Election bannerElection banner
Published:Updated:

ஆலயம் தேடுவோம்

ராவணனின் வாள் சந்திரஹாசம் மின்னல் உருவில் வந்து வழிபட்ட திருத்தலம்எஸ்.கண்ணன்கோபாலன்

ந்திரஹாசம் - விகடன் கிராஃபிக் மூலம், தமிழில் முதன்முறையாக 2000க்கும் மேற்பட்ட ஓவியங்களுடன் கிராஃபிக் வடிவில் (நவம்பரில்) வெளிவரவுள்ள வரலாற்று நாவல். 

பாண்டிய மன்னர்களுடைய குல வாளின் திருப்பெயரே சந்திரஹாசம். அதையே தலைப்பாகக் கொண்டு, பிற்கால பாண்டியர்களில், வீர பாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் இடையே  வாரிசு உரிமையின்பொருட்டு நிகழ்ந்த முடிவில்லா யுத்தத்தின் கதையைச் சொல்லும் புத்தகம் இது.

புராணக் கதைகளிலும் 'சந்திரஹாசம்’ என்ற பெயரில், முக்கியத்துவம் வாய்ந்த வாள் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. சிவபெருமானால் ராவணனுக்கு அளிக்கப்பட்ட வாள் அது. சீதையைக் கடத்திச் செல்லும்போது ராவணனை வழிமறித்து எதிர்த்த ஜடாயுவின் இறக்கைகளை, ராவணன் அந்த  ’சந்திரஹாசம்' வாளால்தான் வெட்டி வீழ்த்தினான். ஒரு புண்ணிய ஆத்மாவைக் கொல்ல தானொரு கருவியாக இருந்ததால் தனக்குப் பாவம் வந்து சேர்ந்ததாக வருந்திய அந்த வாள், மின்னல் உருவில் சிவனாரை வலம் வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாம்.

அப்படி, சந்திரஹாசம் எனும் அந்த வாள் வழிபட்ட திருத்தலத்தையே இந்த இதழ் ஆலயம் தேடுவோம் பகுதியில் பார்க்கப் போகிறோம்.

திரேதாயுகம்!

கயிலையில் திடீரென்று கோடி சூரியப் பிரகாசம்!

காரணம்..?

ஆலயம் தேடுவோம்

அம்பிகை இறைவனைப் பார்க்க, பார்வையின் பொருள் உணர்ந்த பரமன், ''தேவி, பிரகாசத்துக்குக் காரணம் ஒரு வாள்! அந்த வாள் காலம்காலமாக எமது திருக்கரத்தில் திகழ்ந்த 'சந்திரஹாசம்’ என்னும் வாள்தான். ராவணனின் பக்திக்குப் பரிசாக அதை நாம் அளித்தோம். அந்த வாள்தான் இப்போது நம்மைத் தேடி வந்திருக்கிறது. அதுதான் கயிலை பிரகாசிக்கக் காரணம்!'' என்றவர் சந்திரஹாசத்தை நோக்கி, ''ராவணனிடம் இருந்து எம்மிடம் வரக் காரணம் என்ன?'' என்று ஒன்றும் அறியாதவர்போல் கேட்டார்.

''ஐயனே, தாங்கள் அறியாதது இல்லை. தங்கள் திருக்கரத்தில் இருந்தவரையில் புனிதத்துவத்துடன் பொலிந்து தோன்றிய நான், சத்தியத்தையே பேசும் பெருமைகொண்ட ஜடாயுவின் இறகுகளை வெட்டிய ராவணனின் அடாத செயலுக்கு துணை போனதால், பெரும் பாவம் என்னைப் பற்றிக்கொண்டது. அதற்கான விமோசனம் வேண்டியே வந்தேன்'' என்றது சந்திரஹாசம். அதைக் கனிவுடன் ஏறிட்ட பரமன், பூலோகத்தில் ஒரு தலத்தைக் குறிப்பிட்டு, அங்கு சென்று வழிபடும்படி பணித்தார்.

அதன்படி, சந்திரஹாசம் பூலோகத்துக்கு வந்து சேர்ந்த தலம் படுநெல்லி! திருமாலின் மயக்கம் தெளிவித்த அற்புதமான தலம் இது.

ஆலயம் தேடுவோம்

ஜலந்திரன் என்றொரு அசுரன் இருந்தான். அவனுடைய மனைவி எப்போது பதிவிரதா தன்மையை இழக்கிறோளோ, அப்போதுதான் தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரம் பெற்றவன் அவன்.

அவனது கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமானதால், அவனை அழிக்க வேண்டிய நிலை சிவபெருமானுக்கு ஏற்பட்டது. ஜலந்திரனுக்கும் சிவபெருமானுக்கும் போர் நடந்தது. ''ஜலந்திரனின் மனைவி பதிவிரதையாக உள்ளவரையில் அவனை அழிக்க முடியாது. அவளின் பதிவிரதாதர்மத்தை உடைத்தால்தான் சிவபெருமானால் ஜலந்திரனை வெல்லமுடியும் என்பதை அறிந்த மகாவிஷ்ணு ஒரு முனிவராக மாறி, பிருந்தை வசித்த பாதாளலோகத்துக்குச் சென்றார். அவரை வரவேற்ற பிருந்தை, ஆசனம் அளித்து உபசரித்தாள்.

''என்னை உபசரிப்பது இருக்கட்டும். உன் கணவன் சிவபெருமானுடன் புரிந்த போரில் இறந்துவிட்டான். அதைச் சொல்லத்தான் வந்தேன்'' என்று கூறி, தன் சக்தியால் மாய ஜலந்திரனை உண்டாக்கி, அவனது உடலை இரண்டு பேர் தூக்கி வரும்படி செய்தார். தன்முன் வைக்கப்பட்ட கணவனின் உடலை நிஜமென்று நம்பி, கதறி அழுதாள் பிருந்தை.

அவளைத் தேற்றிய முனிவர், 'கவலைப் படாதே பிருந்தை! என் தவ வலிமையால் உன் கணவனை உயிர்ப்பிக்கிறேன்'' என்று சொல்லி, உயிர்ப்பித்தார். உயிர் பெற்றெழுந்த மாய ஜலந்திரனை அரவணைத்து மகிழ்ந்தாள் பிருந்தை. அப்போதுதான் அவளுக்குத் திடீரென ஓர் எண்ணம் உண்டானது. 'தான் பதிவிரதாதர்மத்திலிருந்து பிறழாத வரையில் தன் கணவரை யாரால் மாய்க்க முடியும்?’ என்று யோசித்த பிருந்தை, தன் எதிரே இருந்த முனிவரை உற்றுநோக்கினாள். அவர் யாரென்பதை அறிந்து கடுங்கோபம் கொண்டாள்.

அதேநேரம், மாய ஜலந்திரனை அவள் அணைத்ததால், அவளின் பதிவிரதா தன்மை அகன்றது. அங்கே போர்க் களத்தில் இருந்த உண்மையான ஜலந்திரனை சிவனார் அழித்தார். இதனையறிந்த பிருந்தை, 'பகவானே, இந்த இழிச்செயலைப் புரிந்த நீரும் உம் மனைவியைப் பிரிந்து வருந்துவீர்'' என்று சாபம் கொடுத்தாள். பின்பு, தீ வளர்த்து, அந்தத் தீக்குண்டத்தில் விழுந்து எரிந்து சாம்பலானாள்.

ஆலயம் தேடுவோம்

'உலகத்தவர்களின் நன்மைக்காகவே ஒரு பொய் நாடகம் நடத்தவேண்டியிருந்தது என்றாலும், பதிவிரதையின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டோமே’ என்று வருந்திய மகாவிஷ்ணு, பிருந்தையின் சாம்பல்மீது மயங்கி விழுந்தார். இதைக் கண்ட தேவர்கள் சிவபெருமானிடம் சென்று பிரார்த்தித்தனர். சிவபெருமான் பார்வதி தேவி அணிந்த நெற்றிச் சாந்தின் ஒரு துளியை தேவர்களிடம் கொடுத்து, ''பிருந்தை தீக்குளித்த சாம்பலில் இதை இட்டால், திருமாலின் மயக்கத்தைத் தெளிவிக்கும் மூன்று விருட்சங்கள் உண்டாகும்'' என்று சொல்லி அனுப்பினார். தேவர்களும் அப்படியே செய்தனர். அங்கே துளசி, நெல்லி, அகத்தி என்னும் மூன்று விருட்சங்கள் தோன்றின. அவற்றால் திருமாலின் மயக்கம் தெளிந்தது. அங்கேயே சுயம்புலிங்கமாகத் தோன்றி அனைவருக்கும் அருள்பாலித்தார் ஈசன். அந்தத் தலமே படுநெல்லி!

அந்தத் தலத்துக்குதான், இறைவனின் கட்டளைப்படி வந்தது சந்திரஹாசம் என்னும் அந்த வாள். அது மின்னலின் வடிவில் இறைவனை வலம் வந்து வழிபட்டது.

இந்தப் படுநெல்லி கிராமத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புட்குழி என்ற இடத்தில்தான் ராவணன் ஜடாயுவின் இறகுகளை சந்திரஹாச வாளால் வெட்டினான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தலத்தில்தான் ராமபிரான் ஜடாயுவுக்கு ஈமக்கிரியைகள் செய்ததாகத் திருப்புட்குழி தல வரலாறு கூறுகிறது.

