சித்திர ராமாயணம்பி.ஸ்ரீ. ,ஓவியங்கள்: சேகர்
ஆலயமும் அதிசயங்களும்...
கர்நாடகாவில் அமைந்திருக்கும் பேலூர், ஹலேபீடு ஆகிய இரண்டு இடங்களும் சிற்பக்கலை யின் பெருமைக்குச் சாட்சியாக இருப்பவை ஆகும். நாம் கலசாவிலிருந்து புறப்பட்டு, முடுகிரி வழியாக ஹாஸன் மாவட்டத்திலுள்ள பேலூருக்குப் பயணமானோம்.
பேலூர், ஹலேபீடு இவ்விரண்டும் நம் சிற்பக் கலையின் பெருமைக்கு மெருகூட்டும் கலைக் கூடங்கள். கர்நாடகக் கலைஞர்களின் திறனுக்குச் சின்னமாகத் திகழும் சிருங்கார ஆலயங்கள். மாமன்னர்களின் தெய்வ பக்தியையும் கலைத் தொண்டையும் என்றென்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் அற்புத சாதனைகள்.
பேலூரைக் கண்டபோது பேச்சடைத்துப் போனோம். எந்த அழகை ரசிப்பது, எந்த நகாசு வேலையைப் பாராட்டுவது, எந்த அற்புதத்தைக் கண்டு வியப்பது என்றே புரியாமல் திணறினோம். கருங்கல்லில் கையுளி தன் இஷ்டத்திற்கு விளையாடியிருக்கிறது.
அது சென்னகேசவப் பெருமாள் ஆலயம். எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் விஷ்ணுவர்த்தனன் என்ற ஹாய்சால மன்னன் கட்டிய கோயில். அவன் நிறுவிய பஞ்ச நாராயணர்களில், இங்கு உறைபவர் ஸ்ரீகேசவநாராயணராவார். கற்பீடத்தைச் சேர்த்துச் சுமார் பதினைந்து அடி உயரமிருக்கும். கருங்கல்லாலான, கம்பீரமான அந்த உருவச் சிலை, ஜீவகளையோடு திகழ்கிறது.

அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலும் கருவறை யின் நுழைவாயிலும், சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த சிருங்காரக் கற்பலகைகள். இருபுறமும் நிற்கும் ஜய, விஜயர்கள் அழகு வடிவங்கள்.
நவரங்கம் என்று அழைக்கப்படும் மகா மண்டபத்தில் நிற்கும்போது பளிங்குச் சித்திரக் கூடத்தில் இருப்பது போன்ற ஓர் எண்ணம் தோன்றுகிறது. கருங்கல்லில் அத்தனை பாலிஷை எப்படித்தான் ஏற்றினார்களோ? நாற்கால் மன்டபத்தில் நிற்கும்போது கால் வழுக்குகிறது. உயரே நிமிர்ந்து பார்த்தால், ஒரு தனிக் கலையுலகமே அங்கு காட்சி தருகிறது. நான்கு மூலைகளிலுமுள்ள அழகு பிம்பங்களைக் காண்கிறோம். நடன கன்னிகையின் லாவண்யத்தில் மனதைப் பறி கொடுக்கிறோம்.
நவரங்க மண்டபத்திலுள்ள ஒரு தூண் நம் கவனத்தை மிகவும் ஈர்க்கிறது. அருகில் சென்று பார்க்கிறோம். மேலிருந்து அடிவரை சிற்ப, சித்திர வேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. அதில் எத்தனையோ தேவதைகள், தெய்வங்கள், புராண நிகழ்ச்சிகள். அதன் பெயர் நரசிம்ம தூணாம். அந்தக் கோயிலின் ஆகமம் முழுவதும் அதில் அடக்கமாயிருப்பதாகப் பட்டர் கூறினார்.
இக்கோயிலில், சித்திரை மாதம் நடைபெறும் ரதோற்சவம், பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகிறார்கள். பிரதான கோயிலைச் சுற்றிலும் வெளிப்புறத்தில் பாரத, பாகவத, ராமாயணக் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
அந்த ஆலயத்தில், ஒரு பொறியியல் அதிசயத்தையும் கண்டோம்.
அங்கு நாற்பதடி உயரமுள்ள ஒரு கற்கம்பம் இருக்கிறது. அது ஒரு பீடத்தில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால், குனிந்து பார்த்தால், அந்த பீடத்திற்கும் கம்பத்திற்குமிடையே இடைவெளி இருப்பது தெரிகிறது. ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் மற்றொருபுறம் நன்றாகத் தெரிகிறது. நாம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, நம் அருகில் வழிகாட்டி வருகிறார். ஒரு பேப்பரை மடித்து நான்கு மூலைகளிலும் செருகி, வெளியேயிழுக்கிறார். 'பீடத்தோடு சேராமல், அதன் மீது பதியாமல் இருக்கும் அந்த உயர்ந்த கம்பம் எப்படி விழாமல் நின்று கொண்டிருக்கிறது என்பதை அறியச் சாதாரண அறிவு போதாது; விஞ்ஞான அறிவு வேண்டும்' என்கிறார் அவர்.
