பிரீமியம் ஸ்டோரி

ராஜராஜ சோழனை அடையாளம் கண்ட வெள்ளைக்காரர்!

மாமன்னர் ராஜராஜ சோழரும், தஞ்சை பெரியகோயிலும் இன்றைக்குக் கொண்டாடப்படும் அளவுக்கு, 120 வருடங்களுக்கு முன்பு போற்றப்படவோ புகழப்படவோ இல்லை.
இன்றைக்கு சதய விழா துவங்கி பல்வேறு வைபவங்களுடன் திகழும் ஆலயமும், பலரும் சொந்தம் கொண்டாடத் துடிக்கும் அந்தச் சக்கரவர்த்தியும் அன்றைக்கு அடையாளமின்றி, புறக்கணிக்கப்பட்டுத் திகழ்ந்தனர். அவ்வளவு ஏன்? தஞ்சை பெரியகோயில் ராஜராஜ சோழரால் கட்டப்பட்டது என்பதே பலருக்கும் தெரியாமல் இருந்தது.

வலைத்’தலம்’!

‘ஸ்ரீ ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜ இராஜ சோழ தேவர்க்கு யாண்டு...’ என ஆரம்பிக்கும் கல்வெட்டு தொகுதியைப் படியெடுத்து, அதற்கு பொருள் கண்டு, தஞ்சை பெரிய கோயில் ராஜராஜனால் கட்டப்பட்டது எனக் கண்டறிந்து சொன்னவர் தமிழரோ, இந்தியாவின் வேறு மாநிலத்தவரோ அல்ல; வெள்ளைக்கார அறிஞர். E.Hultzsch என்ற அந்த அறிஞர் 1891-ல் எடுத்த கோயிலின் படம் இது!

வைரமும் நெல்மணிகளும்!

குப்பையைத் தூக்கிப்போடும் போது, தவறிப்போய் தன் கையில் இருந்த வைரங்கள் நிறைந்த பையையும் சேர்த்துப் போட்டுவிட்ட ஒருவர், அதைக் கண்டெடுப்பதற்காக குப்பையைக் கிளறிக் கொண்டி ருந்தார். அப்போது, கோழி ஒன்றும் குப்பை மேட்டைக் கிளறிக்கொண்டு இருந்தது.

அதன் காலுக்குக் கீழே வைரப் பை இருந்ததைக் கண்ட அன்பர், ‘‘ஏய் கோழியே... உன் காலுக்குக் கீழே கிடக்கும் வைரத்தோட மதிப்பு உனக்குத் தெரியுமா? அது தெரியாமல் அதை மிதிச்சுக்கிட்டு நிற்கிறாயே?’’ என்று சத்தம் போட்டார். உடனே கோழி அவரிடம் ‘‘உன்னோட காலுக்குக் கீழே நீ மிதிச் சுக்கிட்டு நிற்கற நெல்மணி களோட மதிப்பு உனக்குத் தெரியுமா?’’ என்று சத்தமாகக் கேட்டதுடன், ‘‘தள்ளி நில், எனக்குப் பசிக்கிறது’’ என்று அவரை நகரச் சொல்லிவிட்டு, நெல்மணிகளைக் கொத்தித் தின்ன ஆரம்பித்தது.

மதிப்பு மிகுந்தது எது? வைரங்களா, நெல்மணிகளா... நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்!

கண்ணப்பன் நம் அப்பன்!

ஒருவரின் உறுப்புகளை இன்னொருவருக்குப் பொருத்தும் விந்தை மருத்துவத்தை, இன்றைக்கோ நேற்றோ அல்ல... வெகு காலத்துக்குமுன்பே கண்டுபிடித்த பெருமை நம்மையே சேரும். உலகின் முதல் உறுப்பு (கண்) தானம் செய்தவர், கண்ணப்ப நாயனார்!

புனலூர் தாத்தா!

ஆண்டவனுக்கான வணக்கத்தைவிடவும், அவரது அடியார்களைப் போற்றுதல் உன்னதமான வழிபாடு என்பர் முன்னோர். அந்த வகையில் சாமிமார்கள் அனைவரும் சிறப்பித்துக் கொண்டாட வேண்டிய ஐயன் ஐயப்பனின் அடியாரும் ஒருவர் உண்டு.
 
ஐயப்ப ஸ்வாமியே கண்கண்ட தெய்வம்; அன்னதானப் பிரிய னான ஐயப்பனின் பக்தர்களுக்கு உணவளிப்பதே மிகச் சிறந்த புண்ணியம்; அவர்களுக்கு இளைப்பாற இடம் தருவதே தன் கடமை என உயரிய நோக்கங்களோடு வாழ்ந்த அந்த அடியவரின் இயற்பெயர் சுப்ரமணிய ஐயர். ஆனால் ஐயப்பமார்கள் அவரை ‘புனலூர் தாத்தா’ என்றே அழைத்தார்கள்.

வலைத்’தலம்’!

இந்தத் தலைமுறை பக்தர்களில் பலர் புனலூர் தாத்தாவையும், அவர் ஆற்றிய தெய்வத் திருப்பணியையும் அறிந்திருக்கமாட்டார்கள். அவரைப்பற்றி அறிந்து கொண்டால்... அவரை ‘புனலூர் தாத்தா’ என்று அன்பர்கள் அழைத்ததற்கான காரணத்தை மட்டுமின்றி, ஐயப்ப வழிபாட்டுக் கான முழு தாத்பரியத்தையும் கூட அறிந்துகொள்ள முடியும்.

புனலூர் தாத்தாவின் அரும்பணிகளை முழுமையாக அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கைப் பயன்படுத்தவும்...

bit.ly/punalurthatha1

வாசகர்களே!    ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் என இணையத்தில் விரவிக்கிடக்கும் சுவாரஸ்யமான - பயனுள்ள ஆன்மிகத் தகவல்களின் தொகுப்பே, இந்த வலைத் `தலம்' பக்கம்! மேற்சொன்னவற்றில் உலா வரும் உங்களுடைய ஆன்மிகப் பதிவுகளும் இங்கே பிரசுரமாக வாய்ப்பு உண்டு. தொடர்ந்து கவனியுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு