Published:Updated:

இயற்கை காதலர்களை ‘வருக வருக’வென அழைக்கும் ஈசன் மலை! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் - 7

இயற்கை காதலர்களை ‘வருக வருக’வென அழைக்கும் ஈசன் மலை! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் - 7
இயற்கை காதலர்களை ‘வருக வருக’வென அழைக்கும் ஈசன் மலை! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் - 7

இயற்கை காதலர்களை ‘வருக வருக’வென அழைக்கும் ஈசன் மலை! காடு, மலை தாண்டி கடவுளைத் தேடி..! பரவசப் பயணம் - 7

ஏதோ ஒன்றைத் தேடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்வதுதான் பயணம் அல்லது யாத்திரை.

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே பயணிக்கவே செய்கின்றன. உயிருள்ளவை மட்டுமல்ல, உயிரற்றவையும் பயணிக்கின்றன. கோள்கள், துணைக்கோள்கள் என அனைத்துமே இந்தப் பால்வீதியில் ஒரு தாளலயத்தோடு பயணிக்கவே செய்கின்றன. ஊழிக் காலம்வரை இந்தப் பயணம் தொடரவே செய்யும். விலங்குகளும் பறவைகளும்கூட இரை தேடியும், சீதோஷ்ண சூழலுக்காகவும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணிக்கின்றன. அப்படியிருக்க, மனிதன் மட்டும் வெந்ததைத் தின்று நான்கு வீதிகளுக்குள் அடங்கிக் கிடப்பது நியாயமா? 50 கி.மீ தொலைவும், 500 வார்த்தைகளும் மட்டுமே எல்லையாகக் கொண்டு வாழும் மனிதர்கள் உண்மையில் பரிதாபத்துக்கு உரியவர்கள்தான்.

பயணங்கள் நீளும்போதுதான் மனிதர்களின் அறிவும் மனமும் விசாலமாகிறது. ஓடினால்தான் நீர், தேங்கி விட்டால் சகதிதான். பயணங்கள் அனுபவத்தைக் கொடுக்கிறது என்றால், ஆன்மிகம் சார்ந்த பயணங்கள் அதாவது யாத்திரைகள் சகலத்தையும் அறியச்செய்கிறது; மெய்ஞ்ஞானத்தை உணரச்செய்கிறது; அனைத்துக்கும் மேலாக சகல ஜீவன்களை நேசிக்கவும் செய்கிறது. இங்கு எல்லாமே இறைவனின் படைப்புதான் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அப்படி ஒரு மாற்றத்தை நமக்குள் ஏற்படுத்துவதுதான் புனித யாத்திரையின் நோக்கம்.

ஞானமலை யாத்திரையின்போதும் தொடர்ந்த ஈசன்மலை யாத்திரையின்போதும் நாம் பெற்ற படிப்பினை இதுதான்.

அடர்ந்த மரங்கள், குளிர்ந்த காற்று, சலசலக்கும் நீரோடைகள், சங்கீதம் பாடும் பறவைகள் என இயற்கையே சாட்சியாய், இறைவனுடைய ஆட்சியின் மாட்சிமையை நமக்குக் கூறிக்கொண்டிருந்த ஈசன் மலை எங்களுக்கு உண்மையிலேயே அற்புத ஆனந்தப் பரவசத்தை நமக்குத் தந்துகொண்டிருந்தது.

நாம் தியானம் செய்த இடத்திலிருந்து பார்த்தபோது மலையுச்சி தெரிகிறது. மலையின் உச்சியிலும் ஒரு சிவலிங்கத் திருமேனி இருப்பதாகவும், அங்கே சித்தர்கள் வழிபாடு செய்வதாகவும் சொல்லப்படுகிறது. அந்த இடத்துக்குச் செல்வது மிகவும் சிரமமான செயல் என்பதாலும், திரண்டு வந்த மேகங்களால் இருள் சூழ்ந்துவிட்டபடியாலும், மேலும் மலை உச்சிக்குப் போக முடியவில்லை. முருகப்பெருமானின் ஆலயம், வெண்நாவல் மரத்தடி ஜம்புகேஸ்வரர், காளப்ப சித்தரின் சமாதி போன்றவற்றை மீண்டும் ஒருமுறை நின்ற இடத்திலேயே தரிசித்துவிட்டு கீழே இறங்கத் தொடங்கினோம். எதிரே மலைமீது மயில் ஒன்று அகவியபடியே ஓடி மறைந்தது கண்டு சிலிர்த்துப்போனோம். ஆம், அது ஒரு இன்பமான சிலிர்ப்பை, பரவச உணர்வை எங்களுக்குள் ஏற்படுத்தியது. 'ஈசனின் படைப்புகள் எல்லாமே எத்தனை அழகு!' என்று எண்ணி மனம் சிலிர்ப்படைந்தது.

வழியெங்கும் விதவிதமான நறுமணங்களை நம்மால் நுகர முடிந்தது. வேறெங்கும் காணவே முடியாத மரம், செடி, கொடிகள் காற்றில் கையசைத்து நம்மை வழியனுப்பின. ஈசனும், அவர்தம் திருக்குமாரனும் ஒன்றாகச் சேர்ந்து அருளாட்சி செய்யும் இந்த பசுமை மலை, பரவசத்தை அருளும் ஈசன் மலை, அசுத்தம் என்பதே இல்லாத அழகிய மலை; அற்புதமான மலை. வந்து பார்ப்பவர்களுக்கு பரவசநிலையை அருளும் ஈசன்மலை, இயற்கையை நேசிக்கும் எவருக்குமே மிகவும் பிடித்தமான மலையாகத் திகழும் என்பதில் சந்தேகமே இல்லை.

வள்ளிமலை.. திருத்தணிகைமலை தரிசிப்பவர்கள் இந்த ஈசன்மலைக்கும் வரவேண்டும்; இயற்கையழகை ரசிப்பதுடன், இறையருளையும் பெற்றுத் திரும்பவேண்டும். திருத்தணி, வள்ளிமலை கோயிலுக்கு வருபவர்கள், இந்த ஈசன் மலைக்கும் வரலாம். இறைவனோடு, எழில்கொஞ்சும் இயற்கையையும் தரிசிக்கலாம். வள்ளிக்குறமகளோடு வாசம் செய்யும் குமரனையும், வான் முகில்கள் கொஞ்சி விளையாட வெட்டவெளியில் காட்சி தரும் ஜம்புகேஸ்வரரையும் தரிசிக்க மட்டுமல்ல, உங்களை நீங்களே உணர்ந்துகொள்ளவும் இந்த மலை உங்களுக்கு உதவக்கூடும். அதற்காகவாவது இங்கு வரலாம். மனம் நிறைய அமைதி நிரம்பியிருந்தாலும் எதோ ஒன்றை விட்டுவிட்டு வந்ததைப்போல பிரிய மனமில்லாமல் விடைபெற்றோம் ஈசன் மலையிடமிருந்து. ஒரு யோகியைப்போல இறுக்கமாக அதுவும் எங்களை வழி அனுப்பி வைத்தது. கிணற்றுக்குள் வானம் தெரியலாம், ஆனால், கிணற்றுக்குள் கிடப்பதே வானமில்லை. யாத்திரைகள் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் கொஞ்சமேனும் இறைவனின் இருப்பினை உணர்ந்துகொள்ள முடியும். மீண்டும் வேறொரு மலைத் தலத்தினை இங்கே தரிசிப்போம்.

ஈசன்மலை, ராணிப்பேட்டை - சித்தூர் சாலையில் ராணிப்பேட்டையிலிருந்து சுமார் 26 கி.மீ தொலைவில் உள்ளது.

யாத்திரை தொடர்கிறது ...

அடுத்த கட்டுரைக்கு