Published:Updated:

திருமணம், குழந்தை பாக்கியம் அருளும் கள்ளவாண்டார் சுவாமி... வேட்டைப்பானை வேண்டுதல்!

திருமணம், குழந்தை பாக்கியம் அருளும் கள்ளவாண்டார் சுவாமி... வேட்டைப்பானை வேண்டுதல்!
திருமணம், குழந்தை பாக்கியம் அருளும் கள்ளவாண்டார் சுவாமி... வேட்டைப்பானை வேண்டுதல்!

ண்பொருநையாம் தாமிரபரணி தவழ்ந்தோடும் இன்றைய நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ராமாயண காலத்துச் சம்பவங்கள் பல நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மாய மானின் உருவம் கொண்டு வந்த மாரீசன் மறைந்த இடம் ‘மாயமான் குறிச்சி’ என்றும், சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது, ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் நடந்த போரில் ஜடாயு வீழ்த்தப்பட்ட இடம் ‘ஜடாயு துறை’ என்றும், சீதையைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அனுமனின் தலைமையில் வானரப் படைகள் அணிவகுத்து நின்ற இடம் ‘குரங்கணி’ என்றும் அழைக்கப்படுகின்றன.

சீதாதேவி, தான் செல்லும் பாதையை அடையாளம் காட்டுவதற்காக தான் அணிந்திருந்த முத்துமாலையை குரங்கணியில் உள்ள அம்மன் கோயிலில் வீசிச் சென்றதால், குரங்கணியில் உள்ள குரங்கணி அம்மனுக்கு முத்துமாலை அம்மன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு கதையுண்டு.

இப்படிப் பல ராமாயண நிகழ்வுகள் நடைபெற்ற இந்த இடத்தில்தான் வாலி வதமும் நடைபெற்றது.

தன் மனைவியை வாலியிடமிருந்து மீட்க நினைத்த சுக்ரீவன், அத்திரி மலையில் இருந்த ராமரைச் சந்தித்து உதவி கேட்கிறான். சுக்ரீவனுக்கு உதவ நினைத்தார் ராமர். ஆனால், வாலியுடன் நேருக்கு நேர் நின்று போரிட்டால், தன் வலிமையில் பாதி வாலிக்குச் சென்றுவிடும் என்பதால், வாலியை மறைந்திருந்து வதம் செய்கிறார் ராமர். கீழே வீழ்ந்த வாலி, ‘மறைந்திருந்து என்னை வீழ்த்திவிட்டாயே கள்ள ராமா..! கள்ள ஆண்டவனே..!’ என்று கதறியபடியே உயிர் நீத்தான். கிஷ்கிந்தை காண்டத்தில் வரும் இந்த வாலி வதம், தற்போது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள மணக்கரையில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதையொட்டி, மணக்கரையில் ராமரின் நினைவாக கள்ளவாண்ட சுவாமி கோயிலை எழுப்பி வழிபட்டு வருகிறார்கள். ‘கள்ள ஆண்டவர்’ என்ற பெயரே மருவி, ‘கள்ளவாண்டவர்’ என்று ஆனதாம்.

மணக்கரையில் உள்ள கள்ளவாண்ட சுவாமி கோயிலிலிருந்து பிடிமண் எடுத்துச் சென்று கட்டப்பட்ட கள்ளவாண்டர் கோயில்கள் முத்தாலங்குறிச்சி, நடுவக்குறிச்சி, ஆறாம்பண்ணை, ஆதிச்சநல்லூர், கருங்குளம், அரசர்குளம், வல்லக்குளம், ஶ்ரீபராசங்குநல்லூர், ஶ்ரீராமகுளம், கிளாக்குளம், பெருமனேரி என்று குறிப்பிட்ட சில கிராமங்களில் அமைந்திருக்கின்றன. இந்த ஊர்கள் பெரும்பாலும் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. வாலி வதம் திறந்தவெளியில் நடைபெற்றதால், இந்தக் கள்ளவாண்டர் கோயில்கள் அனைத்தும் திறந்தவெளியிலேயே அமைந்திருக்கின்றன.

