Published:Updated:

நாரதர் உலா

மலைக்கோட்டை மர்மங்கள்!

நாரதர் உலா

மலைக்கோட்டை மர்மங்கள்!

Published:Updated:

நாரதரின் வருகைக்காகக் காத்திருந்தபோது, செல்போன் ஒலித்தது. எடுத்ததுமே, தான் பசியோடு இருப்பதாகவும் விரைவில் வந்துவிடுவதாகவும் தெரிவித்த நாரதர், சொன்னபடியே

நாரதர் உலா

சற்றைக்கெல்லாம் நம் முன் பிரசன்னமாகிவிட்டார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவருக்கு சூடாக சமோசாவும் இஞ்சி டீயும் கொடுத்து உபசரித்து விட்டு, ''என்ன நாரதரே, இந்தமுறை எந்தக் கோயிலுக்கு விஜயம் செய்தீர்கள்?'' என்று விசாரித்தோம்.

''திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டைக்குத்தான் சென்றிருந்தேன்'' என்ற நாரதர் தொடர்ந்தார்...

''திருச்சி மலைக்கோட்டையைப் பொறுத்தவரை வெளியூர் பக்தர்கள்தான் அதிக அளவில் வருகிறார்கள். அவர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த ஒரு பார்க்கிங் வசதியைகூட ஏற்படுத்தித் தராமல் இருக்கிறது கோயில் நிர்வாகம். தினமும் சராசரியாக மூவாயிரம் பக்தர்களாவது வந்துவிடுகிறார்கள். கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட

குடிநீர் வசதி எந்த இடத்திலும் இல்லை. கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை போடும் வெளியூர் பக்தர்களின் பயணப் பட்டியலிலும் தவறாமல் மலைக்கோட்டை இடம்பெற்றுவிடுகிறது. அதுபோன்ற நேரங்களில் பக்தர்கள் தங்களின் அடிப்படை வசதிக்காகப் படும் திண்டாட்டம்தான் பரிதாபமாக உள்ளது.''

நாரதர் உலா

''கோயிலில் பங்குனி, சித்திரை உற்ஸவங்கள் வெகு சிறப்பாக நடைபெறுமே! அதிலும் சித்திரை உற்ஸவத்தில், 'செட்டிப்பெண் மருத்துவம்’ என்னும் நிகழ்ச்சியைக் காண  திருச்சி மாவட்டமே திரண்டு வருமே நாரதரே!''

''நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் இப்படி யானதொரு பாரம்பரிய நிகழ்வு உட்பட எந்த ஒரு திருவிழாவும்,  ஏன், சுவாமி புறப்பாடுகூட மலைக் கோட்டை கோயிலில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறவில்லையாம்.''

''ஏன் என்று விசாரித்தீரா?''

''விசாரிக்காமல் இருப்பேனா? மூன்று வருஷங் களுக்கு முன்பே பாலாலயம் செய்து திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இன்னும் சில திருப்பணிகள் உள்ளதால் அவை முடிந்ததும் கும்பாபிஷேகம் நடை பெறும் என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.''

நாரதர் உலா
நாரதர் உலா

''மலையடிவாரத்திலேயே மாணிக்க விநாயகர் கோயில் இருக்கிறதே, பார்த்தீரா?''

''திருச்சியைச் சேர்ந்த எந்த ஒரு வணிக பிரமுகரும்  அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரை தரிசிக் காமல் வேலையைத் துவங்கமாட்டார்கள். மாணிக்க விநாயகரின் காலை அபிஷேகத்துக்கு தினமும் நிறைய பக்தர்கள் பணம் செலுத்துகிறார்கள், அபிஷேகக் கட்டணமாக ரூ.350 பெற்றுக்கொள்ளும் நிர்வாகம், அதற்கு சரியான ரசீது கொடுப்பதில்லை என்று பக்தர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். மேலும், அபிஷேகத்துக்குப் பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மிகக் குறைந்த அளவே தரப்படுகிறதாம்! இதன் பின்னணி சூட்சுமம் மர்மமாக இருக்கிறது. கோயிலில் வேண்டுதல்களுக்கு சூறைத் தேங்காய் உடைப்பது வழக்கம். ஆரம்ப காலத்திலிருந்தே மேற்கு பார்த்து உடைப்பது போல் இருந்த தேங்காய் உடைக்கும் இடத்தை, தற்போது தெற்கு நோக்கி உடைக்கும் வகையில் மாற்றி அமைத்திருக்கிறார்கள்.''

நாரதர் உலா

''அடடா! துக்க காரியங்களுக்கு மட்டும்தானே தெற்கு திசையைப் பயன் படுத்துவார்கள்?''  

''இது உங்களுக்குத் தெரிகிறது. ஆனால், திருக்கோயில் நிர்வாகத் துக்குத் தெரியவில்லையே! அங்கே நாம் பார்த்த பக்தர் ஒருவர் நம்மிடம் ஒரு கலப்பட விஷயத்தை சூறைத்தேங்காயைப் போல் போட்டு உடைத்தார்'' என்ற நாரதரிடம், ''கலப்படமா? அதுவும் கோயி லிலா?’ என்றோம்.

நாரதர் உலா

''கோயிலில் நெய் விளக்குகள் ஏற்றுவது வழக்கம். அதற்காக மலையடிவாரத்தில் பல தனியார் கடைகள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் நெய்விளக்கு என்று சொல்லி விற்கும் விளக்குகளில் உள்ள நெய்யின் தரம் படுமோசமாக இருப்பதாக அந்த பக்தர் குறைப்பட்டுக்கொண்டார்.''

''நீர் சொன்னதும்தான் நினைவுக்கு வருகிறது. வாழைப்பழத் தார்களை விற்பதிலும் ஏகத்துக்கும் பிரச்னைகள் இருக்கிறதாமே?''

''உண்மைதான். தாயுமானவ சுவாமிகளை வேண்டிக்கொண்டு புத்திரபாக்கியம் பெறும் பக்தர்கள், சுவாமிக்கு நேர்த்திக் கடனாக வாழைப் பழத் தார்களை வாங்கி தாயுமானவருக்கு அர்ப் பணிப்பது வழக்கம். அதற்காக கீழே உள்ள கடைகளில்தான் வாழைப்பழத் தார்களை வாங்கி வருகிறார்கள் பக்தர்கள். அப்படி வாங்கும் பக்தர்களிடம் கடைக்காரர்கள் அவர்கள் இஷ்டம்போல் விலை வைத்து விற்பதாக பக்தர்கள் குறைப்பட்டுக் கொண்டதை அங்கங்கே நாம் பார்க்க நேரிட்டது. அதுமட்டும் இல்லாமல், வாழைப்பழத் தாரை தாங்கள்தான் தாயுமானவர் சந்நிதி வரை எடுத்து வருவோம் என்றும், அதற்குத் தனியாக நூறு ரூபாய் கொடுத்துவிட வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்களாம்.

அடிவாரத்திலிருந்து கோயிலுக்குச் செல்லும் பாதையில் இருக்கக்கூடிய கடைக்காரர்கள் இடத்தை ஆக்கிரமித்திருப்பதுடன், அவ்வழியே வரும் பக்தர்களிடம் அர்ச்சனைத் தட்டுகள் வாங்குமாறும் தொந்தரவு செய்கிறார்களாம், அதேபோல், கோயிலுக்கு சொந்தமான இடங்களை மாத வாடகைக்கு எடுத்திருப்பவர்கள் அந்த இடங்களை உள்வாடகைக்கு விடுவதாகவும் அங்கிருப்பவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.''

''அடிவாரத்திலேயே அடாவடியா? அக்கிரம மாக இருக்கிறதே!''

''அதுமட்டுமா? காலணிகளைப் பாதுகாக்கும் இடத்தில்கூட கட்டாயப்படுத்தி பக்தர்களிடம் பணம் வசூலிக்கிறார்களாம். இதுதொடர்பாக நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் ஒன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.''

நாரதர் உலா

''தாயுமானவரை தரிசிக்கவே இந்த நிலையா? உச்சிப்பிள்ளையாரை தரிசிப்பதிலாவது பக்தர் களுக்கு அசௌகர்யங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறதா?'' என்று கேட்டோம்.

''அதை ஏன் கேட்கிறீர்கள்? உச்சிப்பிள்ளையாரை  தரிசிக்க மூன்று ரூபாய் கட்டணம் வசூலிக் கிறார்கள். பெரும்பாலும் ஐந்து ரூபாய் கொடுப்ப வர்களுக்கு மீதம் இரண்டு ரூபாய் திரும்பக் கொடுப்பது இல்லையாம். கோயில்களில் வீடியோ எடுப்பதற்குக் கட்டணத் தொகை வசூலிப்பது நடைமுறையில் உள்ளதுதான். ஆனால், மலைக்கோட்டையில் மட்டும்தான் தமிழகத்தில் எங்குமே இல்லாத வகையில் செல்போனுக்கெல்லாம் கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள். மேலும், பக்தர்களிடம் நெய்விளக்கு ஏற்றுவதற்குக் கட்டாயப்படுத்தி டிக்கெட் விற்பதாகவும் பக்தர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.''

''கோயிலில் அன்னதானம் நடைபெறுகிறதா?''

நாரதர் பதில் சொல்வதற்கு முன், அவருடைய செல்போன் ஒலித்தது. எடுத்துப் பேசிய நாரதர், பின்பு நம்மிடம்...

''திருச்சியிலிருந்துதான் அழைப்பு! திருச்சி மலைக்கோட்டையில் இன்னும் பல குறைகள் இருப்பதாகவும், உடனே நேரில் வந்தால் சொல்வதாகவும் என்னை அழைத்திருக்கிறார் ஒரு நண்பர். போய்விட்டு வந்து நீங்கள் கேட்ட அன்னதானம் பற்றியும், நண்பர் சொல்லப்போகும் மற்ற குறைபாடுகள் பற்றியும் விவரமாகச் சொல்கிறேன்'' என்று கூறியபடியே அந்தர்தியானமானார் நாரதர்.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism