Published:Updated:

தேவாரத் திருவுலா!

தேவாரத் திருவுலா!

தேவாரத் திருவுலா!

தேவாரத் திருவுலா!

Published:Updated:
தேவாரத் திருவுலா!
தேவாரத் திருவுலா!

விழுப்புரம் அருகே வந்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், அங்கிருந்து இந்த ஊருக்கு வந்தார். அவர் வருவதற்கு முன்பே, ஊர்ப் பெரியவர் ஹரிஹரபுத்திர முதலியார் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தனது பக்தரான தண்டபாணி சுவாமிகள் வருவதைக் குறிப்பிட்டு, முறையாக வரவேற்று, பணிவிடை செய்யும்படி கட்டளையிட்டார். ஒருத்தூர் சின்னுரெட்டியாருக்கும் கனவு ஆணை இவ்வாறே பறந்தது. இரண்டு பேரும் சுவாமிகளை வரவேற்று, பம்பை ஆற்றங்கரையில் மடத்தில் தங்கச் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
'இங்கு தங்கியிருக்கும் காலை, இந்த ஊர் ஈசனை நினைந்து போற்றி, ஆயிரம் பாடல்கள் பாடுவேன்’ என்று சங்கல்பித்துக்கொண்டு தண்டபாணி சுவாமிகள் பாடத் தொடங்க, அவரின் நிஷ்டையில் தோன்றிய இறைவனார், 'கவி பாடுவது பின்னர் இருக்கட்டும்; முதலில், அருளுக்கான வழியை நாடுக’ என்று கூற, அதன்படி, முருகனின் ஆறெழுத்து மந்திரத்தை (சரவணபவ) கோடி முறை ஜபிக்க முயன்றார். ஜபமாலையை உருட்டும்போது, கருந்தேள் கொட்டியது. கணக்கைவிட உள்முக ஜபமே உயர்ந்தது என்பதை உணர்ந்து அப்படியே ஜபித்தார். இந்தத் தலத்திலேயே முருகப்பெருமானுக்குத் திருமடம் அமைத்துத் தங்கிய சுவாமிகள், இங்கேயே ஸித்தியும் அடைந்தார். அந்த ஊர், விழுப்புரம் அருகிலுள்ள திருவாமாத்தூர். மூவரும் தேவாரம் பாடிய திருத்தலம் இது. ஆதிகாலத்தில் பசுக்கள் பூசித்ததால், ஆ மாத்தூர் (ஆ- பசு) எனப் பெயர் அமைந்ததாம்.

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில், திருவாமாத்தூர் என்று கைகாட்டி இருக்கும் இடத்தில் பிரிந்து சுமார் 5 கி.மீ பயணித்தால், இந்தத் தலத்தை அடையலாம். விழுப்புரம் புறவழிச் சாலையில், திருவாமாத்தூர் என்று சுட்டப்படும் இடத்தில் பிரிந்து நேரே செல்லலாம். பேருந்து வசதி உண்டு.  

'குன்றவார் சிலைநாண் அராவரி வாளிகூர் எரிகாற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடையேறும் வேதியனே
தென்றலார்மணிமாடமாளிகை சூளிகைக்கெதிர்நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே’

என்று தொடங்கி, ஞானசம்பந்தர் சீகாமரப் பண்ணில் இரண்டு பதிகங்கள் பாடிய தலம் இது. ஆமாத்தூர் அழகரான சிவனார், பிக்ஷ£டனக் கோலம் ஏற்று, பி¬க்ஷ வேண்டிச் சென்றார். பி¬க்ஷ இடுவதற்காகச் சென்ற பெண்ணொருத்தி, அவரது அழகைக் கண்டு மயங்கினாள்; தானே அவருக்கு என்று சங்கல்பித்து நின்றாள். அவரோ அவளை மணக்காமல் சென்றுவிட்டார். காண்போர் கேட்போரிடம் தன் நிலை கூறி, அவரைத் தன்னிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டினாள் அவள்.

