ஸ்தல வழிபாடு
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

உடையாளூர் தேவியை விளக்கேற்றி வழிபடுங்கள்!

தீபாவளி சிறப்பு தரிசனம்!

உடையாளூர் தேவியை விளக்கேற்றி வழிபடுங்கள்!
##~##
கோ
யில் நகரமாம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது உடையாளூர். மாமன்னன் ராஜராஜசோழன், தனது கடைசிக் காலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்தத் தலத்தில் ஸ்ரீபார்வதி சமேத ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. பிரம்ம முகூர்த்த வேளையில், இந்தக் கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, உமையவளையும் சிவனாரையும் வணங்கித் தொழுதால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்!

சிவபாதசேகரமங்கலம் (ராஜராஜசோழனுக்கு சிவபாதசேகரன் எனும் திருப்பெயர் உண்டு) என்று முந்தைய காலத்தில் அழைக்கப்பட்ட இந்தத் திருத்தலத்தில், கருணைக் கடாட்சம் கொண்ட திருமுகத்துடன் ஜொலிக்கிறாள் ஸ்ரீபார்வதிதேவி.

ஸ்வாமியும் அம்பாளும் ஒரு பிரம்ம முகூர்த்த வேளையில் பேசிக் கொண்டிருந்தபோது, நடுவே முருகப் பெருமான் வர... கோபம்கொண்ட சிவபெருமான், முருகனை பூலோகத்தில் தவம் செய்யப் பணித்தார். அதன்படி பூவுலகுக்கு வந்த முருகக் கடவுள், இங்கே இந்தத் தலத்தில் தனது வேலால் தீர்த்தக் குளத்தை உண்டாக்கி, அந்தத் தீர்த்தத்தால் சிவலிங்கத் திருமேனியை அபிஷேகித்து, தவம் புரிந்தார். முருகப் பெருமான் உருவாக்கிய திருக்குளம் 'குமார தீர்த்தம்’ எனப் போற்றப்படுகிறது.

உடையாளூர் தேவியை விளக்கேற்றி வழிபடுங்கள்!

இந்தத் தீர்த்தத்தில் நீராடி, சிவ சந்நிதியில் வழங்கப்படும் விபூதியையும், அம்பாள் சந்நிதியில் வழங்கப்படும் குங்குமத்தையும் இட்டுக்கொள்ள... தீராத நோய் விலகும்; தோஷங்கள் யாவும் அகலும் என்பது ஐதீகம். இந்தத் திருத்தலம், தட்சிண கயிலாசம் எனப் போற்றி வணங்கப்படுகிறது.  

தேவர்கள் ஒருமுறை சிவகோபத்துக்கு ஆளாகி, சூலை நோயால் பாதிக்கப்பட்டனர். பிறகு ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, தேவர்கள் ஆகியோர் குமார தீர்த்தக் குளத்தில் நீராடி, சிவ பூஜை செய்து வணங்கி, சிவனருள் பெற்றனர்.  

திருவிடைமருதூர் திருத்தலத்தைப் போல, இங்கும் ஸ்ரீபஞ்ச பைரவர் தெற்குப் பார்த்தபடி இருப்பது விசேஷம் என்பர். திருநள்ளாறு, தஞ்சாவூர் ஆகிய தலங்களைப் போல ஸ்ரீசனீஸ்வர பகவான் மேற்குப் பார்த்திருக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று!

உடையாளூர் தேவியை விளக்கேற்றி வழிபடுங்கள்!

தீபாவளி நன்னாளில், உடையாளூர் ஸ்ரீகயிலாசநாதர் கோயிலுக்கு வந்து, குமார தீர்த்தத்தில் நீராடி, புத்தாடை அணிந்து, ஸ்ரீஅம்பாளையும் சிவனாரையும் தரிசித்தால், வியாபாரம் செழிக்கும்; ஆரோக்கியத்துடனும் ஒற்றுமை யுடனும் தம்பதியர் வாழ்வர் என்பது நம்பிக்கை.

சித்ரா பௌர்ணமியில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, நவராத்திரி விழாக்கள் என அமர்க்களப்படும் இந்த ஆலயத்தில், தீபாவளித் திருநாளில் அம்பாளை வணங்கு வது சிறப்பு தரும் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.

அன்னை ஸ்ரீபார்வதியை அனுதினமும் காலையில் தரிசித்து, அகல் விளக்கேற்றி வணங்கினால், நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும். தீப ஒளித் திருநாளில், அம்பிகையை விளக்கேற்றி வழிபடுங்கள்; ஒளிமயமான எதிர்காலம் உறுதி!

          - கோ.சுதர்சனன்  
படங்கள்: ர.அருண்பாண்டியன்