Published:Updated:

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ., ஓவியங்கள்: சேகர்

அருட்களஞ்சியம்

சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ., ஓவியங்கள்: சேகர்

Published:Updated:

இன்னிசை வீணையர்! 

வீணையை முதன்முதல் கையாண்டவர் இறைவனே. அவன் தர, அதனை அன்புடன் ஏற்று அதில் இன்னிசை எழுப்பியவள் சரஸ்வதி. சரஸ்வதியே நாரதருக்கு அளித்திருக்கிறாள். அவரிடம் இருந்து வான்மீகி ரிஷி பெற்று, அதை மீட்டும் கலையை லவ குசர்களுக்குக் கற்பித்திருக்கிறார்.

இந்த குசலவர்களே ராமாயணத்தை வீணையில் இசைத்துப் பாடி அயோத்தி நகர மக்களையும், ராமனையும் மகிழச் செய்திருக் கிறார்கள். இவர்களைத் தவிர அனுமனும் அகத்தியரும் வீணையைக் கையாள்வதில் சிறப்பானவர்கள் என்கின்றன பழந்தமிழ் நூல்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இலங்கேஸ்வரனான ராவணன் வீணை வாசிப்பதில் சிறந்தவனாக இருந்திருக்கிறான். அன்று அவன் கயிலையை அசைத்து அதன் கீழ் அகப்பட்டுக் கொண்டபோது வீணையை இசைத்தே இறைவனை மகிழ்வித்து விடுதலை பெற்றிருக்கிறான்.

மற்ற இசைக் கருவிகளுக்கு இல்லாத சில தனிச்சிறப்புகள் இந்த வீணைக்கு உண்டு. வீணையின் ஒலி அலைகள் வீணை வாசித்து முடித்த பின்னும் அடுத்தடுத்துப் பரவி நிற்கும் இயல்புடையது. இசையின் தசவித சமகங்களையும் ராகத்தின் சாயையையும் அப்படியே காட்ட வல்லது வீணை ஒன்றே.

அருட்களஞ்சியம்

அதனாலேயே மாணிக்கவாசகர் இறைவனுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடுகின்றபோது, ''இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால், இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்...'' என்று இன்னிசை வீணையரை முதலிடத்தில் வைத்திருக்கிறார்.

வீணை ஏந்திய தெய்வத் திருவுருவங்களில் முதன்முதல் நம் எண்ணத்தில் வருபவர் வீணாதீர தட்சிணாமூர்த்திதான். இந்த வீணாதரனின் சிறந்த வடிவினைக் காண நாம் தஞ்சைக் கலைக் கூடத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு அவர் செப்புச் சிலை வடிவில் நின்று கொண்டு வீணை வாசிப்பார். வீணை இராது அவர் கைகளில் என்றாலும், வீணையின் ஒலி மட்டும் நம் உள்ளமாம் வீணையை மீட்டும் இன்னிசையைக் கேட்கத் தவற மாட்டோம். கொடும்பாளூர் மூவர்கோயில், தொண்டைமான் புதுக்கோட்டையில் உள்ள பொருட்காட்சி சாலை ஆகிய இடங்களிலும் வீணாதரனைக் காணலாம்.

சரஸ்வதி வீணை வாசிக்கும் கோலங்கள் எத்தனை எத்தனையோ; சிறப்பான வடிவம் இருப்பது கங்கைகொண்ட சோழபுரத்திலே. இந்தக் கலைமகள் கைகளில் வீணை ஏந்தியிருக்கமாட்டாள். வீணை ஏந்திய சரஸ்வதி, சுவாமி மலையில் சாமிநாதன்கோயில் மேலப் பிராகாரத்தில் இருக்கிறாள். காலத்தால் பிந்தியவள்தான் என்றாலும் நல்ல கலை அழகு வாய்ந்தவள். திருச்செங்கோட்டு மலைமீதுள்ள அர்த்த நாரீச்வர் கோயிலிலே, அவள் நிற்கின்ற ஒயில், கையில் வீணை ஏந்தியிருக்கின்ற நேர்த்தி எல்லாம் மிகமிக அழகானது. இவர்களைப் போன்று வீணை ஏந்திய நாரதரை,ஸ்ரீரங்கத்து அரங்கன் சந்நிதியை அடுத்த வேணுகோபாலன் கோயிலில் தரிசிக்கலாம். இவர் வீணையை ஏந்தி நிற்கிறாரே ஒழிய, வாசிக்கக் காணோம்! யாருக்கோ உபதேசிக்கும் நிலையில் நின்றுகொண்டிருக்கிறார்.

* 1961 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து...

ஊஞ்சலும் பந்தாட்டமும்

'மிதிலா பட்டணத்து நெடுந் தெருக்களுக்கு அழகு தருகின்றன பூஞ்சோலைகள். அழகு மட்டுமா? ஆரோக்கியமும் தருகின்றன, பட்டணத்துக்கு மூச்சுப் பைகள் போல் அமைந்திருக்கும் அந்தப் பூங்காவனங்கள்.

அருட்களஞ்சியம்

பவளம் போன்ற செங்காயோடு விளங்கும் மரகத நிறமான பாக்கு மரம், பெண்கள் வீற்றிருந்து ஆடும் ஊஞ்சலைத் தன் அழகுக்கு இசைந்ததோர் அணியாகப் பூண்டு விளங்குகிறதாம். அந்தப் பெண்களோ 'பெண்மைக்கே ஆபரணம்’ என்று சொல்லத்தக்க அழகு வாய்ந்தவர்கள். அந்த ஊஞ்சல்களையும், ஊஞ்சல் ஆடும் பெண்மணிகளையும் விசுவாமித்திர, ராம  லக்ஷ்மணர்கள் பார்த்துக்கொண்டே போகிறார்கள். ஆனால் நாம் நின்று பார்க்க வேண்டியதுதான் அந்த அழகுக் காட்சியை.

பூசலின் எழுந்த வண்டு

மருங்கினுக்(கு) இரங்கிப் பொங்க,

மாசுறு பிறவி போல

வருவது போவ தாகிக்,

காசறு பவளச் செங்காய்

மரகதக் கமுகு பூண்ட

ஊசலின் மகளிர் மைந்தர்

சிந்தனையோ(டு) உலவக் கண்டார்.

ஊஞ்சல்  காட்சியா?

காதல்  காட்சியா?

ஊஞ்சல்களை அலங்கரிக்கும் பெண்களின் மேனியை அணி செய்கின்றன பூக்களும் பூமாலைகளும். அவர்கள் ஊஞ்சலாடும் போது, அந்தப் பூக்களில் மொய்த்திருந்த வண்டுகள் மேலெழுந்து ரீங்காரம் செய்கின்றனவாம் ஆட்டத்தின் அதிர்ச்சியிலே. ஆம்; ஆட்டம் விசையாட்டம் ஆகிறது.

அந்த ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஆடவர்களில் சிலர், ''இப்பெண்களின் மெல்லிய இடை விசையாட்டத்தைப் பொறுக்கமாட்டாது என்றுதானே வண்டுகளும் இரங்கி வாய்விட்டு அரற்றுகின்றன?' என்றெல்லாம் கவலையடைகிறார்களாம்.

ஏன் இந்த வேண்டாத கவலையெல்லாம்? அந்த ஆடவர்கள் வண்டுகளின் கீதத்திலும் தங்கள் ஹிருதய சோகத்தைக் கேட்கிறார் கள். இப்படி அந்த ஊஞ்சல் காட்சி சிலருக்கு ஒரு காதல்  நாடகமும் ஆகிவிடுகிறது! இவர்களும் நாடக பாத்திரமாகிவிடுகிறார்கள்.

தங்கள் ஹிருதய ஊஞ்சலிலே கொலு வீற்றிருந்து ஆட்டிவைக்க வேண்டியவர்கள், அதோ அந்த ஊஞ்சலில் வீற்றிருந்து ஆடுகிறார்களே!  என்று அந்த விந்தையை நோக்கிய கண்கள் செயலற்று இமை கொட்டாது நோக்கிய வண்ணமாய் இருக்க, மனம் என்ன பாடுபடுகிறது; என்ன பாடுபடுத்துகிறது!

அருட்களஞ்சியம்

மகளிர் ஊஞ்சலாடுகிறார்; மைந்தர் மனமும் ஊஞ்சலாடுகிறது. ஊஞ்சலோடு ஓடும் மனம் ஊஞ்சலோடுதான் உலாவிக் கொண்டிருக்கிறது அப்படியும் இப்படியுமாக; திரும்பி வந்து சேர்ந்த பாடில்லை!

என்ன காதல்! என்ன வேதாந்தம்!

இந்தக் காதல் காட்சியிலேயே ஒரு வேதாந்த பாடமும் கற்பிக்கிறான் கவிஞன். ஊஞ்சல் எப்படி வருகிறது, போகிறது? மனத்தைப் பறிகொடுத்த இந்த மைந்தர்களின் கண்களைக் கொண்டு இப்போது பார்க்கவேண்டாம். இளமை  வெள்ளத்திலே மிதந்து செல்லும் ராம  லட்சுமணர்களின் கண்களைக் கொண்டும் பார்க்க வேண்டாம். தபஸ்வியாகிய விசுவாமித்திரரின் கண்களாலும் ஒரு க்ஷணம் பார்ப்போம். அப்போதுதான்,

மாசுறு பிறவி போல

வருவது போவ தாகி

என்ற வர்ணனை இனிது புலனாகும். என்ன ஊஞ்சல்! என்ன காதல்! என்ன வேதாந்தம்!

கன்னிமாடத்தில் கவியின்பம்

இன்பமயமாகத் தொடங்கும் மிதிலைக் காட்சிகள் இன்பத்தின் மேல் இன்பமாக விரிகின்றன, மலர்கின்றன; மிதிலைமா நகரத்தையே ஒரு சிங்காரப் பூஞ்சோலையாகக் காட்டுகின்றன. 'சோலைக்குள் சோலை’ என்று சொல்லும்படி ஒரு சோலை தென்பட்டது விச்வாமித்திர ராம லக்ஷ்மணர்களுக்கு. அது அரண்மனையின் மதில் புறத்திலுள்ள பூஞ்சோலை; அரண்மனைப் பெண்கள் பூக்கொய்து விளையாடும் சோலை.

மூவரும் அந்தச் சோலையைப் பார்த்துக் கொண்டே போகிறார்கள். அந்தப் பசுஞ்சோலை யில் பைங்கிளிகள்தான் எவ்வளவு அழகாய்க் கொலுவிருக்கின்றன பூமரக் கிளைகளிலே, பூங்கொடிகளிலே, பூஞ்செடிகளிலே!

அந்தக் கிளிகள் பேசுவதுதான் எவ்வளவு அழகாய் இருக்கிறது! ''சர்க்கரைப் பாகுபோல் இனிமையாக இருக்கிறதே' என்று தோன்றுகிறது இளைஞர்களுக்கு. 'கிளிகளோடு கொஞ்சும் கிளிகள்' என்று சொல்லும்படி பைங்கிளிகளுடன் பேசிக் கொண்டு பூக்கொய்கிறார்களே சில பெண்கள், அவர்களுடைய குரலினிமையைத்தான் என்னென்பது?

இனி இந்தக் காட்சியைக் கவிஞன் காட்டும் கண்ணாடி வழியாக மெள்ளப் பார்ப்போம்:

பாகொக் கும்சொல்பைங்கிளி

யோடும் பலபேசி,

மாகத்(து) உம்பர் மங்கையர்

நாண மலர்கொய்யும்

தோகைக் கொம்பின் அன்னவர்க்(கு),

அன்னம் நடைதோற்றுப்

போகக் கண்டு, வண்டினம்

ஆர்க்கும் பொழில் கண்டார்.

ராஜகுலப் பெண்கள் பூக்கொய்து கொண்டிருந்த இந்தச் சோலையை அடுத்து, மிகவும் அழகிய பொன்மயமான மாளிகை வரிசைகளோடு கூடிய மகாராஜாவின் அரண்மனை இருந்தது.அந்த அரண்மனை தன்னைச் சுற்றிலுமுள்ள அகமதிலோடும், அகழியோடும், கம்பீரமாய்க் காட்சியளித்தது. அரண்மனையின் பகுதியாகக் கன்னி மாடமும் தெரிந்தது.

''கன்னிமாடத்தின் மேடையிலே, அது என்ன, அதிசயத்தின் மேல் அதிசயம்! பொன்னின் ஜோதியோ அப்படிக் காண்கிறது, பொன் மயமான கன்னிமாடத்தின் மீது? பூவின் நறுமணந்தான் அப்படிப் பொலிவுடன் நிற்கிறதா? தேனின் தீஞ்சுவையோ அப்படித் திகழ்கிறது? அல்லது கவியின்பமே அந்த உருவில் வந்து விட்டதா?

பொன்னின் சோதி போதினில்

நாற்றம் பொலிவேபோல்

தென்னுண் தேனின் தீஞ்சுவை

செஞ்சொல்  கவியின்பம்,

கன்னிம் மாடத்(து) உம்பரின்

மாடே, களிபேடோ(டு)

அன்னம் ஆடும் முன்துறை

கண்டங்(கு) அயல்நின்றார்.

உபமானமாகக் கூறிய பொருள்களெல்லாம் இனிய பொருள்களிலும் இனிய பொருள்கள். அவற்றை அடுக்கி அடுக்கிக் கவி இன்பத்தை மகுடமாக வைத்து, அந்த அழகு ராணியை முதல் முதல் காட்டுகிறான் கவிஞன்.

அருட்களஞ்சியம்

'செஞ்சொல் கவி இன்பம்’ என்கிறான். 'செம்மையாக வந்து அமையும் சொற்களிலே பிறக்கும் கவி இன்பம்’ என்பது பொருள். கவிதை என்பது சொற்களில் இல்லாத இன்பத்தைச் சொற்களைக் கொண்டே பிறப்பித்துக் காட்டும் மந்திர வித்தையல்லவா?

இத்தகைய 'செஞ்சொற் கவி இன்பம்’தான் காவிய நாயகியாகிய சீதை என்கிறான் கவிஞன். காதல் இன்பம் இன்னதென்று இப்போதுதான் முதன்முதல் உணரப் போகிறாள் சீதை.

அருகே உள்ள அகழித் துறையில் பெண் அன்னத்தோடு ஆண் அன்னம் ஒன்று விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் சீதை, கன்னி மாடத்தின் மேலிருந்து.

இதே சமயத்தில், சீதை கண்களும் ராமன் கண்களும் தற்செயலாகச் சந்திக்கப் போகின்றன. இதற்கு முன்பும் அன்னங்களின் விளையாட்டைப் பார்த்தவள்தான். ஆனால், இப்போது ஆண் அன்னமும் பெண் அன்னமும் விளையாடுவதை நோக்கி, ராமன் கண்களை நோக்கியதும், சீதையின் கன்னி உள்ளத்திலே காதல் விளைகிறது  என்று சொல்லப் போகிறான் கவிஞன்.

இந்தக் காட்சி ராமன் உள்ளத்திலும் காதலை விளைவிக்கிறது; இது என்றும் மங்காத மனப்படமாக ஆழ்ந்து பதிந்து விடப் போகிறது.

இந்தக் காட்சியை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் சீதையை இழந்த நிலையில் ராமன் அநுமனை நோக்கி ஒரு முக்கியமான அடையாள வார்த்தை சொல்லப் போகிறான் (கிஷ்கிந்தா காண்டத்திலே):

அன்னம்ஆ டும்துறைக்(கு)

அருகுநின் றாளை, அக்

கன்னிமா டத்திடைக்

கண்டதும் கழறுவாய்!

*  22.10.44 மற்றும் 5.11.44 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...