'வண்ணங்கள் தாம்பாடி வந்துநின்று
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்  
கடியதோர் விடையேறிக் காபாலியார்
சுண்ணங்கள் தாம்கொண்டு துதையப் பூசித்
தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே’

என்று நாயகி பாவத்தில், திருத்தாண்டகத்தில், ஆமாத்தூர் அழகருக்காகப் பாடுகிறார் திருநாவுக்கரசர்.

காஞ்சிபுரத்தில் இடது கண்ணில் பார்வை பெற்றுத் திருவாரூர் நோக்கிச் செல்லும் சுந்தரர், ஆமாத்தூர் வந்து கொல்லைக்கௌவாணப் பண் ணில் பாடினார்:

'காண்டனன் காண்டனன் காரிகையாள் தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்தூர் எம் அடிகட்காள்
பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்து அல்லாதவர்கட்கே
!’

ஆக, மூவராலும் பாடப்பெற்ற அற்புதத் தலம், திருவாமாத்தூர். சிறிய ஊர்; ஆற்றங்கரையில் கோயில்; இல்லையில்லை... இரண்டு கோயில்கள். ஆம், சுவாமி கோயிலும் அம்பாள் கோயிலும், சாலையின் இருபுறத்தும் எதிரெதிரே அமைந்துள் ளன. சாலை முடிகிற இடத்தில் ஆற்றங்கரை; அதன் வடகரையில் விநாயகர் கோயில்; மூஞ்சுறு எதிரில் அமர்ந்து பணிந்திருக்க, கம்பீரமாக வீற்றிருக்கும் இவர், மால் துயர் தீர்த்த விநாயகர்; இவர்தாம் தல விநாயகர். அருகில், சிவலிங்கத்தை வழிபட்டுக் கொண்டிருக்கும் நவ கன்னியர்கள்.

தேவாரத் திருவுலா!

கிழக்கு நோக்கிய கோயில். பழைய விவரங்களில், கோயிலுக்கு முகப்பு மாத்திரமே உண்டு; ராஜ கோபுரம் இல்லை என்று காணப்படுகிறது. இப்போது, அழகிய ஏழு நிலை ராஜகோபுரம் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத் திருப்பணியில், சுவாமி கோயிலுக்கும் அம்பாள் கோயிலுக்கும் ராஜகோபுரங்கள் கட்டப் பட்டன. உள்ளே நுழைந்தால், விசாலமான வெளிப் பிராகாரம். கோபுர வாயிலுக்கு நேராக, சுதையாலான நந்தி, மிகப் பெரியது; மஹாநந்தி என்றே பெயர். அதற்கும் முன்பாக, சிறிய நான்கு கால் மண்டபம்; அதில், பள்ளத்தில் நந்தி. வறட்சி மற்றும் பஞ்ச காலங்களில், இந்த நந்தி மூழ்கும்படியாகப் பள்ளத்தில் நீர் நிரப்புவார்கள் (நீர் கட்டுதல் என்று இதன் பெயர்); உடனே மழை வரும். முன்னால், கொடிமரம்.

வெளிப் பிராகாரத்தில் நம்முடைய வலத்தைத் தொடங்குகிறோம். தெற்குச் சுற்று திரும்புவதற்கு முன்னரே, தண்ட தீர்த்தம். இது ஸ்ரீராமர், தம்முடைய கோதண்ட வில்லால் ஏற்படுத்தி, நீரெடுத்துச் சிவலிங்க வழிபாடு செய்த தீர்த்தம். கோதண்ட தீர்த்தம் என்பது காலப்போக்கில் தண்ட தீர்த்தம் என்றான தாம். அடுத்து, திருமாளிகைப் பகுதிகள்; சைவ நால்வர், அறுபத்து மூவர், கயிலைக் காட்சி என்று மனத்தைக் கொள்ளை கொள்ளும் வடிவங்கள், சற்றே உயரத்தில் காட்சி தருகின்றன. இந்தச் சுற்றிலுள்ள பக்கவாட்டு வழியாகத்தான், மூலவர் சந்நிதி உள்பிராகார வாயிலை அடைய வேண்டும்; இந்த வழிக்கு அருகில், ஸ்ரீசித்தி விநாயகர்.

