அன்பினால் இணைத்த சங்கிலி மண்டபம்..!எஸ்.கண்ணன்கோபாலன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
கோயில் திருவிழா என்றாலே முதலில் தேரோட்டம்தான் எல்லோருடைய நினைவுக்கும் வரும். தேர் என்பதே ஒரு நகரும் கோயில்தானே? கோயில்களில் வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் பிரம்மோற்ஸவத்தின்போது ஒருநாள் தேரோட்டம் நடைபெறுவது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால், ஒரு காலத்தில் மாதம்தோறும் திருவிழாவும் தேரோட்டமும் நடைபெற்ற திருத்தலம் எது தெரியுமா?
ஒரு கோயிலுக்கான சிறப்புகளில் குறிப்பாக மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூவகைச் சிறப்புகள் சொல்லப்படும். அப்படி ஒரு கோயிலின் தீர்த்தம், அதன் உண்மையான பெயர் உருமாறி அழைக்கப்படும் திருக்கோயில் எது தெரியுமா?
ஆலயம் என்பதன் தாத்பர்யம் தான் என்னவென்று தெரியுமா?
ஆலயம் என்பது இறைவனின் உறைவிடம் மட்டுமல்ல; அவன் அருள்பெற்று மனித ஆன்மாக்கள் இறைவனுடன் லயிக்கும் புனிதத் தலமும்கூட! அதன் காரணமாகவே எண்ணற்ற ஆலயங்கள் இந்தப் புண்ணிய பூமியில் அருளொளி பரப்பி நிற்கின்றன.
இறைவன் தானுகந்த திருக்கோயில்கள், ரிஷிகளும் முனிவர்களும் வழிபட்ட கோயில்கள், மன்னர்கள் நிர்மாணித்து வழிபட்ட ஆலயங்கள் என எண்ணற்ற ஆலயங்கள் வழிபாட்டுக் கேந்திரங்களாக மட்டுமல்லாமல், சமய, சமூக, கலாசார, பண்பாட்டு மையங்களாகவும் திகழ்கின்றன.

ஒவ்வொரு ஆலயத்தின் பின்னணியிலும் புராண ரீதியாகவும் வரலாற்று அடிப்படை யிலும் எண்ணற்ற பல அரிய தகவல்கள் மறைந்திருக்கின்றன. ஆலயத்தின் ஒரு மண்டபமாகட்டும், திருக்குளமாகட்டும்... ஏன், அங்கே உள்ள ஒரு சின்ன சிற்பம்தான் ஆகட்டும், அதன் பின்னணியில் பொதிந்திருக்கும் தகவல் நம்முடைய பாரம்பர்யச் சிறப்பையும், முன்னோர்களின் தியாகத்தையும், அவர்களின் நுட்பமான கலைத் திறனையும் நமக்கு எடுத்துச் சொல்லும். அப்படிப்பட்ட தகவல்கள் நமக்கு நல்ல அனுபவப் படிப்பினைகளாகவும் அமையும்.
அவற்றுள்... திங்கள்தோறும் திருவிழா நடைபெற்றுத் தேரோட்டம் நிகழ்ந்ததும், உண்மையான பெயர் உருமாறி அழைக்கப்படும் திருக்குளம் அமைந்திருப்பதுமான நெல்லை யப்பர்ஆலயமும் ஒன்று!
அந்தத் திருக்கோயிலைத் தரிசித்து, அரிய சில தகவல்களை யும் அதன் பின்னணி குறித்தும் தெரிந்துகொள்வோம்!
நெல்லையைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியவர் மு.சு.சங்கர் என்பவரை அழைத்துக்கொண்டு நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்றோம்.
நாம் நேராக நெல்லையப்பர் சந்நிதிக்குச் செல்ல, நம்மைத் தடுத்த சங்கர், ''நீங்கள் எந்தக் கோயிலுக்குப் போனாலும், முதலில் அம்பிகை சந்நிதிக்குச் சென்று அம்பிகையை வழிபட்ட பிறகுதான், சுவாமி சந்நிதிக்குச் செல்லவேண்டும். அதேபோல்தான் பெருமாள் கோயில்களுக்குச் செல்லும்போதும் முதலில் தாயாரைச் சேவித்து விட்டுப் பிறகுதான் பெருமாளை சேவிக்க வேண் டும்'' என்று சொல்லி, முதலில் நம்மை காந்திமதி அம்பிகையின் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார்.

அம்பிகையின் கோயிலுக்குச் செல்லும் வழி யில் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு இருந்த இரண்டு பெரிய தேர்களைக் கண்டோம். ''நெல்லையப்பர் கோயிலில் முதன்முதலில் 1605ம் வருஷம்தான் பெரிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது'' என்று கூறினார் சங்கர்.
''அதற்கு முன்பாகத் தேரோட்டம் நடைபெற வில்லையா?'' என்று கேட்டோம்.
''அதற்கு முன்பும் தேரோட்டம் நடந்திருக்கலாம். ஆனால், அதுகுறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை'' என்றார்.
உள்ளே சென்றதும், முதலில் ஊஞ்சல் மண்டபத் தைக் கண்டோம். இந்த மண்டபத்தில் 96 தத்துவங்களைக் குறிக்கும் வகையில் 96 தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்த மண்டபத்தில்தான் காந்திமதி அம்பிகைக்கு ஆடிப்பூரத்தில் வளை காப்புத் திருவிழா நடைபெறுமாம். மேலும், ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் முடிந்ததும், இந்த மண்டபத்தில்தான் ஊஞ்சல் உற்ஸவம் நடை பெறும் என்றும் தெரிந்துகொண்டோம்.
தொடர்ந்து, ஆயிரம் தூண்களைக் கொண்ட மண்டபத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற சங்கர். ''இந்த மண்டபத்தில்தான் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும். மேலும், பங்குனி உத்திரத்தன்று செங்கோல் திருவிழாவும் இந்த மண்டபத்தில்தான் நடைபெறும்'' என்றார்.
''செங்கோல் திருவிழாவா? அப்படி என்றால் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறுமா?'' என்று சங்கரிடம் கேட்டோம்.
''நீங்கள் நினைப்பதுபோல் சுவாமிக்குப் பட்டாபிஷேகம் நடைபெறும் வைபவம் அல்ல அது. மன்னர்களின் காலத்தில், ஒவ்வொரு வருஷமும் கோயிலை நிர்வகிக்க அதிகாரி ஒருவரை நியமிப்பார் மன்னர். அப்போது மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் சுவாமி அம்பாள் முன்னிலையில் கோயிலின் சார்பில் செங்கோலும் பாதுகைகளும் அவரிடம் கொடுக்கப்படும். அவற்றைப் பெற்றுக் கொண்ட அதிகாரி, சுவாமியையும் அம்பிகையை யும் வலம் வந்து வணங்கி, தங்களின் பொறுப்பை தர்மம் தவறாமலும் நெறிகளை மீறாமலும் நிறைவேற்றுவதாக மானசிகமாக உறுதி எடுத்துக் கொள்வார்கள். இதைத்தான் செங்கோல் திருவிழா என்று சொல்வார்கள்'' என்றார்.

என்ன ஓர் அற்புதமான வைபவம்?! அண்ட சராசரங்களையும் இயக்கும் இறைவன் அர்ச்சா மூர்த்தமாக அருள்புரியும் திருக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்ற
வேண்டும் என்ற மன உறுதியை, பொறுப்புக்கு வருபவர்கள் பெறவேண்டியது அவசியம்தானே?! அந்த வகையில் இந்தச் செங்கோல் திருவிழா எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது! இந்த மண்டபத்தில்தான் நெல்லையப்பர் கோயில் தல வரலாற்றை விவரிக்கும் சிற்பங்கள் இடம் பெற்றிருந்தனவாம். தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், அந்த ஓவியங்களை நம்மால் காண முடியவில்லை.
ஆயிரங்கால் மண்டபத்தைப் பார்த்துவிட்டு, தொடர்ந்து தற்போது கருமாறி தீர்த்தம் என்று வழங்கப்படும் திருக்குளத்துக்குச் சென்றோம். இதன் உண்மையான பெயர் 'கரி உருமாறிய தீர்த்தம்' என்பதாகும். இந்தப் பெயரின் பின்னணி யில் உள்ள புராண நிகழ்ச்சியை சங்கர் நமக்குத் தெரிவித்தார்.
''முற்காலத்தில் மணவூரைத் தலைநகராகக் கொண்டு இந்திரத்துய்மன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். ஒருமுறை அவனுடைய சபைக்கு வந்த துர்வாச முனிவரை முறைப்படி உபசரிக்காததால், அவரின் சாபத்துக்கு ஆளாகி, யானையாக மாறி, காடுகளில் அலைந்து திரிந்தான். அப்படி, பொதிகைமலைப் பகுதியில் அவன் திரிந்துகொண்டிருந்தபோது, சிங்கம் ஒன்று அந்த யானையைத் துரத்தியது. சிங்கத்துக்குப் பயந்து ஓடிய யானை, பூர்வபுண்ணிய பலனாக இங்கே நெல்லையப்பர் கோயிலுக்கு வந்து இந்தத் தீர்த்தத்தில் மூழ்கியது. அவ்வளவில் இந்திரத்துய்மனின் யானை வடிவம் நீங்கி முன்பிருந்த வடிவம் பெற்றான். கரி(யானை)யாக இருந்த இந்திரத்துய்மன் யானை உருவம் மாறி தன்னுடைய சுய உருவம் பெற்றதால், இந்தத் தீர்த்தம் கரி உருமாறிய தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு, தற்போது கருமாறி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது'' என்றார்.
காந்திமதியைத் தரிசித்துவிட்டு, ஒரு மண்டபத் தின் வழியாக நெல்லையப்பர் சந்நிதிக்குச் சென்றோம். அந்த மண்டபத்தின் பெயர் 'சங்கிலி மண்டபம்'. அந்தப் பெயருக்கான காரணத்தை நமக்கு விளக்கிக் கூறினார் சங்கர்.
''ஆரம்பத்தில் சுவாமி கோயிலும் அம்பாள் கோயிலும் தனித்தனியாகத்தான் இருந்தன. நெல்லையப்பர்காந்திமதி அம்பிகையிடம் ஆழ்ந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்த வடமலையப்பப் பிள்ளை என்பவர்தான் இரண்டு கோயில்களையும் இணைக்கும் வகையில் 1647ம் வருஷம் இந்த மண்டபத்தைக் கட்டினார். சுவாமி கோயிலையும் அம்பிகை கோயிலையும் இணைக்கும் வகையில் இந்த மண்டபம் உள்ளதால் இதற்குச் சங்கிலி மண்டபம் என்ற பெயர் ஏற்பட்டது'' என்றார்.
ஐயனின் கோயிலையும் அம்பிகையின் கோயிலையும், தன் அன்பினால் இணைத்த வடமலையப்பப் பிள்ளையின் பக்தி மனம் பாராட்டுக்கு உரியதுதான்!
அப்போது அங்கே வந்த சங்கரின் நண்பரான 'கம்பபாத சேகரன்' சங்கர் எனும் அன்பர், வடமலையப்பப்பிள்ளை பற்றிய மற்றுமொரு பக்திபூர்வமான தகவலை பகிர்ந்துகொண்டார்.

''இந்த வடமலையப்பப் பிள்ளை திருமலைநாயக்கரின் பிரதிநிதியாக, திருநெல்வேலி பகுதியை நிர்வகித்து வந்தார். நெல்லையப்பரிடமும் காந்திமதி அம்பிகையிடமும் பக்தி கொண்டிருந்த அவர் திருச்செந்தூர் முருகனிடமும் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். இவரது காலத்தில்தான் டச்சுக் காரர்கள் திருச்செந்தூரை முற்றுகையிட்டு, கோயிலில் இருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்களையும், ஐம்பொன் னாலான செந்திலாண்டவரின் விக்கிரஹங்களையும் கொள்ளை அடித்துச் சென்றனர்.''
இந்தச் சம்பவத்தை விவரித்த சங்கரன், வடமலையப்பப் பிள்ளை குறித்து மேலும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள், அலாதியானவை!
- அடுத்த இதழிலும் தொடரும்