நாம், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள முத்தாலங்குறிச்சியில் அமைந்திருக்கும் கள்ளவாண்டார் கோயிலுக்குச் சென்றோம். தாமிரபரணி கரையில் பனைமரம், அரசமரத்தடியில் கம்பீரமாகக் காட்சி தருகிறது கள்ளவாண்ட சுவாமி கோயில். கிருஷ்ணர், கள்ளவாண்டர், சிவன், பார்வதி ஆகியோர் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்கள். எதிரில் கழுமரமும், அருகில் அனுமன் பீடமும் உள்ளது.

வருடம்தோறும் சித்திரை மாதம் நடைபெறும் கொடைத் திருவிழாதான் கோயிலின் முக்கிய நிகழ்ச்சி. முதல்நாள் குடியழைப்புடன் தொடங்குகிறது திருவிழா. கொடையன்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சுவாமியாடிகள் தாமிரபரணிக் கரையில் வேட்டைக்குச் சென்று திரும்புவார். இரவு 1 மணிக்கு விழாவின் பிரதான நிகழ்ச்சியான ‘வேட்டைப் பானைத் திருவிழா’ தொடங்கும்.

வரிசையாக 12 கல் அடுப்புகள் வைத்து, அவற்றில் 12 பெரிய மண் பானைகளை வைத்து, பனை ஓலைகளைக் கொண்டு நெருப்பு மூட்டி, கஞ்சி காய்ச்சுவார்கள். கஞ்சி காய்ச்சும் நேரத்திலேயே நையாண்டி மேளம், உருமி மேளம் மற்றும் வில்லிசைப் பாடலாக, கள்ளவாண்ட சுவாமி திருக்கதை சொல்லப்படும். அந்தக் கதையைக் கேட்டு அருள் முற்றும் சுவாமியாடி, பானைகளுக்கு அருகில் சென்று தென்னம்பாளையை பானைக்குள் விட்டு சுடு கஞ்சியை எடுத்துத் தன் தலையில் ஊற்றிக் கொண்டபடி அருளோடு ஆடுவார்கள். காண்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும் காட்சி அது. வாலியை மறைந்திருந்து வீழ்த்திய காரணத்துக்காக, கொதிக்கும் கஞ்சியைத் தன் தலையில் கொட்டிக்கொண்டு, தனக்குத் தானே ராமர் தண்டனை கொடுத்துக்கொள்வதாக ஐதீகம்.

திருடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர் வீட்டில் அடுக்கடுக்கான கஷ்டங்களைக் கொடுத்து, மூன்றே நாள்களில் திருடியவரை அடை யாளம் காட்டுவதுடன், திருட்டுப்போன பொருளை உரியவரிடம் சேர்ப்பித்துவிடுவாராம் கள்ளவாண்ட சுவாமி. எனவே, கள்ளவாண்ட சுவாமி கோயில் இருக்கும் ஊர்களில் திருட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள்.

கள்ளவாண்ட சுவாமிக்கு வேட்டைப்பானை போடுவதாக வேண்டிக் கொண்டால், விவசாயத்தில் அதிக மகசூல், கல்வியில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதல்கள் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள். கோயில் சார்பில் 5 வேட்டைப்பானைகள் மட்டுமே வைத்தாலும், தங்களின் வேண்டுதலுக்காக பக்தர்கள் அடுத்தடுத்து வேட்டைப்பானை வைப்பதால், ஒவ்வொரு வருடமும் வேட்டைப்பானைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது என்கிறார்கள். மேலும் சாமியாடி எந்தப் பானைக்குள் கையை விட்டு கஞ்சியை எடுக்கிறாரோ அந்தப் பானைக்கு உரியவரின் வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.