பிராகார வலத்தைத் தொடர்கிறோம். அடுத்து அமைவது, ஸ்ரீராமர் சந்நிதி. பொய்யோ என்னும் இடையாளான சீதையோடும், இளையானோடும், ஏவல்கூவல் பணிசெய்யும் ஆஞ்சநேயரோடும் உடனாய ஸ்ரீராமன் சேவை சாதிக்கிறார். எதிரில், சிவபூஜை செய்கிற

ஸ்ரீவிநாயகர் சந்நிதி; இதையே பழைய விநாயகர் சந்நிதி என்கிறார்கள். அடுத்து, மும்மூர்த்திகள். தென்மேற்குப் பகுதியில் வலம்புரி விநாயகர், அண்ணாமலையார், சண்முகப் பெருமான் என்று வரிசையாகச் சந்நிதிகள். மேற்குச் சுற்றில் திரும்பி நடந்தால், மேலக் கோபுர வாயில் மூடியிருக்கிறது. இந்தச் சுற்றிலேயே வலம்புரி விநாயகர், காசி விஸ்வநாதர், வாயுலிங்கம் என்று சந்நிதிகள். வடக்குச் சுற்றில், சிவலிங்கச் சந்நிதி. அலங் கார மண்டபம் என்றழைக்கப்படும் நூற்றுக்கால் மண்டபமும் இங்குள்ளது; ஆனால், சோபை இழந்து காணப்படுகிறது. ஈசான மூலையான வடகிழக்கு மூலையில் ஈசானதேவர் சந்நிதி; அடுத்து யாகசாலை. பிராகார வலம் நிறைவுசெய்து, கொடிமரம் அருகே வந்துவிட்டோம்.

இங்கிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குப் போகமுடியாது. சொல்லப்போனால், கிழக்கு உள்வாயில் பகுதியில், உள் மண்டபத்தின் வெளிச் சுவர்தான் இருக்கிறது. இதில், மூலவர் சந்நிதிக்கு நேரே, சாளரம் ஒன்று உள்ளது. இதன் வழியாக மூலவர் கண்டு மகிழ்ந்து, தெற்குச் சுற்றுக்குள் திரும்பி, சித்தி விநாயகர் சந்நிதி முன்பாக நிற்கிறோம். பிள்ளையாரைப் பணிந்து வணங்கி, உள்வாயிலை அடைகிறோம். வாயிலுக்கு எதிரில், (நாம் ஏற்கெனவே பார்த்த சாளர மண்டபத்தின் உள் பகுதியில்) நந்திதேவர். கனகம்பீரமாக இருக்கிறார்; இவர்தாம் பிரதோஷ நந்தி. உள்வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள்; ஒரு பக்கத்தில் அதிகார நந்தி; இன்னொரு பக்கம் சுப்ரமணியர். இந்த வாயிலில் நுழையாமல், நேரே பார்த்தால், தெற்கு நோக்கிய நடராஜ சபை. ஆடவல்லான் சபையிலேயே திருமுறைக் கோயிலும் உள்ளது.

தேவாரத் திருவுலா!

அடுத்து, உள்பிராகாரத்தின் கிழக்குச் சுற்றில், சூரியன். தெற்குச் சுற்றில் உற்ஸவ மூர்த்தங்கள். மேற்குச் சுற்றில், சிவபூஜை விநாயகர், சிவலிங்கம், லிங்கோத்பவர், சஹஸ்ர லிங்கம், ஆறுமுகர் (பன்னிரு கரங்களும், மயிலும் வேலும் கொண்டவர்), கஜலக்ஷ்மி என்று வரிசையாகத் திருமேனிகள். வடக்குச் சுற்றில், கோமுகக் கோஷ்ட பிரம்மாவுக்கு எதிரில், பிராம்மி. வடகிழக்கு மூலையில் பள்ளியறை. கிழக்குச் சுற்றில் திரும்புகையில், பைரவர் சந்நிதி.

