டவுளின் தேசம்! இயற்கையின் அலங்கரிப்பில் பச்சைப்பசேலென பசுமை உடுத்தி பூரித்து நிற்கிறது அந்த வனப்பகுதி! பார்க்கும் இடமெல்லாம் பரவசமாக மக்கள் வெள்ளம்! 

இந்த மலைநாட்டில் நடப்பது தனி சாம்ராஜ்யம்! கோலாகலமான தெய்விக சாம்ராஜ்யம்!

உலகாளும் நாயகன், இந்த ஆன்மிக பூமியில் நடத்துவது அன்புப் பரிபாலனம். காலங்காலமாக மக்களின் மனங்களைக் கருணைப் பார்வையால் ஆண்டு வருகிறான் இந்த அருளாளன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடர்ந்த வனப்பகுதி முழுக்க, நாலா திசையி லும் எதிரொலிக்கிறது சரண கோஷம்...

'சாமியே சரணம் ஐயப்பா!’

மனதுக்குள்ளிருந்து பீறிட்டு எழும் சரண கோஷத்தை சிலிர்ப்புடன் உச்சஸ்தாயியில் ஒரு குரல் ஓங்கி ஒலிக்க, கூடவே ஆயிரமாயிரம் குரல்கள்

இணைந்து விண்ணகம்வரை எதிரொலித்து அதிர்கிறது அந்தக் கானகப் பகுதி.

பரசுராம க்ஷேத்திரம் என்று போற்றப்படும் கேரளத்தின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பதினெட்டு மலைகளின் நடுவில், புனிதத் தலமான

சபரிமலையில் தர்ம சாஸ்தாவாக, பிரம்மச்சர்ய கோலத்தில் அமர்ந்து, தன்னை நாடிவரும் பக்தர் களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான், சுவாமி ஐயப்பன்.

புண்ணிய பூமி

கேட்பவர்களுக்குக் கேட்டதைத் தரும் இந்தக் கலியுகக் கடவுளைக் காண, இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, உலகின் தொலைதூரத்தில் இருந்தும் கூட, தூய்மையாக விரதம் இருந்து, இருமுடி சுமந்து ஓடோடி வருகிறார்கள் கோடானுகோடி பக்தர்கள். யோக நிலையில் அமர்ந்திருக்கும் பம்பை நாயகனின் சில விநாடி தரிசனமே, செய்த பாவத்தைத் தீர்த்து, புண்ணிய பாதைக்குத் திருப்பிவிடுகிறது.

கலியுகத்தின் கலி தீர்க்கவே உருவான மகா புண்ணிய க்ஷேத்திரமான சபரிமலை திருத்தலப் புராணம் தெவிட்டாத தெய்விக வரலாறு ஆகும்.

பெரும் கருணையினால் நம்மை ஆட்கொண்டு அரவணைக்கும் ஐயன் ஐயப்பன் பூலோகத்தில் எப்படி அவதரித்தான்? அவனது அவதார நோக்கம் என்ன?

எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட வளான அரக்கி மகிஷியால் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அசுரர் ராஜ்ஜியத் தின் தலைவனான அவளது அண்ணன் மகிஷன் கொல்லப்பட்டுவிட்டான். அதுதான் அவளின் கோபத்துக்குக் காரணம்.

மகிஷன் அளப்பரிய சக்தி கொண்டவன். இந்திரனைத் தோற்கடித்து தேவலோகத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்தியவன். அப்படிப்பட்ட பலசாலி, ஒரு பெண்ணால் கொல்லப்பட்டு விட்டான்.

'என் அண்ணனைக் கொல்லக் காரணமாயிருந்த தேவர்களை நிச்சயம் விடமாட்டேன். அவர் களைப் பழிக்குப் பழி வாங்குவேன்!’ என்று சூளுரைத்துவிட்டு, அடர்ந்த வனப் பகுதியின் நடுவே பிரம்ம தேவனை எண்ணிக் கடுமையாகத் தவமிருந்தாள் அரக்கி மகிஷி.

அவள் முன் தோன்றினார் பிரமதேவர். 'மகிஷியே, என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார்.

'பஞ்ச பூதங்களாலோ, தேவர்களாலோ, அசுரர் களாலோ, கந்தர்வர்களாலோ, அப்சரஸ்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, நாகங்களாலோ எனக்கு மரணம் நேரக் கூடாது. உலகில் எந்தப் பெண் வயிற்றில் பிறந்தவராலும் எனக்கு அழிவு வரக்கூடாது' என்று பிரமனிடம் வரம் பெற்றாள் மகிஷி.

அடுத்த நொடியே ஆரம்பமாகிவிட்டது அரக்கி மகிஷியின் அட்டூழியம். மூவுலகையும் நடுநடுங்கச் செய்தாள். ரிஷிகளையும், முனிவர் களையும் வதைத்தாள். கண்ணில் பட்ட தேவர்களையெல்லாம் சித்ரவதை செய்தாள். தேவர்கள் கதறியபடி சிவனையும், மாலனையும் நாடிச் சென்றனர். 'மகேஸ்வரா! மதுசூதனா! தாங்கள்தான் மகிஷியை வதம் செய்து, எங்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவேண்டும்’ என்று முறையிட்டனர்.

'சகோதரன் கொல்லப்பட்டதால் கோபம் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறாள் மகிஷி.  அவள் விரைவிலேயே அழிக்கப்படுவாள்' என்று அபயமளித்தார் ஈஸ்வரன்.

புண்ணிய பூமி

சகலமும் அறிந்த விஷ்ணு, மகிஷியை சம்ஹாரம் செய்யக்கூடிய பாலகன் உருவாக வேண்டிய காலம் இதுவே என்பதை உணர்ந்து, அக்கணமே மோகினி அவதாரம் எடுத்தார்.

அப்போதே சிவனது சக்தியும், விஷ்ணுவின் சக்தியும் ஒன்று சேர்ந்து, ஹரிஹரபுத்திரனின் அவதாரம் நிகழ்ந்தது. ஓர் அற்புத ஜோதி ஸ்வரூபமாக அழகிய ஆண் குழந்தை ஒன்று அவதரித்தது. நான்முகன் குழந்தைக்கு தர்ம சாஸ்தா என்றும், ஆரியதாதா என்றும் பெயர் சூட்டினார். பிறந்தபோதே, கழுத்தில் மணி அணிந்திருந்ததால், அக்குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயர் சூட்டினார் சிவன்.

சிவனிடம் எல்லா மந்திர தந்திரங்களும் கற்றுத் தேர்ந்த பின்னர், பிறப்பின் காரணம் மணிகண்டனுக்கு விளக்கப்பட்டது. குழந்தையா கவே அவர் பூமியில் உள்ள கானகத்துக்கு அனுப்பப்பட்டார்.

பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரன் வேட் டைக்குப் போயிருந்தபோது, பம்பா நதிக்கரை யில் கழுத்தில் மணியுடன் ஒரு குழந்தையைக் கண்டெடுத்தான். ஒரு முனிவர் அவன் முன் தோன்றி, கடவுளே அனுப்பிய குழந்தை அது என்று சொன்னார். அரசனும் அரசியும் அதைத் தங்கள் குழந்தையாகவே நினைத்து, அன்புடன் வளர்த்து வந்தனர். மூன்று வருடங்கள் கழித்து அரசிக்கு ஒரு மகன் பிறந்தான். ராஜராஜன் என்று பெயர் சூட்டி, இளைய மகனாக அவனை வளர்த்து வந்தனர்.  

மன்னர் மணிகண்டனை குருகுலத்துக்கு அனுப்பினார். குருகுல வாசம் முடிந்தபோது, குருதட்சணையாக யாது வேண்டும் என்று குருவிடம் மணிகண்டன் வினவ, குருபத்தினி கண்களில் நீருடன், 'எங்களுக்கு ஒரு மகன் இருப்பதும், அவன் பிறவியிலிருந்தே ஊமை என்பதும் உனக்குத் தெரியாததா என்ன? நீதான் அந்த ஊமைப் பிள்ளையின் குறை தீர்த்து அருள வேண்டும்’ என வேண்டினாள்.

மணிகண்டன் குருவின் மகனை அருகே அழைத்தான். 'ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராய ணாய! எங்கே, சொல்!’ என்று கனிவான குரலில் மொழிந்தான். அங்கே அந்த அற்புதம் நிகழ்ந்தது. மணிகண்டன் சொல்லச் சொல்ல, குரு மைந்தனும் அந்த மந்திரங்களை ஸ்பஷ்டமாக உச்சரித்தான். ஊமைச் சிறுவன் பேசத் தொடங்கி விட்டான். குரு தம்பதியர் மெய்சிலிர்த்துப் போயினர். 'மணிகண்டா, இந்த அற்புதத்தை நிகழ்த்திய நீ சாதாரண மானிடன் இல்லை. நீ யார் ஐயனே?’ என்று வேண்டினார் குரு.

புண்ணிய பூமி

மணிகண்டன் தனது அவதார ரகசியத்தை குருவிடம் கூறினான். பின்பு, 'குருவே, எனது அவதார நோக்கம் முடிந்ததும், ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தில் நான் தங்களுக்கு ஜோதி சொரூபனாகக் காட்சி தருவேன். இதுவே நான் தங்களுக்கு அளிக்கும் குருதட்சணை!’ என்று சொல்லி, வணங்கி விடைபெற்று, அரண் மனைக்குத் திரும்பினான்.

மணிகண்டனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய மன்னர் நினைத்தார். 'அரசியின் வயிற்றில் பிறந்த மகனை விடுத்து, காட்டில் கிடைத்த மணிகண்டனுக்கு ராஜ்யத்தைத் தூக்கித் தருவதா?' என்று அரசியின் மனதைக் கலைத்தார் அமைச்சர்.

அதைத் தொடர்ந்து, மணிகண்டனைக் கொலை செய்யப் பல சதிகள் நடந்தன. தெய்வக் குழந்தையான மணிகண்டனுக்கு ஒரு தீங்கும் நேரவில்லை.

இறுதியாக, அரசி உடல்நலமில்லாதது போல் படுத்தாள். அவள் நோயைத் தீர்க்க கானகத்திலி ருந்து புலிப்பால் கொண்டு வரப்பட வேண்டும் என்று ராஜவைத்தியரும் பொய் சொன்னார்.

பிறவி நோக்கத்தை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டதை மணிகண்டன் உணர்ந்தான். காட்டுக்குச் செல்ல, தந்தையிடம் போராடி அனுமதி பெற்றான்.

கானகம் சென்றதும், தேவர்களை இம்சித்து வந்த மகிஷியை அழுதா நதிக்கரையில் போருக்கு இழுத்தான் மணிகண்டன். கடும் போருக்குப் பின், மகிஷியைக் கீழே தள்ளி, அவள் மார்பில் ஏறி, மிதித்து நடனமாடினான். ஒரு பெண் வயிற்றில் அல்லாமல், சிவ  விஷ்ணு சக்திகளின் அம்சமாகப் பிறந்த மணிகண்டனை வெற்றி கொள்ளமுடியாது என்பதை உணர்ந்து, மகிஷி அவன் தாள் பணிந்து உயிர் நீத்தாள். அங்கேயே ஒரு குன்றாக உறைந்தாள்.

அவள் உடலிலிருந்து வெளிப்பட்ட சக்தி, மணிகண்டன் முன் மண்டியிட்டுத் தன்னை மனைவியாக ஏற்கச் சொல்லி விண்ணப்பித்தது. உலக நன்மைக்காக பிரம்மசரிய விரதத்தைப் பூண்டிருப்பதால், அவளை மணக்க இயலாது என்று சொன்ன மணிகண்டன், அவளுக்கு மாளிகாபுரத்தம்மன் என்று பெயர் சூட்டினான். தன் இருப்பிடத்தின் அருகே அவளுக்கு இடம் ஒதுக்கித் தருவதாகச் சொன்னான்.

பின்னர், சபரி என்ற பக்தைக்கு முக்தி தந்து, அவள் விருப்பப்படி சபரி மலையில் வந்து வாசம் புரியச் சம்மதித்தான்.

பின்னர், புலிப்பால் கொண்டு வரப் பணிக்கப் பட்ட மணிகண்டனை, தேவேந்திரனே புலி வடிவம் எடுத்துச் சுமந்து வர, தேவ மகளிர்கள் பெண் புலிகளாகப் பின்தொடர, அரண்மனைக்கு வந்து சேர்ந்தான்.

பிரமித்துப்போன அரசன் முன் முனிவர் தோன்றி, மணிகண்டன் யார் என்பதை விளக் கினார். மணிகண்டனின் பாதங்களில் விழுந்து வணங்கினார் மன்னர். தீய எண்ணம் கொண்ட அமைச்சரையும் மன்னித்து அருளினார். தொடர்ந்து, உலக நன்மைக்காக பொன்னம்பல மேடு என்னும் இடத்தில், தான் தியானத்தில் அமரப் போவதாகப் பகர்ந்தான், மணிகண்டன்.

'உன் பட்டாபிஷேகத்துக்காக எத்தனையோ ஆபரணங்களும் அணிகலன்களும் செய்து வைத்திருக்கிறேன். நீ அவற்றை அணிந்தால்தான் என் மனம் அமைதியுறும்' என்று அரசர் மன்றாடினார்.

'ஆண்டுக்கொரு முறை மகர சங்கராந்தி அன்று தியானத்திலிருந்து நான் கண்களைத் திறப்பேன். அப்போது எனக்கு அலங்காரங்கள் செய்து மகிழ்ச்சிகொள்ளலாம்' என்று வரம் அருளிவிட்டு, பகவான் மணிகண்டன் பொன்னம்பலமேடு சென்றார். தியானத்தில் ஆழ்ந்தார்.

சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில்தான், சாஸ்தாவுக்காக எழுப்பப் பெற்ற கோயில்களில் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும். இங்குள்ள ஐயப்பனின் விக்கிரகம், அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி, பரசுராமரால் வடிவமைக்கப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்டது.

தர்மசாஸ்தா ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்ய தூய்மையான பக்தி அவசியம். குறைந்தது 41 நாட்கள் இல்லற இன்பங்களை நாடாமல், பிரம்மசரிய விரதம் இருக்க வேண்டும். விரத காலத்தில், போதைப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். முடி மழிக்கக்கூடாது. இரண்டு வேளையும் ஸ்நானம் செய்து, தூய்மையான ஆடைகளை (கறுப்பு, அல்லது அடர்நீலம்) அணிந்து, இறைவனின் நாமத்தை ஜபிக்க வேண்டும்.

புண்ணிய பூமி

மணிகண்டன் காட்டுக்குப் போனபோது சுமந்தது போல், முக்கண்ணன் சிவனைக் குறிக்கும் மூன்று கண்கள் கொண்ட தேங்காய், மற்றும் உணவுப் பொருட்களைத் தலைமேல் சுமந்து செல்கிறார்கள் பக்தர்கள். இப்படித் தலைமேல் சுமக்கும் சுமை 'இருமுடி' என்றழைக்கப்படுகிறது.

சுவாமி வேட்டையாடப் போன இடமாக எரிமேலி கருதப்படுவதால், அங்கிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் சாய வண்ணங்களைப் பூசி, வேட்டையாடுவதுபோல் போவதை 'பேட்டைத் துள்ளல்’ என்றழைப்பர்.

அடுத்து, அழுதா நதி. சுவாமி மகிஷி மீது ஏறி நடனமாடியது போல், பக்தர்களும் மகிஷி மலை மீதேறி மறுபுறம் இறங்கிச் செல்கின்றனர்.

அடுத்து, கரிமலை. அதை ஏறி இறங்கியதும், பம்பா நதிப் பள்ளத்தாக்கு. நதியில் நீராடி, நீலி மலையில் ஏறியதும், சபரி பீடம். இது சபரிக்கு சுவாமி முக்தி கொடுத்த இடம். இங்கு சிதறு தேங்காய் உடைத்து, சரங்குத்தி தாண்டியதும், பொன்னுப் பதினெட்டாம்படி. பதினெட்டுப் புனிதப் படிகளுக்கும் தங்கக் கவசம் பூட்டப்பட்டிருக்கின்றன.

இருபுறமும் காவல் நிற்கும் கருப்பண்ணசாமி களிடம் உத்தரவு வாங்கி, புனிதமான பதினெட்டுப் படிகளில் ஏறி முடித்ததும் துவஜஸ்தம்பம். இக்கொடிமரத்தைச் சுற்றிக்கொண்டு வந்தால், கன்னிமூல கணபதிக்குத் தனிச் சந்நிதி.  கணபதி தரிசனம் முடிந்ததும், தர்மசாஸ்தா ஐயப்பனின் சந்நிதி.

சந்நிதானத்தில் தாமரை இதழ்களில் காணப் படும் ஸ்ரீசக்கரம். அதன் மீது பதிந்த ஐயப்பனின் பாதமலர்கள். சுவாமி, இரு கால்களையும் மடித்து வீற்றிருக்கிறார்.

வலத் திருக்கரத்தில் சின்முத்திரை. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் நீக்கினால்தான் இறைவனின் தாள் சேரலாம் என்று சொல்லும் தியான முத்திரையே சின்முத்திரை. இடத் திருக்கரம், தன் தாள் பணிந்தால் மோட்சம் என்று குறிப்பால் உணர்த்துவது போல் சுவாமியின் பாதங்களைக் காட்டுகிறது.  இரு கால்களையும் இணைக்கிறது யோகப்பட்டம்.

தியானத்தில் வீற்றிருக்கும் கோலத்தில் தரிசனம் தரும் தர்மசாஸ்தாவை தரிசித்ததும், உள்ளத்தில் முன்னெப்போதும் அனுபவித்திராத பரவசத்தை அனுபவிக்க இயலும்.

மகரசங்கராந்தி அன்று பந்தள அரசனின் அரண்மனை வீட்டிலிருந்து ஆபரணங்கள் கொண்ட கூடை, தனி வழியில் தலையில் சுமந்து எடுத்துச் செல்லப்படுகிறது.

மகரஜோதியன்று வானில் உத்திர நட்சத்திரம் தோன்றும். அந்த நாளில், குருவுக்கு அளித்த வாக்கின்படி, ஐயப்பனின் ஜோதி தரிசனம் பக்தர்களுக்குக் கிடைக்கும். 'சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று பக்தர்களின் கோஷங்கள் விண் வரை எதிரொலிக்கும்.

சாஸ்தா தரிசனம் முடிந்ததும், சாஸ்தாவின் சந்நிதிக்கு வடக்கில் அமைந்திருக்கும் மாளிகைப் புரத்தம்மனின் சந்நிதியில் தரிசனம். அடுத்து நாக ராஜர்களையும் தரிசித்து முடித்ததும், சபரிமலை யாத்திரை நிறைவு பெறும்.

'சுவாமியே சரணம் ஐயப்பா!' என்று ஒரே குரலில் பக்தர்கள் உச்சரிக்கும் அதிர்வானதுமலைகளின்

முகடுகளில், நதியின் அலைகளில் எதிரொலித்து, நமது நாடி நரம்புகளில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. இதை ஒருமுறை அனுபவித்தவர்கள், அந்தப் பேரனுபவத்தைப் பெறுவதற்காக, மீண்டும் மீண்டும் சுவாமி ஐயப்பனை நாடி வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, வீ.சிவக்குமார்

எப்படிப் போவது?: சென்னையிலிருந்து ரயிலில் சென்று கோட்டயம், கொச்சி போன்ற ரயில் நிலையங்களில் இறங்கி பேருந்தில் எருமேலி வரையிலோ, பம்பா வரையிலோ பயணம் செல்லலாம். பம்பாவுக்கு பல ஊர்களிலிருந்து,

நேரடியாகவும் கேரள அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன. எருமேலியில் இருந்து பம்பாவுக்கு காட்டுவழி நடந்தால், சுமார் 43 கி.மீ. வாகனத்தில் செல்வதானால், சுமார் 60 கி.மீ. பம்பாவிலிருந்து சபரிமலை 6 கி. மீ. நடைப்பயணம்தான் மேற்கொள்ள வேண்டும்.

எங்கே தங்குவது?: பம்பாதான் தங்கும் வசதிகள் கொண்ட இடம். ஆனால், கூட்டம் அதிகமிருக்கும் காலங்களில் எருமேலி போன்ற இடங்களிலும் தங்கலாம். பக்தர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், சபரிமலையிலும் தங்கும் அறைகள் கிடைக்கலாம். சபரிமலை செல்கையில், இடைப்பட்ட ஊர்களில் பக்தர்களுக்காகவே இயங்கும் உணவு விடுதிகள் உண்டு.

புண்ணிய பூமி

நடை திறக்கும் நேரம்...

மண்டல பூஜை காலங்களில் கோயில் காலை

4.00 மணிக்குத் திறக்கும். நண்பகல் 12.30க்கு உச்சிக்கால பூஜை. பகல் 1.00 மணியிலிருந்து 4.00 வரை நடை சாத்தப்படும்.

மாலை 6.30க்கு தீபாராதனை. இரவு 10.30 மணிக்கு அதழ பூஜை. 10.50க்கு ஹரிவராசனம் (சுவாமி பள்ளி கொள்ளுதல்).

மகர விளக்கு தரிசனம்

இந்த மாதம் மண்டலபூஜைக்காக 16.11.15 மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். 27.12.15 இரவு 10 மணிக்கு நடை சாத்துவர்.

மகர விளக்கு வைபவத்துக்காக 30.12.15 மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். பிறகு 20.1.16 அன்று நடை சாத்தப்படும்.

மகர விளக்கு தரிசனம்: 15.1.16