ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
லக்னத்தில் இருந்து 8-ம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக் கிறார். இந்த அமைப்பை பெண் ஜாதகம் பெற்றிருந்தால், அவள் கணவனை இழக்கலாம். அல்லது அவளது தாம்பத்தியம் துயரத்தைச் சந்திக்கவைக்கும் என்கிறது ஜோதிடம் (க்ரூரேஷ்டமே விதவதா...).
பெண் ஜாதகத்தில் அவள் பிறந்த வேளையில் (லக்னம்) இருந்து 7-ம் வீடு (150 பாகை முதல் 180 பாகை வரை இருக்கும் இடைவெளி) வரப்போகிற கணவனின் லக்னம். அதாவது, கணவனிடம் இருந்து கிடைக்கும் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை சுட்டிக்காட்டும் இடம் இது. தற்போது, 7-வது வீடு கணவனின் லக்னமாக மாறிய நிலையில், பெண் ஜாதகத்தில் 8-ல் இருக்கும் செவ்வாய், ஆண் (கணவன்) லக்னத்துக்கு இரண்டில் இருப்பான்.
அந்த இரண்டுக்கு மாரக ஸ்தானம் என்ற தகுதியும் உண்டு. மாரகம் என்றால் உயிரைப் பறிக்கும் இடம். அந்த இடத்தில் வெப்ப கிரகமான செவ்வாய் இருக்கிறார். அவர், அந்த பாவத்தின் செயலை நடைமுறைப்படுத்துபவ ராக மாறிவிடுகிறார். அவருடைய 7-வது பார்வை, கணவனின் ஆயுளைப் (8-ம் வீடு) பறித்துவிடுகிறது. கணவனுடைய 8-ம் இடம், பெண் ஜாதகத்தின் இரண்டாம் இடமான மாரக ஸ்தானமாக இருப்பதால், அவளுக்கு தாம்பத்திய சுகத்தை இல்லாமல் செய்து விடுகிறார்.
பெண்களுக்கு கணவனின் இழப்பு ஏற்படக் கூடாது; ஏற்படும் வாய்ப்பு இருந்தால், தர்ம சாஸ்திரத்தின் அறிவுரையோடு பரிகாரத்தை ஏற்கவேண்டும். கணவனின் இழப்பு அவளது வாழ்க்கையை சூன்யமாக்கிவிடுகிறது. அதற்கு இடமளிக்கக் கூடாது என்பதால் அர்க்க விவாஹம், கும்ப விவாஹம், அச்வத்த விவாஹம் போன்ற தர்மசாஸ்திரத்தின் பரிகாரங்களை ஏற்க வேண்டும்.

தாம்பத்தியத்தின் ஒரு பகுதியான கணவன் மறைந்தால், அவனிடம் இருந்து கிடைக்கும் இன்பமும் மறைந்துவிடும். மழலைச் செல்வம் உருவாகாது. மேலும் வாழ்க்கையில் தற்காப்பு இல்லாமல் போய்விடும். இவற்றையெல்லாம் எண்ணி, பெண்ணினம் கணவனுடன் சேர்ந்து வாழும் வகையில், உரிய ஜாதகங்களை இணைத்து, மக்கள் சேவையில் முனைப்போடு செயல்பட்டார்கள் ஜோதிடர்கள்.
இன்றைக்கு சூழல் முற்றிலும் மாறிவிட்டது. இன்றைக்கு விதவை கோலம் இல்லை. அப்படி யான நிலையும் பெண்ணுக்கு இழுக்கல்ல. கணவன் மறைந்தால் புதிய கணவனைத் தேர்ந்தெடுக்கலாம். விந்து வங்கி மூலம் மழலைகளையும் பெற்றுக்கொள்ளலாம். பெண்கள் படித்து பட்டம் பெற்று வேலை யில் அமர்ந்து பொருளாதார நிறைவில் மகிழ்ச்சியுற்று இருப்பதால், அவளுக்குக் காப்பாளன் தேவையில்லாமல் போய்விட்டது. அவர்கள் சுதந்திரப் பறவைகளாக வளைய வருகிறார்கள். எனவே, பெண் ஜாதகத்தில் 8-ல் இருக்கும் செவ்வாயைப் பார்த்து நடுங்க வேண்டிய அவசியம் இல்லை.
அன்றைய நாளில் பண்பும் கலாசாரமும் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு, பெண் ணானவள் விதவையாக ஆகாமல் இருக்க பாடுபட்டார்கள்.
இன்றைக்கு நடை- உடை, பாவனை அத்தனையிலும் ஆணும் பெண்ணும் சமமாக இருக்கிறார்கள். அன்றாடம், ஆண் உடை களை ஏற்கும் பெண்களும் உண்டு. அன்றைய நாளில் விதவைகளை மணக்க தயக்கம் காட்டுவார்கள்; தற்போது அந்த நிலை இல்லை. விவாகரத்தைச் சந்தித்தவர்கள், அடுத்த திருமணத்தில் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். பண்பை அலட்சியப்
படுத்திவிட்டு, அன்றாட வாழ்க்கை ஆனந்த மாக இருந்தால் போதும் எனும் எண்ணம் இருவரிடமும் உண்டு.
பண்டைய நாளில் ‘மலடி’ என்பது பெண்மைக்குக் களங்கமாகக் கருதப்பட்டது. இன்றைக்கு, குறிப்பிட்ட காலம் வரையிலும் மழலைச் செல்வத்தை சுமையாகக் கருதித்
தவிர்க்கும் அன்பர்களும் உண்டு. அதேபோல், இன்றைக்கு விவாகரத்துத் திருமணங்கள் பன்மடங்கு பெருகிவிட்டன. ஜோதிட பிரபலங்களிடத்திலும், வேதம் ஓதுபவர் களிலும்கூட விவாகரத்து ஏற்கப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய் தோஷத்தை சுட்டிக்காட்டி பொது மக்களை அலைய விடுவது சரியல்ல. தங்களாலேயே விவாகரத் தைத் தவிர்க்க இயலவில்லை எனும்போது, விவாகரத்து நிகழாதபடி செய்துவிடலாம், அதை விலக்கிவிடலாம் என்று புதுப்புது பரிகாரங்களை உதிர்த்து மக்களை அலைக்கழிப்பது அறமாகாது.

எந்த இடையூறுகளையும் பரிகாரத்தால் வென்றுவிடலாம் என்று பாமரர்களை நம்பவைத்து செயல்படுவது தகாது. எந்தவொரு இடையூறையும் பரிகாரத்தால் விலக்கலாம் என்றால், எவருமே ஜோதிடத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லையே; அதன் கணிப்புகள் யாவும் பொய்த்துவிடுமே!
இன்றைய சமுதாயத்தில் என்னதான் நமது பண்புகளைப் புறக்கணித்தாலும், இழப்பால் ஏற்படும் துயரமானது கால மாற்றத்தாலோ, விஞ்ஞான மாறுபாட்டிலோ மறைந்துவிடாது. மறுமணத்தை ஏற்றாலும், அதிலும் கசப் புடன் வாழ்க்கை நடத்துபவர்களும் உண்டு. இரண்டாவதை விலக்கி மூன்றாவது திருமணத்தில் இணைந்தவர்களும், துயரத்தை விலக்கமுடியாமல் தவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, இன்றைய ஜோதிட பிரபலங்கள் மனமுவந்து மக்கள் சேவைக்கு முன்னுரிமை அளித்து அருளவேண்டும்.
‘எட்டாவது வீட்டில் செவ்வாய் இருக் கிறார்’ என்று கட்டத்தில் இருப்பதைப் பார்த்து நிர்ணயம் செய்யக்கூடாது. பாவத்தில் செவ்வாய் எட்டில் இருக் கிறாரா என்று ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். பாவத்தில் இருக்கும் கிரகம் தனது பலனை நடைமுறைப்படுத்தும்; பாவ சந்தியில் இருக்கும் கிரகம் பலனை அளிக்காது என்கிறது ஜோதிடம் (பாவப்ரவ்ருத்தௌஹிபலப்ரவிருத்தி... பாவசந்தௌ விபலோக்ரஹேந்திர).
லக்னத்துக்கு 30 பாகைகள் உண்டு (ராசிக்கு). எந்த பாகையிலும் சிசு உதயமாகலாம். அது உதயமாகும் பாகையை மையமாக வைத்து, முன்பின் பதினைந்து பாகைகள் லக்னத்தின் 30 பாகைகளாக இருக்கும்.
லக்னத்தில் (ராசியில்) முதல் பாகையில் பிறந்தவனுக்கு, அந்த ராசியின் பதினைந்து பாகைகள் வரையும், பின் ராசியில் பதினைந்து பாகைகளும் சேர்த்து முப்பது பாகைகள் வரையிலும் லக்ன பாவமாக விரிவடைந்திருக்கும்.
உதாரணமாக மேஷ ராசியின் முதல் பாகை யில் தோன்றியவனுக்கு மேஷத்தில் முதல் பதினைந்து பாகைகளும், பின் ராசியான மீனத்தின் பிற்பகுதி பதினைந்து பாகைகளும் சேர்ந்து லக்ன பாவம் உருவாகும். இரண்டு ராசிகளிலும் (மீனம், மேஷம்) பதினைந்து பதினைந்து பாகைகள் வியாபித்ததாக லக்ன பாவம் இருக்கும். விருச்சிகத்தில் கடைசி பாகையில் (முப்பதாவது) செவ்வாய் இருந்தால், பார்வைக்கு எட்டில் இருப்பது போல் தோன்றும். பாவ நோக்கில் ஆராய்ந்தால், செவ்வாய் பாவத்தில் 9-ல் வந்து விடுவான். அப்போது 8-ல் செவ்வாய் எனும் சூழல் உருவாகாது; அதை, செவ்வாய் தோஷமாக ஏற்க முடியாது.

எப்படியெனில், மேஷ ராசியில் முதல் பதினைந்து பாகைகளோடு லக்ன பாவம் முற்றுப்பெற்று, 16-வது பாகையில்- 2-வது பாவம் ஆரம்பமாகிவிடும். ரிஷபத்தில் 15-வரையிலும் இரண்டாம் பாவம், மிதுனம் 15 வரையிலும் மூன்றாம் பாவம், கடகம் 15 வரையிலும் நான்காம் பாவம், சிம்மம் 15 வரையிலும் ஐந்தாம் பாவம், கன்னி 15 வரை ஆறாம் பாவம், துலாம் 15 வரை ஏழாம் பாவம், விருச்சிகம் 15 வரை எட்டாம் பாவம். தற்போது, பதினைந்தை தாண்டி 9-வது பாவம் ஆரம்பமாவதால், விருச்சிகத்தில் (8-ம் வீட்டில்) இருக்கும் செவ்வாய், பாவத்தைப் பொறுத்தவரையிலும் 9-க்கு வந்துவிடுகிறார்.
ஆகவே, ஜோதிட பிரபலங்கள், பாவத்தைக் கவனிக்காமல் கட்டத்தில் பார்த்து முடிவெடுப்பது விபரீத விளைவுகளுக்குக் காரணமாகிவிடுகிறது.
ஜோதிட பிரபலங்களுக்கு உதவும் எண்ணத் தில் ராசி, அம்சகம், பாவம் என்று மூன்று கட்டங்களைத் தருகிறது கணினி. அம்சகம் என்ற கட்டம், கிரகமானது ராசியில் எந்த நவாம்சத்தில் இருக்கிறது என்று இறுதி செய்யும். பாவம் என்ற கட்டம், லக்ன பாவத்தின் மையப்பகுதி எந்த பாகையில் விழுந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும். எனவே, பாவத்தை உணர்ந்து பலன் சொல்ல முற்பட வேண்டும்.
ஜூன் 1-ம் தேதி வேலையில் அமர்ந்தான் ஒருவன். ஜூன் 29-ம் தேதி இன்னொருவர் வேலையில் இணைந்தார், இருவரும் ஜூன் மாதத்தில் இணைந்தவர்கள்தான். அதற்காக அந்த இருவருக்கும் அந்த மாதத்துக்கான சம்பளத்தை ஒரே அளவில் கொடுக்க மாட்டோம். தேதி மாற்றத்துக்கு ஏற்ப சம்பள அளவும் மாறுபடும்.
360 பாகைகளை உள்ளடக்கியது ராசிச் சக்கரம். அதில் எந்தப் பாகையிலும் பிறப்பு நிகழலாம். பிறப்பு நிகழ்ந்த வேளையானது, ராசியின் 15 பாகைகளில் (நடுப்பகுதி) பிறக்கவேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது. ராசியை வைத்து லக்னத்தை நிர்ணயம் செய்யக்கூடாது. பாகைகளை வைத்து நிர்ணயம் செய்ய வேண்டும். கிரகங்களின் பயணத்தைக் கணக்கிட 30 நாட்களை வைத்துப் பிரித்து இருக்கிறோம். பூமி தன்னைத் தானே சுற்றும் வேளையை வைத்து லக்னம் உருவாகும். கிரகங்களின் பயணத்தைச் சுட்டிக்காட்டும்படி ராசிகள் (30 பாகைகள்) எனும் பிரிவு பயன்படுகிறது.
சூரிய உதயத்தில் இருந்து அடுத்த சூரிய உதயம் வரையிலும் இருக்கும் இடைவெளியில் (தோராயமாக 24 மணிநேரம்) பன்னிரண்டு ராசிகளும் ஒரு சுழற்சியை முடித்துவிடும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒவ்வொரு ராசியாக மாறி மாறி 24 மணி நேரத்தில் 12 ராசி முடிந்துவிடும். ஒரு ராசியின் அளவு இரண்டு மணி நேரம். பிறப்பவர்கள், ராசியில் ஒரு மணிநேரம் கழித்து அடுத்த மணிவேளை ஆரம்பிக்கும்போதுதான் பிறக்க இயலும் என்பதில்லை. 24 மணிநேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம். ஆகவே, ராசிக் கட்டத்தின் எல்லையை வைத்து லக்னத்தை இறுதி செய்ய இயலாது. பாவக் கட்டத்தை ஆராய்ந்து பலன் சொல்லும்போது, உண்மையான விளக்கம் உருவாகும்.

கணினியானது கணிதத் தகவல்களை விரிவாகத் தருகிறது. ஆனாலும், பலன் சொல்லப் பயன்படும் கணிதப் பிரிவுகளை ஏற்கும் பொறுமையும், சேவை மனப்பான்மை யும் ஜோதிட பிரபலங்களிடம் வளர வேண்டும். பாவக் கட்டம், அம்சகக் கட்டம் இல்லாமல் ராசிக் கட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு பலன் சொல்லும் பிரபலங்கள் இன்றைக்கு பரவலாகத் தென்படுகிறார்கள்.
அவர்களில் சிலர், 10 பொருத்தங்களை மட்டும் குறிப்பிட்டு பலனை முடித்து விடுவார்கள். ராசிக் கட்டத்தைப் பார்க்கா மலேயே 10 பொருத்தங்களை விளக்கி விடலாம். அவர்களுக்கு ராசிக் கட்டமும் தேவை இருக்காது. பத்து பொருத்தங்களும் நட்சத்திரத்தை வைத்து எழுந்ததால், அவர் களுக்கு ராசிக் கட்டமும் ஒரு பொருட்டல்ல. இருந்தாலும் ராசிக் கட்டத்தை ஒப்புக்கு கையில் வைத்துக்கொண்டு, கையேடு களில் விளக்கப்பட்டிருக்கும் பத்துப் பொருத்த விளக்கங்களை அனாயாசமாக சொல்லிவிடுவார்கள்!
ஜோதிடத்தைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத சிலரும் கூட, கையேடு விளக்கத்தை அப்படியே ஒப்பித்து பலன் சொல்லி விடுவார்கள். இப்படி, முறையாக ஜோதிடத்தைப் படிக்காதவர்களும் ஜோதிட பிரபலங்களாக விளங்குகிறார்கள். மக்களுக்கு அவர்களை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. இதெல்லாம் நமது துரதிருஷ்டம்!

லக்னத்தை எப்படி கணிப்பது, ராசியில் கிரகங்களின் பயணத்தை எப்படி தெரிந்துகொள்வது முதலான விஷயங்களை அறியாதவர்களும்கூட, ஜாதகப் பொருத்தமும், பலனும் சொல்பவர்களாகத் திகழ்கிறார்கள். செவ்வாய் தோஷத்தை நிர்ணயிக்கவும், பலனை இறுதி செய்யவும் ஜோதிட கணிதத்தையும், பலன் சொல்லும் பகுதியையும் நன்கு அறிந்திருக்கவேண்டும். இல்லையெனில் வீண் விபரீதங்களையே சந்திக்க நேரிடும்.
கணித முறையை அறிந்து, பாவ முறைப்படிக் கிரகங்களின் இருப்பை உணர்ந்து, பலன் சொல்லத் துணிந்தால் மக்களுக்கு சேவை செய்ததாக ஆகும்.
பெண் ஜாதகத்தில் 8-ல் செவ்வாயைப் பார்த்துவிட்டு, ஆண் ஜாதகத்திலும் 8-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகமாகப் பார்த்து சேர்த்துவைக்கும் துணிவு, பிரபலங்களுக்கு வரக்கூடாது. சில ஜோதிட பிரபலங்களின் மதிப்பீட்டால் ஏற்பட்ட விவாகரத்துக்கள் எண்ணிக்கையில் அதிகமாகத் தென்படுகிறது. இனி வரும் காலங்களில், இதுபோன்ற தவறுகள் நிகழாதவாறு எச்சரிக்கையுடன் செயல் பட்டால், ஜோதிடத்தின் முழுப் பயனையும் நாம் அனுபவித்து மகிழலாம்.
- தொடரும்...