்போது முன்னும் பின்னும் திறப்புடன் திகழ்ந்த அந்த மூங்கில் கணுவை மிகப் பிரயத்தனத்துடன், அதேநேரம் இம்மியளவும் சத்தம் எழுப்பாமல் பாறை இடுக்கில் செருகினான். அதன் மறுமுனையில் செவியைப் பொருத்தியபோது, குகைக்குள் இருந்து துல்லியமாகக் கேட்டது அவர்களின் பேச்சரவம்.

கேட்கக் கேட்கஞ் அம்மம்மா! என்னவொரு பயங்கரமான திட்டம்?!

சதுர்ச் சக்கர வியூகம். மூன்று முத்திசைகளிலும் சோழத்தை நெருக்க, ஒன்று உறையூரில் மையமாகச் சுழலும்! அப்படியென்றால்... சந்தடியின்றி ஒரு படையணி ஏற்கெனவே உறையூரை அடைந்து விட்டதா? எனில், எப்போது? எப்படி? இல்லை யெனில், பாண்டிய படைத் தலைவனின் அந்த வார்த்தைக்குப் பொருள் என்ன?!

எதிர்த்தரப்பின் போர் வியூகங்களைக் கேட்கக் கேட்க, தலை சுழன்று மயக்கமே வரும் போலிருந்தது, சோழர் படைத்தலைவனுக்கு. உடனே புறப்பட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், சோணாட்டுக்குப் பேராபத்து!

பதற்றம் பற்றிக்கொள்ள, விரைந்து இறங்க முற்பட்டான் கோச்செங்கண். அந்த அவசரத்தில், பிடிமானம் என நினைத்து அவன் கால் பதித்த கல், நீட்சி உதிர்ந்து, கீழே விழுந்து உருண்டது. அதே நேரம், இடக்கரத்தால் அவன் பற்றியிருந்த, பாறை இடுக்கில் செருகப்பட்டிருந்த மூங்கில் கணுவும் முறிய, பிடிப்பின்றிக் கீழ் நோக்கிச் சரிந்து விழத் தொடங்கினான் கோச்செங்கண். அதனால் எழுந்த பெருத்த ஓசையானது காவலர்களை உசுப்ப, தரைப் பகுதியில் இருந்து ஆறேழு தீப்பந்தங்கள் இவன் இருக்கும் இடம் நோக்கி விரைந்து வரத் தொடங்கின.

''எவனோ ஒற்றன்... பிடியுங் கள் அவனை! இழுத்துக் கட்டுங் கள்!'' என ஏக காலத்தில் சில குரல்களும் ஒலித்தன. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டவனாய், சட்டென்று சுதாரித்து எழுந்து, ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் கோச்செங்கண்.

இப்படி ஏதேனும் திடீர் ஆபத்து நேரிட்டால் அதைச் சமாளிக்கவும், முன்னரே ஒரு திட்டத்தை யோசித்து வைத்திருந்தான் அவன். குகை அருகில் வரும்போதே, வேறு சில பாறைகளையும் அவன் கண்கள் கவனித்திருந்தன. அவற்றில் ஒன்றின் அடியில் மழை காரணமாக மண் அரிக்கப்பட்டிருந்ததால், அந்தப் பாறை அதிக பிடிமானம் இல்லாமல் இருப்பதையும் அவை நோட்டமிட்டிருந் தன. சற்று வலுவுடன் முயற்சித்தால் அதைக் கீழ்நோக்கிப் புரட்டிவிட முடியும்!

உடனடியாகத் தனது திட்டத்தைச் செயல்படுத் தினான். அவன் நினைத்த அளவுக்குக்கூட சிரமம் வைக்காமல், சட்டெனப் புரண்டுகொடுத்து, கோடையிடி போன்ற சத்தத்துடன் கீழ் நோக்கி

உருள ஆரம்பித்தது அந்தப் பெரும்பாறை. பத்துப் பதினைந்து வீரர்களாவது அதன் அடியில் சிக்கி மடிவது திண்ணம்; மிஞ்சியவர்கள் அதைத் தாண்டி வருவதற்குள் எளிதாகத் தப்பிவிடலாம் என்ற நினைப்புடன் திரும்பி, வந்த வழியில் சில அடிகள் எடுத்து வைத்தவனின் செவிகளில், மற்றொரு பெரும் பாறை உருளும் சத்தம் கேட்டது.

சத்தம் வந்த திசை நோக்கிக் குழப்பமும் வியப்புமாக அவன் திரும்பியபோது, குகைக்கு இணையாக வலப்புறம் இருந்த மற்றொரு மேட்டில் இருந்து அந்த இரண்டாவது பாறை உருண்டு வருவதையும், கூடவே அதன் பின்னால் அதைப் புரட்டித் தள்ளிய மூன்றாவதொரு கரும் பாறை உயர்ந்து எழுவதையும் கண்டான்.

இல்லையில்லை... அது பாறை இல்லை; பெரியதொரு யானை என்பதை, தீக்கனல் போன்ற அதன் கண்களும், நீண்டு வளர்ந்த, வெள்ளை வெளேரென்ற அதன் கூரிய தந்தங்களும் சடுதியில் உணர்த்தின.

எதிர்பாராத தருணத்தில் பேருருவாய்த் தோன்றிய அந்த யானையைவிடவும், அதன்மீது ஆரோகணித்திருந்த கம்பீர உருவமே... அச்சம் என்றால் இன்னதென்றே அறியாத மாவீரனான அந்தச் சோழர் படைத் தலைவனின் நெஞ்சில் பெரும் அச்சத்தையும் பீதியையும் உண்டாக்கியது.

கோச்செங்கண்ணுக்கு இங்கே இப்படியொரு பேராபத்தை விளைவித்த அந்த இரவு பலபலவென விடிந்து, மறுநாள் பொழுது நண் பகலைத் தொடும் வேளையில், புலியூரில் இருந்து புறப்பட்ட இரண்டு புரவிகள் உறையூரை நோக்கி விரைந்துகொண்டிருந்தன.

ஒன்றின் மீது பரமேசுவர பட்டர்; மற்றொன்றின் மீது, சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த அந்தக் கரும்புரவி வீரன்!

மகுடம் சூடுவோம்...

"வெகுகாலத்துக்குப் பிறகு சரித்திரக் கதையைப் படிப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி. கற்பனையைத் தூண்டும் வர்ணனைகள், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதையின் போக்கு... சரித்திரக்கதைகளில் சரித்திரம் படைக்கும் சிவமகுடம்!''

சுரேஷ்

சிவமகுடம் - 2

"முதல் அத்தியாயத்தில் வரும் புரவியின் புயல் வேகம் கதையிலும்! சரித்திரத்தில் நம் வேரைத் தேடி அழைத்துச் செல்கின்றன, கதையின் களங்களும் காட்சிகளும். மொத்தத்தில் உள்ளுக்குள் ரசவாதம் நிகழ்த்துகிறது சிவமகுடம்!''

பாலா