** 28.10.73 ஆனந்த விகடன் இதழில் இருந்து...
அழகும் அழகு பெற்றது!
'பொன்னின் ஜோதி’யென்கிறான் சீதையின் ஸ்வர்ண சோபிதமான தேஜஸை. அந்த அழகின் ஸூக்ஷ்மமான மென்மையை, இனிமையைப் 'பூவின் நறுமணம்’ என்கிறான்; பூவின் ஸாரமாகிய தேனின் ஸாரமாகிய 'தீஞ்சுவை’யென்கிறான். கடைசியாகக் 'கவியின்பம்’ என்றே முடி சூட்டிப் பார்க்கிறான் கவிஞன், 'சீதை’ என்ற நவ யௌவன சௌந்தர்ய சிகரத்தை.
எந்தப் பெண்ணை யார் வர்ணிப்பதாயினும் ''இவள் அழகுத் தெய்வமாகிய ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி போலிருக்கிறாள்!' என்பதுதானே உபமான சிகரம்? ''அந்த மஹாலக்ஷ்மிதானே இந்தச் சீதாலக்ஷ்மியாக வந்திருக்கிறாள்! அப்படியிருக்கும்போது, இந்த லக்ஷ்மிக்கு இந்த லக்ஷ்மியேதான் உபமானம்! என்று சொல்வதை விட்டு, வேறொரு உவமையை எங்கே தேடி எப்படிக் கண்டுபிடிப்பது?' என்கிறான்.

பெண் கனி
சீதையின் அழகைக் குறித்து எவ்வளவோ பயபக்தியை உண்டு பண்ணிவிட்ட கவிஞன், இனி இவளையும் ஒரு காதற் பெண்ணாகக் காட்டப் போகிறான். இதற்காக அந்தப் பேரழகு குடிகொண்ட விழியை வர்ணிக்கிறான்.
'கொல்லும் வேலும் கூற்றமும்
என்னும் இவைஎல்லாம்
வெல்லும்! வெல்லும்!’ என்னம
தர்க்கும் விழிகொண்டாள்!
சொல்லும் தன்மைத் தன்(று) அது;
குன்றும் சுவரும், திண்
கல்லும் புல்லும் கண்டுரு
கப்பெண் கனிநின்றாள்.
அந்த விழிகளில் கொல்லும் வேலையும் யமனையும் வெல்லக்கூடிய சக்தியும் இருக்கிறது; கல்லையும் புல்லையும் உருகச் செய்யும் சக்தியும் இருக்கிறதாம். பெரிய குன்றும் சிறிய சுவரும், வன்மையான கல்லும் மென்மையான புல்லும் எல்லாம், எப்படியோ அந்தத் தெய்வ அழகைக் கண்டு உருகிக் கொண்டிருக்கின்றனவாம். அசேதனமான கல்லும் புல்லுங்கூடக் கண்டு உருகுவதென்றால், கண் படைத்த பயனாய்ச் சீதையைக் கண்டு கொண்டிருக்கும் தோழிப் பெண்கள் முதலானோர் எவ்வளவு இன்பமடைந்து எப்படி உருகிக் கொண்டி ருப்பார்கள்! காவிய நாயகன்தான் எப்படியெல்லாம் உருகப் போகிறானோ என்பதும் குறிப்பு.

சீதையைப் 'பெண் கனி’ என்று குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது. பெண்மை என்ற கல்பக விருக்ஷத்திலே எத்தனையோ மஹா யுகங்களுக்கு இடையே அபூர்வமாய்க் கனிந்து வரும் கனி அல்லவா? இப்பெண் கனியைப் பெண்மை என்ற அழகுக் கடலிலே தோன்றிய அமிர்தம் என்றும் குறிப்பாகக் காட்டுகிறான்.
திருவள்ளுவரும் கம்பரும்
விசுவாமித்திர ராம லக்ஷ்மணர்கள் கன்னி மாடத்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. விசுவாமித்திரனும் லக்ஷ்மணனும் போய்க் கொண்டுதான் இருந்தார்கள். அப்போது ராமன் கண்கள் தற்செயலாய்க் கன்னி மாடத்தில் நின்ற பெண்மணியைப் பார்த்து விட்டன. சீதையும், அருகே உள்ள அகழித்துறையில் பெண் அன்னமும் ஆண் அன்னமும் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தவள் ராமனையும் பார்த்து விட்டாள். இருவர் கண்களும் அப்படிச் சந்தித்ததும், சீதையின் கன்னி உள்ளத்திலும் ராமனது பிரம்மசரிய உள்ளத்திலும் காதல் பிறந்து விட்டது.
இத்தகைய காதல் நோக்கத்தைத் தமிழர்களின் ஸமரஸ ஸன்மார்க்க வேதமாகிய திருக்குறளும் குறிப்பிடுகிறது. எவ்வளவு சொற்செட்டுடனும் பொருள் வேகத்துடனும் குறிப்பிடுகிறது:
கண்ணொடு கண் இணை நோக்(கு)ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.
கண்ணும் கண்ணும் ஒத்துப் போனால் வாய்ச்சொல் எதற்கு? என்னும் இக்குறளைத் தழுவியே கம்பனும் காதலர் காட்சியைச் சித்திரிக்கிறான்:
எண்ணரு நலத்தினாள் இணையள் நின்றுழி,
கண்ணொடு கண்இணை கவ்விஒன் றைஒன்(று)
உண்ணவும் நிலைபெறா(து) உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!
கண்களைக் கண்கள் கவ்வி ஒன்றை ஒன்று உண்ணுகின்றனவாம். காதலுக்குத்தான் என்ன பசி! உடனே இருவர் உணர்வுகளும் தத்தம் இடத்திலே நிலைபெற்றிராமல் இசைந்து ஒன்றாகிவிடுகின்றன.
சாதாரணமாய்த் தமிழ்க் கவிஞர்கள் இத்தகைய காட்சியைக் குறிப்பிடும் போது ''அவளும் நோக்கினாள்' என்று தைரியமாகச்சொல்லி நிறுத்திவிடமாட்டார்கள். 'அவள் நோக்கியதும் நாணித் தலை குனிந்தாள்’ என்பார்கள். அல்லது, 'நாணிக் கோணிய முகத்துடன் கடைக்கண்ணால் நோக்கினாள்’ என்பார்கள். கம்பனோ ஹிந்து மஹா ஜனங்களின் லக்ஷ்ய ஸ்திரீ புருஷராகிய சீதாராமர்களையும் துணிந்து காதலராக்கி, பின்னும் அதிகமான துணிவுடன்,
அண்ணலும் நோக்கினான்,
அவளும் நோக்கினாள்
என்று பாடுகிறான்.
வரிசிலை அண்ணலும்
வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப்புக்(கு)
இதயம் எய்தினார்!
ராமன் சீதையின் ஹிருதயத்திலே புகுந்து விடுகிறான். ராமன் ஹிருதயத்தில் சீதையும் புகுந்துவிடுகிறாள். சீதையின் கன்னியுள்ளம் பாதுகாப்புடைய ஒரு கோட்டை என்பது குறிப்பு. அதனால்தான் ராமனை, 'வரிசிலை அண்ணல்’ என்கிறான் கவிஞன். வில்லும் கையுமாய்ப் புகுந்து வீரன் கன்னி மனக்கோட்டையைக் கைவசமாக்கிக் கொள்ளுகிறானாம்.

பிரிந்தவர், கூடிப் பிரிந்தார்!
வாமனாவதாரத்தில் உலகத்தையெல்லாம் அளந்து சிவந்த திருவடிகளுடன் பகவான் தன் பாற்கடல் வீட்டுக்குத் திரும்பிப் போனார் அல்லவா? அப்போது தேவி தன் சிவந்த கைகளால் அந்தக் காலைத் தொட்டுத் தடவிக் கொண்டே, ''இனிமேல் இப்படித் தனியே அலைந்து திரியலாகாது, என்னையும் உடன் அழைத்துப் போக வேணும்' என்று கெஞ்சினாள். மஹாபலியை அடக்கி மீண்ட மஹாவிஷ்ணு, ''இனி ராமாவதாரம்; ராவணாதி ராக்ஷஸர்களை அடக்கப் போகிறோம்' என்று தமது நிகழ்ச்சிக் குறிப்பிலே அடுத்து வரப் போகும் அந்த நிகழ்ச்சியைப் பிரஸ்தாபித்ததும், மஹாலக்ஷ்மி, ''அப்போது நானும் கூட வருவேன்' என்று பிடிவாதம் செய்தாள். அதனால்தான் அவள் ஸீதா லக்ஷ்மியாகி ராமனோடு காடும் மேடும் சுற்றித் திரிந்து படாத பாடுபட நேர்ந்ததாம். மகாபலி கதையிலும் 'மிதிலைக் காட்சி’யிலும் கம்பன் உய்த்துணர வைக்கும் அதிகக் கதை இது.
மஹா விஷ்ணு தசரத புத்திரனாய்ப் பிறக்க வேண்டுமென்று தீர்மானித்ததும், தேவியையும் எப்படி அழைத்துப் போவது என்பது ஒரு பிரச்னையாகி விட்டது. விரைவில் மஹாலக்ஷ்மி ஜனககுல சுந்தரியாக மிதிலையில் பிறக்க வேண்டும் என்ற தீர்மானத்திலே பிரச்னையும் தீர்ந்தது. எனினும் ஆரம்பத்தில் பிரிவு பிரிவுதானே?
பாற்கடல் வீட்டிலிருந்து முதல் முதல் புறப்பட்டவர் மஹா விஷ்ணு; ஸஹதர்மிணியிடம் விடைபெற்று நீங்கி அயோத்தியில் போய்ப் பிறந்து விட்டார். பிறகு மஹாலக்ஷ்மியும் பாற்கடலை விட்டு நீங்கி மிதிலைச் செல்வியாகப் பிறந்து விட்டாள். இப்போது ராமன் மிதிலைக்கு வந்ததும் சீதையைக் கண்டானல்லவா? இந்தக் காட்சியைப் 'பிரிந்தவர் கூடியது’ என்றே கம்பன் குறிப்பிடுகிறான்.
பாற்கடலில் பிரிந்தவர்கள் மிதிலையில் கூடினார்களாம்:
மருங்கிலா நங்கையும்
வசையில் ஐயனும்
ஒருங்கிய இரண்(டு) உடற்(கு)
உயிர்ஒன்(று) ஆயினார்:
கருங்கடல் பள்ளியில்
கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால்,
பேசல் வேண்டுமோ?
கண்ணோடு கண் பேசிக் கொண்டதைத் தவிர வேறு பேச்சு நிகழவில்லை. பேச்சு எதற்கு?
பிரிந்தவர் கூடினால்
பேசல் வேண்டுமோ?
என்றே கேட்டு விடுகிறான் கவிஞன். இதுவும் ஒரு மகாவாக் கியம் ஒரு காதல் ஸூத்ரம்.
அண்ணலும் நோக்கினான்,
அவளும் நோக்கினாள்
என்பது போலே. இதற்கும் ஒரு மகா பாஷ்யம் எழுதக் கூடும். ராமன் போய்க் கொண்டேயிருக்கிறான் விச்வாமித்திரரோடும் தம்பியோடும். சீதையோ அசைவற்றுக் கண்களும் இமையாத நிலையில் சித்திரப் பதுமை போலவே நின்று விடுகிறாள். இவள் சிந்தையும் மனவுறுதியும்கூட ராமனைத் தொடர்ந்து போகின்றன.

மேனி அழகும் போய்விடுகிறதாம் ராமனோடு. விரக தாபத்தால் அவ்வளவு விரைவாக அழகு மழுங்கத் தொடங்குகிறது என்பது குறிப்பு. இப்படி அழகு ஒருவாறு மழுங்கிய நிலையில்தான் சீதையும் சித்திரப் பதுமை போல் இருக்கிறாளாம். இல்லாவிட்டால் எந்தச் சித்திரப் பதுமையைத்தான் சீதையென்ற ரூபசித்திரத்திற்கு ஈடாகச் சொல்ல முடியும்?
இயன்றவரை மனத்தை அடக்க முயன்றவள்தான். தன்னடக்கம் என்ற அங்குசத்தால் மனம் என்னும் யானையை அடக்கிக் கொண்டுதான் இருந்தாள். ராமன் தன் கண் பார்வையிலிருந்து மறையும் வரையில் அங்குசத்திற்கும் வெற்றிதான். ஆனால் ராமன் மறைந்ததும் நிகழ்ந்ததென்ன?
மனமெனும் மத்த யானையின்
நிறையெனும் அங்குசம் நிமிர்ந்து போயதே!
சீதையின் கண்வட்டத்திலிருந்து ராமன் மறைந்த மாத்திரத்திலேயே இவளுடைய காதல் மிகுந்த மனம் என்ற யானையும் அடங்காது ராமனோடு செல்லத் தொடங்கி விட்டதாம். அதை அடக்குவதற்கு மனவுறுதி என்ற அங்குசத்தை மாட்டி இழுக்கிறாள். ஆனால் யானை மதயானையாகி அங்குசத்தின் கொக்கியை நிமிரச் செய்துகொண்டு திமிறிப் போய் விடுகிறதாம். பிரிந்தவர் கூடிய இன்பத்தைப் பேச முடியுமோ என்றான் கவிஞன். பிரிந்தவர் கூடிப் பிரிந்த துன்பத்தைத்தான் பேச முடியுமா?
** 12.11.44, 19.11.44 மற்றும் 26.11.44 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து.