Published:Updated:

சாமியாடிகள், எறிபந்தம் ஏந்தி சங்கிலியாட்டம் ஆடும் சங்கிலிபூத்ததார்சாமி வழிபாடு!

சாமியாடிகள், எறிபந்தம் ஏந்தி சங்கிலியாட்டம் ஆடும் சங்கிலிபூத்ததார்சாமி வழிபாடு!
சாமியாடிகள், எறிபந்தம் ஏந்தி சங்கிலியாட்டம் ஆடும் சங்கிலிபூத்ததார்சாமி வழிபாடு!

ன்னதான் வறட்சி ஏற்பட்டாலும், வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தாலும், 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்' என்பதை நம் முன்னோர் காலம்காலமாகக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அப்படித்தான் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதி மக்களும், கோயில் இல்லாமலும் இருப்பதில்லை; குலதெய்வத்துக்குக் கொடைவிழா எடுக்க மறப்பதுமில்லை. ராதாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள நாட்டுப்புறத் தெய்வங்களின் கோயில்களைக் காணும்போது, இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடிந்ததுடன் அவர்களிடம் இருக்கும் தெய்வ நம்பிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ராதாபுரம் வட்டம் தனக்கர்குளம் ஊராட்சியைச் சேர்ந்த ஓர் ஊர் சிவசுப்பிரமணியபுரம். அந்த ஊருக்குக் கிழக்கே கடைக்கோடியில் அமைந்திருக்கிறது சங்கிலிபூதத்தார்சாமி கோயில். இந்த ஊரில் வாழும் நாடார் இன மக்கள் சங்கிலிபூதத்தார்சாமியை வழிபட்டு வருகின்றனர். சங்கிலிபூதத்தார் சாமி கோயிலில் சப்பாணிமாடன், பிரம்மசக்தி, இசக்கியம்மன், மாசானம், காலசாமி, சாத்தா உள்ளிட்ட தெய்வங்களுக்கும் வழிபாடு நடத்தப்படுகின்றன.

கருவறையில் சங்கிலிபூதத்தார்சாமி உயரமான சிலை வடிவத்தில் கிழக்குப் பார்த்துக் காட்சி தருகிறார். முறுக்கிய மீசையுடன் கம்பீரமாகக் காட்சி தரும் சங்கிலிபூதத்தார்சாமி வலக் கையில் அருவாளும், இடக் கையில் பொந்தந் தடியும் ஏந்தியுள்ளார். தலையில் குல்லாவும், தோளில் சங்கிலியும், இடுப்பில் சல்லடமும், காலில் தண்டமும் அணிந்திருக்கிறார். இந்த ஊரில் சங்கிலிபூதத்தார் வழிபாடு எப்படி வந்தது என்பது பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை வழக்கில் உள்ளது.

அந்தக் கதை...

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரில் வாழ்ந்த நாடார்கள் சிலர், திருக்குறுங்குடி என்னும் ஊருக்கு மேற்கில் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள நம்பிமலைப் பகுதிக்கு மாடு மேய்ப்பதற்காகச் சென்றனர். அப்போது அங்கிருந்த ஒரு வாழைமரத்தில் பழுத்திருந்த வாழைப்பழக் குலையை வெட்டித் தின்றனர். பொழுது சாய்ந்ததும் மீதி இருந்த வாழைப் பழங்களை எடுத்துக் கொண்டு மாடுகளுடன் ஊருக்குத் திரும்பினர். அந்த வாழைமரம் சங்கிலிபூதத்தார்சாமியின் காவலுக்கு உட்பட்ட மரம். எனவே, நாடார்கள் ஊருக்குத் திரும்பியபோது சாமியும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தது. ஊரை அடைந்தவர்கள், தென்மேற்குப் பகுதியில் இருந்த பனங்காட்டுப் பகுதியில் மாடுகளை அடைத்தனர்.

சங்கிலிபூதத்தார்சாமியும் அந்தப் பகுதியில் அமர்ந்துகொண்டார். அந்த ஊருக்கு தான் வந்திருப்பதை ஊர்மக்களுக்குத் தெரிவிக்க நினைத்த சங்கிலிபூதம், மாடுகளுக்கு நோய் ஏற்படுத்தியது. எத்தனையோ மருத்துவம் பார்த்தும் மாடுகளுக்கு நோய் குணமாகவில்லை. ஒருநாள் சங்கிலிபூதம் ஒருவரின் கனவில் தோன்றி, தான் அந்த ஊருக்கு வந்துள்ள செய்தியைக் கூறியதுடன், ''என்னை வழிபடுங்கள். நான் உங்கள் குடியைக் காத்து நிற்கிறேன்'' என்றும் கூறியது. விடிந்ததும் மக்களிடம் தான் கண்ட கனவைத் தெரிவித்தார். உடனே மக்களும் பீடம் அமைத்து சங்கிலிபூதத்தார்சாமியை வழிபடத் தொடங்கினர். மாடுகளும் நோய் நீங்கி குணமடைந்தன. பனங்காட்டுக்குள் வந்து அமர்ந்ததால், 'பனங்காட்டுசாமி' என்ற பெயரிட்டு வழிபட்டனர்.

சங்கிலிபூதத்தார்சாமியின் தோற்றம் வரலாறு பற்றி மக்களிடையே நிலவும் வாய்மொழிக் கதை, சங்கிலிபூதத்தார் கதைப்பாடல், நம்பிராயன் கதை ஆகியவை எடுத்துச் சொல்கின்றன. மேலும் இந்தக் கதைகள் புராணக் கதையுடன் பின்னிப் பிணைந்தும் உள்ளன. தேவர்கள் தாங்கள் அழியாதிருக்க விரும்பினர். தங்கள் விருப்பத்தை சிவனாரிடம் வந்து தெரிவித்தனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய சிவபெருமான், பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்று அருந்துமாறுக் கூறினார். மந்தரமலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. தேவர்கள் அஞ்சி நடுங்கினர். அவர்களைக் காப்பாற்றவேண்டி, சிவபெருமான் விஷத்தை விழுங்கிவிட்டார். பதறிப்போன பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்தை இறுக்கிப் பிடித்து, விஷம் கீழே இறங்காமல் அடக்கிவிட்டாள். அந்த விஷத்திலிருந்து சங்கிலிபூதம், சட்டநாதன், கணநாதன், க்ஷேத்திரபாலன் என்று நான்கு பூதங்கள் தோன்றின. பூதங்களை கயிலைமலையின் காவலுக்கு வைத்தார். ஆனால், பூதங்கள் தேவர்களுக்குத் தொல்லைக் கொடுத்ததால், பூதங்களை பூமிக்குச் செல்லுமாறு அனுப்பிவிட்டார்.

பூமிக்கு வந்த பூதங்கள் கீழக்கரைப் பகுதியில் இருந்த பெரிய தேக்கு மரத்தில் தங்கியிருந்தன. அப்போது கப்பல் செய்வதற்காக தேக்குமரத்தை வெட்டிய ஏழு வணிகர்களை பூதங்கள் அடித்துக் கொன்றன. பிறகு பூதங்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபட்டு வரம் பெற்று கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தன. குமரி அம்மனை வழிபட்டுவிட்டு, மகேந்திரகிரி வழியாக நம்பிமலையை அடைந்தன. நம்பிநாதர், ஏற்கெனவே அங்கு காவல் இருந்த குத்துபிறையழகி அம்மனுடன் சேர்ந்து நம்பிமலையைக் காவல் செய்யும்படி கட்டளையிட்டார். பூதங்களும் அம்மனுடன் நம்பிமலையைக் காவல் செய்துவந்தன.

ஒருநாள் மலைநம்பிக் கோயிலுக்கு மாலை பூசை செய்ய வந்த தொழுதநம்பி பட்டர், குழந்தை அடம்பிடிக்கவே தன்னுடன் அழைத்து வந்தார். குழந்தையை ஓரிடத்தில் அமரவைத்துவிட்டு, பூசை செய்தார். பூசை முடிந்ததும் குழந்தையை அழைத்து வந்ததை மறந்துவிட்டு, கதவைப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். பாதி தொலைவு சென்றதும்தான் குழந்தையை கோயிலில் விட்டுவிட்டு வந்தது நினைவு வந்தது. கோயிலுக்குத் திரும்பியவர், கோயிலின் பூட்டைத் திறக்க முயன்றார். அப்போது கோயிலைக் காவல் செய்த பூதம், ''இது என்னுடைய காவல் நேரம். காலையில் வா. குழந்தையை பத்திரமாகப் பாதுகாத்துத் தருகிறேன்'' என்று தடுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் வீடு திரும்பினார். நடந்ததை மனைவி சோமாண்டிஅம்மாளிடம் கூறினார்.

ஆனால், அந்த அம்மாவோ அப்போதே குழந்தையை அழைத்து வரவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள். இருவரும் மறுபடியும் மலைநம்பிக் கோயிலுக்கு வந்தனர். சோமாண்டிஅம்மாள் பூட்டைத் திறக்க முற்பட்டாள். கோபம் கொண்ட பூதம் குழந்தையை நான்காகப் பிய்த்துக் கொன்று நான்கு திசைகளிலும் வீசியது. குழந்தை இறந்ததைத் தாங்காத சோமாண்டிஅம்மாளும் துடிதுடித்து இறந்து போனாள்.

இறந்த மனைவிக்கும் குழந்தைக்கும் இறுதிக் காரியங்கள் செய்த தொழுதநம்பி பட்டர், பூதத்தை மண்ணுக்குள் புதைப்பதாகச் சபதம் செய்தார். அதன்படியே மந்திரவாதியான காளிப்புலையன் துணையுடன் சங்கிலிபூதத்துடன் மற்ற பூதங்களையும் குடத்தில் அடைத்து, பதினெட்டு நாட்டார்விளையில் ஓரிடத்தில் புதைத்துவிட்டார். மந்திரவாதியின் கட்டுக்குள் அடங்காத குத்துப்பிறையழகி அம்மன், ராகவன் என்பவரின் கனவில் தோன்றி, ''பதினெட்டாம் நாட்டார் விளையில் உழுதால் புதையல் கிடைக்கும்'' என்று கூறினாள். தன் விதி முடியப்போவதை உணராத ராகவன், நிலத்தை உழுது, வெளிப்பட்ட குடத்தை எடுத்து உடைத்தார். உடனே குடத்திலிருந்து வெளிப்பட்ட பூதங்கள் அவனை அடித்துக் கொன்றன. பின்பு சங்கிலிபூதம் நம்பிநாதரிடம் வந்து பணிந்து நின்றது. நம்பிநாதரும் பூதத்துக்கு ஆசி வழங்கினார். பின்னர் சங்கிலிபூதம் ஆரியங்காவு, அச்சங்காவு, சொரிமுத்து ஐயன் கோயில், குளத்துப்புளி திருவாலி ஐயன்கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்று அரிகரபுத்திரனை வழிபட்டது. இறுதியாக குற்றாலநாதரை வழிபட்டுவிட்டு, ஐயங்காச்சிப்படையுடன் எட்டாம்படியதில் கறுப்பன் என்று பெயர் பெற்றுக் கொலுவிருந்தது.

சங்கிலிபூதத்தின் தோற்ற வரலாறு புராணத்தொடர்புடையதாக இருந்தாலும், வாய்வழிச் செய்திகள் வேறுவிதமாக சில செய்திகளைக் குறிப்பிடுகின்றன. நம்பிமலை ஆற்றங்கரையின் கிழக்குப் பகுதியில் சங்கிலிபூதத்தாருக்கு சிலை அமைந்துள்ளது. அதன் வடமேற்குப் பகுதியில் பாறை ஒன்று உள்ளது. அதுதான் சங்கிலிபூதத்தின் பழைய பீடமாக இருந்துள்ளது. அந்தப் பீடத்தில் பழங்காலத்தில் யாரோ ஒருவரை சங்கிலியால் இழுத்து வந்து வெட்டிக் கொன்றனர். அவர் புலையர் இனத்தவராக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். இந்த இன மக்கள் நம்பிமலை, காக்காச்சிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் செல்வாக்குடன் இருந்ததை கதைப்பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மற்றொரு செய்தி...

பிற்காலத்தில் அந்தப் பகுதியில் அந்நிய மதத்தினரின் ஆதிக்கம் வலுப்பட்டது. அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற வெள்ளாளர் இன மக்களால் ராமபகடை என்பவன் அழைத்துவரப்பட்டான். வந்தவன் அந்நிய மதத்தவரை விரட்டி அடித்ததுடன் நிற்காமல், தானே அந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினான். கோபம் கொண்ட வெள்ளாளர்களும் தேவர்களும் சேர்ந்து ராமபகடையைக் கொன்ற வரலாற்றை சின்னதம்பி சுடலை என்ற கதை சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்த்தால் சங்கிலிபூதம் கொலையில் உதித்த தெய்வமாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. மேலும் இந்த தெய்வம் சங்கிலிபூண்ட கோலத்தின் காரணமாகவும், மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்குக் காரணமாகவும், கருப்பசாமியுடன் இணைத்து புலவர்களால் பாடப்பட்டிருக்கலாம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

சங்கிலிபூதத்தார்சாமி கோயிலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விழா நடத்தப்படுகிறது. இந்த விழா ஆடிமாதம் முதல்வாரத்தில் மூன்று நாள்கள் நடத்தப்படுகிறது. முதல்நாளில் சாஸ்தா, விநாயகர், பெருமாள்சாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்புப் பூசை நடைபெறுகிறது. இரண்டாம் நாள் காலசாமி, பிரம்மசக்தி, இசக்கியம்மன், மாசானசாமி, சப்பாணி மாடன் ஆகிய தெய்வங்களுக்கு பூசை நடைபெறுகிறது. சங்கிலிபூதத்தார்சாமிக்கு பகல் 12 மணியளவிலும் இரவு 12 மணியளவிலும் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. சிறப்புப் பூசையின்போது சங்கிலிபூதத்தார்சாமி கதை வில்லுப்பாடலாகப் பாடப்படுகிறது. அப்போது சாமியாடிகள் எறிபந்தம் ஏந்தியும், மிகப்பெரிய சங்கிலியைத் தோளில் போட்டபடியும் அருள்வந்து ஆடுவார்கள். சில இடங்களில் பழுக்கக் காய்ச்சிய சங்கிலியை எடுத்து தோளில் போட்டு ஆடும் வழக்கமும் காணப்படுகிறது. சாமியாடிக்கு ஆவேசம் வரும்போது, பெரிய சங்கிலியால் தன்னைத் தானே அடித்துக்கொள்வதும் நடக்கிறது. இதன்மூலம் சாமியின் ஆவேசம் குறைவதாக மக்கள் கூறுகின்றனர். மூன்றாம்நாள் அதிகாலையில் கொடைவிழா நிறைவு பெறுகிறது. அனைவருக்கும் கறியுடன் கலந்த சாதம் அன்னதானமாக வழங்கப்படுகிறது.