மூலவர் கருவறைக்குள் நுழைகி றோம். துவாரபாலகர்களைப் பணிந்து உள்ளே செல்வதற்கு முன்னர், கருவறை வாயில் மேற்புறத்தில், ஸ்ரீராமர் பூஜித்ததைக் காட்டும் சிற்பம். ராமபிரான் இங்கு சிவனாரை லிங்க வடிவில் வழிபட்டார். இதனைக் குறிப்பிட்டு, 'இராமனும் வழிபாடுசெய் ஈசனை நிராமயன்தனை நாளும் நினைமினே’ என்று நாவுக்கரசர் பாடுகிறார்.

அர்த்தமண்டபம் புகுந்து, கருவறைப் பெருமானை தரிசிக்கி றோம். ஸ்ரீஅபிராமேஸ்வரர் என்கிற அழகியநாதர். சுயம்புத் திருமேனி. லிங்க பாணத்தில் குளம்புச் சுவடுகள்; பால் வழிந்த தடங்களும் உள்ளன. ஆதியில், பசுக்கள் கொம்புகள் இல்லாமல், தற்காத்துக் கொள்ளக் கூடிய திறனின்றி இருந்தனவாம். இந்தத் தலத்துக்கு வந்து சுயம்பு நாதரைப் பிரார்த்திக்க, இறை அருளால் கொம்புகள் வளர்ந்து, தற்காப்புத் திறன் பெற்றன. ஆக்களான பசுக்கள் வழிபட்ட தலம் ஆமாத்தூர் ஆனது. பசுபதியானவர், இங்கே பசுக்களுக்குத் தாயுமானவர் ஆனதாக ஐதீகம். எனவே, வடமொழியில், இவ்வூர் 'கோமாத்ருபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.

மூலவரை வழிபட்டு, மீண்டும் வலம் வந்தால், கோஷ்ட மூர்த்தங்களாக, பாம்புகளைக் கோவணமாக அணிந்த பிக்ஷ£டனர், சனகாதி முனிவர்கள் கீழே அமர்ந்திருக்க, உபதேசித்தருளும் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஸ்ரீவிஷ்ணு துர்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். சுவாமியை வணங்கி, வெளிப் பகுதிக்கு வரும்போது, உள்வாயில் பகுதியில், அச்சுதேவ பல்லவ மன்னரின் சிலை கண்ணில் படுகிறது. பிரதோஷ நந்தி வீற்றிருக்கும் சாளர மண்டபத்திலேயே, நவக்கிரகச் சந்நிதி.

ஸ்வாமி கோயிலை விட்டு வெளியில் வந்து சாலையைக் கடந்து, எதிரில் உள்ள அம்பாள் கோயிலுக்குச் செல்கிறோம்.

மேற்கு நோக்கிய கோயில். ஐந்து நிலை கோபுரம். நுழைந்ததும், கொடி மரம், பலிபீடம், சிம்ம வாகனம். பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. கிழக்குச் சுற்றுப் பகுதியில் மண்டப அமைப்பு காணப்படுகிறது. தூண்கள் பழைமையைப் பறைசாற்றுகின்றன. பிராகார மதிலை ஒட்டி, தென்மேற்கு மூலையில், வட்டப்பாறை அம்மன் சந்நிதி. வாயில் பகுதியில் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை, விநாயகர் ஆகியோரை வழிபட்டு, துவாரபாலகியரை வணங்கி, அம்பாளைத் தரிசிக்கிறோம். ஸ்ரீஅழகிய நாயகியான முக்தாம்பிகை. முக்தியை நல்கக்கூடியவள் என்பதால், முக்தாம்பிகை. நின்ற கோலத்தில், மேல் கரங்களில் தாமரையும் நீலோற்பலமும் தாங்கி, கீழ்க்கரங்களில் ஒன்றில் அபயம் காட்டி, மற்றொன்றைத் தொடையில் ஊருஹஸ்தமாகக் கொண்டிருக்கிறாள். ஊருஹஸ்தம் கொண்ட அம்பாள், விஷ்ணுவாகவே போற்றப்படுவது வழக்கம்.

தேவாரத் திருவுலா!

அம்பாள் சந்நிதியிலோ, வட்டப்பாறை அம்மன் சந்நிதியிலோ பொய் சத்தியம் செய்தால், பாம்பு தீண்டி இறந்துபோவார்கள் என்பது நம்பிக்கை. ஆகவே, வழக்குகளைத் தீர்க்க அம்பாள் கோயிலை நாடுவார்கள். சிறு குழந்தையாக இருந்த தன் தம்பியின் சொத்தை அண்ணன் அபகரித்துக் கொண்டான். வளர்ந்துவிட்ட நிலையில் தம்பி அதுபற்றிக் கேட்க, அண்ணன் மறுக்க, பஞ்சாயத்துக்கு வழக்கு வந்தது. வட்டப்பாறை அம்மன் சந்நிதியில் சத்தியம் செய்யவேண்டிய நிலையில், அண்ணன் ஒரு சூழ்ச்சி செய்தான். தம்பியின் சொத்து மதிப்புக்குத் தங்கம் செய்து, அதையரு கைத்தடியின் பூணுக்குள் வைத்து மறைத்தான். சந்நிதியில், கைத்தடியைத் தம்பியிடம் தந்துவிட்டு, தன்னிடம் தம்பியின் சொத்தில்லை என்று சத்தியம் செய்தான். வேறு வழியில்லாமல் தம்பியும் ஏற்றான். அண்ணனோடு தம்பியை அனுப்பி வைத்தார்கள். சிறிது தொலைவு சென்றதும், தான் வென்றுவிட்டதான மதர்ப்பில், தெய்வம் தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று கூறி, கைத்தடியைச் சுழற்றினான் அண்ணன். அப்போது கரும்பாம்பு ஒன்று அங்கு தோன்றி, அவனைக் கடித்தது. அண்ணன் இறந்தான். இதனைக் காட்டுவதுபோல், முக்தாம்பிகையின் மார்புப் பகுதியில், பாம்பின் வால் சிற்பம் உள்ளது.  வட்டப்பாறை அம்மன் (அம்பாளின் சாந்நித்ய ரூபமே இச்சந்நிதி) சந்நிதியில் இப்போது சிவலிங்கம் உள்ளது.

அம்பாளை வழிபடமாட்டேன், சுவாமி மட்டுமே தனக்குப் பிரதானம் என்ற பிருங்கி முனிவர் அம்பாள் சாபத்தால், வன்னி மரமானார். அவர் இந்த தலத்தில் அம்பாளை வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்றார். ஆகவே, இத்தலத்தின் தலமரமாக வன்னியே திகழ் கிறது. அம்பாள் கோயிலுக்கு அருகிலும், ஸ்வாமி கோயிலுக்கு எதிரிலுமாக ஒரு மண்டபம் உள்ளது. இங்கு ஒரு பகுதியில், வன்னி மரத்தடியில் லிங்க பாண மும், அதனை வழிபடுகின்ற விநாயகரையும் காண லாம். கோயிலிலிருந்து சற்றுத் தொலைவில் வண்ணச் சரபம் சுவாமிகள் சமாதிக் கோயில் உள்ளது.

'அகம்புற என்றுள சமயம் ஆறிரண்டும்
தனதுருவத்து அங்கமாக் கொண்டு
கிகந்து கொலை புலையிஞ்சையிலார்
சொலுந்தேவெல்லாமும் ஒப்பித் தொண்டர்க்கு
இகம்பர முற்றுள போகம் கடந்த முதற்கதி வழிகாட்டிடச் சேயாகித்
திகழ்ந்த தண்டபாணி திருப்புகழ் முருகதாசன் இரு திருத்தாள் போற்றி’

- என்றே அவருடைய திருப்பாடலை நெஞ்சில் சுமந்து விடைபெறுகிறோம்.

(உலா நிறைவுற்றது)

படங்கள்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism