Published:Updated:

ரஜினிக்கு ஆசி கூறி, வழிநடத்தும் மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர்!

ரஜினிக்கு ஆசி கூறி, வழிநடத்தும் மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர்!
ரஜினிக்கு ஆசி கூறி, வழிநடத்தும் மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர்!

மண்ணுலகில் தர்ம காரியங்கள் குறைந்து, அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் யுகம் தோறும் ஆண்டவனின் அவதாரம் நடைபெறும். தீயவர்களை அழிக்கவும், நல்லவர்களை ரட்சிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் பகவான் பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். ஆனால், கலியுகத்தில் கடவுள் தாமே அவதரிக்காமல், தம்முடைய அம்சமாக மகான்களை அவதரிக்கச் செய்து, மக்களை நல்லவழியில் நடத்தி, அவர்களைக் காப்பாற்றும்படிச் செய்கிறார். அப்படி இந்தக் கலியுகத்தில் அவதரித்த மகான் ஸ்ரீராகவேந்திரர். 16-ம் நூற்றாண்டில் அவதரித்த மகான் ஸ்ரீராகவேந்திரர், மத்வரின் துவைத சித்தாந்தத்தைப் பரப்பியதுடன், நமது தர்மங்களை மக்கள் அறியச் செய்து, அவர்களை நல்வழிப்படுத்தினார். 


"பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!"

கலியுகத்தில் காமதேனு, கற்பக விருட்சம் போல் பக்தர்களின் வேண்டுதல்களை எல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றியவர்  ஸ்ரீ ராகவேந்திரர். ஸ்ரீஹரியின் பரம பக்தராக விளங்கிய சங்கு கர்ணன் சாபத்தின் காரணமாக பிரகலாதனாகப் பிறந்தார். பிரகலாதனே மறுபிறப்பில் கௌரவர்களுக்குத் துணையாகப் போரிட்ட பாஹ்லிகராகப் பிறந்து பீமனின் கரத்தால் கொல்லப்பட்டார். எனினும் ஸ்ரீகிருஷ்ணரின் அனுக்கிரகத்தை அப்போது பெற்றார். சங்கு கர்ணனின் தவத்தால் அவரது மூன்றாவது பிறப்பு ஸ்ரீ வியாசராயராகத் தொடர்ந்தது. வைணவ ஆச்சாரியார் ஸ்ரீ மத்வரின் தத்துவத்தை நாடெங்கும் வியாசராயர் பரப்பி புகழடையச் செய்தார். அனுமானின் பக்தனாக இருந்து நாடெங்கும் அனுமான் வழிபாட்டை விரிவாக்கினார். வியாசரேயரே அடுத்த பிறவியில் ஸ்ரீ ராகவேந்திரராக அவதரித்தார். இப்படி மண்ணுலகம் செழிக்க அவதரித்தவர் ராகவேந்திரர்.

திம்மண்ண பட்டர், கோபிகாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக தமிழகத்தின் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தவர் வேங்கடநாதன். இவரே 1621 ஆம் ஆண்டு மத்துவப் பிரிவின் சுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். நாடெங்கும் துவைதக் கொள்கைகளைப் பரப்பினார். வாழும்போதே பல அதிசயங்களைச் செய்து எதிர்த்தவர்களையும் தமது கொள்கைகளை ஏற்கச் செய்தார். இவரது புகழ் பாரதம் முழுக்க பரவிய வேளையிலேயே இவர் ஜீவசமாதியை ஏற்கும் முடிவுக்கு வந்தார். அதன்படி 1671-ம் ஆண்டு அதாவது எழுபதாவது வயதில் ஆந்திரப் பிரதேசத்தின் மந்த்ராயலத்தில் பிருந்தாவனப் பிரவேசம் எனும் ஜீவ சமாதியடைந்தார்.

தாம் ஏற்கெனவே கூறியபடி முந்நூறு ஆண்டுகள் அதாவது 1971-ம் ஆண்டு வரை பிருந்தாவனத்தில் இருந்தவாறே அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரிந்தார். பின்னர் 700 ஆண்டுகள் 2671-ம் ஆண்டு வரை தன்னை நினைக்கும் பக்தர்களுக்காக நேரிலேயே வந்து அருளாசி செய்து கொண்டும் இருக்கிறார். 347 ஆண்டுகளாக ஸ்ரீராகவேந்திரரின் அருளால், அவரின் சூட்சும வடிவால், இன்றும் மந்த்ராலயம் புண்ணிய பூமியாக, வரமருளும் கற்பகத்தலமாகவும் இருந்து வருகிறது. இந்த மண்ணை மிதித்தாலே பாவங்கள் விலகும், சௌக்கியங்கள் மலரும் என்று பக்தர்களால் போற்றப்படுகிறது.

தென்னகத்து மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்கிய ஸ்ரீராகவேந்திரர் 1980-களில் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் எனப்படும் நடிகர் ரஜினிகாந்தை ஆட்கொண்டார்.. ராகவேந்திரரை வணங்கத்தொடங்கியதும் பல பிரச்னைகளிலிருந்து விடுபடத்தொடங்கினார். தனது சினிமா வாழ்விலும் பல முன்னேற்றங்களைக் கண்டார். இதனால் ராகவேந்திரரை வணங்காமல், அவரிடம் ஆசி கேளாமல் தனது எந்தச் செயலையும் அவர் தொடங்கியதே இல்லை. தனது 100-வது படம் கூட ராகவேந்திரர் புகழைச் சொல்லும் படமாக இருக்கவே விரும்பினார். ஸ்ரீராகவேந்திரர் என்னும் திரைப்படம் 1985-ம் ஆண்டு வெளியானது. ரஜினிகாந்தின் திரையுலக வாழ்வில் இந்தப் படம் அவரது நடிப்புத்திறனை வெளிக்காட்டும் படமாக சிறப்பாக அமைந்தது. 


இந்தப் படத்தில் நடித்தபோது கடுமையான விரதமிருந்து ரஜினிகாந்த் நடித்துக்கொடுத்தார். மந்த்ராலயத்துக்குச் சென்று வணங்கிய பிறகே எடுக்கத்தொடங்கிய இந்தப் படம், நிறைவு பெற்றதும் படப்பெட்டிகள் மந்த்ராலயம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வணங்கிய பிறகே வெளியிடப்பட்டது. ரஜினிகாந்த் ராகவேந்திரராக வாழ்ந்திருக்கிறார் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கே. பாலசந்தர் பாராட்டிச் சொன்னார். அன்றிலிருந்து ரஜினிகாந்துக்கு ஸ்ரீராகவேந்திரர் மீதும், அந்த மகான் ஜீவசமாதியில் உறையும் மந்த்ராலயம் மீதும் பெரும் ஈர்ப்பு உண்டானது. அவரது திரையுலக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல் எழும்போதெல்லாம் மந்த்ராலயம் செல்வதை வழக்கமாகக் கொண்டார்.

அந்த வகையில் சென்ற 2017-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி மந்த்ராலயம் சென்றார். அங்கு நடந்த சிறப்பு ஆராதனையில் பங்கேற்று ஸ்ரீராகவேந்திரரை வணங்கினார். ஆழ்ந்து தியானம் செய்தார். ஸ்ரீராகவேந்திரர் ஆலயத்தின் மடாதிபதி சுபதேந்திர தீர்த்த சுவாமிகளை தரிசித்து வணங்கினார். அப்போது ரஜினியிடம் பேசிய கோயில் நிர்வாகிகள், மந்த்ராலய கோயில் மிகவும் பழுதடைந்துள்ளதைப் பற்றி பேசினார்கள். இதனால் வருத்தப்பட்ட  ரஜினிகாந்த் மந்த்ராலயம் கோயிலை புனரமைக்க 10 கோடி நன்கொடை வழங்கினார். பழைய கட்டடங்களைப் புதுப்பிக்கவும், புதியதாக இருபத்தைந்து குளிர்சாதன வசதியுடன் தங்கும் விடுதிகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டது. பக்தர்கள் தங்க நூறு இலவச அறைகள் கட்டவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரஜினிகாந்த் நன்கொடை அளித்த விவகாரம் பல விமர்சனங்களை எழுப்பினாலும் அப்போது ரஜினிகாந்த் இது குறித்து எதுவுமே பேசவில்லை. ஆனால், மந்த்ராலயம் சென்று வந்தபிறகே ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசப்பணிகள் வேகமானது என்று சொல்லப்படுகிறது. எது எப்படியோ ரஜினியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஆசியை வழங்கிய ஸ்ரீராகவேந்திரர் அவரது அரசியல் பயணத்திலும் வெற்றியை அளிப்பார் என்றே அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள்.