காஞ்சிபுரம்அரக்கோணம் சாலையில் கம்மவார்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது படுநெல்லி கிராமம். இங்கே பரந்தவெளியில் ஒரு சிறிய கொட்டகையில் அமைந் திருக்கிறது ஆலயம். அந்தப் பரந்தவெளியே ஒருகாலத்தில் பிரமாண்டமான கோயிலாகத் திகழ்ந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இன்று ஆலயம் இருந்ததற்கான தடயமே இல்லாமல் பாழ்வெளியாக இருப்பதைக் கண்டு, துயரம் மனதில் பெரும் சுமையாக அழுத்த, அங்கிருந்த ஊர்ப் பெரியவர்களிடம் பேசினோம்.

''எனக்குத் தெரிஞ்சு ரொம்ப காலமாவே இந்த இடம் புதர் மண்டித்தான் இருந்துதுங்க. மூணு வருஷத்துக்கு முன்னாடி, ஊர்மக்கள் கிட்ட பேசி, ஒரு கமிட்டி அமைச்சோம். முதல் கட்டமா புதர்களைச் சுத்தப்படுத்தி, ஈஸ்வரனுக்கும் நந்திக்கும் ஒரு கொட்டகை போட்டோம். எங்களால முடிஞ்சவரைக்கும் தினமும் ஒருவேளை பூஜை செய்துட்டு வர்றோம்' என்றார் தேவராஜன் என்னும் அன்பர். தொடர்ந்து, ''திருப்பணிகளைத் தொடங்கறதுக்காக பிரச்னம் பார்த்தப்போதான், இங்குள்ள ஈஸ்வரனை திருமாலும் மற்ற தேவர்களும் வழிபட்டதும், ராவணனுக்கு ஈஸ்வரனின் பரிசாகக் கிடைத்த சந்திரஹாசம் வாள் வழிபட்ட விவரமும் தெரியவந்தது. இங்கே உள்ள இறைவனுக்கு நெல்லீஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர் என்றும், அம்பிகைக்கு வடிவாம்பிகை என்றும் திருப்பெயர்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், அம்பாளின் விக்கிரஹம் எங்கே போனது என்று தெரியவில்லை.

ஆலயம் தேடுவோம்

சந்திரஹாசம் மின்னலாக வழிபட வந்தபோது ஏற்பட்ட பிரகாசத்தைத் திரும்பிப் பார்த்ததால், நந்திதேவர் இங்கே நன்றாகத் திரும்பிய நிலையிலேயே காட்சி கொடுக்கிறார். இப்படி ஒரு காட்சியை வேறு எங்கேயும் பார்க்க முடியாது.

இதைப் பெரிய கோயிலா எழுப்பணும்னு அன்பர்கள் சிலர் ஒண்ணுகூடி கமிட்டி ஆரம்பிச்சிட்டோம். சீக்கிரமே, திருப்பணிகள் நடந்தேறி, கும்பாபிஷேகம் நடக்க அந்த நெல்லீஸ்வரர்தான் அருள் செய்யணும்'' என்றார்.

இன்றைக்கும் சந்திரஹாசம் இரவு நேரங்களில் மின்னல் வடிவில் வந்து வழிபடுவதாகச் சொல்கிறார்கள் ஊர்மக்கள். இங்கே வந்து சுயம்புவாகத் தோன்றிய நெல்லீஸ்வரரை வழிபட்டால், திருமணப்பேறு, வழக்குகளில் வெற்றி ஆகியவை கிடைப்பதுடன், எதிரிகளின் தொல்லைகளும் இல்லாமல் போகும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள்.

புராதனப் பெருமைகள் கொண்டதுமான ஐயன் நெல்லீஸ்வரரின் திருக்கோயில் விரைவிலேயே புதுப்பொலிவு பெறவேண்டும்; மறைந்திருக்கும் வடிவாம்பிகை, பொலிவு பெறும் கோயிலில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும்; அம்மையும் ஐயனுமாய் அருளாட்சி செலுத்த வேண்டும்; ஆயிரமாயிரமாய் பக்தர்கள் வந்து, பரமனை தேவியுடன் பணிந்து வணங்கி நலம்  சிறக்கவும், வளம் செழிக்கவும் வாழவேண்டும். இப்படித்தான் தங்கள் ஆசைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் படுநெல்லி கிராம அன்பர்கள்.

அவர்களுடைய உயர்ந்த விருப்பம் நிறைவேற, நாமும் நெல்லீஸ்வரர் ஆலயத் திருப்பணிக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்வோம்.

மகாலக்ஷ்மி வாசம் செய்யும் நெல்லி விருட்சத்தைத் தல விருட்சமாகக் கொண்ட ஐயன் நெல்லீஸ்வரரின் ஆலயம் புதுப்பொலிவுடன் திகழ, நம்மால் இயன்ற நிதி உதவியோ பொருளுதவியோ செய்வோம். அம்மையப்பனின் கருணா கடாட்சத்தையும் மகாலக்ஷ்மி யின் செல்வ கடாட்சத்தையும் சேர்த்துப் பெற்று நாமும் நம் சந்ததியினரும் சிறக்க வாழ்வோம்!

 - படங்கள்: ச.பிரசாந்த்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு