Published:Updated:

நாரதர் உலா

பார்வைக்கு வருமா பல்லவர் குகை?

நாரதர் உலா

பார்வைக்கு வருமா பல்லவர் குகை?

Published:Updated:

வசரமாக திருச்சிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அந்தர்தியானமான நாரதர் இன்னும்

நாரதர் உலா

வரவில்லையே என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தபோதே, நாரதரிடம் இருந்து வாட்ஸ்அப்பில்,
‘ஆன் த வே’ என்று தகவல் பளிச்சிட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில், நம் முன் பிரசன்னமானார் நாரதர்.

‘‘வாரும் நாரதரே!’’ என்று அவரை வரவேற்று, தீபாவளி பட்சணங்களும், காபியும் தந்து உபசரித்தோம்.

“திருச்சியிலிருந்து அப்படி என்ன அவசர அழைப்பு?”

‘‘அது அப்புறம். பாதியில் நிறுத்திவிட்டுப்போன அன்னதானத்தில் இருந்தே விஷயத்துக்கு வருகிறேன். மற்ற கோயில்களைப் போலவே, இந்தக் கோயிலிலும் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. ஆனால், அன்னதானத்துக்காகப் பல இடங்களில் நன்கொடை வசூலிக்கிறார்கள். இதனால் கோயில் நிர்வாகத்துக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள்கூட போலியாக ரசீதுப் புத்தகம் தயாரித்துக் கொண்டு, பக்தர்களிடம் பணம் பறிப்பதற்கான வாய்ப்பு உண்டு. மேலும், இங்கு அன்னதானம் சாப்பிட வரும் மக்களை நிர்வாக ஊழியர்கள் சிலர் சரிவர நடத்துவதில்லை எனக் குறைபட்டுக் கொள்கிறார்கள் பக்தர்கள்.’’

நாரதர் உலா

‘‘கோயிலில் அன்னதானம் என்பது இறைவனின் பிரசாதத்தை ஜனங்களுக்கு விநியோகிக்கும் ஒரு புண்ணியக் கைங்கர்யம். அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அன்னதானம் சாப்பிட வரும் பக்தர்களை மிக அன்புடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டியது அவசியம். இதிலிருந்து ஒரு சிலர் தவறினால்கூட ஒட்டு மொத்த நிர்வாகத்துக்கும் கெட்ட பெயர் ஏற்படும். இதை உணர்ந்து, அந்த ஒரு சிலரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியம். இல்லையென்றால், புண்ணிய காரியம் செய்யப்போய் பாவத்தைத் தேடிக்கொண்ட விசித்திரம்தான் உண்டாகும். அது இருக்கட்டும், பக்தர்களின் வசதிக்காகப் பழநியில் இருப்பது போலவே இங்கேயும் ரோப் கார் சேவை வரவிருப்பதாகச் சொன்னார்களே, அது என்ன ஆயிற்று?’’

‘‘திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மனோகரன். இவர்தான் தமிழக அரசின் கொறடாவாகவும் இருக்கிறார். மலைக்கோட்டையில் ரோப் கார் சேவை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவரும் இவர்தான். ஆனால், கோரிக்கை வைத்ததோடு சரி; இன்னும் அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள்கூடத் தொடங்கப்படவில்லை. எப்போது தொடங்குவார்கள் என்பதை உச்சிப்பிள்ளையாரே அறிவார்!’’

‘‘மலைக்கோட்டையில் தெப்பக்குளம் பிரசித்தி பெற்றது ஆயிற்றே, அதுவாவது நல்ல நிலையில் இருக்கிறதா?’’

‘‘அந்த அவலத்தை ஏன் கேட்கிறீர்? தெப்பக் குளத்தைச் சுற்றி உள்ள பல கடைகளின் கழிவு நீர் அத்தனையும் குளத்து நீரில்தான் வந்து கலக் கிறது. இதைத் தடுப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. குளத்தில் இருக்கும் புதர்களைக்கூட அரைகுறையாகத்தான் அகற்றுவதாக மக்கள் குறைப்பட்டுக் கொள்கிறார் கள்!’’ என்ற நாரதர், திருச்சியில் இருந்து வந்த செல்போன் அழைப்பில், நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் குறித்தும் விவரித்தார்.

‘‘தெற்கு வீதியில், மலையடி வாரத்தில் பல்லவர் குகை என்று ஒரு குகை இருக்கிறதே, உமக்குத் தெரியுமா? 2010-ம் ஆண்டில் இருந்து இந்த இடத்தை மத்திய தொல்பொருள் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். இருந்தும், முறையான பராமரிப்பு எதுவும் இல்லாமல்தான் இருக்கிறது. மலைக்கோட்டைக்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் தவறாமல் இந்த பல்லவர் குகையைப் பார்க்க வருகிறார்கள். நம்மூர் மக்களுக்குத்தான் அப்படி ஒரு குகை அங்கே இருப்பதே தெரியவில்லை’’ என்றார்.

நாரதர் உலா

‘‘இது குறித்து மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவோ, அறிவிப்புப் பலகை வைக்கவோ நிர்வாகத் தரப்பு ஏதேனும் செய்யலாமே?!”

‘‘அறிவிப்புப் பலகை வைப்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கு முன், பல்லவர் குகைக்குச் செல்லும் பாதையைச் சரிசெய்ய வேண்டும்’’ என்றார் நாரதர்.

‘‘ஏன்? பாதைக்கு என்ன ஆயிற்று?’’

‘‘பல்லவர் குகைக்குச் செல்லும் பாதையை மறைத்தபடி தனியார் நிறுவனம் ஒன்று கோடவுன் அமைத்துள்ளது. அதை அகற்றினால்தான், அறிவிப்புப் பலகை வைத்தால்கூடப் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசின் தொல்லியல் துறையினர் ஒரு பகுதியைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுமே, அங்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பது வழக்கம். அதன்படி, இந்தப் பல்லவர் குகையைப் பொறுத்தமட்டில் முதல் 100 மீட்டர்- தடை செய்யப்பட்ட பகுதியாகவும், அடுத்த 100 மீட்டர்- தொல்லியல் துறையின் அனுமதி பெற்ற பிறகே எந்த ஒரு பணியையும் மேற்கொள்ளவேண்டும் எனவும், அடுத்த 100 மீட்டர்- தொல்லியல் துறையினர் அறிவுறுத்தும் அளவுக்குத்தான் கட்டட வேலைகள் செய்யவேண்டும் என்றும் கட்டுப்பாடு விதித்திருக் கிறார்கள். ஆனால், எந்த ஒரு விதிமுறையையும் பின்பற்றாமல் தனியார் ஆக்கிரமிப்புகள் இங்கே ஆலமரமாய் வளர்ந்து நிற்பதாக மக்கள் குற்றம் சாட்டு கிறார்கள்!’’

நாரதர் உலா

‘‘அநியாயமாக இருக்கிறதே! இதைத் தொல்லியல் துறையினர் கண்டுகொள்ளவில்லையா?”

‘‘இன்னும் கேளும். மலைக்கோட்டை என்பது மூன்று அடுக்குகளைக் கொண்டது. அவற்றுள் கிரிவலப் பாதை என்னும் உள் வீதியின் அகலமே 12 அடிதான். அந்தப் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று பெரிய அளவில் ஆக்கிரமித்துள்ளது. ஆத்திர அவசரத்துக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் அந்த வழியாகச் செல்வதென்றால் திண்டாட்டம்தான்! அதே போன்று, இன்னொரு அடுக்கான என்.எஸ்.பி ரோடும் திருச்சியின் மிக முக்கிய வணிகச் சந்தையாக விளங்குகிறது. இங்குள்ள பெரும்பாலான கடைகளில் பார்க்கிங் வசதி கிடையாது. அவ்வளவு ஏன்... திருச்சியிலேயே மிகப் பெரிய ஜவுளி நிறுவனமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் நிறுவனத்தில்கூட பார்க்கிங் வசதி இல்லை. இங்கே வருபவர்கள் தங்கள் வாகனங்களை மலைக்கோட்டைப் பாதையில்தான் ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்கிறார்கள். மலைக்கோட்டைக்கு வருபவர் களுக்கும் பிரத்யேகமான பார்க்கிங் வசதி இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் ரொம்பவே சிரமப்படுகிறார்கள்’’ என்றார் நாரதர்.
‘‘கோயிலில் திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாட்டுக்கான வாகனங்கள்கூட சரியான பராமரிப்பின்றி இருப்பதாகக் கேள்விப் பட்டோமே..?’’

‘‘ஆமாம். கோயிலுக்குச் சொந்தமான வெள்ளி ரிஷப வாகனம் கடந்த பல வருடங்களாகவே பழுதாகி இருக்கிறதாம். அதற்குப் பதிலாக, ஜிகினா பேப்பர் ஒட்டிய வேறொரு வாகனத்தைப் பயன்படுத்தி வருகிறார்களாம். தங்க மயில் வாகனமும் பரிதாப நிலையில்தான் இருக்கிறது. இவற்றைச் செப்பனிடுவதற்கான எந்த ஒரு முயற்சியையும் நிர்வாகம் எடுக்கவில்லை என்று பக்தர்கள் வருத்தப்படுகிறார்கள்!’’

‘‘கோயில் நிர்வாகத்திடம் இதுபற்றிப் பேசினீர்களா?’’

‘‘திருக்கோயில் இணை ஆணையராக இருப்ப வர் சுரேஷ். அவரிடம் நான் பார்த்த குறைகளைச்

நாரதர் உலா

சுட்டிக்காட்டினேன். ‘இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக என்.எஸ்.பி ரோட்டில் 3,600 சதுர அடியில் பார்க்கிங் இடம் அமைப்பதற்காக ஏலம் விடப்பட்டுள்ளது’ என்றார் அவர். கிரிவலப்பாதையிலும், என்.எஸ்.பி ரோட்டில் அமையவிருக்கும் பார்க்கிங் பகுதியிலும் கழிவறைகள் கட்டுவதற்கான ஏற்பாடுகளும் விரைவில் தொடங்க இருக்கின்றனவாம். செல்போனுக்கு கட்டணம் வசூலிப்பது மற்றும் கட்டாயப்படுத்தி மற்ற டிக்கெட்டுகளை வாங்க வைப்பது போன்ற புகார்கள் ஏற்கெனவே வந்தபோது, சம்பந்தப்பட்டவர்களைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்திருப்பதாகச் சொன்னார். தவிர, ‘கீழே உள்ள கடைகளில் வாழைப்பழத் தாருக்கு அதிகமாக விலை வைத்து விற்பது பற்றி எங்களுக்கும் புகார்கள் வந்தன. எனவே, அதற்கு ஒரு தீர்வாக, இனி கோயில் நிர்வாகமே  வாழைப் பழத் தாரை விற்கும். அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளோம்’ என்றார் சுரேஷ்” என்ற நாரதர், “அதோ பாருங்கள், இருட்டிக்கொண்டு வருகிறது. வருண பகவான் மழையாய்க் கொட்டித் தீர்ப்பதென்று முடிவு செய்துவிட்டால், அந்த ஆதிசேஷனாலும் தாங்க முடியாது. நான் எம்மாத்திரம்! உடனே பத்திரமாய்ப் போய்ச் சேர்கிறேன். அப்புறம் பார்க்கலாம்” என்றபடி நம் பார்வையில் இருந்து சடுதியில் மறைந்தார்.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்