Published:Updated:

ஆலயம் தேடுவோம்

யானைக்கு அருளிய கஜேந்திர வரதராஜர்எஸ்.கண்ணன்கோபாலன்

ஆலயம் தேடுவோம்

யானைக்கு அருளிய கஜேந்திர வரதராஜர்எஸ்.கண்ணன்கோபாலன்

Published:Updated:

காவிஷ்ணுவுக்கு ப்ரீதியான விஷயம் என்னவாக இருக்கும் என்று கேட்டால், `உலக உயிர்களைக் காப்பாற்றுவதுதான்' என்று கொஞ்சமும் யோசிக்காமல் சொல்லிவிடலாம். காத்தல் கடவுள் அல்லவா?! அதன்பொருட்டே பகவான் அர்ச்சாமூர்த்தங்களாக எண்ணற்ற புனிதத் தலங்களில் எழுந்தருளி இருக்கிறார். ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்விய தேசங்களைத் தவிர, பெருமாள் அருளாட்சி புரியும் இன்னும் பல எண்ணற்ற திருத்தலங்கள் நம்முடைய புனித பூமியில் அமைந்திருக்கின்றன.

பக்தர்களைக் காப்பதற்காக பகவான் மகாவிஷ்ணு புரிந்த அருளாடல்களில் ஒன்றுதான், முதலையின் பிடியில் அகப்பட்டு உயிருக்குப் போராடிய யானை கஜேந்திரனின் அபயக்குரல் கேட்டு அருள்புரிந்த திருக்கதை.

ஆலயம் தேடுவோம்

அப்படி பெருமாள் அருளாடல் புரிந்ததாகச் சொல்லப்படும்  திருத்தலம் பற்றிக் கேள்விப்பட்டு தரிசிக்கச் சென்றோம். பெருமுளை என்று முற்காலத்தில் அழைக்கப் பெற்ற திருவிளையாட்டம் என்ற ஊரில் அமைந்திருக்கும் கோயிலை அடைந்தபோது, நமக்கு பெருத்த ஏமாற்றமும் வருத்தமும்தான் ஏற்பட்டது.

அங்கே ஆலயம் ஒன்று இருந்தது என்பதற்கான தடயமே இல்லை. பரந்து விரிந்திருந்த வெட்டவெளியில் ஓர் ஓரத்தில் இருந்த கொட்டகையில்தான் பிராட்டிமார்களுடன் பெருமாள் சேவை சாதித்துக் கொண்டிருந்தார். ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் அந்த ஆலயத்தைப் பற்றி வெளியிடலாமே என்ற எண்ணத்துடன், கோயிலின் பரம்பரை அறங்காவலரான முத்து சாமி என்ற பெரியவரிடம் பேசியபோதுதான், காலம்காலமாக செவிவழியாக வழங்கப்பட்டு வரும் அந்தக் கோயிலின் தலவரலாறும், தற்போது திருப்பணிக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ள விவரமும் நமக்குத் தெரியவந்தன!

ஆலயம் தேடுவோம்

யானைக்கு அருள்புரிந்து கஜேந்திரவரதராக பெருமாள் அந்தத் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதற்குச் செவிவழியாகச் சொல்லப்படும் வரலாறு இதுதான்...

இந்திரத்துய்மன் என்னும் அரசன் அகத்தியரின் சாபத்தால் யானையாக மாறி, இந்தப் பகுதியில் இருந்த வனப் பகுதியில் திரிந்துகொண்டிருந்தான். அதே பகுதியில் இருந்த பொய்கை ஒன்றில், கந்தர்வன் ஒருவன் முனிவர் ஒருவரின் சாபத்தின் காரணமாக முதலையாக மாறி வசித்து வந்தான். ஒருமுறை யானை அந்தப் பொய்கைக்குச் சென்றபோது, அங்கிருந்த முதலை யானையின் காலைப் பிடித்து இழுத்தது. எத்தனையோ போராடிப் பார்த்தும் முதலையின் பிடியில் இருந்து யானையால் விடுபடமுடியவில்லை. பொறுக்க மாட்டாத வலியுடன் தவித்த யானை, பூர்வஜன்ம விஷ்ணு பக்தியின் காரணமாக இறைவனை நினைத்து, ‘ஆதிமூலமே, அனாதரட்சகா’ என்று அபயக்குரல் கொடுத்தது. அபயம் என்று அழைத்த உடனே ஓடிவந்து காப்பாற்றுவதுதானே
விஷ்ணுவுக்குப் ப்ரீதியானது!

அவரும் உடனே அங்கே தோன்றி யானையை முதலையின் பிடியில் இருந்து காப்பாற்றி, யானைக்கு மோட்சம் அருளினார். (இதேபோன்ற வரலாறு திருநெல்வேலி மாவட்டம் அத்தாள
நல்லூர், தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் போன்று வேறுசில தலங்களிலும் சொல்லப்படுகிறது).

தொன்மை வாய்ந்த இந்தத் திருக்கோயில் காலப் போக்கில் சிதிலம் அடைந்து, 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கும்பா பிஷேகம் நடைபெற்றதாகவும், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக மீண்டும் சிதிலம் அடைந்துவிட்டதாகவும் தெரிவித்த முத்துசாமி, சமீபத்தில் திருப்பணிக் கமிட்டி ஏற்படுத்தி பாலாலயம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆலயம் தேடுவோம்
ஆலயம் தேடுவோம்

அப்போது அங்கே வந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் நெடுமாறன், பெருமாளுக்குக் கோயில் கட்டுவதற்காக பூமியைத் தோண்டியபோது, கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி ஐம்பொன்னால் ஆன ஸ்ரீதேவி, பூமிதேவி, பெருமாள் விக்கிரஹங்களும், ஜூலை மாதம் 8-ம் தேதி நரசிம்மர், வரதராஜர்,  ஸ்ரீதேவி, பூமிதேவி உள்ளிட்ட 13 விக்கிரஹங்களும் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

இந்தக் கோயிலில் அருள்புரியும் பெருமாள் மிகவும் வரப்பிரசாதி என்று ஊர்ப் பெரியவர்கள் கூறுகிறார்கள். மாதம்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தில் இங்கே வந்து பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு, பித்ரு தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஊர்மக்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

தொன்மைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருத் தலத்தில், அன்றொருநாள் ‘ஆதிமூலமே, அனாதரட்சகா’ என்று கஜேந்திரனின் அபயக்குரல் கேட்ட அந்தக் கணமே அங்கே தோன்றி கஜேந்திரனுக்கு அருள்புரிந்த பெருமாளின் பேரருள் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்தானே?

அதற்கு, முற்றாகச் சிதைந்து போன ஆலயம் புதுப்பொலிவுடன் மீண்டும் அமையவேண்டுவது அவசியம் அல்லவா? நம் எல்லோருடைய பொருளுதவியும் பங்களிப்பும் இருந்தால்தானே அது விரைவில் சாத்தியமாகும்?

கஜேந்திர வரதராஜப் பெருமாள் ஆலயத் திருப்பணிக்கு நாமும் நம்மால் இயன்ற நிதியுதவியைச் செய்வோம். அதன்மூலம் திருவிளையாட்டம் கஜேந்திர வரத ராஜரின் திருவருளை நிறைவாகப் பெற்று, நாமும் நம் சந்ததியினரும் நிறைவாழ்வு வாழலாம் என்பதில் சந்தேகமே இல்லை.

படங்கள்: க.சதீஷ்குமார்

எங்கே இருக்கிறது?

எப்படிச் செல்வது?

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோயில் வழியாக நாகப்பட்டினம் செல்லும் சாலையில், செம்பனார் கோயிலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந் துள்ளது இத்தலம். மயிலாடுதுறையில் இருந்தும் செம்பனார்கோயிலில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.