Published:Updated:

கல்யாண வரம் தரும் கந்தன் அலங்காரம்!

சரவணபவனே சரணம்...ம.மாரிமுத்து, சா.நித்யகுமரன்

முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும். அந்த அழகனுக்கு செய்யும் அபிஷேகஅலங்காரமே, பக்தர்தம் குறை தீர்க்கும் வழிபாடுகளாகத் திகழ்கின்றன சில கோயில்களில். அவற்றின் மகிமைகளும் விவரங்களும் இங்கே உங்களுக்காக! 

குடும்பம் சிறக்க விபூதி அபிஷேகம்!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது வல்லப மகா கணபதி ஆலயம். விநாயகருக்கான கோயிலாக இருந்தாலும் பிரதான மூர்த்தியாகத் திகழ்பவர் ஸ்ரீஷண்முகக் கடவுள். இங்கு ஷண்முகப் பெருமான் அமர்ந்த திருக்கோலத்தில் அத்தனை அழகாகக் காட்சி தருகிறார்.

கல்யாண வரம் தரும் கந்தன் அலங்காரம்!

இங்குள்ள ஷண்முகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான குடும்பப் பிரச்னைகளும் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். சஷ்டி திதி அன்று இங்கே சத்ரு சம்ஹார ஹோமம் என்ற சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டால் எதிரிகளின் தொல்லை நீங்குவதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

கல்யாண வரம் தரும் செவ்வரளி அலங்காரம்!

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் கல்லப்பக் கோணன்பட்டி என்று அழைக்கப்பட்டு தற்போது என்.ஜி.ஒ. காலனி என்று அழைக்கப்படும் இடத்தில் அமைந்திருக்கிறது தண்டாயுதபாணி ஆலயம். பழநி முருகனைப் போலவே இங்கே தண்டாயுதபாணி காட்சி தருகிறார்.

கல்யாண வரம் தரும் கந்தன் அலங்காரம்!
கல்யாண வரம் தரும் கந்தன் அலங்காரம்!

இந்தக் கோயிலில் பால் அபிஷேகமும் தேன் அபிஷேகமும் மிகவும் விசேஷம். தண்டாயுத பாணிக்கு செவ்வரளிப் பூவினால் அலங்காரம் செய்தால் திருமணத் தடைகள் நீங்கும் என்று சொல்லும் பக்தர்கள், இங்கே ஒவ்வொரு அலங்காரத்துக்கும் ஒரு சிறப்பு பலன் உண்டு என்றும் கூறுகிறார்கள். தொடர்ந்து 21 வாரங்கள் செவ்வரளிப் பூக்களால் அலங்காரம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நிஜ வடிவில் பைரவர்...

நிழல் வடிவில் முருகன்!

பழநி தண்டாயுதபாணி சிலையை நவ பாஷாணத்தில் வடிப்பதற்கு முன்பாக, போகரால் நவபாஷாணத்தால் வடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் காசி பைரவர் சிலையை நாம் தரிசிக்க வேண்டுமானால், சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள பெரிச்சிக் கோயில்சுகந்தவனேஸ்வரர் ஆலயத்துக்குச் செல்லவேண்டும்.

கல்யாண வரம் தரும் கந்தன் அலங்காரம்!

முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் கடம்பவனம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் வேட்டைக்கு வந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன், அங்கிருந்த ஆற்றில் நீராடச் சென்றபோது அவருடைய கையில் இருந்த தங்கக் கிண்ணம் தவறி ஆற்றில் விழுந்து மூழ்கிவிட்டது. வீரர்கள் அதைத் தேடியபோது சிவலிங்கம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மன்னனிடம் தெரிவித்தனர். உடனே ஆற்றின் போக்கை திசை மாற்றி, அங்கே ஆலயம் அமைத்ததாக தலவரலாறு கூறுகிறது. இறைவனின் திருப்பெயர் சுகந்தவனேஸ்வரர்; அம்பிகையின் திருநாமம் சமீபவல்லி என்பதாகும்.

பழநி தண்டாயுதபாணி சிலையை நவபாஷாணத் தில் வடிப்பதற்கு முன்பாக, இந்தப் பகுதிக்கு வந்த போகர், தவம் இயற்ற எண்ணியபோது எந்த இடையூறும் இல்லாமல் காப்பதற்காக நவபாஷாணத்தில் பைரவர் சிலையை வடித்து வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட போகர், தான் வடித்த நவபாஷாண பைரவர் சிலையை விஷமுறிவு செய்யாமல் சென்றுவிட்டதால், நவபாஷாண பைரவருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தத்திலும், சார்த்தும் வடைமாலையிலும் விஷமேறி நீல நிறம் அடையும் அதிசயத்தை இன்றும் காணலாம்.

அதன் காரணமாகவே வடைமாலையை பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருவதில்லை. வடைமாலையை சந்நிதிக்கு மேலே போட்டு விடுகிறார்கள். ஆனால், அதிசயமாக எந்த ஒரு உயிரினமும் அந்த வடையை உண்பதில்லை.

அதைவிடவும் ஓர் அதிசயம், இங்குள்ள பைரவர் சிலையின் பின்புறத்தில் தீபாராதனை காட்டும்போது, பைரவரின் முன்புறத் தோற்றம் பழநி மலையில் அருள்புரியும் தண்டாயுதபாணியின் வடிவத்தில் காட்சி அளிப்பதாகும்.

கல்யாண வரம் தரும் கந்தன் அலங்காரம்!

சுகந்தவனேஸ்வரர் ஆலயத்தில் தனிச் சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் பைரவருக்கு பாலபிஷேகம் செய்து வடைமாலை அணிவித்து வழிபட்டால், சகலவிதமான நோய்களும் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை யுடன் கூறுகிறார்கள்.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை. விசேஷ நாட்களில் இரவு 10.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?

காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூரில் இருந்து கண்டரமாணிக்கத்துக்குச் செல்ல பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள பெரிச்சிகோயிலுக்குச் செல்ல ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.

வேல் வைத்தால்

வினை தீர்க்கும் முருகன்

கரூரில் இருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் என்ற ஊரில் 315 படிகளைக் கொண்ட ஒரு சிறிய குன்றின்மேல் (புகழி மலை) பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமானின் மயில் வாகனம் பொதுவாக மற்ற கோயில்களில் அமைந்திருப்பதைப் போல் இல்லாமல், முருகனுக்கு வலப்புறம் தோகையும் இடப்புறம் தலையும் கொண்டிருப்பதாக அமைந்துள்ளது.

கல்யாண வரம் தரும் கந்தன் அலங்காரம்!

இந்தக் கோயிலில் முருகப் பெருமானுக்கு வேல் வைத்து வழிபடுவது சிறப்பான பிரார்த்தனை. அதனால், சகலவிதமான பாவங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை யாக உள்ளது. ஊரில் மழைப் பற்றாக்குறை, மக்களிடையே ஒற்றுமை இன்மை என்பது போன்ற பொதுவான பிரச்னை ஏற்பட்டால், இங்குள்ள 315 படிகளில் தீபம் ஏற்றி படிபூஜை செய்தால் நல்ல பலன் கிடைப்பதாக ஊர்மக்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ், வீ.சிவக்குமார்

அடுத்த கட்டுரைக்கு