Published:Updated:

கேள்வி - பதில்

இறை நாமமும் குருவருளும் பிறவிப் பயன் தருமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

இறை நாமமும் குருவருளும் பிறவிப் பயன் தருமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

? ஏதோ குருநாதர் என்றும், அவர் தலைமையில் சத்சங்கம் சஹஸ்ரநாம பாராயணம் என்றும், அதில் நானும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தி அழைக்கிறார்கள் நண்பர்கள். இதில் எல்லாம் எனக்குச் சிறிதும் ஒப்புதல் இல்லை. நித்ய பூஜைகளையும்  கடமைகளையும் குறையின்றிச் செய்து வருகிறேன். இறை அனுக்கிரஹத்துக்கு இதுவே போதும் என்பது என் எண்ணம். எனது இந்த நிலைப்பாடு சரியானதுதானே? 

கோவிந்தசாமி, கோவை - 2

மக்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் பண்டைய நாளில் ஸனாதனம் ஈடுபட்டது. வேதம், மக்களை நல்வழிப்படுத்துவதோடு, அவர்களது வாழ்க்கையின் மேம்பாட்டிலும் அக்கறை எடுத்துக்கொண்டது. கடைசியில், பிறப்பின் எல்லையை (வீடு பேறு) எட்டச் செய்து மகிழ்வித்தது. தர்சனங்கள், சமுதாய மாற்றத்துக்கு இணங்க எளிய முறையில் முன்னேறும் வழிகளைப் பரிந்துரைத்தன. புராணங்களோ, அடித்தட்டில் இருக்கும் மக்களை முன்னுக்குக் கொண்டு வர, அவர்களது சிந்தனைக்கு உகந்த வழியில், கதைகளின் மூலம் புரட்சி செய்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்போதைய சூழலில், மக்கள் விருப்பமே நல்வழிப் பாதையாக மாறிவிட்டது. வேதம், தர்சனம், புராணம் அத்தனையும் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதவையாகி விட்டன. அன்றாட அலுவல்களில் பகீரதப் பிரயத்தனத்துடன் ஈடுபடும் மக்களின் தரத்தை உணர்ந்து, நாம சங்கீர்த்தனம் பரிந்துரைக்கப்பட்டது. பல கிளைகளாகப் பரந்து விரிந்து விளங்கிய அறத்தின் விரிவாக்கம், நாம சங்கீர்த்தனத்தில் அடங்கி ஒடுங்கி முடங்கிக் கிடக்கிறது. ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்்கும் அது ஒன்றே போதுமானது என்று புராணச் சான்றுகளைச் சுட்டிக்காட்டி, அவர்களை மஸ்திஷ்கத்தில் (மூளையில்) திணித்து நிம்மதி பெறுகிறார்கள், நம் புதுத்தலைவர்கள். 'அவனது பெயரைச் சொல், அவனைச் சரண் அடைந்துவிடு; உனது விருப்பம் அத்தனையும் நிறைவேறிவிடும்’ என்று போதிக்கிறார்கள். சான்று இல்லாத தகவல்களை மக்களை ஏற்கவைக்கிறார்கள்.

கேள்வி - பதில்

? கடவுளின் திருநாமங்களை உச்சரிப்பது தவறா?

உதட்டளவில் அவன் பெயர் இருந்தால் போதும்; துயரம் பறந்து போய்விடும் என்பதை எப்படி ஏற்கமுடியும்? கிருத யுகத்தில் அன்ன ஆகாரமின்றித் தியானத்தில் ஆழ்ந்து பரம்பொருளை எட்டினார்கள். திரேதா யுகத்தில், வேள்வியில் உணவளித்து மகிழவைத்துப் பரம்பொருளை உணர்ந்தார்கள். த்வாபர யுகத்தில், புதுமைகளைக் கடவுள் வடிவமாகப் பார்த்து, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டு, கடவுளோடு இணைந்தார்கள்.

ஆனால் கலியுகத்திலோ, 'நாம சங்கீர்த்தனம் செய்தால் போதும்; நீ தேடி அலைய வேண்டாம்; அவர் உன்னைத் தேடி வருவார்’ என்று விளக்கம் அளித்து, மக்களுக்கு நாம சங்கீர்த்தனத்தில் ஆர்வத்தை உண்டுபண்ணுவதில் ஆன்மிக பிரபலங்கள் பலரும் முழு மூச்சுடன் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். 'நான் வைகுண்டத் திலோ, கயிலாசத்திலோ இருக்கமாட்டேன். முனிவர்கள் மனதிலும் இருக்கமாட்டேன். வேள்வியிலும், பூஜை புனஸ்காரங்களிலும் தங்க

மாட்டேன். எனது பெயரை யார் உதட்டளவில் உதிர்க் கிறார்களோ, அங்கு நிரந்தர மாகத் தங்கிவிடுவேன்’ என்று பகவான் அருளியதாக, மக்களுக்குப் புரியாத மொழியில் மேற்கோள் காட்டி ஈர்ப்பவர்களும் ஏராளம்!

இனிப்பான நாமசங்கீர்த் தனத்தை ஊட்டிவிட்டு, அதில் மெய்ம்மறக்கச் செய்து, தங்களின் ஆறாவது அறிவுக்கு வேலையில்லாமல் செய்து விட்டார்கள் என்பதை மக்களும் அறியமாட்டார்கள். ஆக, மக்களை அறியாமையில் உறங்கவைப்பதில் வெற்றி பெற்றுவிட்ட ஆன்மிக பிரபலங்கள், அவர்களுக்கு விழிப்பு உணர்வை அளிக்கும் விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டனர்.

? எளிய வழியைச் சொல்லி, மக்களை ஆன்மிக மார்க்கத்துக்கு திருப்புவது தவறா?

மக்கள் எதை விரும்புகிறார் களோ, அதையே வாழ்க்கை முன்னேற்றத்தின் கோட் பாடாகச் சித்திரிப்பது தவறு.

நாமசங்கீர்த்தனம் மக்களுக்கு கை கொடுக்கிறதோ இல்லையோ, அதைப் பிரசாரம் செய்பவர்களுக்கு சகல வசதிகளும் கிடைக்கச் செய்கிறது. பக்தி ஒன்பது விதமாக உள்ளது என்று ப்ரஹ்லாதன் சொன்னதாகச் சொல்வர். சேமித்த பொருள் களைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதும், ஒட்டு மொத்தமாகக் கடவுளைச் சரணடைவதும் பக்தி என்பர். படிப்பு, வேலை வேண்டாம், திருமணத்துக்கும் முயற்சிக்க வேண்டாம்; சுகாதாரம், பொருளாதாரம், விருப்பங்கள் அத்தனையும் சரணாகதியில் கிடைத்துவிடும் என்பார்கள். 'நீ பிறந்தவுடன் அவனது பணிவிடையில் ஈடுபட்டுவிடு; உனது யோக க்ஷேமத்தை அவன் பார்த்துக் கொள்வான். அதுவே பக்தி’ என்றும் உபதேசிப்பார்கள். 'உனது உள்ளத்தில் உறைந்திருக்கும் உனது வடிவை (ஆன்மா), நிலைத்து திளைத்து

அசைபோட்டு அசைபோட்டு அதில் மனம் ஒன்றிவிடும் போது, நீ உணரும் இன்பமே பக்தி’ என்றும் சொல்வார்கள் (ஸ்வஸ்வரூபானு சந்தானம் பக்தி இத்யபிதீயதே). இப்படி, பக்திக்கு எண்ணிலடங்கா விளக்கங்களைச் சொல்வர். எதை ஏற்பது என்று தெரியாமல் மக்கள் தவிப்பர்.

பண்டைய அறக் கோட்பாடுகளை காலாவதி யானதாகக் குறிப்பிட்டு, மக்களின் விருப்பத்தை அறமாக பிரகடனப்படுத்தும் எளிய முறைகளைக் கையாண்டு, முக்திக்கு பக்தி உகந்தது என்று விளக்குவர். ஆனால், இப்போது பக்தியைவிடவும் எளிய முறையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பேசாத தெய்வத்தைவிட பேசும் தெய்வமான குருவை சரண் அடைவது மோட்சத்துக்கு வழிகோலும்; குருதான் பரம்பொருள்; நீ சேமித்ததை பேசும் தெய்வத்துக்கு அளித்துவிடு; பேசாத தெய்வத்தை அறிமுகம் செய்ததே பேசும் தெய்வம்தான். நாம சங்கீர்த்தனம்கூடத் தேவையில்லை, குருவை அடிபணிந்தாலே போதும்; அத்தனை இன்னல்களும் பறந்தோடிவிடும் என்று பரிந்துரை செய்பவர்களும் உண்டு. குருவின் த்ருஷ்டி தீக்ஷையில் (பார்வை பட்டாலே போதும்) ஆன்ம லாபம் கிட்டிவிடும் என்பவர் களும் உண்டு.

? தெரியாத மார்க்கங்களில், தெரிந்த ஒருவரது வழிகாட்டல் அவசியம் இல்லையா?

சிறு வயதில் தாய் தந்தையரே குரு. பள்ளி, கல்லூரிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஏராளமான குருமார்கள் உண்டு. வேலை யைக் கற்றுத் தரும் குருவும் உண்டு. அதேபோல், வாழ்வில் உதவிய குரு, மந்திர உபதேசம் செய்த குரு, அரசியல் குரு, ஆன்மிக குரு, மானசிக குரு, சடங்குகளை நிறைவேற்றி  வைக்கும் குரு, புதுச் சிந்தனையை ஊட்டிய குரு, பாதுகாத்த குரு... இப்படி, எத்தனையோ குருமார்கள் பெருகிவிட்டனர்! இவர்களில் யாரை ஏற்பது என்பதில் குழம்பித் தவிக்கும் மக்களைத் தேற்றுவதற்கு எந்தத் தலை வனும் முன்வருவதில்லை.

பக்திக்கும் குருவுக்கும் மாறுபட்ட விளக்கங்களை எல்லா மகான்களும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு விடுவர். மகான்களுக்கு மக்கள் குழாம்தான் பாதுகாவலர்கள். ஆக, அவர்கள் (மக்கள்) இப் போது தெய்வமாகி விட்டனர். அவர்களை அவர்கள் விருப்பப்படி மகிழவைப்பது அறமாகிவிட்டது. அதில் சில மகான்கள், கடவுளைப் பணியச் சொல்வார்கள். இன்னும் சிலர், பேசும் தெய்வம் உயர்ந்தது என்று மகான்களுக்குப் பணிவிடை செய்வார்கள். மொத்தத்தில் பக்தியும், நாம சங்கீர்த்தனமும் குரு வழிபாடும் மக்களுக்குச் சுமையாகப் போய்விட்டன. அவற்றை அகற்றி, மக்களின் சிந்தனைக்கு உகந்தவாறு புதுக்கொள்கையை உருவாக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இதற்குக் காரணம், ஆராயாமல் பழைய கோட்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ததே. மகான்கள் இதை உணரவேண்டும். ஏனெனில், இன்றைய தெய்வங்கள் அவர்கள்தான்!

இரண்டாவது கோணம்...

வழிப்பறியில் வாழ்ந்தவர் ராம நாமாவைச் சொல்லி வால்மீகி ஆனார். நாராயண மந்திரத்தைச் சொல்லி மரணத்தில் இருந்து விடுபட்டான் ப்ரஹ்லாதன். நாராயணனை நினைத்து தவமிருந்த சிறுவனான துருவன் விண்வெளியில் நட்சத்திரமாக (அழியாத ஒளியாக) விளங்குகிறான். காசியில் ஈசன், ராம நாமாவை ஓதி முக்தியளிக்கிறார். ராமனின் பாத ஸ்பரிசமே கல்லை கன்யகையாக மாற்றி யது; அகலிகை விமோசனம் பெற்றாள். நாராயணனை மனதில் நினைத்த யானை, முதலையிடம் இருந்து விடுதலை பெற்றது. ராம தாரக மந்திரத்தை மனதில் இருத்தியபடி மலையில் வாழ்ந்த சபரியை... அவள் அழைக்கா மலேயே வந்து ஆட்கொண்டார் ராமர். கோவிந்தா என்ற திரௌபதியின் குரல் கேட்டு ஓடி வந்து, அவளை ஆபத்திலிருந்து விடுவித் தான் கிருஷ்ணன். குருவாயூரப்பா என்று நாராயணனைக் கூப்பிட்டார் நாராயண பட்டதிரி; பிணியில் இருந்து விடுபட்டார். 'ராமா’ என்ற சொல், மாருதிக்குக் கடலைத் தாண்டும் தெம்பை அளித்தது. 'நம: சிவாய என்ற சொல் புலஸ்தியரின் புதல்வனை ராவணேஸ்வரன் ஆக்கியது. சிவலிங்கத்தை அரவணைத்த மார்க்கண்டேயன், சிரஞ்ஜீவி பட்டம் பெற்றான். ராமேஸ்வரத்தில் ராமன் சிவநாமாவை ஓதி முக்தியளிக்கிறார். ராம நாமம் வாலிக்கு வீடுபேறு அளித்தது. ராமனிடம் அடைக்கலமான அரக்கன், விபீஷணாழ்வார் ஆனார். 'கிருஷ்ணா’ என்ற தாரக மந்திரத்தை மனதில் அசைபோட்ட மீரா மீளாத் துயரத்தில் இருந்து மீண்டாள். கண்ணனை நினைத்து ஏங்கிய ராதை, அவன் உதட்டோடு இணைந்த புல்லாங்குழலாக மாறி, பிரியா வரம் பெற்றாள்.

? புராண உதாரணங்களை துணைக்கு அழைப்பதில் இருந்து, உங்களுக்கே ஒரு தெளிவு இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

அப்படியில்லை! புராண காலங்களிலும் இறைநாமம் அற்புதம் செய்திருக்கிறது என்பதை உங்களுக்குப் புலப்படுத்தவே மேற்சொன்ன விஷயங்களை எடுத்துக்காட்டினோம்.

கேள்வி - பதில்

'ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே’ என்ற நான்கு முறை உச்சரிப்பு, மக்களுக்கு கைவல்யத்தை (மோக்ஷத்தை) அளித்ததால் 'கைவல்ய உபநிஷத்’ என்று பெயர் பெற்று விளங்குகிறது. 'கிருஷ்ணா’ என்று 12 முறை ஓதினால் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகள் மறைந்துவிடுகின்றன. 'ராமாய நம:... கிருஷ்ணாய நம:... சிவாய நம:...’ என்று சொன்னால் போதும், விருப்பங்கள் உன்னைத் தேடி ஓடி வரும் என்கிறது உபநிஷத் (தன்மை இத்யுபாசீத நம்யந்தேஸ்மைகாமா:).

சங்கடத்தை விலக்க ராமதாபிஸு உபநிடதத்தை அறிமுகம் செய்தது ஸனாதனம். உடலைத் துறக்கும் வேளையில் ராம நாமாவைச் சொல்லி வீடுபேறு பெற்றார் தசரதன். கடல் நீரில் போட்ட கற்கள் ராம நாமாவைச் சொன்னதும் மிதந்தன. 'ரா’ என்று சொன்னால் வாய் திறந்துவிடும். உள்ளே சேமித்த பாவம் வெளியேற வழிவிடும்.

'மா’ என்று சொன்னால் உதடுகள் இணைந்து வாய் மூடிக்கொண்டு, வெளியேறிய பாவங்கள் உள்ளே நுழையாமல் தடுத்துவிடும். 'ஹர ஹர மஹாதேவா’ என்று சொல்வோம். இதில் முதல் 'ஹர என்பது ஈசனின் அழைப்பு, 2வது ஹர என்பது பாவத்தை அழிக்கும் வேண்டுகோள். ஹர ஹர என்ற நாம சங்கீர்த்தனம் ஆதரவோடு வந்து ஆட்கொள்கிறது.

? 'உள்ளத்தனைய உயர்வு’ என்பார்கள் பெரியோர்கள். நீங்களோ உதட்டளவு வழிபாடு போதும் என்கிறீர்களே?!

'நாத ப்ரம்மம்’ நாமாவில் ஊடுருவி நாம ஸங்கீர்த்தனத் தில் பிறவிப்பயனை அளிக் கிறது. சுலபமான முறையில், அத்தனைப் பேரும் கடைத் தேறும் உயர்ந்த தத்துவத்தை அறிமுகம் செய்த புதுச் சிந்தனையாளர்களில் ஏற்பட்ட காழ்ப்பு உணர்ச்சி, அபாண்டமாக பழிசுமத்த முற்பட்டுவிடுகிறது. அவர் களின் சிந்தனை வளத்தில் எட்டிய சித்தாந்தம், சமுதாய அரங்கத்தில் இருந்து வெளியேறியதில் ஏற்பட்ட ஆதங்கம் அவர்களை வேதனைக்கு உள்ளாக்குகிறது. இன்றைய நாளில் நொடிக்கு நொடி பல பிரச்னைகளைச் சந்திக்கும் மனிதனுக்கு, அவற்றைப் போராடி வெற்றிகொள்ள நேரம் போதவில்லை. அவற்றை எளிதில் சமாளிக்க நாம சங்கீர்த்தனத்தால் மட்டுமே இயலும். இயன்றதைத்தான் ஒருவனுக்கு பரிந்துரைக்க இயலும். இயலாத சடங்கு களை அவர்களில் திணிப்பது வீண். சடங்குகளை நடைமுறைப்படுத்தும் சூழல் தற்போது இல்லை. ஆதரவு இழந்த சடங்குகளைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பழைய சிந்தனையாளர்கள், விழிப்பு உணர்வு பெற்றுத் திருந்த வேண்டும். அவர்கள், சமுதாய அறத்தோடு இணைய முன்வர வேண்டும். இல்லையெனில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

மூன்றாவது கோணம்...

தனயனை அறிவுறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட ஹிரண்ய கசிபு, தனயனைவிடவும் அதிக எண்ணிக்கையில் நாராயண நாமாவை உச்சரித்திருக்கிறான். ஆனால், அவன் மகிழ்ச்சி அடையவில்லை. ராவணன், ராமனை நிந்தனை செய்ய பல தடவை ராம நாமாவைச் சொல்லி இருக்கிறான். அவனும் வாழவில்லை. லக்ஷ்மணன் போர்க்களத்தில் செயலிழந்த நிலையில், ராம நாமம் காப்பாற்றத் தவறியது. ஔஷதி பர்வதத்தில் இருக்கும் மருந்துதான் மறுபிறப்பை அளித்தது.

மரணப்படுக்கையில் வீழ்ந்த பீஷ்மர் ஆயிரம் நாமாக்களை இடைவிடாமல் சொன்னார். ஆனால் அவர் மரணப் படுக்கையில் இருந்து எழுந்துவரவில்லை. 'ஹரஹர மஹாதேவா’ என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக் கொண்டிருப்பவன் ராவணேச்வரன். அவன் மூச்சு தங்கவில்லை. ஆகவே, பெயர் பேரின்பத்தை அளிக்காது.

? உயர்ந்தவர்களுக்கு உயர்ந்ததே கண்ணில் படும். தங்களுக்கு துரியோதனப் பார்வை போலும்... அப்படித்தானே?!

பெயரும் உருவமும் இல்லாதவன் கடவுள். அவை மனித சிந்தனையின் படைப்பு. ஆசாபாசங்களும் விருப்புவெறுப்புகளும் கலந்த சிந்தனையில் உருவான பெயரில், அத்தனையும் அற்ற பரம்பொருள் எப்படி குடியேறும்?!

தசரதன் 'ராமன்’ என்று பெயரிட்டார். தகப்பன், தனயனுக்கு 'கிருஷ்ணன்’ என்று பெயரிட்டார். மனிதன் தன்னை அறிமுகம் செய்து கொள்ள பெயர் பயன்படுகிறது. நாம் சூட்டும் பெயர்களும் சூழலுக்கு உகந்த முறையில் மாறிக்கொண்டிருக்கும். எனவே, பெயர் நிரந்தரம் இல்லை. அப்படியிருக்க அது எப்படி நிரந்தரமான மோட்சத்தை அளிக்கும்? பெயர் இல்லாதவனைக் கூப்பிட்டால் திரும்பிப்பார்க்க மாட்டான். அதுமட்டுமின்றி, ஒருவன் கோவிந்தன் என்றும், மற்றொருவன் கோபாலன் என்றும் பல பெயர்களைச் சொல்லி அழைப்பதிலிருந்து இறைவனுக்கென்று இயற் பெயர் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. தொடர்பு இல்லாத பெயரில் தொடர்ந்து இருப்பதாகச் சொல்வது, சான்றில்லாத விளக்கம். 'நினைத்தாலே இறைவன் தோன்றுவார்’ என்றொரு தகவலும் உண்டு. அங்கு பெயரைச் சொல்லி அழைக்காமலே வருகிறான். இப்படியிருக்க, நாம் படைத்த பெயரில் நாத ப்ரம்மம் எப்படி ஊடுருவும்? இயற்கைப் பொருள்கள் அத்தனையிலும், அவை இயங்கும் பொருட்டு ஊடுருவியிருப்பவன், நமது செயற்கைப் பொருள்களில் தென்பட வழியில்லை. உன் உடம்பிலும் உடல் உறுப்புகளிலும் அவன் ஊடுருவவில்லை. அது நமது படைப்பு; அழியும் பொருள். உடலில் ஒட்டாமல் ஆன்ம வடிவில் (சைதன்யம்) தென்படுவான் இறைவன். ஆகவே, பெயரில் அவன் இல்லை. இருப்பதாகச் சொல்வது அபத்தம்.

? திருப்பெயர் தேவையில்லை என்றால், பரம்பொருளை எப்படி வழிபடுவது?

இறைவன் மனதில் தோன்றுவார். அவரோடு (கடவுள், ஆன்மா) எப்போதும் மனம் இணைந்திருப்பதால், அதில் தென்படுவார். மனம் எண்ணிய சைதன்யம் (ஆன்மா)... அதாவது கடவுள் உச்சரிப்பு, வடிவம் பெற்று வெளிவரும்போது பெயராக மாறிவிடுகிறது. 'மனம் கடவுளை நினைத்திருக்கிறது’ என்ற தகவலை வெளியிடும் கருவியே பெயர். மனதில் எண்ணிக்கொண்டிருக்கும்  கடவுளின் வடிவமே பெயரில் வெளிப்படுகிறது. மாறுபட்ட எண்ணமுடைய மனம், கடவுளையும் மாறுபட்ட பெயருக்கு இலக்காக்கி விடுகிறது. மனம் தொடாத எந்தச் செயலும் பெருமை பெறாது. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது. ஆசாபாசங்கள் அற்ற மனதில் கடவுள் ஊடுருவுவார். அப்படி, மனதை சுத்தம் செய்யவேண்டும் எனில், பழைய சிந்தனைகளில் வெளியான அத்தனை சடங்குகளும் நிச்சயம் வேண்டும். கடவுளை மனதில் தியானிக்க வேண்டும். வேள்வியால் அவரை விளக்க வேண்டும். அவர் உருவத்துக்கு உபசாரம் செய்யவேண்டும். இவை அத்தனையும் முறையாக நிறைவேறும்போது, மனம் சுத்தமாகும். அதில் கடவுள் தோன்றுவார்; அதன் வெளிப்பாடாக பெயரும் வெளிவரும். ஆகவே, வெறும் பெயர் ஒன்றுக்கும் உதவாது; அது உயிரற்ற ஒலி. அதை மிகைப்படுத்தி, அப்பாவிகளை சொல் வளத்தால் ஈர்த்து, தனது முன்னேற்றத்துக்கு முற்படுவது, மகான்களுக்குப் பெருமையல்ல.

ஆயிரம் நாமாவைச் சொல்ல முற்பட்டவன், 'த்யானம்’ சொன்ன பிறகே நாமாவளியை உச்சரிப்பான். மனம் தன்னில் கடவுளை குடியிருத்திய பிறகு, அதன் வெளிப்பாடாக நாமம் வெளிவர வேண்டும். முயற்சியில் அடைய வேண்டிய பேரின்பத்தை, முயற்சி இல்லாமல் அடைய வைக்க இயலும் என்று சூளுரைப்பது, போகாத ஊருக்கு வழி சொல்வதாகும். அப்பாவி மக்களின் அறியாமையை, தங்களுடைய இகலோக சுகபோகங்களுக்கு பயன்படுத்தும் எண்ணம் ஏற்படக்கூடாது.

துறவிகளில் சிலரும், மக்கள் கடைத்தேற வழி சொல்லாமல், இகலோக சுக போகங்களை அடையவே அருள்பாலிக்கிறார்கள்.  மக்களை கடைத்தேறாமல் இருக்கவைப்பதில் ஆர்வம் செலுத்தக் கூடாது. தங்களைப் போன்றே... தவத்திலும், வேள்வியிலும், பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடும் வண்ணம் மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

'நாம சங்கீர்த்தனத்தை நடைமுறைப்படுத்தினால் போதும்’ என்று அறிவுரை சிந்தனைக்கு பொருந்தாத ஒன்று. உழைத்து முன்னேற வேண்டும். உதட்டளவில் உச்சரித்து முன்னேற முற்படக் கூடாது. கடவுளில் பக்தி வேண்டும்; செயலில் சிரத்தையும் வேண்டும். இரண்டும் இணைந்தால் இலக்கை எட்டலாம். இரண்டில் ஒன்று தவிர்க்கப்பட்டாலும் எண்ணம் ஈடேறாது!

கேள்வி - பதில்

தங்கள் சிந்தனைக்கு...

இறைவனின் வடிவான அறம்தான் நமது குரு. அறத்தின் பரிந்துரை ஏற்கத் தக்கது. அதுவே ஸனாதனம். மக்கள் மகிழ்ச்சியோடு வாழ அது வழி சொல்லும். அதன் கருத்தைத் திருப்பிச் சொல்லுபவர்கள்தான் குருவும் மகானும். ஸனாதானத்தை மீறி எதையும் அவர்களால் சொல்ல இயலாது. நேரடியாக ஸனாதனத்தின் அறிவுரைகள் நம்முன் தென்படும்போது, குரு  மகான் ஆகியோரின் வழிகாட்டல்கள் தேவைப் படாது. அறத்தை அலட்சியப் படுத்திவிட்டு, குருவையும் மகானையும் ஏற்பதால், விருப்பம் நிறைவேறாது. குரு வழியாகவும் மகான் வழியாகவும்தான் கடவுளைத் தெரிந்துகொள்ள இயலும் என்று நினைப்பது சரியல்ல. குருவுக்கும் குருவாக இருந்தவர்கள் ஸனாதனத்தை ஓதினர். அவர்கள், சூழலுக்குத் தகுந்தபடி மக்களின் விருப்பத்தை அறமாக மாற்றிச் சொல்ல முற்படவில்லை. கடவுளை, அறத்தை நம்பி வாழ்ந்தார்கள். தனது அனுபவத்தை  மற்றவர்களுக்கு ஓதினார்கள். தற்போது மக்களின் அனுபவத்துக்கு முன்னுரிமை அளித்து, அறம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. சிந்தனை செய்யுங்கள் தெளிவுபெறுவீர்கள்.

பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism