மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 3

பேரிகை முழக்கம்! ஆலவாய் ஆதிரையான்

நாணேற்றிய வில்லில் இருந்து பெரும் விசையுடன் விடுபட்ட வேகம் சற்றும் குறையாது சென்று இலக்கைத் தாக்கும் அஸ்திரங்களைப் போன்று, அந்த இரண்டு அசுவத்தங்களும் புலியூரில் இருந்து புறப்பட்ட வேகம் குறையாமல் உறையூரை நெருங்கிக்கொண்டிருந்தன.

அதோ, உறையூர் கோட்டை. பன்னெடுங்காலமாக தமிழர்களின் மங்காத புகழுக்கெல்லாம் மையமாக கரூவூலமாகத் திகழும்  உறையூரைத் தன்னுள் பத்திரமாகப் பொதிந்து வைத்திருக்கும் அந்தக்

கோட்டையையும், அதற்கொரு மாலை ஆபரணமாகச் சற்றே நெருங்கி,

வெகு ஆதூரத்துடன் முத்தமிட்டுச் செல்லும் பொன்னி நதியையும், கோட்டையின் உச்சியில் வானளாவிப் பறக்கும் புலிக்கொடியையும் காணும்போது, குதிரைகள் சுமந்து வந்த அந்த இருவரின் மனத்திலும் இனம்புரியாத பரவசமும், பேருவகையும் பொங்கியது.

ஏதேதோ எண்ண அலைகள் அவர்களுக்குள் எழும்பி அலைமோதின!

உறையூர்! எப்பேர்ப்பட்ட பெருநகரம் அது. எத்தனையெத்தனை கதைகள் தியாக வரலாறுகள் அதனுள் உறைந்திருக் கின்றன!

கடற்கரைப் பகுதிகளைப் 'பட்டினம்’ என்று பெயர் சூட்டி அழைத்ததுபோல், நாட்டுக்குள் மக்கள் நெருக்கமாக உறையும் பகுதிகளை 'உறை’ என்று அழைத் தார்கள் முன்னோர். அதையொட்டியே இவ்வூருக்கும் உறையூர் என்று பெயர் வந்ததோ என்னவோ?

அல்லது, சோழர்கள் கண்கண்ட தெய்வமாக வணங்கித் தொழும் அந்தச் சிவபிரானின் சாந்நித்தியம் எப்போதும் குறையாமல் உறைந்து கிடக்கும் ஊர் என்பதாலும் இந்தத் திருப்பெயரைப் பெற்றிருக்கக்கூடும்.

சிவமகுடம் - 3

உறையூர் என்ற பெயரில் மட்டுமல்ல... உறந்தை, கோழி, கோழியூர் என்றெல்லாமும்கூட இந்தத் திருநகரைப் பாடி வைத்திருக்கிறார்கள் புலவர்கள்.

ஆதிகாலத்தில் மன்னன் ஒருவன் இங்கே படைநடத்தி வர, அவனது பட்டத்து யானையை கோழி ஒன்று எதிர்த்து வீழ்த்தியதாம். எனில், இந்த மண்ணின் வீரமும் தீரமும் எத்தகையதாக இருக்கும் என்று வியந்த அந்த

மன்னன், இங்கே தலைநகரம் சமைத்துப் பெரும் கோட்டை எழுப்பினான் எனவும், அதையொட்டியே இந்த ஊருக்குக் கோழி, கோழியூர் என்ற பெயர்கள் வந்ததாகவும் தங்களின் பெயரன் பெயர்த்திகளுக்குக் கதை கதையாகச் சொல்லிப் பெருமிதப்படுவார்கள் உறையூர் மூதாட்டிகள்.

இதை ஆண்டவர்களும் சாமானியர்கள் அல்லர்! கரிகாலர் ஒருவர் போதுமே! உறையூர் எனும் திருப்பெயரை ஒரு  மந்திரச் சொல் போன்று, பரத கண்டம் மட்டுமின்றி, கடல் கடந்து மேற்திசை நாட்டவரையும் உச்சரிக்கச் செய்த அந்த உத்தமரை மறக்க முடியுமா?

அல்லது, பொன்னி நதியாள் தந்த வனப்பும், தில்லை பொன்னம்பலத்தான் அருளிய வளமும் மிக்க இந்த உறையூரை அடைவதற்கு அவர் நிகழ்த்திய *வெண்ணிப் போரைத்தான் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா?!

குதிரையில் ஆரோகணித்திருந்த அந்த இருவருக்குள்ளும் தனித்தனியான சிந்தனைகள் எழாமல், உறையூர் குறித்தும், திக்கெட்டும் சோழம் அடைந் திருந்த புகழ் குறித்துமான சிந்தனைகளே ஒருசேர ஆக்கிரமித்திருந்ததில் வியப்பில்லைதான்!

கற்பனைக் குதிரைகளைக் கடிவாளம் இறுக்கி, பெருமூச்செறிப்புடன் அவர்கள் நிகழ்காலத்துக்குத் திரும்பியபோது, நிஜக் குதிரைகள் கோட்டையை காவலர்களுக்குத் தெரிவிக்கும்படியான சமிக்ஞையைச் செய்யத் தவறி விட்டதையும் உணர்ந்தார்கள். ஆனால், அதற்குள் காலம் கடந்து விட்டிருந்தது.

அவர்களை நோக்கிப் பெரிய பெரிய வேல்கள் சீறிப் பாய்ந்து வந்தன. அந்த இருவரின்

சிவமகுடம் - 3

குதிரைகளும் மேற்கொண்டு ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாதவாறு, அவை அந்தக் குதிரைகளின் கால்களுக்கு அருகில் தரையில் பாய்ந்து குத்திட்டு நின்றன.

கோட்டை மதிலின் மீதிருந்து சோழ வீரர்களால் மிகக் கச்சிதமாக வீசியெறியப்பட்ட அந்தக் கூர்வேல்கள், ஆர்ப்பாட்டத்துடன் நுங்கும்நுரையுமாகப் பொங்கிப் பெருகி வரும் காவிரியை கரிகாலனின் கல்லணை தடுத்தாட் கொள்வதுபோன்று, அந்தப் புரவிகளின் வேகத்தைத் தடுத்து நிறுத்திவிட்டன.

அந்தச் செய்கை, கோட்டைக் காவலர்களின் எச்சரிக்கை! போர்க்காலத்தில் எவரொருவரும் கோட்டையை நோக்கி இத்துணை வேகத்தில் வரக்கூடாது. அது, அவசர அவசியத்துக்கு உரிய ராஜாங்க காரியமாகவே இருந்தாலும், வருபவர்கள் குறிப்பிட்ட எல்லையிலேயே அதற்கான சமிக்ஞையைக் கோட்டைக் காவலர்களுக்கு உணர்த்தியாக வேண்டும்.

அதைச் செய்யத் தவறியதால்தான், பரமேசுவரப் பட்டரும் கரும்புரவி வீரனும் இப்படியான ஒரு திடுக்கிடும் வரவேற்பை எதிர்கொள்ள நேரிட்டது.

வேல்கள் தரையைப் பதம்பார்த்த மறுகணம், பரமேசுவரப் பட்டர் சுதாரித்து, அவசர அவசர மாக தமது இடைக்கச்சையில் இருந்து பட்டுத் துணிச்சுருள் ஒன்றை விரித்து, மதிலை நோக்கி ஆட்டினார். அது, புலியுருவம் காட்டிய சிறு பதாகையாய் விரிந்து, காற்றில் படபடத்தது. அதே நேரம், கோட்டை மதிலின் மீதிருந்த காவலர்களைச் சீற்றத்துடன் நோக்கிய கரும்புரவி வீரனும் தனது முகத் திரையை விலக்கினான்.

அவன் இப்போது பாண்டியர் உடையில் இல்லையென்றாலும், போருக்கான உடையையே தரித்திருந்தான். தலையில் மட்டும் கவசத்துக்குப் பதிலாகத் தலைப்பாகை அணிந்திருந்தான்.

அதன் மீதமான நீட்சியையே முகத்துக்கும் திரையாக வரித்திருந்தவன், அதை விலக்கியதும், கோட்டைக் காவலர்கள் பரிபூரணமாக அவனை... இல்லையில்லை, அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள்.

அதுமட்டுமின்றி, அவருடன் வந்திருந்த, பதாகை சமிக்ஞை செய்பவரும் தங்களைச் சேர்ந்தவராகவே இருக்கவேண்டும் என்பதையும் தெளிவுற உணர்ந்தார்கள்.

மறு நொடியே, பெரும் முக்கியஸ்தர்களின் வருகையை  அறிவிப்பதற்கான விஜய பேரிகை களும், கொம்பு வாத்தியங்களும் ஏக காலத்தில் முழங்கி, அந்த பிராந்தியத்தையே அதிர வைத்தன!

சிரித்தது பேருருவம்!

அட்டகாசமான அந்தச் சிரிப்பொலி மலை முகடுகளில் எல்லாம் எதிரொலிக்க, ரிஷபகிரி பிராந்தியமே அதிர்ந்தது.

சோழர் படைத் தலைவன் கோச்செங்கண் சற்றும் எதிர்பாராத தருணத்தில், அவனை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தும்படியாக, அவன் எதிரே கரிய பெரிய குன்றமென பேருருவாய்த் தோன்றிய அந்த யானையின் மீது ஆரோகணித்திருந்த அதே உருவம்தான் அப்படிச் சிரித்தது!

அவர் அப்படிப் பெருங்குரலெடுத்துச் சிரித்த மறுகணப் பொழுதில்... மரக்கிளைகளின் கூடுகளிலும் பொந்துகளிலும் இருந்து படபடவெனச் சிறகடித்தபடி மேலெழுந்த பட்சிகள், பிறகு மீண்டும் கீழிறங்கித் தத்தமது விருட்சங்களில் தஞ்சம் புகுந்தன!

'ஹோ’ என்ற இரைச்சலோடு, சட்டென்று ஒரு பெரும் சுழற்காற்று வீசிச் சென்றது; அதைத் தொடர்ந்து, வானமே பிளந்துவிடுவது போன்ற பெரும் ஓசையுடன் இடி இடித்து, கண்களைப் பறிக்கும் மின்னல் வெட்டு ஒன்று பூமியைக் குடைந்து விடுவதுபோல் மண்ணில் இறங்கியது.

சிவமகுடம் - 3

இதெல்லாம்  இயற்கையாகவே நிகழ்ந்தன. ஆனால், அவை யாவும் அவர் சிரித்ததனால் உண்டான விளைவுகளாகவே பட்டன சுற்றியிருந்தவர்களுக்கு!

புராணத்தில் கதை ஒன்று உண்டு.

வித்யுன்மாலி, கமலாட்சன், தாரகாட்சன் எனும் அசுரர்கள் மூவர், தாங்கள் வரமாகப் பெற்றிருந்த பொன், வெள்ளி மற்றும் இரும்பால் ஆன மூன்று பறக்கும் கோட்டைகளை வைத்துக்கொண்டு, தேவர்களையும் மனிதர் களையும் வாட்டி வதைத்தார்கள்.

தேவர்கள் திருக்கயிலைக்குச் சென்று முறையிட்டார்கள். அவர்களைக் காத்து ரட்சிக்க திருவுளம் கொண்ட கயிலைப் பரமன், அசுரர் மூவரையும் அடக்கப் புறப்பட்டார்.  

சூரியனும் சந்திரனும் தேரின் சக்கரங்களாக, அஷ்டகுல பர்வதங்களே விதானமாக, பரந்துவிரிந்த அண்டவெளியே தேர்த் தட்டாகத் திகழ, வேதங்கள் குதிரைகளாக, பிரம்ம தேவன்    முட்கோலைப் பிடித்து தேரைச் செலுத்தும் சாரதியாக அமர்ந்தார்.

மேரு மலை பரமேஸ்வரனின் கை வில்லானது. வாசுகி நாணாக, அஸ்திரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சம் இணைந்தது.

இப்படியாக, பரமேஸ்வரப் பரம்பொருள் முப்புர அசுரர்களை எதிர்கொண்டபோது, பிரம்மாதி தேவர்களின் மனங்களில் ஓர் எண்ணவோட்டம்... 'தங்களின் உதவியின்றி பரமனால் இந்த அசுரர்களை அழிக்க இயலுமா?’

என்று!

சிவப்பரம்பொருள் இதை அறியாமல் இருப்பாரா? அப்படி அவர் அறிந்ததும், அண்ட பகிரண்டமும் அதிரும் வகையில் அவரிடம் இருந்து வெளிப்பட்டது பெரும் சிரிப்பொன்று. அந்த சிரிப்பிலேயே அசுரர்களின் முப்புரங்களும் எரிந்து சாம்பலானதாம்!

முப்புரம் எரித்த அந்த முக்கண்ணனின் சிரிப்புக்கு ஒப்பாக இருந்தது இந்தச் சிரிப்பும்!

அந்த விடியல் பொழுதில், அருகில் கரிய நிறத்துடன் நின்றிருந்த களிறுக்கு மிகப் பொருத்த

மாக, வெள்ளி இழைத்த கரைகளுடன் கூடிய கரும்பட்டு வஸ்திரத்தை இடையில் உடுத்தி, அதே வண்ணத்திலான மேல் வஸ்திரம் மேனியை

மறைத்திருக்க, கால்களில் தண்டைகள், கரங்களிலும் தோள்களிலும் வீரக் கழல்கள், மார்பில் செம்பவளப் பதக்கம் கோத்த இரட்டைவட முத்தாரம், செவிகளில் மகரக் குழைகள், நெற்றியில் தான் சந்திரகுலத்தவன்

என்பதற்கு அத்தாட்சியாக சந்தனத்தால் ஆன சந்திரத் திலகம் துலங்க, வெகு கம்பீரத்துடன் நின்றிருந்தார், அந்தச் சிரிப்புக்கு உரியவர்!

சிவமகுடம் - 3

ஆகிருதியான உயரம்தான் என்றாலும், விதி வசத்தால் முதுகில் ஏற்பட்டுவிட்ட சிறிய புடைப்பும், அதனால் விளைந்த கூன்தோற்றமும் அவருடைய உயரத்தைச் சற்றே மட்டுப்படுத்திக் காட்டின.

ஆனாலும், அந்தக் குறையை ஈடுசெய்யும் விதமாக கால்களை அதிர வீசி நடக்கும் வீர நடையும், எதுவும் தனக்கு அற்பமான விஷயமே என்பதுபோல அலட்சியம் காட்டும் முக பாவனையும், எதிரில் நிற்பவரின் மனத்தை நொடிப் பொழுதில் அலசி ஆராய்ந்துவிடும் தீட்சண்யம் மிகுந்த அவரின் கண்களும்... அங்க சாஸ்திரம் உறைக்கும் வீர லட்சணங்களுக்கு மிகப் பொருத்தமானவராகவே காட்டின அந்த வீர புருஷரை!

ஆமாம்... சரித்திரப் பிரசித்திபெற்ற செப்பேடுகளும் கல்வெட்டுகளும் பெரும் போற்றுதலுடன் குறிப்பிடும் மாறவர்மன் அரிகேசரி, அரிகேசரி பராந்தகன், நெடுமாறன், வானவன், மீனவன், பூமியன் எனப் போன்ற மெய்க்கீர்த்தீகளையெல்லாம் சொந்தமாக்கிக் கொண்ட கூன்பாண்டியரே அந்த வீர அட்டகாசச் சிரிப்புக்குச் சொந்தக்காரர்!

அவர் அப்படிச் சிரித்ததற்குக் காரணம்..?

முந்தைய நள்ளிரவுப் பொழுதில், எவரும் எதிர்பார்த்திராதபடி சோழப் படைத் தலை வனான கோச்செங்கண் நிகழ்த்திய அந்தச் சம்பவம்!

மகுடம் சூடுவோம்..

.* தஞ்சைக்கு 21 கி.மீ. தொலைவில், நாகைக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் கோவில்வெண்ணி. இதன் அருகில் நிகழ்ந்ததே வெண்ணிப் போர். பாண்டியர்கள், சேரர்கள் மற்றும் பதினோரு வேளிர்களை வென்று கரிகாலன் வாகை சூடிய இந்தப் போர், தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கது!

”முதல் அத்தியாயமே மின்னல் வேகம்! அதிகாலைப் பொழுதையும், திருக்குளம் மற்றும் கோயிலின் அழகையும், அமைப்பையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன, ஆதிரையானின் வர்ணனைகள்.

சிவமகுடம் - 3

சரித்திரக் கதை எழுதுவதானால் அதற்கான குறிப்பெடுத்தலும், ஆய்வுப் பணிகளும் பெரும் சவாலானவை. அதில் அமரர் கல்கி, சாண்டில்யன் ஆகியோரைப் போன்று இவரும் நிச்சயம் சாதிப்பார் என நம்புகிறேன்.

சினிமாவில் ராஜராஜ சோழன் திரைப்படம் எனக்குள் ஏற்படுத்திய பிரமிப்பை, எழுத்தில் தருகிறது, சிவமகுடம்''

 - எழுத்தாளர் ராஜேஷ்குமார்