Published:Updated:

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது, திருப்பதி தரிசனத்துக்கு டோக்கன்... 2017-ன் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்! #Rewind2017

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது, திருப்பதி தரிசனத்துக்கு டோக்கன்... 2017-ன் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்! #Rewind2017
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது, திருப்பதி தரிசனத்துக்கு டோக்கன்... 2017-ன் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்! #Rewind2017

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது, திருப்பதி தரிசனத்துக்கு டோக்கன்... 2017-ன் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்! #Rewind2017

2017 ஆன்மிக நிகழ்வுகள்  - 2017-ம் ஆண்டில் ஆன்மிக உலகில் வழக்கம் போல சிறப்பான விழாக்களும், திருப்பணிகளும் நடைபெற்றன. அதைப்போலவே இந்த ஆண்டில் சச்சரவுகளுக்கும் குறைவே இல்லை எனலாம். முக்கியமான சில சச்சரவுகள் மற்றும் சம்பவங்களை இங்கே ஞாபகப்படுத்தியுள்ளோம்...

* நள்ளிரவில் புத்தாண்டு பூஜைக்காக ஆலயங்கள் திறக்கப்படலாமா என்ற சர்ச்சை இந்த ஆண்டும் வெடித்துள்ளது. ஆகம விதிப்படி அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு கோயில் நடையை சாத்தவேண்டும் என்றும், நள்ளிரவில் திறக்கக் கூடாது என்றும் ஆன்மிக அன்பர்களால் சொல்லப்பட்டது. இந்நிலையில், அறநிலையத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'இந்த ஆண்டு நள்ளிரவில் கோயிலின் நடையைத் திறக்கக்கூடாது' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 

டிசம்பர் 27 அன்று பாடகி சித்ராவுக்கு ஹரிவராசனம் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது 2018 ஜனவரி 14-ம் தேதி சபரிமலையில் மகரபூஜை நடைபெறும் நாளில் சித்ராவுக்கு வழங்கப்படவுள்ளது.


 

திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் வள்ளிக் குகை அருகே உள்ள பிராகார மண்டபம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த மண்டபம் டிசம்பர் 14 அன்று காலையில் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி பேச்சியம்மாள் என்ற பெண்மணி மரணமடைந்தார். மூவர் படுகாயமடைந்தனர். ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டியும் மன்னர் காலக் கோயில்கள் அப்படியே இருக்க, சில ஆண்டுகள்கூட தாங்காத இந்த மண்டபங்கள் சரிந்து போவதற்கு அறநிலையத்துறையின் சீர்கெட்ட நிர்வாகமே காரணம் என்று சொல்லப்பட்டது.


 

ராமர் கட்டிய பாலம் என்பது இல்லவே இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியதற்கு காரணம், தி.மு.க.தான் என்று 2017 டிசம்பர் 13 அன்று முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் கூறிய கருத்து ராமர் பாலத்தைப் பற்றிய மீண்டுமொரு சர்ச்சைக்குக் காரணமானது.


 

சாதாரணமாக ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் சனி கிரகம், இந்த 2017-ம் ஆண்டின் பெயர்ச்சியில் மட்டும் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்க அபூர்வமாக 3 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, பொழிச்சலூரில் உள்ள ஸ்ரீ அகத்தீஸ்வரர் போன்ற ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளை விகடன் தனது வாசகர்களுக்குத் தந்தது. அதனோடு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரச் செய்திகளையும் அவ்வப்போது தந்து வந்தது.


 

திருப்பதி திருமலையில் டிசம்பர் 18-ம் தேதி திங்கள்கிழமை தொடங்கி, 23 -ம்தேதி சனிக்கிழமை வரை சர்வதரிசன வழியில் வரும் பக்தர்களுக்கு நேரம், நாள் குறிப்பிடப்பட்ட புதிய டோக்கன் தரிசன முறையை பரீட்சார்த்த முறையில் திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்தது.


 

ஸ்ரீ சாய் பாபா மஹாசமாதி அடைந்து நூறாண்டுகள் ஆனதால், ஷீரடி சாய்பாபாவின் சந்நிதானத்தில் இருக்கும் ஸ்ரீ சாய்பகவானின் திருப்பாதுகைகளை மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் எழுந்தருளச் செய்து பக்தர்களின் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 8-11-17 அன்று மதியம் 12.30 மணி அளவில் மயிலாப்பூர் ஆலயத்தை வந்தடைந்த சாய்பாபாவின் திருப்பாதுகைகளை பல்லாயிரம் மக்கள் 3 நாள்களாக தரிசித்து பேறுபெற்றார்கள்.


 


 

வைணவ சமயத்தின் மறுமலர்ச்சி குருவான ஸ்ரீராமாநுஜரின் 1,000- வது அவதார ஆண்டு 2017-ம் ஆண்டு முழுக்கக் கொண்டாடப்பட்டது. அதுபோலவே சாய்பகவான் அவர்களின் 100-வது நினைவு ஆண்டும் இந்த ஆண்டு தொடங்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. யோகி ராம் சுரத்குமார் நூற்றாண்டு விழாவும் இந்த ஆண்டில்தான் தொடங்கி கொண்டாடப்படுகிறது.


 

மண்டல பூஜைகள் காரணமாக சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயில் சந்நிதி நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. டிசம்பர் மாதம் 26-ம் தேதி வரை திறந்து இருந்த சந்நிதி, மகர பூஜை நிகழ்வுக்காக சாத்தப்பட்டது.


 

இந்த ஆண்டு நவம்பர் 20-ம் நாள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் ஆந்திராவைச் சேர்ந்த 31 வயது பெண் நுழைய முயன்றார். 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்குள் நுழையக்கூடாது என்ற விதி இருப்பதால், அந்தப் பெண், போலீஸாரால் கைது செய்யப்பட்டு, வெளியேற்றப்பட்டார். இந்த ஆண்டும் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழையும் விவகாரம் கேரளாவில் சர்ச்சையை உருவாக்கியது.


 

2017 நவம்பரில் சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கருவறை இடித்து அகற்றப்பட்டது. பழைமையான இந்தக் கோயிலின் கருவறையை அகற்றிவிட்டு புதிதாகக் கட்ட அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்து இடிக்க முயன்றபோது, அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தை மேற்கொண்டார்கள். நவம்பர் 30-ம் தேதி பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கோயில் கருவறை இடிக்கப்பட்ட செயல் அங்கிருந்த மக்களை கவலையுறச் செய்தது.


 

ராமபிரான் பிறந்த அயோத்தி சம்பந்தப்பட்ட விவகாரத்தில், இந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருடன் சமரசப் பேச்சுவார்த்தை இந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. ஸ்ரீரவிசங்கர் இந்த பேச்சுவார்த்தையை இருதரப்பிலும் நவம்பர் 18 அன்று தொடங்கினார்.


 

எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பை நடைமுறையிலும் செயல்படுத்தும் வகையில், கேரள அரசு இந்த ஆண்டு சாதித்துக் காட்டிவிட்டது. கடந்த அக்டோபரில் காலியாக இருந்த 62 அர்ச்சகர் இடங்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் வாரியம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமித்தது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேர் இடம் பெற்றார்கள். இது நாடுமுழுக்க பாராட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடக அரசும் அனைத்துப்பிரிவு மக்களையும் இனி அர்ச்சகர்களாக நியமிப்போம் என்று அறிவித்தது.


 

தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளின் அடிப்படையில் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில், நாட்டிலேயே சிறந்த கோயில் வரிசையில் முதலிடத்தில் இருப்பதாக 2-10-17 அன்று மத்திய அரசு அறிவித்தது.


 

உலகில் உள்ள பாரம்பர்யச் சின்னங்களைப் பாதுகாக்கும் யுனெஸ்கோ அமைப்பு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் சிறப்புகளைக் கண்டறிந்து முதல் முறையாக விருது அறிவித்தது. பழைமையை மாற்றாமல் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டதால் இந்த விருது வழங்கப்பட்டது.


 

காவிரி எனும் புண்ணிய நதி புகுந்த இடங்களில் எல்லாம் காவிரி புஷ்கரம் என்னும் திருவிழா நடைபெற்றது. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி இந்த விழா நடத்தப்படுகிறது. குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு. செப்டம்பர் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற இந்த விழாவில் சில விதிமீறல்களும், ஒழுங்கீனங்களும் நடைபெற்றதாக சர்ச்சைகள் எழுந்தன.


 

குரு பகவான் கடந்த ஹேவிளம்பி ஆண்டு ஆவணி மாதம் 17-ம் தேதி சனிக்கிழமை (2.9.17) அன்று, சுக்ல பட்சத்து ஏகாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் கூடிய காலை 9.25 மணிக்கு துலாம் லக்னத்தில், கன்னி ராசியிலிருந்து சர வீடான துலாம் ராசிக்குள் பிரவேசித்தார். குருப்பெயர்ச்சி பலன்களையும், சிறப்புச் செய்திகளையும் விகடன் தனது வாசகர்களுக்கு தொடர்ந்து அளித்தது.


 

அரசின் அலட்சியம் காரணமாக பழைமையான சிலைகள் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், வேலியே பயிரை மேய்வதைப்போல சிலைகளை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்திய வழக்கில், டி.எஸ்.பி காதர் பாட்ஷா கும்பகோணத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இவர் முன்பு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், போலீஸ்காரர் சுப்புராஜ் என்பவரும் கைதுசெய்யப்பட்டார். சிலை மற்றும் கடத்தல் பிரிவு ஐ.ஜி.யாக பொன்மாணிக்கவேல் பதவியேற்ற பிறகு கடத்திச் செல்லப்பட்ட ஐம்பொன் சாமி சிலைகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன. சிலைக் கடத்தல் தலைவனான சுபாஷ் கபூர் கைதுசெய்யப்பட்டார். இவரது கைக்கூலியாக செயல்பட்ட தீனதயாளன் ஆழ்வார்பேட்டையில் கைதுசெய்யப்பட்டார். போலீஸ்காரர் சுப்புராஜ் ஆகியோரும் சிலை கடத்தியதால் செப்டம்பர் 14 அன்று கைது செய்யப்பட்டனர்.


 

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் நாள் சென்னை தினம் கொண்டாடப்பட்டது. சென்னையைப் புனித மண்ணாக மாற்றிய 9 மகான்கள், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பாடல் பெற்ற சென்னைத் திருக்கோயில்கள் போன்ற சிறப்புச் செய்திகளை தனது வாசகர்களுக்கு அளித்தது விகடன்.


 


 

யுனெஸ்கோ நிறுவனம் தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்ற பழைமை வாய்ந்த கோயில்களை, கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஆய்வு செய்தது. அதில் கும்பகோணம்-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் மானம்பாடி நாகநாத சுவாமி கோயில் உள்பட பல கோயில்கள் தமிழக அரசின் அலட்சியத்தால் சிதைக்கப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டியது. ஆகஸ்ட் மாதத்தில் இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. மேலும், யுனெஸ்கோவின் அறிக்கையில், மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருக்கும் தூண்கள் மாற்றியமைக்கப்பட்டதாகவும், சிற்பசாஸ்திர விதியைப் பின்பற்றவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் மறுத்தது.


 

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி மாதம் 11-ம் தேதி அதாவது ஜூலை 27-ம் தேதி ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆனார்கள். திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 1-ம் தேதி அதாவது ஆகஸ்ட் 18-ம் தேதி விடியற்காலை 2-32க்கு ராகு, கேது பெயர்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

அடுத்த கட்டுரைக்கு