Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்!

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்!

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

“சிறு வயதில் விளையாட்டு. பிறகு கல்வியில் நாட்டம். சமுதாயத்தில் இணைந்து வாழும் பக்குவத்தை கல்வி அளித்துவிடும். இளமையில் இன்பத்தைச் சுவைக்கும் ஆர்வம் தோன்றிவிடும். அதை நிறைவுசெய்ய திருமணத்தில் இணைகிறான். வாழ்க்கையைச் சுவைத்து மகிழ்வதற்கான அடித்தளம், தாம்பத்தியம். அது சிறப்பாக அமைய, ஜோதிடம் பரிந்துரைக்கும். 

ஒருவனுக்கு நீண்ட ஆயுள் மட்டும் போதாது; தாம்பத்தியமும் சிறப்புற அமையவேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சுவையாகவும், அந்தக் குன்றாத சுவை நிரந்தரமாகவும் இருக்கும். தாம்பத்தியமானது இனப்பெருக்கத்துக்கு மட்டுமானது அல்ல; அறத்தோடு இணைந்த இன்பத்தைப் பருக ஏற்பட்டது.

இன்றைக்கு, எல்லோருக்கும் மகப்பேறு கிட்டுவது இல்லை. மருத்துவரை அணுகவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. உணவிலும் சிந்தனையிலும் ஏற்பட்ட மாறுதல், உடல் வளத்தைக் குன்றச்செய்து, இனப்பெருக்கத் துக்கு இடையூறைச் சந்திக்க வைக்கிறது. குழந்தைகளை ஈன்றெடுப்பதில் ஆர்வம் இல்லாமல், புலன்களின் வேட்கை தணிந்தால் போதும் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது. மேலும், திருமணமுறிவும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. பண்புக்குப் பெருமை இல்லாமல் போய்விட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னோர்கள்  சொன்னார்கள்!

'ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை’ என்று சிலர் கிளிப்பிள்ளை போன்று உதட்டளவில் உதிர்த்துக்கொண்டு, தம்மைப் பகுத்தறிவாளனாகக் காட்டிக்கொள்வதை சமுதாயம் தெரிந்துகொண்டுவிட்டது. வாழ்வில் கடைப்பிடிக்கும் மூட நம்பிக்கைகள் ஏராளம். கடவுளை மறந்து, தலைவன் வரம் கொடுப்பான் என்று அவனுக்கு நிரந்தரச் சேவகனாக வாழ்வதும் மூடநம்பிக்கைதான். தலைவனின் பதவி எத்தனை நாள் இருக்கும் என்று அவனுக்கே தெரியாது. ஆக, தலைவன் நிரந்தரமானவன் என்ற எண்ணம் அப்பட்டமான மூடநம்பிக்கை. அப்பாவி மக்கள்தான் தலைவனுக்குப் பாதுகாப்பு. எனவே, 'தலைவனே தனக்குப் பாதுகாப்பு’ எனும் சேவகனின் எண்ணமும் சான்றில்லாத மூடநம்பிக்கையாகும். புதுத் தலைமுறை விழித்துக்கொண்டுவிட்டது. பழைய தலைமுறை இன்றும் அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தவிக்கிறது. விலக்கப்படவேண்டியவை இதுபோன்ற மூடநம்பிக்கைகளே! பறிபோன பண்பைத் திரும்பப் பெற ஜோதிடத்தை அணுகவேண்டும். நீண்ட தாம்பத்தியத்துக்கு அது வழி சொல்லும்.

உதாரணம்  1: ஏழுக்கு உடையவன் நீசத்தை அடைந்த நிலையில், சுக்கிரன் 6 அல்லது 8ல் இடம்பிடித்திருந்தால், ஜாதகனின் தாம்பத்தியம் சிறக்காது என்கிறது ஜோதிடம். லக்னம் (பிறந்தவேளை), அதிலிருந்து 7ம் வீடு தாம்பத்தியத்தின் சிறப்பைச் சொல்லும். அதை, இறுதி செய்யும் தகுதி 7க்கு உடையவனிடம் இருக்கும். அவன் நீசம் பெற்றால் (தகுதி இழந்தவன்) தாம்பத்தியம் துயரத்துக்கு வழிகோலும். அதை நிர்ணயம் செய்வதற்கு, 6 அல்லது 8ல் சுக்கிரனின் இருப்பு உதவுகிறது. சுக்கிரன் விவாஹகாரகன். 'காரகன்’ என்றால், நடைமுறைப் படுத்துபவன் என்று பொருள். அவன் ஆறிலோ எட்டிலோ மறைந்திருந்து செயல்படாமல் இருந்துவிடுகிறான். 7க்கு உடையவன் நீசம் பெற்று, சுக்கிரனுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டான்.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

அவன் தனது செயலில் ஈடுபடாமல் இருப்பதை, 6 அல்லது 8ம் இடம் சுட்டிக்காட்டிவிட்டது. அதிகாரியின் கையொப்பம் இல்லாத  உத்தரவை, அவனுக்குக் கீழ் இருக்கும் ஊழியர் செயல்படுத்த மாட்டார். முறையான உத்தரவைக்கூட, தமது விருப்பப்படி தாமதமாகச் செய்யும் இயல்பு, அந்தப் பொறுப்பை ஏற்பவனில் இருக்கும். ஆக, 'காரக’ கிரகத்தின் ஒத்துழைப்புக்கும் தாம்பத்தியத்தை நிறைவு செய்வதில் பங்கு உண்டு.

உதாரணம்  2: இங்கு மகரத்தில் நீசம் பெற்றிருக்கிறார் குரு. அவர் 7க்கு உடையவர். இந்த நிலையில், 8ல் மேஷத்தில் சுக்கிரனின் இருப்பு தாம்பத்தியத்தை பாதித்துவிட்டது. அதேபோல், சுக்கிரன் 6ல் இருந்தாலும் தாம்பத்தியம் சிறக்காது. தாம்பத்தியத்தில் ஏற்பட்ட எதிர்விளைவானது, வாழ்வின் மற்ற அலுவல் களிலும் நெருடலை உண்டு பண்ணிவிடும். தாம்பத்தியம் மனம் சார்ந்த விஷயம். மனம் எதிர்பார்க்கும் பலனில் ஏமாற்றம் ஏற்பட்டால், அது துவண்டுவிடும். வாழ்க்கையில் மற்ற அலுவல்களில் நிறைவை எட்ட தாம்பத்தியத்தின் நிறைவு ஒத்துழைக்கும் லக்னத்தில் (பிறந்த வேளையில்) இருந்து 7ம் வீட்டுக்கு உடையவன் 8ல் அமர்ந்திருக்கிறான். அதேவேளையில், லக்னத்தில் இருந்து 12ம் வீட்டுக்கு உடையவன் 7ல் அமர்ந்து இருக்கிறான். இந்த அமைப்பு புருஷ ஜாதகத்தில் இருந்தால் தாம்பத்தியம் பெருமை பெறாது; துயரத்தைச் சந்திக்க நேரிடும் என்கிறது ஜோதிடம்.

7க்கு உடையவன் தனது தகுதியை இழந்துவிடுகிறான் (நீசம் பெற்றவன்); விரயத்துக்கு அதிபதி (12க்கு உடையவன்) 7ல் அமர்ந்துவிடுகிறான்; தாம்பத்திய சுகத்தைக் கனவாக்கிவிடுகிறான். 6, 8, 12க்கு உடையவர்கள், எங்கு அமர்ந்தாலும், அமர்ந்த இடத்தின் தகுதியை இழக்க வைப்பார்கள். 7ன் தகுதி இழப்பு நிலையில், அதை அழிக்கும் இணைப்பை 12க்கு உடையவன் செய்துவிடுகிறான்.

உதாரணம்  3: 7க்கு உடைய சனி மேஷத்தில் நீசம் பெற்றிருக்கிறான்.

12க்கு உடைய சந்திரன் 7ல் வீற்றிருக்கிறான். தாம்பத்தியம் சிறக்காமல் இருக்க மனைவியின் பங்கு காரணமல்ல; ஜாதகனின் கர்மவினை மனைவியின் தகுதியிழப்பை ஏற்படுத்தி, தன்னை வருத்தத்தில் ஆழ்த்திக்கொள்கிறது. இங்கெல்லாம் 7ம் இடத்தில் வெப்ப கிரகம் (பாப கிரகம்) இல்லாததைப் பார்த்தும், 7ல் பாப கிரகம் இல்லாத ஜாதகத்தை இணைத்து வைத்தும், வலுக்கட்டாயமாக விவாகரத்தை ஏற்படுத்த ஜோதிட பிரபலங்கள் முயற்சிக்கக் கூடாது. இரண்டு ஜாதகங்களிலும் 7, 8 ஆகிய இரு வீடுகளில் பாப கிரகம் அல்லது சுப கிரகம் ஆகியவற்றை மட்டும் பார்த்துவிட்டு, பிரபலங்கள் தங்களின் முடிவைத் தெரிவித்து விடுகிறார்கள். கிரகங்கள் பலனைச் சொல்லாது; கர்மவினையே, தனது வடிவத்தை கிரகங்கள் வாயிலாகச் சுட்டிக்காட்டும். வானவியலை விளக்கிக் கூறும் ஐந்து சித்தாந்த நூல்களில் போதுமான தகுதி பெற்றவர்கள், ஜாதகத்தைத் துல்லியமாகக் கணிப்பார்கள். அயன சலனத்தைக் கவனிக்காமல், ஏறக்குறைய 150 வருடங்களாக (அன்று இருந்த கிரகங்களின் சலனத்துக்கு உகந்தபடி) ஒரே கணனத்தைப் பின்பற்றிக் கணிக்கும் பஞ்சாங்கங்கள் ஏராளம். அதை அடிப்படையாக வைத்து கணனம் செய்யப்பட்ட ஜாதகங்கள் நம்பிக்கைக்கு உகந்தவையல்ல. தவறான கணிப்பில் உருப்பெற்ற ஜாதகத்துக்கு பலன் சொல்ல முற்படும்போது, பலன் மாறுபட்டு அனுபவத்துக்கு வரும். இதுவே, ஜோதிடத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, மூடநம்பிக்கை என முத்திரை குத்துவதற்கு ஏதுவாகிறது.

கிரகங்கள் நடுநிலையானவை. அவற்றுக்கு யாரிடமும் பகையோ நட்போ இருக்காது. கண்ணன் தன்னை அப்படித்தான் அறிமுகம் செய்துகொண்டார். 'எனக்கு யாரிடமும் பகையும் இல்லை, நட்பும் இல்லை’ என்றார் (நமேத்வேஷயோஸ்திநப்ரிய:). தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றவனுக்கு, தண்டனை அனுபவிப்பவனிடம் பகையும் இல்லை; பரிவும் இல்லை. தூக்குத் தண்டனை என்று தீர்ப்பளிக்கும் நீதிபதிக்கும் தண்டனைக்குள்ளானவனிடம் பகையோ, பாசமோ இல்லை. தண்டனை அனுபவிப்பவனின் கர்மவினையே அவர்களைக் கருவிகளாக்கிச் செயல்பட வைத்துவிட்டது.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

பதவியில் அமர்ந்தவன் அந்தப் பதவியின் கோட்பாட்டுக்கு உகந்த செயலில் இறங்கிவிடுவான். தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அவனது செயல்களில் தலையிடாது. கிரகங்கள் அமர்ந்த இடத்தின் தகுதிக்கு உகந்த செயல்பாட்டில் இறங்கிவிடும். ஒரே நொடியில் வெளிவந்த இரு குழந்தைகளிலும் இயல்பு மாறுபட்டு இருக்கும். இயல்புக்குக் காரணம் கர்மவினை. கர்மவினையின் மாறுபாடு மனிதனுக்கு மனிதன் மாறுபட்டு இருப்பதால், ஜோதிடத்தில் பொதுப்பலன் வராது. ராசியில் இணைந்த நட்சத்திரங்களுக்கு ஒரே பலனைச் சொல்லும் முறையில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. கர்மவினையை உணரவைப்பது காலம்; காலம் பலனை தன்னிச்சையாகச் சொல்லாது. அவன் பிறந்தவேளையில், தேசத்துடன் இணைந்த காலம் (லக்னம்), அவனது கர்மவினையைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர பயன்படுகிறது. ஜாதகம் பார்க்கும் புதுத் தலைமுறையினர் சிலர், பழைய பண்பாட்டுக்கு உகந்த ஆடைஆபரணங்களை ஏற்று, குருபக்தியும் இறைவழிபாடும் கொண்டவர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு, மக்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள். அவர்களிடம், சூழலுக்கு உகந்த சிந்தனைதான் வெளிப்படும்; சாஸ்திர விளக்கத்தோடு இணைந்த சிந்தனை இருக்காது.

கலப்புத் திருமணம், திருமண முறிவு, காதல் திருமணம், கணவன்  மனைவி இடையே சண்டைச் சச்சரவு, வெளிநாட்டுப் பயணம், வியாபாரத்தில் முன்னேற்றம், சமுதாயத்தின் அங்கீகாரம், தேர்தலில் வெற்றி  தோல்வி, புதுக் கல்வியில் முன்னேற்றம்... இப்படி, சூழலுக்கு உகந்த விஷயங்களை அலசி ஆராய்ந்து முடிவை அறிவிப்பார்கள். இத்தனை விஷயங்களையும் விளக்கமாகச் சொல்வதற்கு ஜோதிடம் தேவையில்லை. காலத்துக்கு உகந்த சிந்தனையே அதை வெளிப்படுத்திவிடும். அது, மக்களின் சிந்தனைக்கும் பொருந்திவந்துவிடும். அவர்களும் நிம்மதி பெற்றுவிடுவார்கள்!

ஆக, ஜோதிட சாஸ்திரத்தை ஓரம்கட்டி விட்டு, காலத்துக்கு உகந்த சிந்தனையின் மதிப்பீடுதான் ஜோதிட விளக்கமாக வெளிவருகிறது. சமையல் விளம்பரத்தில் கட்டுக் குடுமியோடு, நெற்றித் திலகமும், பஞ்சகச்சமும், தொந்தியும் வெளிப்படும் கோலத்தில் ஒரு சமையல் கலைஞன் தோன்றுவான். இன்றைய புதுத் தலைமுறையினருக்குப் பரிச்சயம் இல்லாத உருவமாக இருக்கும். விளம்பரத்தைப் பார்ப்பவர்கள், அந்த ஆசாமியின் உருவத்தைப் பார்த்து, சுவை நன்றாக இருக்கும் என்று நம்ப வேண்டும்! இப்படியான சிந்தனைகள் எல்லாம் மறைந்து, உள்ளதை உள்ளபடி விளக்கும் பிரபலங்கள் தோன்றவேண்டும். வழி தடுமாறும் மக்களை எச்சரித்து நல்வழிகாட்டி, மக்கள் சேவையில் அவர்கள் ஈடுபடவேண்டும். வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களை அகற்றி, நம்பிக்கை ஊட்டி வாழவைக்கும் பணியை பிரபலங்கள் ஏற்கவேண்டும். கருணை உள்ளம் படைத்த நம் முன்னோர் சுட்டிக் காட்டிய வழியை (ஜோதிடத்தை), மக்களுக்குக் காட்டுவதில் ஆர்வம் வளரவேண்டும்.

காலத்தின் தாக்கத்தில் ஏற்பட்ட சலசலப்பு நிலைத்து நிற்காது. ஜோதிடத்தின் ஒத்துழைப்பு வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. உள்ளதை உள்ளபடி சொல்லி நல்வழிப்படுத்தும் பிரபலங்களும் எண்ணிக்கையில் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். யானைக்கும் அடிசறுக்கும். அப்படியான சறுக்கல் ஜோதிடத்திலும் தென்படுவது இயற்கை. பிரபலங்கள் அதை உணர்ந்து செயல்பட்டால் சமுதாயம் விளங்கும்.

உதாரணம்  4: லக்னத்திலிருந்து 8ல் சுக்கிரன் அமர்ந்திருக்கிறான். எட்டுக்கு உடையவன், சனியின் க்ஷேத்திரத்தில் இருக்கிறான். இந்த அமைப்பு புருஷ ஜாதகத்தில் தென்பட்டால் தாம்பத்தியம் சிறக்காது என்கிறது ஜோதிடம்.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

திருமணத்தை நடத்திவைப்பவன் சுக்கிரன். அத்துடன் உலகவியல் சுகங்களில் முதன்மைபெற்ற தாம்பத்திய சுகத்தை குறையாமல் அளிக்கும் பொறுப்பும் அவனுக்கு உண்டு. கடவுள் வரம் அளித்துவிடுவார்; பூசாரி வரமளிக்கமாட்டார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போவது உண்டு! 8ம் வீடு ஆயுளை வரையறுக்கும். அதற்கு உடையவன் சனியின் வீட்டில் (மகரம் அல்லது கும்பம்) தென்படுவான். சனி துயரத்தைச் சந்திக்கவைப்பவன். ஆயுளை வரையறுக்க வேண்டியவன். அவன் அமர்ந்திருக்கும் சனியின் வீட்டின் தாக்கத்தால், சனி நிறைவேற்றவேண்டிய துயரத்தை, தானே நடைமுறைப்படுத்திவிடுகிறான். 7ன் இரண்டு 8. எட்டில் இருக்க வேண்டியவன் இடம் மாறி சனி வீட்டில் இருக்க நேரிட்டது. 7ன் சுவையை இரண்டில் இருப்பவன் (8ல் இருப்பவன் 7ஐ லக்னமாக வைத்தால், அது குடும்ப ஸ்தானம் ஆகிவிடும்) நிறைவு செய்ய வேண்டும். ஆனால், தவறான இடத்தில் (சனியின் வீட்டில்) வந்ததால், இடத்துக்கு உகந்த பலனை அளிக்கும் நிர்பந்தத்துக்கு உட்பட்டுவிடுகிறான்.

உதாரணம்  5: சுக்கிரன் 8ல் மறைந்துவிட் டான். 8க்கு உடைய செவ்வாய் சனியின் வீட்டில் (மகரம்)

முன்னோர்கள்  சொன்னார்கள்!

அமர்ந்து இருக்கிறான். இந்த அமைப்பு தாம்பத்திய சுவையை ஏற்க இயலாமல் செய்துவிடுகிறது.

வேலையில் அமர்ந்தவன் தனது மேலதிகாரி யின் தொந்தரவைப் பொறுத்துக்கொள்வான்; எதிர்க்கமாட்டான். அவரது உத்தரவுக்குப் பணிந்து போவான். எப்போது அழைத்தாலும் அலுவலகத்துக்கு வருவான். வேலைக்கு  முன்னுரிமை அளிப்பான்.

ஆனால், அவனே தாம்பத்தியத்தில் இணையோடு ஒத்துப்போகமாட்டான். இருவரும் நீக்குப்போக்கோடு செயல்பட மாட்டார்கள். வளைந்து கொடுக்கும் எண்ணமும் தோன்றாது. தாம்பத்தியம் கசக்கும். அதற்கான காரணத்தை பரஸ்பரம் சுட்டிக்காட்டுவார்கள். தாம் இணைந்திருப்பது தாம்பத்தியம்; அது சிறக்க எந்த வழி சிறந்தது என்று இருவரும் ஆராய மாட்டார்கள். தகுதிக்குத் தகுந்த ஊதியம் பெற்றவன், காலப்போக்கில் ஊதிய உயர்வை எதிர்பார்ப்பான். அவன் எதிர்பார்க்கும் வேளையில் கிடைக்காதபோது, பொறுமை இழந்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேறு வேலை தேடுவான்; கிடைக்காமல் தவிப்பான். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுப்பான்.

இப்படி, வேலையிலும் தாம்பத்தியத்திலும் மாறுபட்ட கோணம் எப்படித் தோன்றியது என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அப்படியில்லாமல், அவர்களது சிந்தனைக்கு உகந்த முறையில் விவாகரத்தையும், வேலையை ராஜினாமா செய்வதையும் ஊக்குவிக்கக்கூடாது. ஜோதிடத்தில் பிரபலங்களின் பங்கு பெருமைக்கு உரியது. மக்கள் சேவை மகேசன் சேவையாகும்!

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism