Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15

Published:Updated:

28. அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போல? 

சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு ரத சாரதியாக இருந்தவன்.  கவல்கணன் என்ற சத்திரியனுக்கு மகனாகப் பிறந்தவன் என்ற குறிப்பு மட்டும் மகாபாரதத்தில் உள்ளது. ஒருமுறை கௌரவப்படையில் சிறந்த ரதம் ஒட்டுபவனான ராதேயன் ஆற்றில் ஒரு பேழையில் மிதந்து வந்த சிறு ஆண் மகவை (கர்ணன்) வளர்க்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக நீண்ட விடுப்பு எடுக்கிறான். அப்போது அவனுடைய இடத்தை நிரப்புவதற்கு ஆட்தேர்வு நடைபெற்றது. பீஷ்மரின் மேற்பார்வையில் நடைபெற்ற தேர்வில் பல பரிசோதனைகளுக்குப் பின்னர் தேர்ந்தடுக்கப்பட்டவன்தான் சஞ்சயன். சிறந்த ரத நிர்வாகி. தன்னுடைய அனுபவம், அறிவு, பேச்சுத் திறன் ஆகியவற்றினால் மெல்ல மெல்ல திருதராஷ்டிரனின் அந்தரங்க ஆலோசகன் என்னும் அளவுக்கு பதவி உயர்வு பெறுகிறான். திருதராஷ்டிரனே தன் வாயால் சஞ்சயனை கேள்வி ஞானம் உடையவன் என்றும், பேச்சு சாமர்த்தியம் உடையவன் என்றும், புத்திக்கூர்மை படைத்தவன் என்றும் புகழ்கிறான். 

அப்படிப்பட்ட சஞ்சயன் இரண்டு அந்தரங்கமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். ஒன்று பீஷ்மர் போரில் வீழ்ந்த நாள் தொடங்கி, வியாச மகரிஷி தனக்கு அளித்த மந்திர சக்தியின் மூலமாக திருதராஷ்டிரனின் அரண்மனையில் அமர்ந்தபடி பல காத தூரங்களுக்கு அப்பால் குருக்ஷேத்திரத்தில் நடைபெறும் மகாபாரதக் காட்சிகளை நேரில் பார்ப்பதைப் போன்று தனது மன்னனான திருதராஷ்டிரனுக்குக் கூறுகிறான். சஞ்சய உவாச என்று மகாபாரதத்தில் அடிக்கடி இடம் பெறும். சஞ்சயனுக்கும் எம் பெருமானின் விசுவரூப தரிசனத்தை சேவிக்கும் பாக்கியம் கிட்டுகிறது. 

போர்மூளும் சூழல் ஏற்பட்டதும் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இரண்டு அணியிலும் இருந்த பெரியவர்கள் போரின்தன்மை குறித்தும், அது ஏற்படுத்தப் போகும் உயிர்ச்சேதம் பொருட்சேதம் குறித்தும் கவலை கொள்கின்றனர். இருவர் அணியிலிருந்தும் சமாதானத் தூதிற்கு ஏற்பாடாகிறது. பாண்டவர்கள் பக்கத்திலிருந்து கிருஷ்ணர் தேர்ந்தெடுக்கப்பட்டு பாண்டவர்களின் தூதராக அத்தினாபுரம் செல்கிறார். கௌரவர்களின் தூதராக சஞ்சயன் எவ்வித முன்யோசனையுமின்றி தேர்வு செய்யப்பட்டு பாண்டவர்களுக்கு தூது செல்ல நியமிக்கப்படுகிறான். 

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 15

கௌரவர்களின் சார்பாக சஞ்சயன் பாண்டவர்கள் இருக்கும் உபப்லாவ்யம் என்ற இடத்துக்குத் தூதுவனாக செல்கிறான். முதலில் திருதராஷ்டிரனிடம் பேசும்போது தர்ம நியாயங்களைச் சார்ந்து பேசும் சஞ்சயன், பின்னர் தருமபுத்திரரிடம் பேசும்போது, அவன் எடுத்து வைக்கும் தர்க்க வாதங்களில் தர்ம நியாயத்தைவிட ஒரு தூதுவனின் பேச்சு சாமர்த்தியமே எஞ்சி நிற்கிறது. ஆனால், தூதுவன் என்ற பதவியை ஏற்று வந்ததால், அந்தப் பதவிக்கு தரும் மரியாதையாக பாண்டவர்கள் போர்புரியாமல் இருப்பதால் ஏற்படும் நன்மைகளை முன்னிலைப்படுத்தி பேசுவான். அதன்பிறகே சஞ்சயன் கிருஷ்ணரை தேடிக் கொண்டு அவருடைய அந்தப்புரத்துக்க்ச் செல்கிறான். 

பொதுவாக மன்னர்களை அவர்களது ராஜ சபையில் வைத்து பார்ப்பதுதான் ராஜாங்க நெறிமுறையாகும். சஞ்சயனுக்கு தூதினை விரைவில் முடித்துக் கொண்டு அத்தினாபுரம் திரும்ப வேண்டிய அவசரம். எனவே கண்ணன் தங்கியிருக்கும் அந்தப்புரப் பகுதிக்குச் செல்கிறான். காவலன் உள்ளே சென்று கண்ணனிடம் சஞ்சயன் வந்திருக்கும் தகவலைத் தெரிவிக்கிறான். அந்தநேரம் கிருஷ்ணர் தனது சயன அறையில் இருக்கிறார். எவ்வித மறுப்புமின்றி வாயிற்காப்போனிடம் சஞ்சயனை உள்ளே அனுப்புமாறு கூறுகிறார். சஞ்சயனும் உள்ளே நுழைகிறான். 

சத்யபாமாவின் மடியில் கிருஷ்ணன் தலை வைத்துப் படுத்திருக்க, அவனுடைய பாதங்களை தன்னுடைய மடியில் தாங்கியபடி அர்ஜுனனின் பாதங்கள் திரௌபதியின் மடியில் இருக்கும்படி படுத்திருக்கிறான்.   அர்ஜுனன் சஞ்சயனை நன்கு உபசரித்து வந்த காரியத்தை கேட்கிறான். போர் தவிர்த்தல் பொருட்டு தான் தூது வந்த காரணத்தை சஞ்சயன் கூறுகிறான். போர் தவிர்த்தல் இயலாது என்பதை கிருஷ்ணர் நன்கு விளக்கி சஞ்சயனை அனுப்பி வைக்கிறார். இந்த இடத்தில் பகவான் கண்ணனின் புத்திக் கூர்மையையும் அடுத்தவர் உள்ளப்பாங்கினை எடைபோடும் அந்த ஆழ்ந்த அறிவையும் போற்றாமல் இருக்கவே இயலாது. இதனை உபன்யாசகர்கள் விவரித்துக் கூறும்போது தங்கள் ரசனைக்காக சிலவற்றைச் சேர்த்து விடுகின்றனர். மகாபாரதத்தில் தெளிவாக சஞ்சயன் கிருஷ்ணரை வந்து சந்திக்கும் இந்தப் பகுதியை 'அதிக பாடம்’ என்ற அடைப்புக் குறிகளுக்குள் வைத்தே சொல்கிறது. கிருஷ்ணர் சஞ்சயனை அவர்களது படுக்கையறைக்குள் அனுமதித்ததன் காரணம் அந்தப்புரத்திலும் தானும் அர்ஜுனனும் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதை கௌரவர்களுக்கு தெரிவிப்பதற்குத்தான். கிருஷ்ணரின் திட்டமும் சொல்லி வைத்தபடி பலிக்கிறது. 

சஞ்சயன் அங்கே கண்ட காட்சியை மீண்டும் அத்தினாபுரம் வந்து திருதராஷ்டிரனிடம் கூறியதை இங்கே பார்ப்போம். ''ஜனார்த்தனரோ சத்யபாமையின் மடியைத் தலையனையாகக் கொண்டு சயனித்திருக்கிறார். கேசவருடைய பாதங்கள் அர்ஜுனனுடைய மடியை அடைந்தவைகளாகக் கண்டேன். அர்ஜுனனுடைய இரண்டு பாதங்களும் திரௌபதியின் மடியை அடைந்தவைகளாயிருந்தன.' என்று தான் கண்ட காட்சியை விவரிக்கும் சஞ்சயன், 'அவ்விடத்தில் ஆண்மையிற் சிறந்தவர்களான அவர்களைப் பார்த்துவிட்டு, உடனே இந்த நரநாராயணர்கள் இருவரும் எவருடைய உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனரோ அந்த தர்மபுத்திரர் எண்ணியவைகளை அடைவதில் ஒரு தடையும் இல்லை என்று  நான் நினைத்துக் கொண்டேன்' என்கிறான்.

கிருஷ்ணரின் நோக்கம் நிறைவேறியது அல்லவா?

அந்த எம்பெருமானின் அந்தரங்கக் கோலத்தை பார்க்கும் பாக்கியம் பெற்றவன் சஞ்சயன் ஒருவன்தான். அப்படிப் பட்ட பாக்கியத்தை தான் பெறாததால், திருக்கோளூரை விட்டு செல்வதாகக் கூறிக் கொண்டு அந்தப் பெண்பிள்ளை வெளியேறுகிறாள்.