Published:Updated:

அபூர்வ மூலிகைகள்... சந்திரகாந்தக் கல்... ஆன்ம அதிர்வை எழுப்பும் ஈசன் மலை...! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி, பரவசப் பயணம் - 6

அபூர்வ மூலிகைகள்... சந்திரகாந்தக் கல்... ஆன்ம அதிர்வை எழுப்பும் ஈசன் மலை...! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி,  பரவசப் பயணம் - 6
அபூர்வ மூலிகைகள்... சந்திரகாந்தக் கல்... ஆன்ம அதிர்வை எழுப்பும் ஈசன் மலை...! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி, பரவசப் பயணம் - 6

அபூர்வ மூலிகைகள்... சந்திரகாந்தக் கல்... ஆன்ம அதிர்வை எழுப்பும் ஈசன் மலை...! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி, பரவசப் பயணம் - 6

னிதனின் வாழ்க்கையே ஒரு யாத்திரைதான். மனிதன் பிறக்கும்போதே அவனுடைய தீர்வும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. அந்தத் தீர்வு எப்போது என்பது தெரியாமல், ஆனால், என்றோ வரப்போகும் தீர்வை எதிர்பார்த்தபடியே மனிதனின் வாழ்க்கை யாத்திரையைப் போலத் தொடங்குகிறது. தீர்வு எப்போது என்பது தெரியாமல் இருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் இருக்கிறது. 

மரணம், மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய பயம்தான் மனிதர்களை ஓரளவு நியாயமாக வாழச் செய்கிறது. கடவுள் பற்றிய தேடலையும் உருவாக்குகிறது. ஞானத்தை நோக்கிய எல்லா யாத்திரைகளின் இலக்குகளும் அர்த்தமுள்ளவை. அவை பிறப்பெடுத்ததின் பயனையும், வாழ்வின் அவசியத்தையும் விளக்குகின்றன. மரணத்தைப் பற்றிய அச்சத்தையும் போக்கி விடுகின்றன. அரட்டையில்லாத ஆன்மரீதியிலான உள்முக யாத்திரைகள் உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டிவிடும்.

ஞானமலை யாத்திரையின் தொடர்ச்சியாக நாம் அடுத்துச் சென்றது, ஈசன் மலை. ஆதிகாலத்தில் பிரமாண்ட வடிவம் கொண்ட எல்லாமே வணக்கத்துக்கு உரியதாக இருந்தன. பஞ்சபூதங்களின் அம்சமான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்று மனிதர்களின் வழிபாடு முறைப்படுத்தப்பட்டது. இதில் நிலத்தின் பிரமாண்ட வடிவம்தான் மலை. மலையே லிங்கத்தின் வடிவம்தான் என்பது சைவர்களின் நம்பிக்கை. 'ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி!' என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவனை மலையாகவே வழிபட்டுள்ளார் என்பதே அதற்குச் சாட்சி.

ஈசன் மலை, இயற்கையும், இறைவனும் பின்னிப்பிணைந்து ஒன்றுக்குள் ஒன்று திளைத்து நிற்பதைக் காட்டும் அமைதியான, ஆள் அரவமற்ற பசுமையான மலை. அபூர்வமான மூலிகைகளும், அரிதான மரங்களும் நிறைந்து காணப்படும் அற்புதமலை. வள்ளிமலை அருகே இருக்கும் இந்த மலை, ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால், 'ஈசானிய மலை' என்றும் அழைக்கப்படுகிறது.

மலை அடிவாரத்தை அடையும் பாதையே இயற்கைச் சோலையாக, இறைவனின் சாட்சியாக திகழ்கின்றது. மலையின் அடிவாரத்திலிருந்து மலையைப் பார்க்கும்போதே மனதில் ஒரு மோனநிலை உருவானது. எங்கும் அமைதி தவழ்ந்திருக்க, ஏதோ ஓர் ஆவல் நம்மைத் தொற்றிக்கொண்டது. 'இங்கே ஏதோ ஓர் அற்புத அனுபவம் நமக்குக் காத்திருக்கிறது' என்று நம் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது.

நாம் ஈசன்மலைக்குச் சென்றது உச்சிப்பொழுது. ஆனால், நடுவானில் பிரகாசித்த சூரியனின் கிரணங்கள்கூட வெம்மையைத் தராமல், குளிர்ச்சியையே எங்கும் பரப்பியது. அந்த அளவுக்கு மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் மலை ஈசன்மலை.

மலையின் அடிவாரத்தை அடைந்தோம். அடிவாரத்தில் புதிதாக எழுப்பப்பட்டிருந்த கோயிலில் வரசித்தி விநாயகர் நமக்கு தரிசனம் தருகிறார். அவரை வணங்கிவிட்டு மலையேறத் தொடங்கினோம். நிலப்பனங்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, புளியாரை, புளி நாரை என நூற்றுக்கணக்கான மூலிகைச் செடிகளும், பாதிரி, வெண்நாவல், தவிட்டான், கருங்காலி, வலம்புரி உள்ளிட்ட பல அபூர்வ மரங்களும் நம்மை விழி விரியச் செய்கின்றன. இவை எல்லாமே 'ஸ்ரீ அகத்தியர் பசுமை உலகம் டிரஸ்ட்' என்ற அமைப்பால் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

உயிர்காக்கும் பல அபூர்வ மூலிகைகள் இங்கு மலிந்து கிடக்கின்றன. அதுமட்டுமா? அபூர்வமான குளிர்ச்சி மிக்க சந்திரகாந்தக் கல் ஒன்று மலை மீது காணப்படுகிறது. சந்திரனைப்போல குளிர்ச்சிமிக்க இந்தக் கற்கள்தான் நமது கோயில்களில் விமானத்தின் உள்பக்கம் பொருத்தப்பட்டு, கருவறைக்குக் குளிர்ச்சியைத் தருகின்றன. கல் இறுகி இரும்பைப்போலான பாறைத்தொடர் ஒன்றும் மலையைச் சுற்றிச் செல்கிறது. எங்கும் பசுமை நிறைந்திருக்க, மலையின் இடைவழியில் வள்ளி, தெய்வசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமியின் ஆலயம் எதிர்ப்படுகிறது. குன்றுதோறாடல் செய்யும் நம் குமரனை, 'அருவமும், உருவுமாகி, அநாதியாய்ப் பலவாய், ஒன்றாய், பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி'யாகக் காட்சித் தந்த தமிழ்க்கடவுளை, தன்னிகரில்லாத அழகனை வணங்கி வெளியே வந்தோம். பக்தர்கள் தங்கிச் செல்ல பெரியதொரு மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. பின்புறத்தில், ஶ்ரீகாளப்ப ஸ்வாமியின் சமாதி. ஈசன்மலையின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் அடித்தளம் அமைத்த மகானின் திருவடி தொழுது யாத்திரையைத் தொடர்ந்தோம்.

வழியில், சிலுசிலுத்தோடுகிறது ஒரு சுனை. தண்ணீரைப் பார்த்தவுடனே அள்ளிப் பருகத் தோன்றுகிறது. பெயரே மருந்து சுனை. அருகிலிருக்கும் வெண் நாவல் மரத்தினடியில் காட்சி தருகிறார் அருள்மிகு ஜம்புகேஸ்வரர். ஜம்பு என்றாலே நாவல் மரம்தான். ஆள் அரவமற்ற அந்த இடத்தில், ஈசனின் திருமுன்பு அமர்ந்து சற்றுநேரம் தியானித்தோம். 

அப்போது நம் தலையைச் சுற்றிச் சுற்றி ஒரு ஈ ரீங்காரமிடுகிறது. வடிவத்தில் பெரிதாக இருக்கும் அந்த ஈ ஏதோ ஒரு தொடர்பில் நம்மை அண்டுகிறது. மலையின் உயரத்தில் அதுவும் குளிர் அதிகம் உள்ள சூழலில் ஈக்கள் இருக்காது. ஆனால், இங்கு மட்டும் யார் தியானம் செய்தாலும் அவர்களின் தலையைச் சுற்றிச் சுற்றி வந்து அந்த ஒற்றை ஈ ரீங்காரமிடுகிறது. சித்தர்களில் ஒருவர்தான் ஈ வடிவத்தில் தியானம் செய்பவரைச் சுற்றி வந்து ஆசிர்வதிப்பதாகச் சொல்கிறார்கள் அங்கி்ருப்பவர்கள்.

மௌனகுரு சாமிகள், வள்ளிமலை ஸ்வாமிகள், திருப்புகழ்ச் சித்தர் போன்றோர் தவமிருந்த இடமிது. அந்தப் பரப்பில் பரவும் மெல்லிய ஆன்ம அதிர்வை நம்மால் தெளிவாக உணர முடிகிறது. அதை அனுபவித்துக்கொண்டே அடுத்த அடி எடுத்துவைத்தோம். 

அடுத்த கட்டுரைக்கு