மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

சாஸ்திர போதனைகள் அவசியமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? அனுபவங்களே மனிதனைச் செம்மைப்படுத்துகின்றன, அவையே அவனுக்கான வாழ்வியல் பாடங்களைக் கற்றுத்தருகின்றன எனும்போது, தர்மசாஸ்திரம் போன்றவை எதற்காக? அவற்றின் அறவுரைகளும் கட்டுப்பாடுகளும் இன்றையச் சூழலில் எடுபடுமா? 

கே. சுப்பிரமணியன், மதுரை - 2

முதல் கோணம்...

பெரும்பாலும் நமது வருங்கால மதிப்பீடுகள் உண்மையாவது இல்லை. நமது மதிப்பீடுகள் அத்தனையும் சுயநலம் கலந்தவை. நமக்குக் கிடைத்த அனுபவங்கள் பொது அனுபவங்கள் ஆகாது. ஆனால், நம் மனம் அவற்றை பொது அனுபவமாக மதிப்பீடு செய்துவிடும்.

புரோகித வர்க்கம், பூஜாரி வர்க்கம், சமையல் கலைஞர்கள் வர்க்கம் பண்டைய நாளில் ஏழ்மையில் சிக்கித் தவித்தது. ஆகவே, அவர்கள் தங்களின் வாரிசுகளை தொழில் கல்வியில் திருப்பி விட்டார்கள். அதேநேரம், கல்வி கற்க இயலாத மற்றவர்கள் இந்த வர்க்கங்களில் இணைந்து பொருளாதார நிறைவு பெற்றுத் திகழ்கிறார்கள். நலிந்துபோன குலக்கல்வி புதுத் தலைமுறையினரின் உற்சாகத்தில் புதுப்பொலிவுடன் முன்பைவிடவும் சிறப்பாக பொருளாதார நிறைவைப் பெற்று, குலக்கல்வியில் பற்றுதலை ஏற்படுத்தியிருக்கிறது.

கேள்வி - பதில்

? கேள்விக்கும் குலக்கல்வி சிந்தனைக்கும் என்ன தொடர்பு?

அனுபவம் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதற்கு ஓர் உதாரணம் அது. அவ்வளவு ஏன் குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள், மூன்றரை வயது நிரம்பியவுடன், குழந்தைகளின் வருங்கால மதிப்பீட்டை சுயநலம் கலந்த சிந்தனையின் அளவுகோலில் நாமே நிர்ணயித்துவிடுவோம். ஆனால் அதில் எல்லோருக்கும் வெற்றி கிட்டுவதில்லை. ஆக,  நல்ல தகவல்கள்விஷயங்களே ஆனாலும், சுயநலம் கலந்த சிந்தனையில் ஆராய்வதால், வருங்கால மதிப்பீடு படுத்துவிடும். ஆனால், தோல்வியுற்ற மனம் என்ன செய்யும் தெரியுமா? தாழ்வு மனப்பான்மை அடைவதுடன், தோல்விக்கான காரணத்தை வேறொரு இடத்தில் சுமத்தும். அப்போதும், சுயநலம் கலந்த சிந்தனையே காரணம் என்பதை ஏற்கமாட்டோம்.

நமது சுயநலம்தான் நமது லட்சியமாகத் திகழ்கிறது. அதுவே சரி என்பதில் சந்தேகமற்ற தீர்மானம் இருக்கும். சுயநலம் விபரீத விளைவுக்குக் காரணமானாலும், சுயநலத்துக்குச் சேதாரம் இல்லாத சிந்தனை மாற்றத்தை மனம் ஏற்குமே தவிர, சுயநலத்தைத் துறக்க மனம் வராது. அடிக்கடி தோல்வியைச் சந்தித்து துவளும்போது, விழிப்பு உணர்வு ஏற்பட்டு, நேரான சிந்தனையில் திரும்ப இயலும். ஆனாலும் அதற்கு சுயநலம் வழிவிடாது. சுயநலம் உயிரோட்டத்துடன் திகழ்வது

என்பது, அவரவர் கர்மவினையால் விளைவதாகும். கர்மவினையை அனுபவித்தே கரைக்க இயலும். அதன் தாக்கம் சுயநலத்தைத் துறக்கவிடாது.

? தற்காலத்தின் சிந்தனை மாற்றங்கள் சுயநலத்தை விலக்கும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

கால மாற்றத்துக்கு உகந்தவாறு சிந்தனை மாற்றம் உருவாகும். ஆனால், சிந்தனை மாற்றத்தால் கால மாற்றத்தைத் தடுக்க இயலாது.

ஏழ்மையைச் சந்தித்தவர்களில் சந்தோஷம் இருப்பதும், செல்வந்தவர்களிடம் சங்கடம் தோன்றுவதும் உண்டு. சமுதாயம் தாறுமாறாக மாறினாலும் புலனடக்கம் உள்ள துறவிகளும் இருக்கிறார்கள். பெருமை வாய்ந்த ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக்கொண்டு புலனை அடக்கமுடியாதவர்களும் இருக்கிறார்கள்!

உழைப்பின்றி ஊதியம் பெறுபவர்களும் உண்டு; உழைத்து ஓடாகி வாழ்க்கையை வெறுக்கும் நிலைக்கு ஆளாபவர்களும் உண்டு. தான் படைத்த உயிரினங்களுக்கு ஒட்டுமொத்த சந்தோஷத்தை அளிக்க கடவுளாலும் இயலவில்லை. அறிவாளி ஆகாரமின்றி தவிக்கிறான்; அப்பாவி ஹம்சதூளிகா மஞ்சத்தில் புரளுகிறான். கைப்பிடித்த மனைவி மனம் கலங்குகிறாள்; கணவனோ வேறொருத்தியுடன் மனமகிழ்ந்து பூரிக்கிறான். நல்லோர்கள் துன்பத்தை ஏற்க, பொல்லாதவர்களோ மகிழ்ச்சியைச் சந்திக்கிறார்கள்.

முன்னெச்சரிக்கையுடன் ஆற அமர ஆராய்ந்து சட்டதிட்டம் வகுத்து செயல்படுபவன், எதிர்பாராத இடையூறால் நிலைகுலைந்து போகிறான். சித்தம் போக்கு சிவன் போக்கு என்று இருப்பவன், நெருடல் இல்லாத வாழ்க்கையைச் சுவைத்து மகிழ்கிறான். இங்கெல்லாம் சிந்தனையின் மாற்றம்தான் காரணமாக அமைகிறது.

? துயரங்களுக்கும் பாகுபாட்டுக்கும் தற்போதைய சிந்தனைகளே காரணம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

மனித இனம் தோன்றிய நாளிலிருந்து ஸனாதனம் பல நல்லுரைகளை வழங்கி வழிகாட்டியது. தலைமுறை தலைமுறையாக வளர்ச்சி அடைந்த மனித இனம், அவை அத்தனையையும் புறந்தள்ளி விட்டது. 'தனக்கும் தெரியாது; மற்றவர்கள் சொல்வதையும் ஏற்க முடியாது’ என்கிற நோக்குடன், செய்வதறியாது தத்தளிக்கிறது மனித இனம்.

இந்தக் கோயிலுக்குப் போ, அந்தத் தீர்த்தத்தில் நீராடு, இந்த இறையுருவத்தை வலம் வந்து வழிபடு, அந்த மகானைச் சரணடை, இந்தத் துறவியை கெட்டியாகப் பிடித்துக்கொள், பசு தானம் கொடு, வீட்டை கொடையாக வழங்கு, இந்த மகானுக்குக் கோயில் கட்டு, அந்தத் துறவிக்கு பிருந்தாவனம் அமைத்துக் கொடு, பிள்ளையாருக்கு அருகம்புல், குரு பகவானுக்கு கடலை மாலை அணிவி, சனிக்கு எள் கொடு, வில்வ மரத்தைச் சுற்றி வா, துளசியை வணங்கு, ராம ராம அல்லது கிருஷ்ண கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டிரு, இந்தச் சடங்கை நிறைவேற்று அல்லது அதை நிறைவேற்றுவதற்கான பொருளாதார ஒத்துழைப்பை வழங்கு, சேமித்த பொருளை மகானுக்கு சமர்ப்பணம் செய்துவிடு... இப்படியான நூதன உபதேசங்கள் அனைத்தும் அப்பாவி மனங்களில் ஏறிவிடும். இந்த உபதேசங்களையும் அவர்கள் புரிதலுடன் ஏற்கவில்லை; எத்தை தின்றால் பித்தம் தெளியும் எனும் நிலையில், செய்வதறியாது வலுக் கட்டாயமாகவே ஏற்றுக்கொண்டிருப்பர்.

தோல்வியுற்ற மனம் சமுதாயத்தை சாடும்; கொந்தளிப்பில் ஆழ்ந்து விடும். மனித மனத்தை செம்மைப்படுத்தும் எந்த உபதேசங்களும் காதில் இணைவதில்லை. அவரவர் சுயநலம் ஈடேற ஏதுவான உபதேசங்களையே மனித மனம் ஏற்கும். அந்த உபதேசங்களிலும் உபதேசிப்பவரின் சுயநலம் கலந்திருக்கும். உபதேசம் கேட்கும் அப்பாவிகள், உபதேசிப்பவரை புராண காலத்து ரிஷி பரம்பரையாக மனதில் மதிப்பீடு செய்து கொண்டு விடுவார்கள். அதனால் அப்பாவிகளுக்கு பாதிப்பு; உபதேசிக்கும் மகான்களுக்கு அல்ல.

? சரி, இதற்கெல்லாம் தீர்வாக நீங்கள் கருதுவது என்ன?

மனம் சுயநலத்தைத் துறக்க வேண்டும். ஸனாதனத் தகவல்களை சுயநலமற்ற சிந்தனையில் ஆராய வேண்டும். அப்போது, உண்மையை எட்டி, சந்தோஷத்தைச் சுவைக்கலாம். சுயநலமற்ற பண்டைய ரிஷி பரம்பரை இன்று மருந்துக்குக்கூட இல்லை. 'கடவுள் அருளுவார், தண்டனையும் அளிப்பார். அவர் நிக்ரஹம், அனுக்ரஹம் இரண்டையும் செய்பவர்’ என்கிறது புராணம். ஆகவே, அருளைப் பெறும் தகுதியை முயற்சியால் பெற வேண்டும். மனம் போனபடி செயல்படக் கூடாது. புலன்கள் காட்டிய வழியில் பயணம் மேற்கொள்ளக் கூடாது. அந்தத் தகுதியை எட்ட இறையுருவத்தை நினைவில் இருத்தி, மனதில் படிந்த சுயநலத்தையும் அதை ஊக்குவிக்கும் கர்மவினையையும் கரைத்துவிட வேண்டும்.

அப்பழுக்கற்ற மனம் நேரான சிந்தனையில் சீரான வாழ்க்கையை தந்துவிடும் அப்போது கோயிலும் வேண்டாம் குளமும் வேண்டாம். கொடையும் வேண்டாம் மகான்களும் பணிவிடைகளுக்கும் தேவை இருக்காது. இவை அத்தனையையும் ஒருவன் ஏற்றுக்கொண்டாலும், அவன் மனதில் சுயநலம் எனும் அழுக்கு இருக்கும்வரையிலும், கர்மவினை அகலாது; அமுத வாழ்க்கையும் அமையாது!

இரண்டாவது கோணம்...

சூழலுக்கு ஒவ்வாத சிந்தனையை விளக்குகிறீர் கள். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலாசாரம் இன்றைய நாளில் அரங்கேறாது.ஸனாதனத்தில் இருந்து உருப்பெற்ற தர்மசாஸ்திரங்களும், சூழலுக்கு உகந்தபடி நீக்குப்போக்கோடுதான் தென்படுகின்றன. அன்றைய சிந்தனை, அன்றைய வாழ்க்கைமுறை, அன்றைய அறக்கோட்பாடு, அன்றைய சம்பிரதாயம் எதுவும் இன்றைக்கு உதவாது. உலகளாவிய சிந்தனை மாற்றத்தைத் திருத்தும் திறன் இவற்றுக்கு இல்லை.

கேள்வி - பதில்

? பண்டைய அறங்கள் இன்றைக்கு உதவாதென்று எப்படிக் கருத முடியும்?

பல தலைமுறைகள், புது சிந்தனையில் வாழ்வை அமைத்து அமைதி பெற்று மகிழ்கின்றன. ஜீவாணுக்களில் உருவான புதுத் தலைமுறையிடம் பழைய சிந்தனைகள் ஏறாது. அவர்கள் வாழ்க்கைக்கு அவை அலர்ஜியாகவே தெரியும். அன்றாட அலுவல்களில் ஈடுபட்டு, அதனால் கிடைத்த அனுபவத்தில் உணர்ந்த உலகை பொய் என்றும், கண்ணுக்குப் புலப்படாத பரம்பொருளை உண்மை என்றும் கூறுவதை இன்றைய சிந்தனை ஏற்காது. உண்மையைத் தேடும் பணியில் அவர்களுக்கு நேரம் இல்லை. அன்றாட அலுவல்களே பெரும் சுமையாக இருக்கும். இன்னாளில், கிடைத்த வாழ்க்கையைச் செம்மையாக்கி சுவைத்து மகிழ்வதே அவர்களது குறிக்கோள். இந்த நிலையில், எல்லாம் பிரம்ம மயம், அதை அறியாதவர்களுக்கு எல்லாமே துன்பமயம் என்ற கோட்பாடெல்லாம் இன்றைக்கு அரங்கேறாது.

எதில்தான் துன்பம் கலக்கவில்லை. பரம் பொருள் உண்மை என்றாலும், அதுவே பொய்யான உலகத்தையே படைக்கிறது; பொய்யான உலகத்தோடுதான் உயிரினத்தை இணைத்து வைத்திருக்கிறது. நிரந்தரம் எனச் சொல்லப்படுவது பொய்யோடு கலந்திருக்க, சிந்தனை எப்படி உண்மையைத் தேடிப்போகும்? எனவே, புலன்கள்  மனதைக் கட்டுப்படுத்துதல், சுயநலத்தை அகற்றுதல், கர்மவினையைக் கரைத்தல் போன்றவற்றை எல்லாம் உபதேசிப்பது வீண். இவற்றை நடைமுறைப்படுத்த வாழ்நாள் போதாது. மீறி முனைந்தால், வாழ்க்கைச் சூன்யமாகிவிடும்.

'பரிணாம வளர்ச்சியில் இயற்கை தந்த பெருமைகள் அதாவது கல்வி, கல்யாணம், மகப்பேறு, வேலைவாய்ப்பு, சேமிப்பு, பரோபகாரம், கூட்டுக்குடும்பம், சமுதாய சேவை, பொது அறம், அதில் பெறும் ஆனந்தம்  இவற்றுக்கெல்லாம் ஏது நேரம்? பிறந்தவுடன் மனதைச் சுத்தப்படுத்தி, உண்மையைக் கண்டறியும் ஆராய்ச்சியில் இறங்கி, தெளிவுபெற்று மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்து மூழ்க வேண்டும். அதுதான் பிறப்பின் குறிக்கோள்’ என்பது ஏற்கத்தக்கது அல்ல.

? வேறு எப்படியான குறிக்கோளை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

உயிரினங்களைப் படைத்து அவற்றின் பரிணாம வளர்ச்சிக்கு உகந்தவகையில் பயிர் வளத்தையும் அளித்துள்ளான் இறைவன். உண்டு மகிழ்ந்து விளங்கவேண்டும் என்பதுதான் உண்மை. படைத்தவன் பாதுகாப்பும் அளிக் கிறான் என்று இருக்கும்போது, மனிதனை மன ஆராய்ச்சியில் ஈடுபட வைத்து பிறப்பை முடித்துக்கொள்ளும் பரிந்துரையானது, இயற்கைப் பொக்கிஷத்தை வீணடித்து விடுகிறது.

மனிதன் உலகவியல் வாழ்க்கையை அனுபவிக்கவே பிறந்திருக்கிறான். அதற்கு ஊக்கமளிக்கும் பரிந்துரை வேண்டும். சுதந்திரமான மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி, வாழ்வைச் சுவைக்கவிடாமல் தடுத்து, சான்றில்லாத பரம்பொருளை எட்ட வைக்கப் பரிந்துரைக்கும் கொள்கைகள் ஏட்டுச்சுரைக்காய் ஆகும்.மனமானது புலன்களின் மூலம் இயற்கைப் பொக்கிஷத்தை அடையாளம் கண்டு சுவைத்து மகிழ வேண்டும். அதை திசைதிருப்பி போகாத ஊருக்கு வழி சொல்வது தவறு.

ஆயிரத்தில் ஒருவர், லட்சத்தில் ஒருவரே ஆன்மிக வழியை உண்மையாக உணர்கிறார் என்று ஆன்மிகத்தின் வழிகாட்டியாகத் திகழும் தலைவர்களே சொல்கிறார்கள். அப்படியான ஒருவரை உருவாக்க லட்சம்பேரை பலி கொடுக்க வேண்டுமா? தகுதியான அந்த ஒருவரைத் தேடிப்பிடித்து முன்னேறச் செய்தால் போதுமே!

ஆகவே, பண்டைய தத்துவங்களை கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களிலும் மனக்கட்டுப்பாடும் புலனடக்கமும் இல்லாதவர்கள் இருக்கிறார்கள். பிரத்யக்ஷ கண்ணோட்டத்தில் எது பொருந்துமோ அதைத்தான் உபதேசிக்கவேண்டும். இறையுருவங்களை வழிபடுவது, மகானை அணுகுவது, கொடை அளிப்பது, கோயில் செல்வது, பிறருக்கு உதவுவது, வாழ்க்கையை பலபேருடன் இணைந்து சுவைப்பது... இவையே இன்றைய சிந்தனைக்கு உகந்தவை. ஆகவே, உளுத்துப்போன இன்றைய காலத்துக்குப் பொருந் தாத சிந்தனைகளை புதுப்பிப்பது வீண்!

மூன்றாவது கோணம்...

ராயாமல் வெளியிடும் தகவல்களை அப்படியே ஏற்க இயலாது. ஊணும், உறக்கமும், உடலுறவும்தான் மனித வாழ்க்கையின் இலக்கு என்று சொல்வது தவறு. ஆறாவது அறிவைப் பெற்ற இனம் அந்த அறிவைப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அதை அளித்த கடவுளுக்கே இழுக்காகும். ஆராய்ந்து செயல்படும் அறிவைப் பெற்றவன் அதை முடக்கிவைத்து விலங்கினங்களின் இயல்பை ஏற்பது பெருமை அல்ல. மனமும் புலன்களும் ஆறாவது அறிவின் மதிப்பீட்டை செயல்படுத்தும் கருவிகள். அந்த இரண்டையும் பெற்றிருப்பது மனித இனத்தின் பெருமை. மனத்தூய்மையும் புலனடக்கமும் ஆன்மிகத்துக்கு மட்டுமே பயன்படும் கருவிகள் அல்ல!

கேள்வி - பதில்

? வேறெந்த வகையில் பயன்படும் என்று கருதுகிறீர்கள்?

லோகாயத வாழ்வில் உண்மையான சுவையை சுவைத்து மகிழ மனக் கட்டுப்பாடும் புலனடக்க மும் தேவை. காலமாற்றத்தைப் பொருட் படுத்தாமல் என்றைக்கும் பயனளிப்பவை இந்த இரண்டும்.

இன்பத்தைச் சுவைப்பது மனம். அதை ஆராய்ந்து அடையாளம் காட்டுவது புலன்கள். மனம் விரும்பியவற்றை எல்லாம் புலன்கள் செயல்படுத்தினால், தவறான வழியில் பயணித்து துயரத்தைச் சந்திப்போம். புலன்கள் வழி மனம் சென்றாலும் அப்படித்தான். இரண்டுக்கும் கட்டுப்பாடு வேண்டும்.

உலகவியல் சுகபோகங்களை சுவைக்கவும் இவை நிச்சயம் தேவை. தவறான உணவிலும் தவறான சிந்தனையிலும் ஈடுபட்டால் உடல் சுகாதாரமும் உள்ளத் தூய்மையும் கெட்டுவிடும். அப்படியான நிலையில் ஒருவன் ஏற்கும் அலுவல்களும் சிறக்காது. அது, அவனது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாகிவிடும்.

? எனில், சுதந்திரமான செயல்பாடுகள் தவறு என்கிறீர்களா?

கட்டுப்பாடு என்ற சொல்லுக்கு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது என்று பொருள்கொள்ளக் கூடாது. தவறான வழியில் செல்லாமல் தடுப்பதே கட்டுப்பாடு. தவறான சிந்தனை உருவாகாமல் இருப்பதுதான் மனக்கட்டுப்பாடு. மனக்கட்டுப் பாடும், புலனடக்கமும் உடல் சுகாதாரத்தையும் உள்ளத் தூய்மையையும் அளிக்கின்றன.

நாய்க்கு நாம் உண்ணும் உணவையே அளித்து நடுக்கூடத்தில் வைத்து பராமரித்தாலும், அது வாலைச் சுருட்டிக்கொண்டு அமேயத்தைத் தேடிப்போகும் என்றொரு சொல்வழக்கு உண்டு. சுயநலமும் கர்மவினையும் மனதில் தோய்ந்திருந்தால், நல்ல தகவலை அளித்தாலும் மனம் அவற்றை ஏற்காமல், தனது இயல்பையே நடைமுறைப்படுத்தும். சொற்பொழிவில் வெளிவரும் தகவல்களையும் சுயநலம் மற்றும் கர்மவினைக்கு ஏற்பவே ஏற்றுக்கொள்ளும்; உண்மையை உணர்ந்து ஏற்காது. மனம் சுத்தமாக இந்த இரண்டு வாசனைகளையும் களைய வேண்டும். தூய்மையாகும் மனம் நேரடி சிந்தனையில் இறங்கிவிடும். உண்மையின் தேடுதலில் இறங்க வேண்டாம், ஆன்மிக ஆர்வம் வேண்டாம்... கிடைத்த வாழ்க்கையை செம்மையாக வைத்துக்கொள்ளவும், துயரம் தொடாத மகிழ்ச்சியை சுவைப்பதற்கும் மனம் புலன் கட்டுப்பாடு அவசியம்.

மனம், புத்தி, புலன்  இந்தச் சொற்களைக் கேட்டவுடன், அவை ஆன்மிகம் தொடர்பான உபதேசமாகக் கருதுவது அறியாமை. எந்தத் தெய்வமும் நம்மைக் கரையேற்றாது. மனம், புலன் இரண்டையும் அடக்கி, ஆராய்ந்து உண்மையான வாழ்க்கைப் பயணத்தை ஏற்று முன்னேற வேண்டும். அதுவே ஆறாவது அறிவின் செயல்பாட்டுக்கு அடையாளம்.

காலையில் நீராடி உடலைச் சுத்தமாக்கி, நெற்றித் திலகமிட்டு இறையுருவத்தை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அந்தவேளையில் மனம் மற்ற அலுவல்களிலிருந்து விடுபட்டு கடவுள் உருவத்தில் ஒன்றியிருப்பதால், மனம் தூய்மை பெறும். தினமும் காலையில் சிலநொடிகள் இந்த வழிபாடு தொடரும்போது மனம் அதற்குப் பழக்கப்பட்டு படிப்படியாக கட்டுப்படும். அப்படிக் கட்டுப்பட்ட மனதில் மாசுகள் நீங்கும், புலன்களை அடக்கும் திறமையும் கிடைத்துவிடும். இன்றைய கோலாகலத்தில் இருந்து விடுபட, மனித இனத்துக்கு இது ஒன்றே கைகொடுக்கும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

ஸனாதனத்தின் அறிவுரைகள் எக்காலத்திலும் பயன்படுபவை; காலத்தைத் தாண்டி செயல்படும் பெருமை பெற்றவை. உலகளாவிய சிந்தனை மாற்றம் அதை எந்த வகையிலும் பாதிக்காது. தாயின் உபதேசம் போல், மகிழ்ச்சிக்கு ஆதாரமான விஷயங்களை வரையறுத்துச் சொல்பவை. அந்த அறிவுரைகளின் வழியில் மனதையும் புலனையும் அடக்கினால், உலகவியலையும் சுவைக்கலாம்; பரம்பொருளையும் உணரலாம்.

பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.