Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்!

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்!

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

க்னத்தில் இருந்து (பிறந்தவேளை) இரண்டாம் வீட்டுக்கு உடையவன், 8ம் வீட்டில் அமர்ந்திருக்கிறான். லக்னத்துக்கு உடையவன் (பிறக்கும் வேளையின்) நீசம் பெற்று இருக்கிறான். இந்த அமைப்பு  புருஷ ஜாதகத்தில் தென்பட்டால், அவனது தாம்பத்தியம் சிறப்பாக அமையாது என்கிறது ஜோதிடம் (உதாரணம்:1). இரண்டுக்கு உடையவன் என்று சொல்லும்போதே ராகுகேதுக்களுக்கு இடம் இல்லை என்பது நிர்ணயமாகிவிடும். லக்னத்துக்கு உடையவனும் ராகு கேதுக்கள் அல்லாத கிரகம் என்பதும் தீர்மானமாகிவிடும். வீட்டுக்கு உடையவர்களுக்கு மட்டுமே உச்சம், நீசம், பகை, நட்பு, மௌட்யம், அஸ்தமனம் போன்ற நிலைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். பிற்காலத்தில் வந்த ஜோதிட வல்லுநர்கள், ராகுவுக்கும் கேதுவுக்கும் இட ஒதுக்கீடு அளித்து பெருமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அப்பாவி மக்களை குழப்பத்தில் ஆழ்த்த அது பயன்பட்டது. புராணங்கள் மற்றும் தலபுராணங்களின் தகவல்கள், அந்த இட ஒதுக்கீட்டுக்கு சிபாரிசு செய்தன! அந்த வகையில், ஒன்பதில் (நவக்கிரகங்களில்) இவர்களும் இடம் பெற்று கொடிகட்டி பறக்கிறார்கள். 

ஜோதிடத்தின் கணிதப்பிரிவு, இந்த இரண்டை யும் நிழல் வடிவாகவே அறிமுகம் செய்யும். செவிவழித் தகவல் களும், கோயில் வரலாற்றுக் கதைகளும் இவர்கள் இருவருக்கும் நவ கிரகங்களில் முன்னுரிமை அளிக்கின்றன. வானவியல் (அஸ்ட்ரானமி) விளக்கங்கள் எல்லாம் பாமரர்களை ஈர்க்காது. அவர்கள், புராண விளக்கங்களையும் செவிவழிக் கதைகளையும், ஸ்தல புராணங்களையுமே நம்புவார்கள். ஜோதிட பிரபலங்களில் சிலரும் இப்படியான மக்களின் மனப்போக்குக்கு ஏற்ப, ராகுகேது தகவல்களை ஊர்ஜிதம் செய்வார்கள். மஹான்களின் வாக்கை மகேசனின் வாக்கைவிட உயர்ந்ததாகக் கருதுபவர்கள் இந்த அப்பாவிகள். எது எப்படி இருந்தாலும் இங்கு குறிப்பிடும் தகவலுக்கு ராகுகேதுக்கள் இலக்காக மாட்டார்கள்.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டுக்கு உடையவன் 8ல் மறைவது, அவனது தகுதியை செயல்படாமல் தடுத்துவிடுகிறது. லக்னத்துக்கு உடையவன் நீசம் பெற்று இருப்பது, தனது செயல்பாட்டில் சுணக்கம் இருப்பதை வெளிப்படுத்தும். அது அவனுக்கு, 7க்கு உடைய தாம்பத்திய மகிழ்ச்சியை பாதித்துவிடுகிறது. 7ம் வீடு மனைவியின் லக்னம். அவளது ஏழு... அதாவது லக்னம் (கணவன்)... அதற்கு உடையவன் நீசம் பெற்றுவிட்டான். அதாவது தகுதி இழந்துவிட்டான். '2’ குடும்பஸ்தானம். அதன் அதிபதி 8ல் வந்து நிலைபெற்று இருப் பது, தாம்பத்தியத்தில் நெருடலை ஏற்படுத்தும். இந்த வகையில் கர்மவினையானது, அவனது செயல்திறனற்ற நிலையையும், குடும்பத்துக்கு உடையவன் 8ல் அமைந்திருப்பதையும் நடைமுறைப் படுத்தி, வெற்றி கண்டுவிடுகிறது.

ஆக, மனைவியின் காரணமாக அவன் கெடுதலை சந்திக்கவில்லை; தனது இயலாமையால் கெடுதலை சந்திக்கிறான். அவனது முற்பிறவி கர்மவினை, தாம்பத்திய மகிழ்ச் சியைக் கனவாக்கி, துயரத்தை உணரவைத்து விடுகிறது.

'கண்ணுக்குப் புலப்படாத முற்பிறவி கர்மவினையின் பலனை உணரவைப்பதே ஜோதிடத்தின் குறிக்கோள்’ என்று ப்ருது யசஸ் சொல்வதைக் கவனிக்க வேண்டும். (யதுபசித மன்யஜன்மனி...).

கருவறையில் குழந்தையாக உருவாகும் வேளையிலேயே, பிற்பாடு உணரப்போகும் சுக துக்கங்களை இறுதி செய்யப்பட்டு விடுகின்றன என்கிறது சாஸ்திரம் (பஞ்ச எதானிச ஸ்ருஜ்யந்தை சர்பஸ்தஸ்ய...). அந்த பலனை ஏற்கும் சூழலை தசா காலங் கள் வரையறுத்துவிடும். சொந்த பந்தமும், வெளியுலகத் தொடர்பும் அவனுக்குத் தண்டனை அளிக்க வில்லை. அவனது கர்ம வினையானது, வெளிச் சூழலை தனது வெற்றிக்கு சாதகமாக்கிக் கொண்டுவிடுகிறது.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

எனவே, கர்மவினை குறித்த தேடலில் சிந்தனை செயல்பட வேண்டும். அந்தத் தேடலுக்கு ஒத்துழைப்பு அளிப்பவை கிரகங் கள். அவை அருள்வதும் இல்லை; தண்டிப்பதும் இல்லை. ஒருவன் செய்த தவறுக்கு உகந்த பலனை எட்டவைக்கும் கருவிகளாகப் பயன்படுகின்றன.

சூரியனின் நெருக்கத்தில் தகுதியிழந்த சுக்கிரன், வெப்ப கிரகத்தின் சேர்க்கையில் வலுவிழந்த சுக்கிரன், பாப கிரகத்தின்  (வெப்ப கிரகம்) பார்வையில் தனது இயல்பை மாற்றிக்கொண்ட சுக்கிரன்... இவற்றில் ஏதாவது ஒன்றில் ஒன்றிய சுக்கிரன் 7ல் அமைந்திருக்கும் அமைப்பானது தாம்பத்தியத்தைக் கெடுத்துவிடும் என்கிறது ஜோதிடம் (உதாரணம்:2).

திருமணத்தை நடைமுறைப்படுத்துபவன் சுக்கிரன் (காரகன்). அவன், உலகவியல் சுகங்களை உணர வைப்பவன். தெளிவான அவனது இயல்பு முழுப்பலனை எட்டவைக்கும். சூரியனின் தொடர்பில் சுக்கிரன் தகுதியிழப்பை அடைகிறான். வெப்ப கிரகத்தின் சேர்க்கையிலும் பார்வையிலும் விபரீதமாக செயல்படத் துணிந்துவிடுகிறான். புருஷ ஜாதகத்தில் 7ல் அவன் அமர்ந்த நிலையில், ஜாதகனின் தாம்பத்திய சுகத்தை இழக்கவைக்கிறான்.

இப்படி 7ல் அமர்ந்த சுக்கிரனின் தரத்தை ஆராயாமல், 'காரக கிரகம் 7ல் இருந்தால் தாம்பத்யம் சிறக்காது’ (கார கோபாவனா சாய) என்று நினைத்து, பிரபலங்கள் பலரும் பல தம்பதி யின் திருமண முறிவுக்குக் காரணமாக இருப்பதை அறியமுடிகிறது. சேர்த்துவைப்பதில் வெற்றி பெற வேண்டிய பிரபலங்கள், முறித்து வைப்பதில் வெற்றியை ஈட்டுவது நமது துரதிர்ஷ்டம்! எந்தக் கோட்பாடு எந்த இடத்தில் பொருத்த வேண்டும்; பொருந்தும் என்பதை ஆராயாமல் தன்னிச்சையான முடிவில் மக்களை துயரத்தில் ஆழ்த்தும் துணிவு வரக்கூடாது. நமது செயல்பாடு முடங்கிக்கிடக்கும் வேளையில், நாம் சந்திக்கும் துயரத்தை விதியாகச் சித்திரித்து முற்றுப்புள்ளி வைப்பது பெருமையாகாது. முயற்சிக்கு ஊக்கமளித்து, தெளிவான சிந்தனையில் சூழலை நமக்கு சாதகமாக மாற்றிக்கொண்டால் விதியும் மாறிவிடும்.

நம் மனம், நமது சிந்தனை விதியை இறுதி செய்கின்றன. கர்ம வினையின் தூண்டுதலில் செயல்பாடு அமையும்போது, விதி உருப்பெற்று விடுகிறது. கர்மவினையை அழித்து தெளிவு பெற்ற மனம், எளிதில் விதியை வென்றுவிடும். தாம் சந்தித்த துக்கத்தில் இருந்து வெளிவர இயலாதவர்களிடம், விதியென்று சொல்பவர்களது சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள் சிலர். மொத்தத்தில் 'விதியின்’ உருவம் யாருக்கும் எட்டாத ஒன்று. சந்தித்த பிறகு வேறு வழியின்றி அதை விதி என்று குறிப்பிடுவார்கள். ஜோதிடம், விதியை உருவாகாமல் செய்துவிடும். மகிழ்ச்சியோடு வாழ்க்கையைச் சுவைக்க ஜோதிடம் உருவானது. கர்மவினையை அடையாளம் கண்டு அதைக் கரைத்து, விதியை உருப்பெறாமல் செய்துவிடும் ஜோதிடம்.

விருப்பப்படி தன்னிச்சையாக இன்பத்தைச் சுவைக்கும் சூழலை ஜோதிடம் உருவாக்கித் தராது. ஆறாவது அறிவில் சூழலை ஆராய்ந்து, இடையூறு களை விலக்கி, இன்பத்தை எட்டவைப்பதற்கு உகந்த பரிந்துரைகளை ஜோதிடம் வழங்கும். மந்திரத்தில் மாங்காய் விழாது; முயற்சியில்தான் எட்ட இயலும். உதட்டளவிலான கிரக வழிபாடும், இறையுருவ தரிசனமும், பொங்கி வழியும் பொருள்களின் கொடையும் எந்தப் பலனையும் இறுதி செய்யாது. முயற்சியில் பலனை எட்டவேண்டும். ஆறாவது அறிவின் சிறப்பான செயல்பாடு ஜோதிடத்தின் துணையுடன் விதியை நீர்த்துப்போகச் செய்துவிடும். நாம சங்கீர்த்தனம், க்ஷேத்ராடனம், தான தர்மங்கள் என்று இறங்கி, முயற்சியை உறங்க வைத்து, எளிதில் விருப்பத்தை அடையலாம் என்ற எண்ணம் உதயமாகக் கூடாது. முயற்சி இன்றி எதுவும் உருவாகாது. அதை அறிவுறுத்துவதே ஜோதிடம்.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

கிரஹணத்தில் இணைந்த சூரியன் அல்லது சந்திரன் 7ல் அமர்ந்து இருக்க, லக்னத்தில் அமைந்த செவ்வாயின் பார்வை 7ல் இருக்கும் சூரியனுக்கோ அல்லது சந்திரனுக்கோ ஏற்படும். இதுபோன்ற அமைப்பு புருஷ ஜாதகத்தில் இருந்தாலும் தாம்பத்தி யம் சிறக்காது (உதாரணம்:3).

கிரஹணத்தில், அவ்விருவரது கிரணங்கள் வெளியே பரவ முடியாமல் தடுக்கப்பட்டுவிட்டன. கிரணங்கள் அவர்களின் பலம். அது முடக்கப்பட்டு விட்டதால், 7ன் தரத்தை வலுவிழக்கச் செய்து விடுகிறார்கள். வெப்ப கிரகமான செவ்வாயின் பார்வையும் அதற்கு ஒத்துழைப்பதால், 7ம் வீடு தனது தகுதியை முற்றிலும் இழந்து விடுகிறது. ஆக, தாம்பத்திய சுகம் கேள்விக்குறியாக மாறி விடுகிறது.

இன்றைய பரபரப்பான சூழலில் பிரபலங்களின் சிந்தனை, 7ல் இருக்கும் சூரியன் அல்லது சந்திரன் கிரஹணத்தில் இணைந்தவர்களா என்று ஆராய முற்படாது. லக்னத்தில் கண்ணுற்ற செவ்வாயை மட்டும் தெரிந்துகொண்டு, தோராயமாக பலனைச் சொல்லி தனது பெருமையை வெளிப்படுத்துவார்கள். ஆராய்ந்து செயல்பட வேண்டிய இடங்களில், அனாயாசமாக முடிவெடுத்து சாஸ்திரத்தின் முகத்தையே மாற்றியமைக்கும் முயற்சியில் பிரபலங்கள் இறங்கக்கூடாது. சிந்தனை வளம் பெற்றவர்களுக்கு இலக்காகும் ஜோதிடம், சிந்தனை வளம் பெறாதவர்களில் தென்படுவதும் நமது துரதிருஷ்டம். தவறான இடத்தில் ஜோதிடம் மாட்டிக்கொண்டு தவிக்கிறது!

7க்கு உடையவன் 12ல் அமர்ந்து இருக்கிறான். லக்னாதிபதியும் சந்திர லக்னாதிபதியும் சேர்ந்து 7ல் அமர்ந்து இருக்கிறார்கள். அவர்களோடு பாப கிரகம் (வெப்ப கிரகம்) சேர்ந்து இருக்கிறது. இந்த அமைப்பு புருஷ ஜாதகத்தில் இருந்தால் அவனுக்கு மனைவியும் மகனும் இருக்க மாட்டார்கள். தாம்பத்திய இழப்பில் துயரத்தைச் சந்திப் பான் என்கிறது ஜோதிடம் (உதாரணம்:4).

7க்கு உடையவன் விரயத்தில் இருப்பது, தாம்பத்தியத்தின் இழப்பைச் சுட்டிக்காட்டுகிறது. 6, 8, 12ல் வந்த கிரகங்கள் தங்களின் செயல்பாட்டை இழந்துவிடும்.

லக்னாதிபதி, சந்திர லக்னாதிபதி ஆகியோர் 7ல் அமர்ந்து, வெப்ப கிரகச் சேர்க்கையில் தமது தகுதியை இழந்துவிடுகிறார்கள். தாம்பத்தியமும் இல்லை, அதைச் சுவைக்கும் தகுதியும் இல்லை. ஒருவேளை திருமணத்தில் இணைந்து மகனைப் பெற்றாலும், அவனையும் இழக்கவைத்து, தாம்பத்தியத்தின் அடையாளத்தையும் மறையச் செய்துவிடும்.பிறவிக்குருடனைவிடவும், பார்வை இருந்து பின்னர் அதை இழந்தவனின் துயரம் தாங்க முடியாததாக இருக்கும். அதேபோல், இங்கு திருமணத்தைச் சந்தித்து, அதன் சுவையை அறிந்த பிறகு, இடையில் இழப்பைச் சந்திக்கவைப்பதால், அளவிடமுடியாத துயரத்தை உணரவைக்கும்.

இவற்றையெல்லாம் ஆராயாமல், 7ல் சுப கிரகங்களும் அசுப கிரகங்களும் சேர்ந்து இருப்பதைப் பார்த்து, தோஷம் அடிபட்டு விட்டதாக மதிப்பீடு செய்யும் பிரபலங்கள் சிலரது விளையாட்டு, திருமண முறிவை வலுக்கட்டாயமாக ஏற்கவைத்திருக்கிறது. இன்னும் சில ஜாதகங்களில் மனைவியின் இழப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. பெருகி வரும் திருமண முறிவைக் கண்ணுற்ற ஜோதிடர்கள் குழாம் ஆராய்ச்சியில் இறங்கி, விவாகரத்தான ஜாதகங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியது.

முன்னோர்கள்  சொன்னார்கள்!

ஜோதிட பிரபலங்கள் சிலரது சிபாரிசில் நடந்த திருமணங்களில் ஏற்பட்ட விவாகரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராய்ந்தது. அதில் சில விவாகரத்துகளுக்கு, ஜோதிடர்கள் சிலரது பரிந்துரையும் முக்கிய காரணமாக இருப்பதைக் கண்டுகொண்டது.  விவாகரத்தில் பிரிந்தவர்களில் சிலர், தாம்பத்தியத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பவர்கள், விபரீதமான இயல்பு உடையவர்களை இணைத்து வைத்து, அவர்கள் பிரிவதற்குக் காரணமானார்கள் என்பது தெரியவந்தது.

பொருத்தத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், எதிர்விளைவை சந்திக்க நேரிடுமோ என்ற பயத்தில் பொருத்தம் பார்ப்பவர் கள், ஒப்புக்குப் பார்ப்பவர்கள், காதலில் இணைந்த பிறகு, மனதின் சமாதானத்துக்காகப் பொருத்தம் பார்ப்பவர்கள்... இப்படி, ஜோதிடத்தில் பிடிப் பில்லாதவர்கள் இருக்கிறார்கள்.

ஜோதிட பிரபலங்களில் சிலரிடம், மக்கள் ஜோதிட அறிவு இல்லாதவர்கள்; தனது முடிவை எதிர்க்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தன்னிச்சையாக செயல்படும் பாங்கு வளர்ந்திருக்கிறது.ஆனால், பொதுமக்களிலும் பல ஜோதிட அறிஞர்கள் உண்டு என்பதை மறந்துவிட்டார்கள். அதுபோன்ற அறிஞர்கள் இந்த பிரபலங்களின் குறையை அறிந்துவைத்திருக்கிறார்கள்!

கிடைத்த பொக்கிஷத்தை முறையாகப் பயன்படுத்தும் எண்ணம் பிரபலங்களிடம் வளர்ந்தால், கணிசமான அளவுக்கு விவாகரத்தைத் தவிர்க்க இயலும். ஜோதிடம் என்பது வேலை வாய்ப்பு அல்ல; நல்வழிப்படுத்தும் பரிந்துரை. எனவே,  முன்னோரின் அடிச்சுவட்டில் செயல்பட்டு, அதன் தரத்தை பாதுகாக்கும் பொறுப்பு பிரபலங்களுக்கு உண்டு; அதை மறக்கக் கூடாது.

தொடரும்...