Published:Updated:

சித்தமெல்லாம் சித்தமல்லி - 8!

நிவேதிதா

சுந்தரநாராயணன், தீவனம் எடுத்துக் கொள்ளாமல் அடம் பிடித்துக் கொண்டிருந்த பசுக்களை அடிக்கப் பார்த்த நேரத்தில், அவருடைய பார்வையில் ஓர் அற்புதக் காட்சி தெரிந்தது. அந்தப் பசுக்களின் பின்பாக மந்த்ராலய மகான் தோன்றி, 'என்னால் உன்னிடம் ஆற்றுப்படுத்தப்பட்ட பசுவையா அடிக்கப் பார்க்கிறாய்?’ என்று கேட்காமல் கேட்பதுபோல் தோன்றியது. அவ்வளவுதான்... அதிர்ந்து போனவராக மந்த்ராலய மகானிடம் மானசிகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்ட சுந்தரநாராயணன், எவ்வளவு சீக்கிரம் மந்த்ராலயம் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போகவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டார். உடனே, அதுவரை தீவனம் எடுத்துக்கொள்ளாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்த பசுக்கள் சாதுவாக தீவனம் எடுத்துக்கொண்டன. 

மதிய வேளையில், சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த சுந்தரநாராயணனுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய நண்பர் பாஸ்கரன் அவரை போனில் தொடர்புகொண்டு, தாங்கள் சிலர் ஒன்று சேர்ந்து மந்த்ராலயம் செல்லப்போவதாகவும், சுந்தரநாராயணனுக்கும் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்தார். அதைக் கேட்டதுமே, ராகவேந்திர ஸ்வாமிகளின் கருணா கடாக்ஷத்தை உணர்ந்து, நெகிழ்ந்துபோனார் சுந்தரநாராயணன். மந்த்ராலயம் செல்லவேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில் அழைப்பும் அதற்கான வாய்ப்பும் வந்துவிட்டதே! சிலிர்ப்பும் பரவசமும் இருக்கத்தானே செய்யும்?!

சித்தமெல்லாம் சித்தமல்லி - 8!

அடுத்த வாரமே பாஸ்கரன், கல்யாணசுந்தரம் மற்றும் சிலருடன் சுந்தரநாராயணன் மந்த்ராலயத்துக்குப் புறப்பட்டார். போகும்போது, கோயில் திருப்பணிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய பத்திரிகையையும் எடுத்துச் சென்றார். பெருமாள் மற்றும் தாயாரின் திருவுருவங்களின் தலைப் பகுதி பின்னப்பட்டு இருக்கிறதே என்ற வருத்தத்துடனும், அதற்கு மந்த்ராலய மகானின் அருளால் தெளிவும் தீர்வும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடனும் புறப்பட்ட சுந்தரநாராயணனுக்கு, மந்த்ராலயத்துக்குச் செல்லும் வழியிலேயே ஒரு தெளிவை ஏற்படுத்திவிட்டார் ஸ்ரீராகவேந்திரர்.

அவர்கள் மந்த்ராலயத்துக்குச் செல்லும் வழியில், ஹம்பிக்கும் சென்றனர். அங்கேதான் ராமபிரான் ஆஞ்சநேயரையும் சுக்ரீவனையும் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் இருந்த தெய்வத் திருவுருவங்கள், அந்நியர்கள் படையெடுப்பின்போது பின்னப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றையும் பக்தர்கள் பக்தியுடன் வழிபடத்தான் செய்தார்கள். அதையெல்லாம் பார்த்த பிறகு சுந்தரநாராயணன் மனதில் இருந்த வருத்தம் இருந்த இடம் தெரியாமல் போனது.

அனைவரும் மந்த்ராலயம் சென்றனர். மறுநாள் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு, பஞ்சகச்சம் உடுத்திக்கொண்டு நண்பர் களுடன் மந்த்ராலய மகானை தரிசிக்கச் சென்றார் சுந்தரநாராயணன். தரிசனத்துக்காக அவர்கள் சிறப்பு அனுமதியும் பெற்றிருந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்காக ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தாவனத்தில் காத்துக்கொண்டிருந்த நேரத்தில், வேதபாராயண கோஷ்டி ஒன்று வேதகோஷங்களுடன் வந்துகொண்டிருந்தது. அந்தக் கோஷ்டியினர் சுந்தரநாராயணன் நின்றுகொண்டிருந்த இடத்தின் அருகில் வந்தபோது, அதை முன்னின்று வழிநடத்தி வந்த ஒரு பட்டர், சுந்தரநாராயணனைத் தன்னுடன் வரும்படி சைகை செய்து அழைத்தார். முன்பின் தெரியாத அவர் தன்னை ஏன் அழைக்கப் போகிறார், வேறு யாரையோ அழைக்கிறார்போலும் என்று நினைத்தவராக நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தார் சுந்தரநாராயணன். ஆனால், அந்த பட்டர் திரும்பத் திரும்ப இவரை அழைக்கவே, அந்த பட்டருடன் கிளம்பிச் சென்றார்.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 8!

வேத கோஷ்டியினருடன் சென்ற சுந்தர நாராயணன், வேத பாராயணம் முடியும்வரை மகானின் பிருந்தாவனத்தில், அவருடைய அருள் பிரவாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தவர், வெளியில் வரும்போது அந்த பட்டரிடம், ''நண்பர்களுடன் இருந்த என்னை மட்டும் தனியாக அழைத்ததற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார்.

''ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாது. உங்களை எங்களோடு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதாக ஓர் எண்ணம் திரும்பத் திரும்ப எனக்குள் தோன்றியது. எனவேதான் உங்களை அழைந்தேன்'' என்றார் பட்டர்.

தெய்வத் திருப்பணிகளுக்குத் தம்மால் தேர்வு செய்யப்பட்ட சுந்தரநாராயணனுக்குத் தம்மிடம் அளவற்ற பக்தியும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஸ்ரீராகவேந்திரர்தான் அந்த பட்டரின் மனதில் அப்படி ஓர் எண் ணத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். அதுதான் சத்தியமும்கூட என்பதுபோல் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் உறுதிப்படுத்தின.

பிருந்தாவன தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்த சுந்தரநாராயணன் மீண்டும் ஒருமுறை நண்பர்களுடன் தரிசனத்துக்குச் சென்றார். மகானின் அனுக்கிரஹத்தை பல நிலைகளில் பூரணமாக உணர்ந்த நிலையிலும், பழைய வாசனை போகவில்லை என்பதுபோல் ஓர் எண்ணம்! தான் கொண்டு வந்திருந்த திருப்பணி பத்திரிகையை மகானின் பிருந்தாவனத்தில் வைக்கச் செய்து, 'ஸ்வாமி, தங்களின் திருவுள்ளப்படித்தான் என்னைப் பெருமாளின் கைங்கர்யத்தில் ஈடுபடச் செய்திருக்கிறீர்கள் என்பது உண்மையானால், தங்களின் பூரண அனுக்கிரஹத்தை எனக்கு உணர்த்தி அருள வேண்டும்’ என்று சவால் விடுவது போன்று ஒரு வேண்டுதலை முன்வைத்தார்.

சுந்தரநாராயணனின் மனதில் தோன்றிய சந்தேகம் மகானுக்குத் தெரியாதா என்ன? அடுத்த கணமே அந்த அற்புதம் நிகழ்ந்தது.

மகானின் பிருந்தாவனத்துக்கு மேலாக அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த கனகாம்பர உதிரிப் பூக்கள், பூமழை பொழிவதுபோல்  திருப்பணி பத்திரிகையின் மேல் பொழிந்தன. தம்முடைய பரிபூரண அனுக்கிரஹம் இருக் கவேதான் சுந்தரநாராயணனால் பெருமாளின் திருப்பணிகளில் ஈடுபட முடிந்தது என்பதை உறுதிப் படுத்திவிட்டார் மந்த்ராலய மகான்!

தரிசனம் முடித்து நண்பர்களுடன் வெளியில் வந்த சுந்தரநாராயணனின் மனதில், ஸ்ரீராகவேந்திரரின் அனுக்கிரஹம் கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், கூடவே ஒரு மனக் குறையும் இருக்கத்தான் செய்தது.

சித்தமெல்லாம் சித்தமல்லி - 8!

நண்பர்களுடன் இரண்டாவது முறையாக பிருந்தாவன தரிசனத்துக்குச் சென்ற சுந்தரநாராயணன், ஸ்ரீராகவேந்திரருக்கு அர்ப்பணிப்பதற்காக ஒரு தேங்காயைக் கொண்டு சென்றிருந்தார். அப்போது அங்கே பூஜை செய்யும் ஸ்வாமிஜி இல்லாததால், தேங்காயை உடைத்து அர்ப்பணிக்க முடியவில்லை. இந்தக் குறையுடனே பிருந்தாவனத்தில் இருந்து பிரசாதங்களுடன் புறப்பட்டார் சுந்தரநாராயணன். அவர் வெளியில் வருவதற்குச் சற்று முன்பாகவே அந்த அதிசயம் நிகழ்ந்தது. சுந்தர நாராயணனின் மனக் குறையும் நீங்கியது.

எப்படி..?

சித்தம் சிலிர்க்கும்

படங்கள்: க.சதீஷ்குமார்