Published:Updated:

கேள்வி - பதில்

இன்றைய வழிபாடுகள் வெறும் நாடகங்களா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

இன்றைய வழிபாடுகள் வெறும் நாடகங்களா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி - பதில்

? 'என்னோட மருமகன் திருப்பதிக்குப் போறான். உண்டியல்ல போடச் சொல்லி, 101 ரூபாய் காணிக்கைக் கொடுத்தனுப்பினேன்’ என்று தகவல் சொன்னான் நண்பன் ஒருவன். மற்றொரு உறவினரோ, 'பிரதோஷ பூஜைக்கு என்னால போக முடியல. அதனால், அபிஷேகத்துக்கு என்னோட பங்களிப்பா இருக்கட்டுமேன்னு பால் கொடுத்தனுப்பினேன்’ என்கிறார்! இவர்களைப் போன்றவர்களின் வழிபாடுகளால் பலன் உண்டா? அவை உண்மையானவையா? 

 - சேதுராமன், களக்காடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் கோணம்...

மனம் நினைக்க வேண்டும். மனம் நினைத்தது, வார்த்தை வடிவில் வெளிவர வேண்டும். அந்த நினைவு செயல் வடிவில் நிறைவு பெற வேண்டும். மனம் தொடாத சொல்லும் செயலும் பயனளிக்காது. (யத்தி மனஸாத்யாயதிதத் வாசாவததி தத்தர்மணாகரோதி) நினை வில் ஈசன் வடிவம் தோன்றவேண்டும். அந்த வடிவம் சொல் வடிவில் வெளிவர வேண்டும். பணிவிடை வடிவில் நிறைவு பெற வேண்டும்.

சொற்பொழிவை காது கேட்கும். ஆனால் மனதின் தொடர்பு இருக்காது. அது, வேறு எங்கேயோ அலைபாய்ந்து கொண்டி ருக்கும். கண்கள் ஈசனுக்கான அபிஷேக வைபவத்தைப் பார்க்கும். ஆனால், மனம் அங்கு இருக்காது. நாமாவளியைக் கேட்டு கைகள் தாளம் போடும். எனினும் மனம் வேறொன்றில் இணைந்திருக்கும்!

சிலருக்கு, அவர்கள் அலுவல்களில் இணைந்திருக்கும் போதுகூட, அலுவலில் அக்கறை இருக்காது; மனம் கைபேசியில் இணைந்து  வேறொருவருடன் உரையாடிக்கொண்டிருக்கும். இதில் வேதம் ஓதுபவர்களும் விதிவிலக்கு இல்லை. பன்னிரண்டு பேர் ஜபத்தில் இணைந்திருப்பார்கள். அதில் சரிபாதி பேர் செல்ஃபோனில் இணைந்து சூழலை மறந்து உரையாடிக்கொண்டிருப்பார்கள்!

? ஏக காலத்தில் இரண்டு வேலைகளில் மனதைச் செலுத்த முடியாதா என்ன? ராமனின் தந்தை ஏக காலத்தில் பத்து ரதங்களை செலுத்தும் வல்லமை கொண்டவர் என்பார்களே?

எனினும், வேலை ஒன்றுதான். ரதங்களை செலுத்துவதில் மட்டுமே கவனம் பதிந்திருக்கும்! இன்றையச் சூழலுக்கு உகந்த உதாரணங்களைத் தருகிறேன்.

மணமகன் மணமேடையில் நின்றபடி இரு கரங்களாலும் திருமாங்கல்யத்தை வந்திருக்கும் விருந்தினர் குழாமுக்கு (கற்பூர ஆரத்தி போன்று) காட்டிக்கொண்டு இருப்பான். மனம், இன்பச் சூழலை எப்போது சந்திப்போம் என்று நினைத்துக்கொண்டிருக்கும். கைகள் மனதின் தொடர்பின்றி தாலியை அணிவிக்கும். திருமணச் சடங்கு இடையில் முடிந்து, கைகுலுக்கல்களிலும், உரையாடலிலும் இணைந்துவிடும். வேதம் ஓதுபவர்களும் அவர்களோடு ஒத்துப்போவார்கள்; அந்த சந்தடியில் அவர்கள் தங்கள் வேலையை அதாவது, கைபேசி அழைப்புகளை ஏற்று உரையாடலைத் தொடர்வார்கள்.

இன்றையச் சூழலில் திருமணச் சடங்கு முழுமையாக நடந்தேறுவது இல்லை. ஆனால், எவர் மனதிலும் அதுகுறித்த நெருடல் இருக்காது. மனம் இணைந்தால் நெருடல் தோன்றும்; இணையாதபோது நெருடல் தோன்றாது. காதலில் மனம் ஒன்றிவிடும். மற்ற அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு காதலியை அடைவதில் ஒன்றிவிடும். மனதுக்கு ஒன்றி செயல்படும் தகுதி உண்டு. ஆனால் அந்த ஒன்றுதல் பணிவிடைகளிலும், சடங்குகளிலும் தென்படுவது இல்லை.

கேள்வி - பதில்

? மன ஒன்றுதல் இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் கைபேசியில் இணைந்து விடுவான். டிக்கட் பரிசோதகரைக் கண்டதும் இடது கை டிக்கெட்டை எடுத்து நீட்டும். எந்தவோர் அலுவலாலும் அவனது கைப்பேசி இணைப்பைத் துண்டிக்க இயலாது! வண்டியை விட்டு இறங்கினாலும் தொலை பேசி உரையாடல் தொடர்ந்துகொண்டு இருக்கும். செயல்புலன்கள் தன்னிச்சையாக

செயல்படும். மனதின் தொடர்பு இருக்காது. மனதின் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு, செயல் புலன்களைச் செயல்படுத்தும் பழக்கம் பலரிடமும் அனாயாசமாகத் தென்படுகிறது. மொத்தத்தில் உரையாடலில் மனம் எப்போ தும் ஒன்றியிருக்கும். குறிப்பாக தொலைபேசி உரையாடலில்!

மனம் தொடாத பக்தி என்பது நாடகமே. மனம் தொடாத அலுவல்கள் எதுவும் சிறக்காது. மனம் தொடாத நட்பு நீடிக்காது. மனம் தொடாத சடங்கு பலன் அளிக்காது. மனம் தொடாத எண்ணம் ஈடேறாது. அறக்கட்டளையிடம் பணிவிடையை ஒப்படைப்பது, க்ஷேத்திராடனம் செய்பவரி டம் காணிக்கையை ஒப்படைப்பது, காசியில் இருந்து திரும்பியவரிடம் இருந்து பிரசாதத்தை ஏற்று மகிழ்வது, நிரம்பி வழியும் செல்வத்தின் ஒரு பங்கை அறக்கட்டளைக்கு அளித்து, அதன் வழியில் பணிவிடையை முடித்துக்கொள்வது... இவை அத்தனையும் மனம் தொடாத நிலையில் பயனளிக்காது.

? தங்களால் இயலாதபோது, வேறொருவர் மூலமாவது பணி விடையைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் தவறா?

தவறு என்று சொல்ல வில்லை! எந்தப் பணிவிடையாக இருந்தாலும் அதில் மனம் ஒன்ற வேண்டும் என்றே சொல்கிறோம். அப்போதுதான் அது நிறைவை எட்டும். அமைதி யான சூழலில் மனம் ஒன்றி ஆண்டவனை ஆராதிக்க ஆலயங்கள் எழுந்தன. ஆனால், ஆரவாரமான மனச் சூழலால் அமைதி மறைந்துவிட்டது. அதில் மனமும் ஒன்ற மறுக்கிறது. ஆகம சட்டதிட்டங்களை நடை முறைப்படுத்த இயலவில்லை. அங்கு தென்படும் இறையுருவத்தில் தெய்வ சாந்நித்தியமும் கேள்விக் குறியாகிவிட்டது. ஆனால், உற்ஸவங்களும் விழாக்களும் புதிய வடிவில் புதுப்பொலிவு பெற்று விளங்குகின்றன. எனினும், அவற்றில் எல்லாம் மனம் ஈடுபட மறுக்கிறது; அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறது; துயரத்தில் ஆழ்ந்து தவிக்கிறது. கோயிலில் நெரிசல் இருந்தாலும் அதை அலட்சியப்படுத்திவிட்டு மனம் ஈசனிடம் ஒன்றி வழிபடவேண்டும். இறையுருவம் எதுவானாலும் ஏற்கலாம். ஆனால் மனதின் ஈடுபாடு இருக்க வேண்டும். அதை வரவழைத்துக் கொண்டால், பணிவிடையின் பூரண பலன் கிட்டும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

கேள்வி - பதில்

இரண்டாவது கோணம்...

பணிவிடையில்  மனம் ஈடுபடவில்லை எனும் தங்களின் மதிப்பீடு தவறு. மனம் ஈடுபடும்போது மற்ற செயற்புலன்களும் ஒருசேர செயல்பட்டுவிடுகின்றன. ஒருவரது மன ஈடுபாட்டை அல்லது மன ஈடுபாடு இல்லாமையை மற்றவர்களால் தெரிந்துகொள்ள இயலாது. நாம சங்கீர்த்தனத்தில் மனம் ஈடுபடாமல் கைத்தட்டல் எழாது.

புதுத் தலைமுறையினருக்கு மனதுடன் ஒருசேர மற்ற புலன்களையும் செயல்படுத்தும் தகுதி இருக்கிறது. பண்டைய நாளில் அஷ்டாவதானி, சதாவதானி போன்றவர்கள் இருந்தார்கள். ஒரேநேரத்தில் பலரும் மாறுபட்ட விஷயங்களில் கேள்வி எழுப்புவார்கள். அவர்களும் அவை அத்தனையையும் ஒரே நேரத்தில் உள்வாங்கி பொருத்தமான பதிலளிப்பார்கள். அவர் களுடைய பரம்பரையில் தோன்றியதுதான் இன்றைய புது தலைமுறை.

பல நாட்கள் அலைந்துதிரிந்து முடிக்க வேண்டிய வேலைகளை, ஒரே நொடியில் கைப்பேசியின் உதவியால் முடித்துவிடுவார்கள். வேலைச் சுமையை தொலைபேசி உரையாடலில் நொடிப்பொழுதில் இறக்கிவிடுவார்கள். தொலைத் தொடர்பு சாதனங்கள் ஒன்றுக்கொன்று மன நெருக்கத்தை திடப்படுத்தியுள்ளன. அகண்ட இடைவெளியை சுருங்கவைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

? சோம்பேறித்தனத்தை சாமர்த்தியமாகக் காட்ட முயற்சிக்கிறீர்கள். அப்படித்தானே?

அலுவல்கள் பெருகிப்போன இன்றையச் சூழலில், வழிபாட்டுக்கு நேரில் வர நேரம் இல்லாத நிலையில், அறக்கட்டளையின் மூலமாவது நிறைவேற்றத் துடிக்கும் எண்ணம், இன்றைய தலைமுறையின் மன ஈடுபாட்டுக்கு அத்தாட்சி. அதை சோம்பல் என்றும் ஈடுபாடு இல்லாமை என்றும் குறிப்பிடுவது தவறு.

கேள்வி - பதில்

அதேபோல், இறையருள் பிரசாதமானது எவர் மூலமாக எங்கிருந்து வந்தாலும், எத்தகைய அலுவலுக்கு இடையில் வந்தாலும், அதற்கு முன்னுரிமை அளித்து, அதை ஏற்று மகிழ்வதும் அவர்களின் ஈடுபாட்டுக்கு உதாரணம். பண்டைய நாளில் எதிர்பார்ப்பும் குறைவு; வேலையும் குறைவு. இன்றைக்கு, எதிர்மாறாக இரண்டுமே வளர்ந்தோங்கியிருக்கின்றன. ஆகவே, கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல், மனதின் ஈடுபாட்டுடன் தெய்வ வழிபாட்டிலும் இணைவார்கள். பண்டைய நாளில் ஜனப் பெருக்கமும் குறைவு; அகண்ட ஆலயங்களும் அதிகம். அங்கு அமைதி நிலவியது. இன்று மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாகப் பெருகிவிட்டது. கோயில்களில் கொள்ளளவு போதாமல் இருக்கிறது. அங்கு ஆரவாரம் அதிகம். ஆனாலும், மனம் அமைதியோடு இறையுருவத்தில் நிலைத்து, பதற்றம் இல்லாமல் அதில் லயித்துவிடும். இப்படியான திறமையை புது தலைமுறை பெற்றிருக்கிறது.

அதுமட்டுமா? இன்றைக்கு வீட்டில் இருந்து கொண்டு தொலைக்காட்சி மூலம், வெகு தூரத்தில் நிகழும் தெய்வத் திருவுருவ வழிபாடு களையும், அமைதியாக ஈடுபாட்டுடன் மனம் ஒன்றி தரிசிக்க முடிகிறது. முழு மனதோடு தெய்வத்தை வழிபட, தகவல் தொழில்நுட்பம் ஒத்துழைக்கிறது.

? தொலைக்காட்சி சேனல்களில் ஒருவர் சாப்பிட்டு மகிழ்வது போன்று விளம்பரங்கள் வரும். அதைப் பார்த்ததுமே உங்களின் பசி அகன்று விடுமா?

நீங்கள் குதர்க்கமாகவே யோசிக்கிறீர்கள்! ஒரே நேரத்தில் பல அலுவல்களில் சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றியை எட்டும் சிந்தனை வளத்தைப் பெற்றுத் திகழ்கிறது புதுத்தலைமுறை. தொலைத் தொடர்பு வசதியை பயன்படுத்தி, குறித்த நேரத்தில் அவரவரது விருப்பங்களை, அலுவல்களை மேன்மையான முறையில் செயல்படுத்துகிறார்கள்.

பண்டைய நாளில், கடிதம் வாயிலாக இருந்த தகவல் பரிமாற்றம் பல ஏமாற்றங்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. இன்றைய தகவல் தொடர்பு வரப்பிரசாதமாக அமைந்து, ஒன்றுக்கொன்று மன நெருக்கத்தை ஏற்படுத்தி, ஏமாற இடமில்லாமல் செய்திருக்கிறது.

வேதம் ஓதுபவர்களும்... பல்வேறு அழைப்புகள் வரும் நிலையில், எதையும் அலட்சியப் படுத்தாமல், எல்லோரது வேண்டுகோளையும் ஏற்று காலாகாலத்தில் உரிய சடங்குகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அவர்களது மன ஈடுபாட்டுக்குச் சான்று. இன்றைக்கு வேத ஓதுபவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு. எதிர்பார்க்கும் நேரத்தில் சந்திக்கவேண்டியவர்கள் ஏராளம். அவர்களை காலா காலத்தில் அணுகி, அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற, அலுவல்களுக்கு இடையே உரையாடுவது தவறாகாது. அவர்களது சேவை எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் எனில், நேர்க்காணல் உதவாது; தொலைபேசியே கைகொடுக்கும். எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும், எவரையும் அலட்சியப்படுத்தாமல் பலபேரது விருப்பத்தை நிறைவேற்ற, அவர்கள் தொலைபேசியின் மூலம் இணைந்து உதவுவது சிறப்பு. ஆகவே, தொலைபேசியின் இடையூறை வைத்து, மனதில் ஈடுபாடு இல்லை என்று மதிப்பீடு செய்வது தவறு.

? பண்டைய காலத்தில், மனதில் இறைவனை ஏற்க அமைதியான வனாந்திரங்களையே நாடினார்கள் மஹரிஷிகள். இப்போது, ஆரவாரங்களுக்கு இடையிலும் வழிபடலாம் என்கிறீர்கள். மனம் அதில் எப்படி லயிக்கும்?

ஓடும் பேருந்தில் நடத்துனரின் ஒரு கை டிக்கெட் போடும்; மற்றொன்று பணத்தைப் பெற்றுக்கொள்ளும். மனதின் தொடர்பில் இரண்டும் செயல்படும். அவரது குரல் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, அவருடைய விசில் பேருந்து ஓடவும், நிறுத்தவும் அனுமதி அளிக்கிறது. மனதின் தொடர்பின்றி இது நிகழாது. இரவு ரயில் பயணத்தில் ஒருவர் சக பயணிகளையும் கவனிப்பார்; உறக்கத்தையும் கைவிடுவது இல்லை. இங்கும் மனம் ஒன்றாமல் இருவேறு காரியங்கள் நிகழாது.

பண்டைய நாளில் தவம் செய்ய வனாந் திரத்தை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு, மனக்கப்பட்டுபாடிற்கு அமைதி தேவைப் பட்டது. ஆனால், ஆரவாரத்திலும் மனக்கட்டுப் பாட்டை நடைமுறைப்படுத்தும் பாங்கு புதுத்தலைமுறையினருக்கு இருக்கிறது. வீட்டையே அலுவலகமாக மாற்றும் தருணம் வந்துவிட்டது. அலுவல்கள் காலத்துக்கு ஏற்ப விரிவடைந்து வளர்ந்துள்ளன. அவற்றை நிறைவேற்ற போதுமான நேரம் இல்லாதபோது, தெய்வ வழிபாடு பல கோணங்களில் மாறுதல் அடைந்ததை வைத்து, மனம் ஈடுபடாத செயலாக அதைச் சுட்டிக் காட்டுவது உண்மைக்குப் புறம்பானது.

கேள்வி - பதில்

இத்தனை கோலாகலங்களிலும், இறை வழிபாட்டை மறக்காமல், சூழலுக்கு ஏற்ப அதை நிறைவேற்றுவது இன்றைய தலைமுறை யின் திறமைக்கு எடுத்துக்காட்டு. மற்ற அலுவல்களில் ஈடுபடுவதால் தெய்வ வழிபாடு செயலிழந்துவிட்டது என்று சொல்வது தவறு.  பண்டைய பல நல்ல நடைமுறைகளைத் தூக்கி எறிந்து புது நடைமுறைகளை ஏற்றவர்களும் இன்றைக்கு உண்டு. ஆனால், புதுத் தலைமுறை பண்டைய பக்தி வழியையும், வழிபாட்டு முறையையும் அலட்சியப்படுத்தாமல் அதற்குக் கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்துவது சிறப்பாகும். அது நிறை; குறை அல்ல.

மூன்றாவது கோணம்...

நீங்கள் சொல்வதை ஏற்க இயலாது. நிச்சயமாக மனம் ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருக்கும்போது மற்ற விஷயங்களில் இணையாது. காட்சியைக் கண் ரசிக்கும்போது, பாட்டின் சுவாரஸ்யம் தெரியாது; பாட்டை ரசிக்கும்போது காட்சியின் பெருமை தெரியாது. இது நியதி.  செயல்புலன்களில் மூழ்கிய மனம் எதையும் பேசாது, பார்க்காது. மனம் ஒரே வேளையில் ஒரு புலனோடுதான் இணைந்திருக்க இயலும். பழக்கத்தின் காரணமாக மற்ற புலன்கள் தானாக செயல்படுமே ஒழிய, அதில் மனதின் தொடர்பு இருக்காது.  மனதின் தொடர்பு இல்லாமல்தான் கையானது தாடியை வருடிக் கொண்டிருக்கும்! நடத்துனரை உதாரணம் சொன்னீர்கள். அவர், ஒரே நேரத்தில் பல அலுவல்களில் ஈடுபடுவது பழக்கத்தால் வந்தது; மன ஈடுபாட்டினால் அல்ல.

? ஒரே நேரத்தில் இரு வேலைகளைச் செய்வது பழக்கத்தால் வந்தது எனும்போது, ஆரவாரங் களுக்கு இடையிலும் மனம் சிதறாமல் இறைவனை வழிபடுவதையும் பழக்கமாக்கிக்கொள்ள இயலாதா?

நிச்சயமாக முடியாது! தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர், ரயில் கிளம்பும் ஓசைக் கேட்டதும் ஓடோடி வந்து ஏறினார். விளைவு, கைப்பையைத் தவறவிட்டு விட்டார். மனம் அங்கு இருக்கவில்லை; தனது பை குறித்த நினைவும் வரவில்லை! கடவுள் வழிபாட்டுக்கு அமைதியான சூழல் அவசியம். இல்லையெனில் மனம் வேறிடத்துக்கு தாவும். மற்ற புலன்களுக்கு இடம் அளிக்காமல் மனம் ஒன்றியிருந்தால் மட்டுமே, வழிபாடு சிறக்கும். இல்லையெனில் அது நாடகமாகிவிடும். மனம் லயிக்காமல் வழிபாடு நடத்துவது வெறும் சடங்காகுமே தவிர, மனதோடு இணைந்த பக்தியாகாது; பலனும் தராது.

புதிய தலைமுறையினர் எல்லாவற்றையும் வியாபார நோக்கில்  எடுத்துக்கொண்டுள்ளதால், எல்லாமும் சடங்குகளாக நிகழ்கின்றனவே தவிர, தூய்மையான பக்தி வெளிப்படவில்லை. வியாபாரத்தின் அணுகுமுறை வேறு; பக்தியின் அணுகுமுறை வேறு. எல்லா அலுவல்களிலிருந்தும் விடுபட்ட மனம் இறையுருவில் ஒடுங்கி நிலைபெற்று இருக்கவேண்டும். அதை நிறைவேற்றுவதில் தகவல் தொடர்பு இடையூறாகும். எண்ணி லடங்கா எண்ணங்களை மாற்றி மாற்றிப் பேச வேண்டிய கைபேசி உரையாடல், பக்தியை அறியாது. அதை, பேசித் தீர்க்கவேண்டிய ஓர் அலுவலாகவே பார்க்கும். நாம சங்கீர்த்தனத்தைக் கேட்பவர்களின் மனம் வேறு எங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்கும். சுற்றுச்சூழல் ரம்மியமாக இருக்கும் தறுவாயில், அதில் லயித்துவிடும் மனமானது நாம சங்கீர்த்தனத்தைக் காதுகொடுத்து கேட்காது. உட்கார்ந்த இடத்திலேயே குளிர்பானங்கள் பரிமாறப்படும்போது, மனம் அதன் சுவையில் லயிக்குமே தவிர, நிகழ்ச்சியில் லயிக்குமா? நேரம் ஏற ஏற கொட்டகையை விட்டு வெளியேறத் துடிக்கும்! வெளியே வந்ததும் கைப்பேசி உரையாடலில் ஈடுபட்டுவிடும்.

? எனில், நினைத்த நேரத்தில், கிடைக்கும் வாய்ப்பின் மூலம் இறை வனை வழிபடுவதால், பலன் இல்லை என்கிறீர்களா?

மனம் எல்லாவற்றிலும் ஈடுபாட்டைக் காப் பாற்றுகிறது. பக்தியில் கோட்டைவிட்டு விடுகிறது. பக்தியிலும் இருப்பதாக பாசாங்கு செய்வது வீண். மன அமைதிக்கு பக்தி வேண்டும். அது மனதோடு இணைந்திருக்க வேண்டும் என்றே சொல்ல வருகிறோம்.

நாம சங்கீர்த்தனம் நடக்கும் இடத்தில் இருப்பான். அவனுடைய மனம் வேறு உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும். கைத்தட்டல் ஓசை கேட்டதும், சகஜ நிலைக்கு வந்து தானும் கை தட்டுவான். கைத்தட்டல் என்பது மன ஈடுபாட்டுக்கு அடையாளம் அல்ல. ஆகவே, செய்வது அறியாமல் சிக்கித் தவிக்கும் ஒருவனை அஷ்டாவதானிக்கும், சதாவதானிக்கும் சமமாகச் சித்திரிப்பது பொருந்தாது. எனவே, மற்ற அலுவல்களில் இருந்து முற்றிலும் மனம் விடுபட்டு இருக்க வேண்டும். இறையுருவத்தில் ஒன்றிய மனதால் மட்டுமே பக்தியை எட்ட இயலும். இன்றையச் சூழலில் மக்களுக்கு அமைதியளிப்பது அது ஒன்றுதான். அலுவல்களில் சிக்கித் தவிக்கும் மனம் இளைப்பாற, அது ஒன்றுதான் மருந்து. அதை நாடகமாக்கக் கூடாது. உண்மையாக இருக்க வேண்டும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

போலியான பக்தி பேரின்பத்தை எட்ட வைக்காது. தனக்கு பக்தி உண்டு என்பதை பிறரை ஏற்கவைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அது

நமது அமைதிக்குப் பயன்படும் கருவி. அது வியாபாரப்பொருளோ, ஓர் அலுவலோ அல்ல. இறை பக்தி என்பது, அலைபாயும் மனதை அடக்கி அமைதி பெறச்செய்து, ஆனந்தத்தை உணரவைக்கும் வழி. அதை முறையாக செயல்படுத்த வேண்டும். ஏனோதானோ என்று சந்தடிச்சாக்கில் நுழைய விடக் கூடாது. அப்படிச் செய்தால் பயன் கிடைக்காது.

பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism