Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15

Published:Updated:

26. அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே! 

கண்ணனும் குசேலனும் சாந்தீபனி  முனிவரிடம் குருகுலவாசத்தில் கல்வி பயின்று வந்தனர். ஒருமுறை சாந்தீபனி முனிவர் கண்ணனையும் சுதாமனையும் அழைத்து (சுதாமன் என்பதுதான் குசேலனின் இயற்பெயர்) வீட்டில் நடக்க இருந்த ஒரு விசேஷத்துக்கு அருகில் உள்ள காட்டிலிருந்து கறிகாய்களும் அடுப்பெரிக்க சுள்ளியும் கொண்டுவர பணித்தார். இருவரும் காட்டிற்குள் சென்று சுள்ளி பொறுக்கிக் கொண்டிருக்கும்போது கடும் மழை பெய்யத் தொடங்கியது. இருவரும் அந்த இரவு முழுவதும் ஒரு பெரிய மரத்தின் அடியிலேயே தங்க நேர்ந்தது. மறுநாள் ஆச்சார்யார் இருவரையும் தேடியபடி அவர்கள் இருந்த அந்த மரத்தின் பக்கமாக வருகின்றார். ஆச்சாரிய கைங்கரியத்திற்காக அவர்கள் பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ''நீங்கள் இருவரும் பிற்காலத்தில் நன்றாக வருவீர்கள்' என்று வாழ்த்தினார்.

நமக்குத் தெரியும் ஸ்ரீகிருஷ்ணன் கம்சனை அழித்து துவாரகையின் மன்னன் ஆனான். குசேலன் சுசீலை என்பவளை மணந்து வேத நெறியில் வாழ வேண்டி ஒருவரிடமும் அண்டி வாழாது வறுமையின் உச்சத்துக்க்ச் செல்கிறான். ஆச்சாரிய சம்பந்தமும் அதன் முக்கியத்துவமும் இன்னதென்று நாம் ஏற்கனவே அறிந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஸ்ரீகிருஷ்ணர் ஒரு மாதிரியாகவும் குசேலர் வேறு மாதிரியாகவும் மாறிப் போய் விட்டனர். ஆச்சாரியர் வாக்கு பொய்த்தால் வைணவ சம்பிரதாயமே பொய்த்துப் போய்விடும். அப்படிப் போக கண்ணன் விடுவானா? விடமாட்டான். எனவே குசேலனின் மனைவி மனதுக்குள் புகுந்து பேச வைக்கிறான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15

'உங்களுடைய பால்யகால சிநேகிதர் கிருஷ்ணன் இப்போது துவாரகாபுரியின் மன்னனாக இருக்கிறாராமே. அவரிடம் போய் தினமும் பட்டினியில் வாடும் நம் குழந்தைகளுக்காக உதவி கேட்டு வரக் கூடாதா?' என்கிறாள். தமக்கு எதுவும் இல்லையென்றாலும் பிள்ளைகளுக்குச் செய்வதில் சிறிதும் தயங்காத குசேலன் துவாரகைக்குக் கிளம்பிச் சென்றான். காவலர்கள் குசேலனை உள்ளே அழைக்க மறுக்கின்றனர். சுதாமன் என்ற பெயரை கண்ணனிடம் கூறுமாறு குசேலன் வேண்ட அதன் பிறகு நிகழ்ந்தவை நட்பின் மேன்மைக்குச் சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகின்றது. 

தொண்டைநாட்டை சேர்ந்த தேவராச பிள்ளை என்பவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். அவர் தாம் இயற்றிய குசேலோபாக்கியானம் என்ற நூலில் 'பெருந்தவக் குசேல மேலோன் உரியஅன் பினையுங் கூட்டி ஒருபிடி யவல்தின் றானே' என்கிறார். கண்ணன், 'தன் மேல் உள்ள அன்பால் அண்ணி சுசீலை தனக்கு ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பாள்’ என்று நினைத்தபடி,  குசேலனின் மடியைப் பிடுங்கி ஒரே ஒரு கைப்பிடி அவல்தான் வாங்கித் தின்றான். ஆச்சாரிய வாக்கு அந்த இடத்தில் கண்ணன் மூலம் பலித்தது. குசேலனின் வறிய நிலை ஒழிந்தது.

இன்றும் குருவாயூர் போனால் கிழக்கு சந்நிதியில் மேடையுடன் கூடிய பெரிய அரச மரத்தைக் காணலாம். அந்த மரத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் இருக்கும் கருடாழ்வாரின் திருமேனியைக் காணலாம். அதன் பின்புறம் இறைவனைப் பார்த்தவாறு குசேலனின் சிலை ஒன்று இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முதல் புதன்கிழமையன்று எம்பெருமானுக்கு அவலும் வெல்லமும் சாதிப்பது என்பது பெரிய வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று இறைவனுக்கு அவலும் வெல்லமும் அளிப்பதால் நமது வாழ்வும் செல்வம் நிறைந்ததாக மாறும் என்பது ஒரு நம்பிக்கை. 

அப்படிப்பட்ட குசேலரைப் போல அவல் பொரியை யாவது நான் கண்ணனுக்குக் கொடுக்கவில்லையே, எனவே நான் சொல்கிறேன் என்று அந்த திருக்கோளூர் பெண் பிள்ளை கிளம்பிச் செல்கிறாள். 

27. ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே! 

தண்டகாரண்யத்தில் உள்ள  முனிவர்களின் ஆசிர மங்களில் இளவலுடனும் பிராட்டியுடனும் தங்கியிருந்து, முனிவர்களுக்கு அரக்கர்களால் துன்பம் ஏற்படாதபடி பத்து ஆண்டுகள் காப்பாற்றுகிறார்.

ஒரே வாயில் பத்து ஆண்டுகளை கம்பர் தள்ளி விடுகிறார். 

ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு, அவண்,

மைந்தர் தீது இலர்வைகினர்

என்று கம்பர் கூறுகிறார். 

பிறகு, அந்த முனிவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அகத்திய முனிவரின் ஆசிரமத்துக்குச் செல்கின்றார். 

முதல் பாடலில் அகத்தியரை கம்பர் தமிழுடன் ஒப்பு நோக்கி பெருமிதம் கொள்கிறார். 

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் என்கிறார். தமது திருவடிகளால் இந்த மூவுலகையும் அளந்த எம்பெருமானைப் போல அகத்தியன் தமிழால் இந்த உலகை அளந்தவர் என்று இருவருக்கும் மிகப் பெரிய கௌரவம் அளிக்கிறான் கம்பன். 

அகத்தியர் ராமனை வரவேற்று அவனுக்கு ஆசனம் அளிக்கிறார். அவனும் அவரை வணங்கி நிற்கின்றான். பல காலமாக சிவபெருமான் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த சிவ தனுசுவை அகத்தியர் இராமனிடம் கொடுக்கிறார். இதனைக் கம்பர். 

'விழுமியது சொற்றனை: இவ் வில் இது

இவண், மேல்நாள்

முழுமுதல்வன் வைத்துளது;

மூஉலகும், யானும்

வழிபட இருப்பது; இதுதன்னை

வடி வாளிக்

குழு, வழு இல் புட்டிலோடு கோடி!

என நல்கி’ என்கிறார். 

அது மட்டுமின்றி

இப் புவனம் முற்றும் ஒரு

தட்டினிடை இட்டால்

ஒப்பு வரவிற்று என உரைப்ப

அரிய வாளும்,

வெப்பு உருவு பெற்ற அரன்

மேரு வரை வில்லாய்

முப்புரம் எரித்த தனி மொய்க்

கணையும், நல்கா, என்கிறான் கம்பன். 

அதாவது இந்த உலகம் முழுவதையும் ஒரு தராசு தட்டினில் நிறுத்தி அகத்தியர் அளித்த வாள் ஒன்றினையும் வைத்தால்கூட அந்த வாளுக்கு இணையாகாது. அப்பேர்ப்பட்ட வாளினையும், ஒருசமயம் திரிபுரத்தை சிவபெருமான் மேருவை வில்லாக வளைத்து, மகாவிஷ்ணுவை அம்பாகக் கொண்டு எரித்ததாக புராணங்கள் சொல்லும் அப்படிப்பட்ட அம்பினையும் அகத்தியர் ராமனுக்கு அளிக்கிறார். 

அப்படிப்பட்ட அகத்திய முனிவரைப் போல எம்பெருமானுக்கு நான் ஆயுதங்கள் எதுவும் வழங்கவில்லையே, பின் எதற்காக நான் இந்த ஊரில் இருக்க வேண்டும் என்று கேட்டபடி அப்பெண் வெளியேறுகிறாளாம்.